நான் உங்களுக்குத் தருவது என்ன?
சொல்.
அது தவிர வேறில்லை.
அதற்கு நீங்கள் எனக்குத் தர வேண்டியது என்ன?
முடிந்தால் தட்சணை. முடியாவிட்டால் அந்த சொல்லை வாசிப்பது. அந்த சொல்லை உங்கள் வாழ்வில் பின்பற்றுவது.
நீங்கள் செய்யக் கூடாதது என்ன?
திரும்பவும் பதிலுக்கு எனக்கு சொல்லைத் தருவது.
சொல்லுக்கு சொல்லைப் போன்ற ஒரு தீய செயல் வேறேதும் இல்லை.
ஆனால் என்னைச் சுற்றியிருக்கும் சிலர் எனக்கு சொல்லையே திரும்பத் தருகிறார்கள். அதில் முக்கியமான ஒரு சொல், நன்றி.
நன்றியை வைத்துக் கொண்டு நான் என்ன மயிரா புடுங்க முடியும்? நன்றி என்ற ஒரு சொல்லை வைத்துக் கொண்டு என் வாழ்வில் எதையாவது ஒன்றை நான் வாங்க முடியுமா சொல்லுங்கள்?
நன்றி என்ற வார்த்தையைத் தூக்கிப் போடுகிறார்கள்.
டியர் என்ற வார்த்தையைத் தூக்கிப் போடுகிறார்கள்.
நீங்கள்தான் என் வாழ்வையே மாற்றினீர்கள் என்ற வார்த்தைகளைத் தூக்கிப் போடுகிறார்கள்.
நான் தென்னமெரிக்கா போக வேண்டும், கொஞ்சம் தட்சணையை செலுத்துங்கள். உங்கள் நன்றியையும் அன்பையும் செயல்படுத்துங்கள் என்று சொன்னால் கட்டை விரல் படத்தை அனுப்புகிறார்கள். நல்லவேளை, நடுவிரல் படத்தை அனுப்பவில்லை.
இப்பவும் சொல்கிறேன். உங்கள் அன்பை, நன்றியை செயல் பூர்வமாகக் காட்டுங்கள். நான் ஒன்றும் வீடு கட்டுவதற்குக் காசு கேட்கவில்லை. என் எழுத்துக்காகவே கேட்கிறேன். முடிந்தால் செயல்படுத்துங்கள். இல்லாவிட்டால் பிரச்சினையில்லை. கொஞ்சம் ஒதுங்கி நின்று நான் தரும் சொற்களை வாசியுங்கள். உங்கள் வாழ்வு வளம் பெறும். நான் தரும் சொற்கள் வெறும் சொற்கள் அல்ல. உங்கள் வாழ்வை மாற்றக் கூடியவை. உங்கள் வாழ்வை மேம்படுத்தக் கூடியவை. உங்களை அடிமட்ட நிலையிலிருந்து மகத்தான நிலைக்கு உயர்த்தக் கூடியவை.
உதவி கூட வேண்டாம், குறைந்த பட்சம் என் சொல்லுக்குப் பதிலாக உங்கள் சொல்லைத் தராதீர்கள். நன்றி என்ற சொல் எந்த இடத்திலும் செல்லாது. தட்சணை கூட வேண்டாம். தட்சணையாக செல்லாக் காசை விட்டெறியாதீர்கள். அதனாலும் எனக்கு எந்தப் பாதகமும் இல்லை. பிறகு? யோசித்துப் பாருங்கள்.
பெட்டியோ நாவலைப் படித்துப் பாருங்கள். உலகில் வேறு எந்த எழுத்தாளனாவது அப்படி ஒரு நாவலை எழுத முடியுமா என்று எனக்குச் சொல்லுங்கள்.
சரி, வேறு என்ன செய்ய வேண்டும்?
தட்சணை கொடுங்கள். அல்லது, குறைந்த பட்சம் என் எழுத்தை இலவசமாக வாசியுங்கள். தயவு செய்து செல்லாக் காசை தட்சணைத் தட்டில் போடாதீர்கள்.