நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
2022 இறுதியில் ”அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” என்ற நாவலை அளித்தேன். 2023இல் பெட்டியோ. இந்த 2024இல் உல்லாசம், உல்லாசம்… வரும். அதற்கு இன்னும் நாலைந்து மாதங்கள் ஆகலாம். காரணம்: அதைப் படித்த வாசகர் வட்டத்தின் சில முக்கியமான நண்பர்கள் அந்த நாவலை இன்னும் செழுமைப்படுத்துவதற்கான கதைக்கரு அதில் இருக்கிறது என்றார்கள். கூடவே, சீனி இன்னொரு ஆலோசனையும் வழங்கினார். உல்லாசம் நாவலிலேயே ஜப்பான் கதைகளும் வருகின்றன, அதனால் ரொப்பங்கி இரவுகளையும் அதோடு இணைக்கலாம் என்பது அவர் யோசனை. அது எனக்கும் சரியாகவே தெரிந்தது. அதனால் முதல் பாகமாக உல்லாசத்தையும் இரண்டாம் பாகமாக ரொப்பங்கி இரவுகளையும் சேர்க்கலாம். ஆனால் இரண்டும் தனித்தனியாக நிற்காது. கதைகள் ஒன்றாகவே இணைந்திருக்கும். உல்லாசம் நாவலில் இரண்டு பெண்கள் வருகிறார்கள். ஷ்ரேயா என்ற தென்னிந்தியப் பெண். நயோமி என்ற சிங்களப் பெண். ரொப்பங்கி இரவுகளில் நவோமி என்ற ஜப்பானியப் பெண். பெயர் கூட ஒரே மாதிரி வந்து விட்டது என்பதற்காகச் சொன்னேன். திட்டமிட்டுச் செய்ததில்லை. ரொப்பங்கி இரவுகள் கதையில் வரும் சம்பவங்களை நீங்கள் இதுவரை எங்குமே வாசித்திருக்க மாட்டீர்கள். ஜப்பானில் வசித்திருந்தால் தவிர அவற்றைக் கேள்விப்பட்டிருக்கவும் வாய்ப்பில்லை.
உல்லாசம், உல்லாசம்… நாவலின் அட்டையாக நீங்கள் காண்பது தற்காலிகமானதுதான். அச்சுப்புத்தகமாக வரும்போது வேறு அட்டையைக் காணலாம். இந்த அட்டை pulp புத்தகங்களில் பாணியில் வடிவமைக்கச் சொன்னேன். அதற்குக் காரணம், ரியூ முராகாமியின் நூல்களுக்கு இப்படித்தான் வடிவமைக்கிறார்கள். அது எனக்குப் பிடித்திருந்ததால் செவ்வியல்தன்மை இல்லாமல் இப்படிச் செய்யலாம் என்று…
உல்லாசம், உல்லாசம்… நாவலில் ரொப்பங்கி இரவுகள் இணைவது போலவே, ராஸ லீலாவிலும் இரண்டு விதமான கதைகள் இணைந்திருக்கின்றன. முதல் பாகம் கதைசொல்லியின் அஞ்சல்துறை அலுவலக அனுபவங்களும் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்துக்கு நேர்மாறான கொண்டாட்டங்களும் இடம் பெற்றன. என் எழுத்துக்கு வெளியே உள்ள பல நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ராஸ லீலாவின் முதல் பாகமே மிகவும் பிடித்திருந்தது என்பதை கவனித்தேன். அதே நண்பர்கள்தான் என்னுடைய அந்தோனின் ஆர்த்தோ நாடகத்தையும் வெகுவாக சிலாகித்தார்கள். இதற்கு ஒரு முக்கியமான உளவியல் காரணம் இருக்கிறது. அதாவது, வாசக மனம் துயரத்தையே படித்து இன்புறுவதற்குப் பழகியிருக்கிறது. அதனால்தான் சர்வதேச அளவிலும் போர்த்துயரங்கள் மற்றும் பல்வேறு விதமான அழுவாச்சி கதைகள் பிரபலம் அடைகின்றன; விருதுகள் பெறுகின்றன. என்னைப் பொருத்தவரை காஃப்காவே அந்த ரகம்தான். என்ன, காஃப்கா உயர்தரமான அழுவாச்சி. கொண்டாட்டத்தை மனித (வாசக) மனம் ரசிப்பதில்லை. அதனால், வாசிப்பு என்பதே ஒருவித sadist செயலாக ஆகி விட்டது என்பதை கவலையுடன் அவதானிக்கிறேன். மற்றவரின் துயரங்களை ரசிக்கும் மனோபாவத்திலேயே வாசக மனம் இயங்குகிறது. இந்தியாவிலிருந்து ஆங்கிலத்துக்குச் செல்லும் எழுத்துக்களிலும் இம்மாதிரி அழுவாச்சி கதைகளே பெரும்பங்கு வகிக்கின்றன. பெருமாள் முருகனின் பிரபலத்துக்கும் இதுவே காரணம். என்னுடைய அந்தோனின் ஆர்த்தோ நாடகம் சிலாகிக்கப்படுவதற்கும்கூட இதுதான் காரணம்.
இதையெல்லாம் மனதில் கொண்டே ரொப்பங்கி இரவுகளை உல்லாசத்தில் இணைக்கிறேன். அதாவது, அழுவாச்சி கதைகளுக்கு நான் எதிரானவன். என்னுடைய புனைவுகளில் துயரம்கூட அங்கத உணர்வுடன்தான் சித்தரிக்கப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
அராத்துவின் புருஷன் நாவலுக்கு முன்பதிவுத் திட்டம் வெளியாகி இருக்கிறது. முன்பதிவில் ஒரே இரவில் (ரூ.1000) நூறு பிரதிகளுக்குப் பணம் வந்திருக்கிறது. இப்படி ஒரு வருட காலத்துக்கு முன்பதிவு நடக்குமாம். நானும் அதையே காப்பியடித்து உல்லாசம், உல்லாசம்… நாவலுக்கு முன்பதிவுத் திட்டத்தை அறிவிக்கிறேன். முன்பே சொன்னபடி 1000 ரூ, 2000 ரூ, 5000 ரூ, 10000 ரூ, 25000 ரூ, 50000 ரூ, 100000 ரூ என்ற விலைவிகிதத்தில் நாவல் வெளிவரும். ஒரு வருடம் எல்லாம் ஆகாது. அதிக பட்சம் நான்கு அல்லது ஐந்து மாதத்தில் நாவல் வெளிவந்து விடும். வாசகர்கள் மற்றும் நண்பர்கள் மேலே குறிப்பிட்டுள்ள விலையில் தங்களுக்கு எது விருப்பமோ அதை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். புத்தகம் வெளிவந்த பிறகு வாங்கிக் கொள்கிறேனே, இப்போதே எதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு என் பதில்: முன்பதிவு செய்பவர்கள் வரும் மாதங்களில் ஒரு நாள் முழுவதும் என்னோடு தங்கி உரையாட முடியும். அந்தச் சந்திப்பு நான் சீலே செல்வதற்கு முன் அல்லது சீலே சென்று வந்த பிறகு நடக்கும். ஃபெப்ருவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரம் சீலே செல்கிறேன். ஃப்ரான்ஸ் ஐந்து நாள், ஸ்பெய்ன் ஐந்து நாள், கொலம்பியா ஐந்து நாள், சீலே மூன்று வாரம் என்பது இப்போதைய திட்டம்.
நீங்கள் முன்பதிவு செய்வதற்காக அனுப்பும் தொகை என் சீலே பயணத்துக்கும் உதவும். இதையும் முக்கியமாக கவனத்தில் வையுங்கள்.
ஏன் இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை பலமுறை விளக்கி விட்டேன். ஆனாலும் சூழல் மாற வேண்டுமானால் எத்தனை முறை வேண்டுமானாலும் விளக்கலாம். பெட்டியோ நாவலின் விலை 600 ரூ. முன்பதிவு செய்தால் 500 ரூ. எட்டரை கோடி தமிழரில் அம்பது பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் என் நண்பர் ஒருவர் நேற்று 20000 ரூ. அனுப்பி பெட்டியோவை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தார். நண்பர்களும் என் வாசகர்களும் இப்படி இருக்கிறார்கள். ஆனால் பொதுச்சமூகத்துக்கு பெட்டியோ என்ற நாவல் வந்திருப்பதோ அதை எழுதிய ஒரு எழுத்தாளனைப் பற்றியோ தெரிந்திருக்கவே இல்லை.
இந்த அம்பது பேர் முன்பதிவு விஷயம் குறித்து அராத்துவுடன் பேசினேன். இப்படி பெட்டியோ நாவலின் முன்பதிவுத் திட்டம் அடிமட்டமாகப் போவதற்கு அவர் ஒரு காரணம் சொன்னார். முன்பெல்லாம் முன்பதிவுத் திட்டம் என்றால் நான் படு ஆரவாரமாகப் பிரச்சாரம் செய்வேன். இப்போது, ஏதோ போனால் போகிறது என்று இணைப்பைக் கொடுத்துவிட்டு ஓடிவிடுகிறேன்; வேறு எதுவும் செய்வதில்லை. சீனி சொல்வது உண்மைதான். அதற்குக் காரணம், எழுதுவதற்கு விஷயம் எக்கச்சக்கமாகக் குவிந்து கிடக்கிறது. அதுவும் தவிர, பிரச்சாரம் செய்தால் ஆயிரம் பிரதியும், செய்யாவிட்டால் ஐநூறு பிரதியும் விற்கிறது. என்ன பெரிய வித்தியாசம் என்று உசாவினால் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே பதில். அதனால்தான் பிரச்சாரம் செய்ய அலுப்பாக இருக்கிறது.
பெட்டியோ நாவல் அநேகமாக இந்தப் புத்தக விழாவில் ஐநூறு பிரதி விற்கும். அதுதான் அதிக பட்சம். இந்த ஆண்டு முழுவதும் விற்றால் ஆயிரம் பிரதி போகும். அதோடு அந்த நாவலின் ஆயுள் முடிந்து விடும். எக்ஸைல் முன்பதிவிலேயே ஆயிரம் பிரதி விற்று, அதற்குப் பிறகு நூறோ இருநூறோ விற்று ”சாதனை” செய்தது. அதோடு எக்ஸைல் காலி. இப்படியோ போய்க்கொண்டிருந்தால் எழுத்தாளன் தொடர்ந்து அவன் வாழ்நாள் பூராவும் பிச்சைக்காரனாகவே இருக்க வேண்டியதுதான். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றுதான் ஆர்த்தோ நாடகத்தை பிடிஎஃப் மூலமாக விற்றேன். அது சுமாராக எனக்கு நாலு லட்சம் ரூபாயை ஈட்டித் தந்தது. அதனால்தான் பெட்டியோவை என்.எஃப்.டி.யில் விற்க முடிவு செய்தேன். ஆனால் என்.எஃப்.டி.இல் அதை வாங்கும் முறை சிக்கலாக இருக்கிறது என்று மக்கள் அபிப்பிராயப்பட்டதால் உல்லாசம், உல்லாசம்… நாவலை இப்படி 1000 ரூ, 2000 ரூ, 5000 ரூ, 10000 ரூ, 25000 ரூ, 50000 ரூ, 100000 ரூ. என்று விலை வைத்து விற்க முடிவு செய்திருக்கிறேன்.
முன்பதிவு செய்ய விரும்பும் நண்பர்கள் என் வங்கிக் கணக்குக்குப் பணத்தை அனுப்பலாம். அல்லது, ரேஸர்பே மூலம் செலுத்தலாம். எப்படியிருந்தாலும் எனக்கு உங்கள் முகவரியுடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பி விடுங்கள். இப்போதைக்கு என் வங்கிக் கணக்கை மட்டுமே தருகிறேன். நாளை காலைக்குள் ரேஸர்பே விவரங்களைத் தருவேன். எது வசதியோ அப்படிச் செய்யுங்கள். அராத்துவின் புருஷன் நாவலுக்கு ஒரே இரவில் நூறு பேர் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பி முன்பதிவு செய்தார்கள். அந்த இரவு டிசம்பர் 31 என்பதால் அப்படி நடந்திருக்கலாம். இப்போது நீங்கள் விழித்திருப்பீர்கள். இருந்தாலும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.
charu.nivedita.india@gmail.com
வங்கிக் கணக்கு விவரம்
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai