பெங்களூரில் ஐந்து தினங்கள் இருந்தேன். வழக்கத்தை விட அதிக கொண்டாட்டம். ஆனால் புத்தகத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி படு தோல்வி. ஒருவர்கூட கையெழுத்து வாங்கவில்லை. ப்ளாஸம்ஸ், ஆட்டா கலாட்டா, புக்வாம் ஆகிய மூன்று கடைகளில் தலா அரை மணி நேரம் அமர்ந்திருந்தேன். என்னை சந்திக்க கரூரிலிருந்தும் ஹொசூரிலிருந்தும் கோவையிலிருந்தும் நண்பர்களும் வாசகர்களும் வந்திருந்தார்களே ஒழிய மேற்படி புத்தகக்கடைகளில் யாருமே கையெழுத்து வாங்கவில்லை. அதில் ஆச்சரியமும் இல்லை. காரணம், நான் என்ன பெருமாள் முருகனா? சல்மான் ருஷ்டியா? அல்லது, லோக்கல் தாதா விவேக் ஷென்பகா? தமிழ்நாட்டுக்கு வெளியே நான் ஒரு nobody. ஆனால் வாசிப்பு நிகழ்ச்சி என்றால் என்னை அறிந்த பெங்களூர் தமிழர்கள் வருவார்கள். முன்பும் ஒரு ஆங்கிலப் புத்தகக்கடைக்கு வந்திருக்கிறார்கள்.
முப்பதாம் தேதி பெங்களூர் தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் நடந்த தேவதேவன் கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு சுமார் நூறு பேர் வந்திருந்தார்கள். நிகழ்ச்சி முடிந்து வாசகர்கள் வரிசையில் நின்று தேவதேவனிடம் அவர் கவிதை நூல்களில் கையெழுத்து வாங்கினார்கள்.
தேவதேவன் விழாவில் அடியேனின் உரை
நானும் நண்பர்களும் விழாவுக்குப் பத்து பேர்தான் வருவார்கள் என்று நினைத்திருந்தோம். வந்திருந்த நூறு பேரில் பத்து இருபது இளம்பெண்கள். பெங்களூர்வாசிகள் என்பது பார்த்ததுமே தெரிந்தது. எதிர்பாராதவிதமாக நான் நன்றாகப் பேசிவிட்டேன். அது எனக்கே தெரிந்தது. பேசி முடித்த பிறகும் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு அழகி “உங்கள் பர்ஸ் கிடைத்ததா?” என்று கேட்டதும் ஆச்சரியமடைந்தேன். எந்த அளவுக்கு என் இணையதளத்தை வாசிக்கிறார்கள் என்று புரிந்தது. பிறகுதான் அவர் ஒரு கவிஞர் என்று தெரிந்துகொண்டேன். வளரும் கவிஞர். இன்னும் புத்தகம் வெளிவரவில்லை. ஒரு கவிதையைக் காண்பித்தார். மிகவும் நன்றாக இருக்கிறது என்றேன். என் அருகிலிருந்த வினித் அந்த அழகியிடம், “இவர் இப்போதெல்லாம் இப்படித்தான் சொல்ல ஆரம்பித்து விட்டார், நம்பாதீர்கள்” என்றார். இளம் கவிஞர்களை ஊக்குவிப்பதை நான் ஒரு கடமையாகச் செய்துகொண்டிருக்கிறேன். அதற்கு இப்படி ஒரு தடை! கவிஞர் பெயர் சிந்து. சிந்துவின் தோழி ரூபியிடமும் பேசிக்கொண்டிருந்தேன். பொருத்தமான பெயர். ஸீரோ டிகிரி நாவலுடன் நாலு ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார் ரூபி. ராஸ லீலா படியுங்கள் என்றேன். அவசியம் என்றார்.
தமிழ்நாட்டுக்குப் பதிலாக நான் பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்திருக்கலாம். கொடுப்பினை இல்லை.
நிகழ்வுக்கு என் தோழி ஸ்ரீயும் வந்திருந்தாள். ஆனால் கூட்டம் அதிகம் என்பதால் ஸ்ரீயுடன் ஒரு வாக்கியம்தான் பேச முடிந்தது. (உன் சட்டை அபாரம்!) மறுநாள் பேசும்போது மேற்படி சம்பவங்களையெல்லாம் சொன்னேன். ஓ, பெயரெல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறீர்களே என்று ஆச்சரியப்பட்டாள். என்ன செய்வது, அடியேனுக்கு இம்மாதிரி திவ்ய சமாச்சாரங்கள் மட்டுமே ஞாபகம் இருக்கிறது.
நிகழ்ச்சி முடிந்த மறுநாள் ஸ்ரீ ஒரு ஆச்சரியமான விஷயம் சொன்னாள். ஸ்ரீ சொல்லும் எதையுமே சீனி நம்ப மாட்டார். முக்கியமாக அவள் தமிழும் ஆங்கிலமும். அவள் எழுதும் தமிழ் உரைநடை பா. வெங்கடேசன் மாதிரி இருக்கும். (ஆனால் அவள் பா. வெங்கடேசனைப் படித்ததில்லை!) ஆங்கிலம் அடிக்கடி அகராதியைப் பார்க்கும்படி இருக்கும். படித்தது என்னவோ ப்ளஸ் டூ.
இப்போது ஆச்சரியம்.
நகர்ந்து கொண்டேயிரு
அனைத்தின் மீதும்
அன்பின் வருடலை மட்டும்
அளித்து விட்டு
அது எதுவாகவும் இருக்கட்டுமே
பற்றாதே அதை.
இது நவம்பர் 2, 2022 அன்று ஸ்ரீ அவள் டயரியில் எழுதியது. (அநியாயமாக ஒரு ஒற்று துருத்திக்கொண்டிருக்கிறது.) அநேகமாக தேவதேவன் இதற்குப் பிறகு எழுதிய கவிதை அவருடைய இப்போதைய தொகுப்பு ஒன்றில் இருப்பது.
பற்றாதே
அது எதுவாகவும் இருக்கட்டும்
பற்றாதே அதை
அனைத்தின் மீதும்
அன்பின் வருடலை மட்டும்
தவறாதளித்துவிட்டு
நகர்ந்துகொண்டேயிரு.