டி.எம். கிருஷ்ணா

ஒரு மாதத்துக்கு முன்னால் ஒருநாள் வினித் ஒரு ஆடியோ பதிவைப் போட்டுக் காண்பித்தார்.  கர்னாடக இசை.  அந்தப் பாடகரின் குரலும் பாவமும் தீவிரமும் சென்ற தலைமுறையைச் சேர்ந்த இசைக் கலைஞர்களிடம் மட்டுமே காணக் கூடியதாக இருந்தது.  யாரப்பா இது, இதுவரை நான் இவரைக் கேட்டதில்லையே, பூரணமான இறையருள் பெற்றவராகத்தான் இருக்க வேண்டும் என்றேன்.  சிரித்துக் கொண்டே அவருடைய இன்னொரு காணொலியைக் காண்பித்தார் வினித்.  இருபது வயது இளைஞன் ஒருவன் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் துலங்க அற்புதமாகப் பாடிக்கொண்டிருந்தான்.  பார்ப்பதற்கு டி.எம். கிருஷ்ணா போலவே இருந்தது.  யாரப்பா இது, டி.எம். கிருஷ்ணா போலவே இருக்கிறானே, கிருஷ்ணாவின் தம்பியா என்றேன்.  அதற்கு வினித் ”டி.எம். கிருஷ்ணாதான் இது” என்றார்.  அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன்.  ஏனென்றால், இப்போதய டி.எம். கிருஷ்ணாவின் சில கச்சேரிகளைக் கேட்டு நான் மிகவும் நொந்து போயிருந்தேன்.  பெருமாள் முருகனின் பாடல், திருக்குறள், பாரதிதாசன் போன்ற புரட்சிப் பாடல்கள் அவை.  திருக்குறளை நான் குற்றம் சொல்ல மாட்டேன்.  கர்னாடக இசைக்குத் திருக்குறள் ஒத்து வராது என்பதே என் கருத்து.  தமிழில் பாட வேண்டுமானால் அதற்கு எத்தனையோ அற்புதமான வாக்கேயக்காரர்கள் இருக்கின்றனர்.  ஊத்துக்காடு வேங்கட கவி ஒரு உதாரணம்.

மற்றபடி கிருஷ்ணா மக்ஸேஸே விருது வாங்கியபோதே அவர் அந்த விருதுக்குத் தகுதியில்லாதவர் என்று விவரமாக எழுதியிருக்கிறேன்.  சங்கீதத்தைத் தவிர கிருஷ்ணா செய்யும் காரியங்கள் யாவையும் gimmicks வகையைச் சேர்ந்தவை.  அவர் எழுதும் ஆங்கிலக் கட்டுரைகள் அரைவேக்காட்டுத்தனமும் விடலைத்தனமும் ஆனவை. 

சேரிக்குப் போய் அங்கே உள்ள சிறார்களுக்குக் கர்னாடக சங்கீதம் கற்றுத்தரும் காரியத்தை விடலைதனத்தையும் மீறிய உயர்சாதித் திமிர் என்றே சொல்லுவேன்.  சேரிகளிலும், தலித்துகளிடமும் இசை இல்லை என்று உங்களுக்கு யார் ஐயா சொன்னது?  நம் இந்திய அரசியல்வாதிகள் குடிசைக்குள் நுழைந்து கஞ்சி குடித்து போஸ் கொடுப்பது போல்தான் கிருஷ்ணாவின் முற்போக்குச் செயல்பாடுகளும் ஆகும். 

அடுத்து, கிருஷ்ணாவின் நாத்திகவாதம்.  கடவுளை நம்புவதும் நம்பாததும் அவர்வர் சுதந்திரம்.  அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.  ஆனால் குருக்கள் பணிக்குச் செல்லும் ஒருவர் நாத்திகராக இருக்க சுதந்திரம் கிடையாது.  அது மற்ற பக்தர்களை அவமதிக்கும் செயல்.  ஒரு நாத்திகன் குருக்கள் பணி புரிவதற்குச் சுதந்திரம் கிடையாது.  அதேபோல, ஒரு கர்னாடக இசைக் கலைஞர் நாத்திகராக இருந்தால் அவர் கர்னாடக சங்கீத்த்தையே அவமதிக்கிறார் என்றுதான் பொருள்.  ஏனென்றால், கர்னாடக சங்கீதம் பக்தியையே தன் அடிநாதமாக்க் கொண்டிருக்கிறது.  பக்திதான் கர்னாடக சங்கீத்த்தின் உயிர்நாடி, ஆன்மா எல்லாம்.  தியாகராஜர் ராமா ராமா என்று உருகியிருக்கிறார்.  அப்படியிருக்கும்போது கடவுள் நம்பிக்கை இல்லாத கிருஷ்ணா எப்படி தியாகராஜர் கீர்த்தனைகளைப் பாட முடியும்?  நாத்திகராக இருப்பவர் குருக்கள் வேலை செய்வது போலத்தான் அது. 

மற்றபடி, கிருஷ்ணா லுங்கி கட்டிக் கொண்டு கச்சேரி செய்வது போன்ற விஷயங்களையும் அவருடைய அசட்டு விடலைத்தனத்தோடுதான் சேர்க்கலாம்.  லுங்கியை அடுத்து அவர் பாப் பாடகர்களைப் போல ஜட்டியோடு கூடப் பாடலாம்.  ஏனய்யா, உங்களுக்கெல்லாம் பகுத்தறிவு என்ற சமாச்சாரம் இருக்கிறதா, இல்லையா?  பாப் பாடகர்கள் ஜட்டியோடு பாடினால் அது அந்த இசைக்குத் தோதாக இருக்கிறது.  ஏனென்றால், பாப் பாடல்கள் சரீரத்தோடு உறவாடுகிறது.  ஆனால் கர்னாடக சங்கீதம் நம் ஆன்மாவோடு கலக்கும் கலை.  அங்கே போய் லுங்கியோடு பாடுகிறேன், ஜட்டியோடு பாடுகிறேன் என்று போட்டி போட்டால் சரியாகுமா?  மைக்கேல் ஜாக்ஸன் தன் எங்கே கையை வைத்து எதை ஆட்டுகிறார் என்பதை நாம் அறிவோம்.  அதேபோல் அதை ஆட்டிக்கொண்டே தியாகராஜர் கீர்த்தனையைப் பாடுவேன் என்று ஒருத்தர் புறப்பட்டிருக்கிறார்.  அதற்கு மியூசிக் அகாடமி விருது கொடுக்கிறது.  இனிமேல் பிராமணாள் இறைச்சிக் கடை ஒன்றுதான் பாக்கி. 

டி.எம். கிருஷ்ணாவுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கும் கர்னாடக சங்கீதக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, திருச்சூர் சகோதரர்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதே விஷயத்தை முன்பு ஒருமுறை எழுதினேன். அதன் லிங்க் கீழே.