டி.எம். கிருஷ்ணா – 2

இன்னும் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன.

ரஞ்சனி, காயத்ரி இருவரும் பெரியார் பற்றிக் கூறிய விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

பாப் பாடகர் பாப் டிலனுக்கு 2016இல் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தது. அதேபோல் டி.எம். கிருஷ்ணாவுக்கும் இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், மேற்கத்திய நாடுகளில் இந்தியாவையும், ஹிந்து மதத்தையும் திட்டுபவர்களுக்கும் அவதூறு செய்பவர்களுக்கும் பெரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. இதை என் விஷயத்திலேயே கவனித்து விட்டுத்தான் சொல்கிறேன். வெளிப்படையாக எழுத முடியாது. நீங்களேதான் புரிந்து கொள்ள வேண்டும். இதை எழுதுங்கள், இப்படி எழுதுங்கள் என்றே சொல்கிறார்கள். நான் அதை ஏற்காவிட்டால் பிரசுரம் மறுக்கப்படுகிறது. கோவில்களில் க்ரூப் செக்ஸ் நடக்கிறது என்பது போல் எழுதினால் கொண்டாடுகிறார்கள். ஹிந்து மதத்தை எதிர்த்தால் எதிர்ப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று நான் எழுதினால் என் பெயர் நியூயார்க்கர் பத்திரிகையில் வரும். ”ஹிந்து மதத்தில் நாத்திகம் பேசினால் அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள், அத்தகைய நாத்திக வாதத்தையும் ஹிந்து மதம் ஏற்றுக் கொள்கிறது” என்று நான் எழுதினால் என்னை மேற்கத்தியர்கள் ஹிந்துத்துவா என்று சொல்கிறார்கள்.

இவ்வாறாகத்தான் பெருமாள் முருகன், அருந்ததி ராய், டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை மேற்கத்தியர்கள் கொண்டாடுகிறார்கள்.

விருதுக்காகவும் புகழுக்காகவும் அம்மாதிரியான இழிசெயலை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.

பெருமாள் முருகனுக்கு நடந்ததேதான் இப்போது டி.எம். கிருஷ்ணாவுக்கும் நடக்கிறது. ஒரே வித்தியாசம், கிருஷ்ணாவை எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் என்பதால் எதிர்ப்பு வெறும் மென்மையான சொற்களால் மட்டுமே நடக்கிறது. பெருமாள் முருகனுக்கு நடந்தது போல் கொலை மிரட்டல் எல்லாம் இல்லை. ஆனாலும் மேற்கத்தியரைப் பொருத்தவரை எதிர்ப்பு எதிர்ப்புதான். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது கிடைத்ததைக் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் யாருக்கும் இந்த விஷயம் தெரியாமல் போயிருக்கும். ஆனால் இந்த எதிர்ப்பின் காரணமாக, இது நியூயார்க்கருக்கும் நோபலுக்கும் போகும். இன்னும் சில தினங்களில் இந்த விஷயம் நியூயார்க்கரில் வருகிறதா இல்லையா என்று பாருங்கள். கிருஷ்ணாவுக்கு ஹிந்துத்துவா ஆட்கள் எதிர்ப்பு என்ற தலைப்புச் செய்தி நியூயார்க்கரில் வரும். இது நோபலின் கவனத்துக்குப் போகும்.

ஆனால் இந்த அளவுக்கு கிருஷ்ணாவுக்கு இசை தவிர வேறு எந்தத் தகுதியும் இல்லை. அவர் ஒரு அபூர்வமான இசைக் கலைஞர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த அபூர்வமான திறமையை அவருடைய நாத்திகவாதம் கொன்று விட்டது. யோசித்துப் பாருங்கள். தியாகராஜர் ராமா ராமா என்று உருகுகிறார். அந்த உருக்கத்தை ஒரு நாத்திகரால் எப்படி தன் குரலிலும் ஆன்மாவிலும் கொண்டு வந்து பாட முடியும்? அவர் பெருமாள் முருகனையும் பாரதிதாசனையும்தான் பாட முடியும். இவர்கள் ரெண்டு பேரும் வாக்கேயக்காரர்களா, சொல்லுங்கள்?

மேற்கத்தியர்கள் ஒரு agenda வைத்திருக்கிறார்கள். அந்த அஜண்டாவுக்குப் பொருந்தி வருபவர்களை அவர்கள் கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணாவுக்குக் கிடைக்கப் போகும் சர்வதேச விருதுகளையும் மரியாதையையும் பொருத்திருந்து பாருங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். கிருஷ்ணா சேரிகளுக்குப் போய் கர்னாடக இசை கற்றுக் கொடுப்பதில் ஒரு சாதியத் திமிர் இருக்கிறது. பொருளாதார ரீதியாகத்தான் சேரிவாழ் மக்கள் கீழ் நிலையில் இருக்கிறார்களே தவிர கலாச்சார ரீதியாக அல்ல. உயர்குடியிடம் என்னென்ன கலாச்சார விழுமியங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்தும் சேரியிலும் இருக்கின்றன. ஆனால் கிருஷ்ணா அவர்களைத் தன்னை விடத் தாழ்ந்தவர்களாக நினைக்கிறார். அதனால்தான் தன்னை கலாச்சார ரீதியாக உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டு சேரி மக்களிடம் கர்னாடக சங்கீதத்தை எடுத்துக்கொண்டு போகிறார். இது ஒரு கலாச்சார வன்முறை.

கைலி கட்டிக்கொண்டு கர்னாடக சங்கீதம் பாடுவது போல் கிருஷ்ணாவுக்கு ‘தில்’ இருந்தால் கானா பாடல்களைக் கற்றுக் கொண்டு கானா பாட வேண்டும். கடவுளை நம்பும் “மூடர்கள்” இயற்றிய கீர்த்தனைகளை அவர் இனிமேல் பாடக் கூடாது. கர்னாடக சங்கீதம் கையில் இருப்பதால் அவர் சேரி மக்களை விட கலாச்சார ரீதியாக உயர்ந்தவர் என்று அர்த்தம் இல்லை. தன்னுடைய ‘கலாச்சாரத்தை’ அவர் சேரி மக்களிடம் திணிப்பது பச்சையான வன்முறை. உண்மையிலேயே அவருக்கு சேரி மக்கள் மீது அக்கறை இருந்தால் அவர் கானா பாடல்களைப் பாட வேண்டும்.

முதலில் உங்களுடைய சாதிய ஐவரி டவரிலிருந்து கீழே இறங்கி வாருங்கள், கிருஷ்ணா. தலித்துகளுக்குப் பூணூல் மாட்டி விடுவதல்ல, உங்களுடைய சாதித் திமிரை முதலில் கழற்றி வைப்பதுதான் நீங்கள் நம்பும் முற்போக்கு வாழ்க்கையின் முதல் படி.