(ஏற்கனவே பதிவிட்ட கதையில் பல பகுதிகள் சேர்க்கப்பட்ட புதிய வடிவம்.)
இப்போது எழுதப் போகும் விஷயத்தை உங்கள் மனதில் நிரந்தரமாக இருத்திக் கொள்ளுங்கள். இதைப் பின்பற்றினால் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். பின்பற்றுவது சுலபம். ஆனாலும் பலருக்கு ஏன் இது பின்பற்ற முடியாதபடி இருக்கிறது என்று எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை. ஆனால் மற்றவர்களால் பின்பற்ற முடியாதபடி இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.
இந்தச் சம்பவத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சலித்துக் கொள்ளாதீர்கள். ஏற்கனவே எழுதியபோது அதை நான் என்னுடைய சகிப்புத் தன்மை என புரிந்து கொண்டிருந்தேன். ஆனால் நேற்று என் தோழி ஸ்ரீயோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான் புரிந்தது, அது என்னுடைய சகிப்புத்தன்மை அல்ல, வேறு ஒன்று என்று.
பதினேழு ஆண்டுகளுக்கு முன் நான் சின்மயா நகரில் வசித்தபோது மேல் வீட்டில் (நாங்கள் தரைத் தளம்) மூன்று இளம் பெண்களும் அவர்களின் அம்மாவும் இருந்தார்கள். அந்த இளம் பெண்கள் மாறி மாறி மேலேயிருந்து சானிட்டரி நாப்கின்களை கீழே போடுவார்கள். அவந்திகா அப்போது ஏழு மணிக்குத்தான் எழுந்து கொள்வாள். நான் அந்தக் காலகட்டத்தில் காலை நான்கு நான்கரைக்கே எழுந்து விடுவேன். கொல்லைப்புறத்தில் விழுந்து கிடக்கும் சானிடரி நாப்கின்கள். ஒரு ஆறு மணி போல விழும். நான் அதை ஒரு குச்சியால் எடுத்துக்கொண்டு போய் எங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கும் குப்பைத்தொட்டியில் போடுவேன். குப்பைத்தொட்டியைச் சுற்றி உணவுக்காக அலையும் நாய்கள் அதை மோப்பம் பிடித்து நக்கும்.
இந்தக் கைங்கரியத்தை நான் மாதத்தில் பாதி நாட்கள் செய்ய வேண்டியிருந்தது.
இதை அப்படியே நிறுத்தி விட்டு நேற்றைய உரையாடலுக்கு வருவோம்.
நாங்கள் சாந்தோம் நெடுஞ்சாலையில் வசிக்கும் வீட்டிலிருந்து மாற இருக்கிறோம். அதற்காகக் கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடிக்கொண்டிருக்கிறோம். சுமார் நூற்றைம்பதிலிருந்து இருநூறு வீடுகள் பார்த்திருப்போம். அவந்திகாவுக்குப் பெரும்பாலான வீடுகள் பிடிக்கவில்லை. அவந்திகாவுக்குப் பிடித்திருந்தால் பூனைகளை முன்னிட்டு வீட்டுக்காரர்கள் மறுத்தார்கள். நாய் வைத்திருந்தால் கூட வீடு கிடைத்து விடும். பூனையை எல்லோரும் சிங்கம் புலி கரடி போல் பாவித்தார்கள்.
அது மட்டுமல்லாமல், அவந்திகா வேறு பல நிபந்தனைகளைக் கொண்டிருந்தாள். வீட்டுக்காரர் வக்கீலாக இருக்கக் கூடாது என்று ஒரு நிபந்தனை. இதிலேயே பத்து அருமையான வீடுகள் போய் விட்டன. ஒரு வீட்டில் எதிர்வீட்டில் வக்கீல் இருந்தார். அதுவும் போய் விட்டது. ஒரு அற்புதமான வீட்டில் வீட்டுச் சொந்தக்காரர் “எங்கள் பிள்ளைகளுக்கு உடம்பு சுகமில்லாமல் போய் விட்டது, அதனால் நாங்கள் அப்பல்லோ மருத்துவமனை அருகில் வாடகைக்குப் போய் விட்டோம்” என்று உளறி விட்டார். அந்த வீடும் போய் விட்டது. சென்னையின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் அவர். செல்வந்தர்கள் கூட இத்தனை வெகுளியாக இருப்பார்களா, என்ன?
இருப்பார்கள்தான் போல. எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். செல்வந்தர். அவர் எனக்காக வீடு தேடினார். ஆனால் எத்தனையோ தேடியும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனக்கு ஒரே ஆர்வமாகப் போய் விட்டது. ஒருநாள் நீங்கள் காரை எடுத்துக்கொண்டு வாருங்கள், நானும் உங்களோடு வருகிறேன் என்றேன்.
போனோம். நிறைய வீடுகள் காலியாக இருந்தன. வீட்டு முதலாளி முதல் கேள்வி கேட்பார். முதல் கேள்வியிலேயே ஃபனால்.
வீட்டில் எத்தனை பேருங்க?
ரெண்டே பேர்தான் சார். ஒரு ஹஸ்பண்ட், ஒரு வைஃப். ப்ளஸ் பத்து பூனைகள்.
கடவுளே வீட்டு முதலாளியாக இருந்தாலும் வீடு கொடுப்பார்களா? நண்பரிடம் நானே வீடு தேடிக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டேன்.
எனக்கோ எல்லா வீடுகளுமே அற்புதமாக இருந்தன. (பேரழகி மாதிரி வைத்துக்கொள்ளலாமா என்றாள் ஸ்ரீ) ஆம். எல்லா வீடுகளுமே எனக்குப் பிடித்திருந்தன. ஒரு வீட்டின் சொந்தக்காரருக்கு வயது முப்பது இருக்கும். பெண். அச்சு அசல் தமன்னாவேதான். அதே மாதிரி கொடியிடை. எல்லா வீட்டு முதலாளிகளுமே நம்மை அடிமைகள் மாதிரிதான் பார்ப்பார்கள். பேசுவார்கள். நடத்துவார்கள். ஆனால் இந்தத் தமன்னாவோ விமானப் பணிப்பெண்களை விடவும் பணிவாகப் பேசினார். வலது கையை இடது மார்பில் (ம்ம்ம்ஹா) வைத்து, தலையை லேசாகக் குனிந்து ”வாங்கோ மாமா, வாங்கோக்கா…” (அப்படிப் போடு!) என்று வரவேற்றார்.
அந்த வீட்டை எங்களுக்குக் காண்பித்த ப்ரோக்கருக்கும் அவந்திகாவுக்கும் அடிதடி சண்டையே வந்து விட்டது. காரணம், அந்த வீடு மகாநதியில் கமல் தன் மகளை கல்கத்தாவில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் பார்ப்பார் அல்லவா, அந்த விடுதி மாதிரி இருந்தது. உள்ளே பத்து பேச்சுலர்கள் ஜட்டியோடு அமர்ந்து தண்ணியடித்துக் கொண்டிருந்தார்கள். பார்ப்பதற்கு யாரும் ஐ.டி. இண்டஸ்ட்ரி மாதிரி தெரியவில்லை. பிஹாரி கட்டிடத் தொழிலாளர்கள் மாதிரி இருந்தார்கள். இத்தனைக்கும் தமன்னா எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் சகஜ பாவத்தோடும் இன்முகத்தோடும் அந்த வீட்டை எங்களுக்கு சுற்றிக் காண்பித்தாள். (மிக நன்றாக ஆங்கிலம் பேசினாள்.)
என்னை இன்னமும் தூங்க விடாமல் செய்வது தமன்னாவின் ‘எதுவுமே நடக்காதது’ போன்ற சகஜபாவமும் அந்த இன்முகமும். இன்முகம் என்றால் புரிகிறதா? இனிமையான முகம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. மிக மிக மிக மிக மிக இனிமையான முகம்தான். ஆனால் நான் இன்முகம் என்று சொல்வது அந்த அர்த்தத்தில் அல்ல. புன்சிரிப்பு மாறாத முகம்.
அந்தத் தமன்னாவுக்காகவே அந்த வீட்டுக்குப் போயிருக்கலாம். வீடு மகாநதி விடுதி மாதிரி இருந்தால் என்ன? வீட்டு முதலாளி இந்த மாதிரி அமையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இல்லையா? ஆனால் அவந்திகா கொன்று விடுவாள். ஒரு கொலை அல்ல. பல கொலைகள் நடக்கும். என் செவிகளில் வந்து “எனக்கு மட்டும் இப்படி ஒரு மகள் இருந்தால் கண்டம் கண்டமாக வெட்டிப் போட்டிருப்பேன்” என்றாள் அவந்திகா.
அவந்திகாவின் அளவு கடந்த கோபத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். தமன்னா அவந்திகாவிடம் மட்டும் சத்தமாகவும் என்னிடம் கிசுகிசுக் குரலிலும் பேசியது ஒரு காரணமாக இருக்கலாம்.
புரோக்கருக்கும் அவந்திகாவுக்கும் நடந்த சண்டையின் இறுதிப் பகுதி இப்படி அமைந்தது:
“ஏங்க, உங்க மகளையும் மனைவியையும் இந்த மாதிரி வீட்டில் குடி வைப்பீர்களா? என்று கேட்டாள் அவந்திகா.
“ஏய், என்னாடி பேசுறே நீ?” இது புரோக்கர்.
“டேய் பாடு, வாயை மூட்றா தேவ்டியாப் பயலே.” இது அவந்திகா.
அவந்திகா திருவல்லிக்கேணியில் வளர்ந்தவள்.
பிறகு தமன்னாதான் வந்து இருவரையும் விலக்கி விட்டாள். நம்ப முடியாத ஆச்சரியம் என்னவென்றால், அப்போதும் தமன்னாவின் இன்முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதே இன்முகம்தான்.
இப்படி ஒரு கேரக்டரை என் வாழ்நாளில் கண்டதில்லை போங்கள்.
கிளம்பும்போது தமன்னா என்னிடம் நெருங்கி வந்து “யூ ஹேவ் மை நம்பர் இல்லியோ மாமா, உங்களுக்கு நல்ல வீடு கிடைக்க என் பெஸ்ட் விஷஸ்… வீடு கெடச்சதும் எனக்கு ஃபோன் பண்ணுங்கோ” என என் செவிகளில் கிசுகிசுத்தார்.
இன்னும் நிறைய உள்ளது. ஆனால் இங்கே எழுத வேண்டாம் என்று பார்க்கிறேன். ஏனென்றால், இந்த அனுபவத்தை வைத்து ஒரு நூறு பக்கத்துக்கு நாவல் எழுதலாம் என்று யோசனை.
வீடு என்று தலைப்பு வைப்பா என்றாள் அவந்திகா.
தலைப்பு பொருத்தமாக இருக்கும்தான். ஆனால் சத்தியமாக அந்தத் தலைப்பை வைக்க முடியாது. கதையில் காமெடி, க்ரைம் எல்லாம் இருந்தும் காமமும் கன்னா பின்னா என்று புகுந்து விளையாடுவதால் அந்தத் தலைப்பு கூடாது. அவந்திகா தேடிப் பிடித்து படித்து பிறகு பிரச்சினை ஆகி விடும்.
நாவலில் தமன்னா கதை மட்டும் பத்து பக்கம் வரும். க்ரைம் அண்ட் இரோட்டிசிஸம்.
இன்னொரு கதையில் வீட்டு முதலாளி ஒரு பேரழகி. வீட்டு வாடகை ஒரு லட்சத்து எழுபதாயிரம். இதுவும் ஒரு இரோட்டிக் அண்ட் க்ரைம் ஸ்டோரிதான்.
இரோட்டிக் ஸ்டோரியாக மட்டுமே இருந்திருக்க வேண்டியது க்ரைம் ஸ்டோரியாக மாறிய கதை என்ன தெரியுமா?
அழகி நேரில் இல்லை. ஃபோனில்தான் பேச்சு. ஆனால் ஃபோனில் பேசும்போது அந்த அழகியின் புகைப்படம் வந்தது. வயது முப்பத்து இரண்டு இருக்கலாம்.
முதலில் என்னால் ஒரு லட்சத்து எழுபதாயிரம் என்பதை நம்ப முடியவில்லை. வெறும் எழுபதாயிரம் என்பதைத்தான் நாம் தவறாகக் கேட்டு விட்டோமோ? மறுபடியும் அழகியை அழைத்து பணிவான குரலில் மீண்டும் வாடகையைச் சொல்லுங்கள் என்றேன். ஒரு லட்சத்து எழுபதாயிரம்தான் சொன்னாள்.
சரிங்க என்று ஃபோனை புரோக்கரிடம் கொடுத்து விட்டேன். புரோக்கரும் ஃபோனை கட் பண்ணி விட்டார். வாடகையைக் கேட்டு புரோக்கருக்கே ஹார்ட் அட்டாக் வந்து விட்ட்து. ஏனென்றால், அழகி புரோக்கரிடம் வாடகைத் தொகையைச் சொல்லியிருக்கவில்லை. “நான் டெனண்டிடமே சொல்லிக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டாளாம்.
அழகி பேராசிரியையாக வேலை செய்கிறார் என்று சொல்லியிருந்தார் புரோக்கர். எனக்கு அது அப்போது ஞாபகம் வந்த்து. நான் புரோக்கரிடம் சொன்னேன், “இந்த லேடி ப்ரொஃபஸர் வேலை பார்க்கிறாளா, ப்ராத்தல் நட்த்துகிறாளா? ப்ராத்தல் நட்த்துபவர்கள்தான் இப்படி வாடகை கேட்பார்கள். இவளுடைய ஃபீஸையும் சேர்த்துக் கேட்கிறாள் போல.”
இரோட்டிக் கதை க்ரைம் கதையாக மாறியது இங்கேதான். புரோக்கர் தவறுதலாக ஃபோனை கட் பண்ண மறந்து விட்டார். நான் சொன்னது அழகியின் காதுகளில் விழுந்து விட்டது. பிறகு நடந்த க்ரைம் ஸ்டோரியை நாவலில் சொல்கிறேன்.
பெரும்பாலும் எல்லா வீடுகளுமே எனக்குப் பிடித்திருந்தன. ஸ்ரீ கேட்டாள், அது எப்படி உங்களுக்கு எல்லா வீடுகளும் பிடித்திருக்கிறது?
ஏனென்றால், என் வாழ்வில், என் பார்வையில், என் அணுகுமுறையில் எதிர்மறைச் சிந்தனையே இல்லை என்று சொல்லி விட்டு மேலே குறிப்பிட்ட சானிட்டரி நாப்கின் கதையைச் சொன்னேன். அது என்னுடைய சகிப்புத்தன்மை அல்ல. அந்தக் காரியத்தைச் செய்தபோது நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன் என்பதுதான் முக்கியம்.
நம்ப முடியவில்லையே?
இதோ பார். ஒரு ஆடவனுக்கு ஊர் பேர் தெரியாத மூன்று பெண்களின் சானிட்டரி நாப்கின்களை மாதத்தில் பதினைந்து நாட்கள் ஒரு குச்சியால் எடுத்துக் குப்பைத்தொட்டியில் போடும் வாய்ப்பு கிடைக்குமா? அதை அவன் மகிழ்ச்சியோடு செய்வானா? எத்தனை அடிதடி, எத்தனை பிரச்சினை நடக்கும்?
அந்த வாய்ப்பு கிடைத்ததே என்றுதான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.
ஆறு மாதம் கழித்து ஒருநாள் அவந்திகா ஏடாகூடமாக ஆறு மணிக்கே எழுந்து வந்து இதைப் பார்த்து விட்டாள்.
எவ்ளோ நாளா பண்றே என்றாள்.
ஆறு மாதம் என்றேன்.
மேலே போய் பெரும் ரகளை பண்ணி விட்டாள். அதிலிருந்து சானிட்டரி நாப்கின்கள் கீழே விழுவதில்லை.
ஸ்ரீ கேட்டாள், சரி, உங்களுக்கு துக்கமோ வலியோ வாதையோ இல்லையா? நீங்கள் அடிக்கடி உங்களை ஞானி என்று சொல்லிக்கொள்கிறீர்களே, அதனால் கேட்கிறேன்.
இதோ கேள் பிள்ளாய், எவனொருவன் துக்கத்திலிருந்து விடுபடுகிறானோ அவனே ஞானி. எனக்கு துக்கம் இல்லை. அதனால் ஞானி. தியாகராஜர் ஞானி இல்லை. அவர் துக்கத்திலேயே ஆழ்ந்திருந்தார். சீதா பிராட்டி எப்போதும் உன் பக்கத்திலேயே இருக்கிறாள், ஆஞ்சநேயர் எப்போதும் உன் பக்கத்திலேயே இருக்கிறார், ஆனால் எனக்கு மட்டும் அந்த பாக்கியம் ஏன் இல்லை, நீ என்ன கல்நெஞ்சக்காரனா என்று ஐம்பது ஆண்டுகள் உருகினார்.
தியாகராஜர் ஞானி அல்ல. தியாகராஜர் கவிஞர். கவிஞர்கள் ஒருபோதும் ஞானியாக முடியாது. ஞானி சர்வகாலமும் மகிழ்ச்சியிலேயே திளைப்பவன். கவிஞன் துயர சாகரத்தில் மூழ்கிக் கிடப்பவன். கவிதைகளில் மட்டுமே அவன் சுவாசிக்க முடியும்.
ஆனாலும் பெண்ணே, எனக்கும் இரண்டு விஷயங்களில் துக்கம் உண்டு. சில சமயங்களில் மறந்து போய் இரவில் உருளைக் கிழங்கோ அல்லது அது மாதிரி ஏதோ ஒன்றையோ சாப்பிட்டு விட்டால் கொடூரமான ஒரு வயிற்று வலி வரும். நள்ளிரவு தாண்டியும் போகாது. தற்கொலை செய்து கொள்ளலாம் போல் வலிக்கும். அபான வாயு வந்தால் வலி மறைந்து விடும். ஆனால் அபான வாயு வராது. அந்த வலியும் இப்போது சித்த மருத்துவர் பாஸ்கரன் கொடுத்த ஒரு பொடி மருந்தைச் சாப்பிட்டால் மேஜிக் போல் மறைந்து விடுகிறது.
இன்னும் ஒரே ஒரு துக்கத்துக்குத்தான் மருந்தில்லை. மிருகங்கள் துன்பப்பட்டால் வரும் வேதனை…
பின்குறிப்பு: மகிழ்ச்சி பற்றிய கதையாதலால் சந்தா/நன்கொடை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று காண்க.