பைசா பெறாத விஷயம் – ஒரு சோகக் கதை

நேற்றுதானே மகிழ்ச்சி பற்றி எழுதினேன்? எழுதி முடித்த கணத்திலிருந்து ஒரே மன உளைச்சல். எல்லாம் இந்த இன்ஸ்டாவினால் வந்தது. கதையை ப்ளாகில் வெளியிட்ட கையோடு என் அட்மினை அழைத்து கதையை இன்ஸ்டாவில் பகிர்ந்து விடு என்றேன். அட்மின் பயங்கர பிஸியான ஆள். அதனால் அவளுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது போடட்டும் என்று அந்த விஷயத்தை அப்போதே மறந்து விட்டேன்.

ஒரு மணி நேரத்தில் “எந்தக் கதையை? இந்தக் கதையையா?” என்று மகிழ்ச்சி கதையின் லிங்க் வந்தது. கொலைவெறி ஆகி விட்டேன். எழுதினதே ஒரு கதைதானே? இதில் என்ன கேள்விப் —–? நான் பதில் போடவில்லை. மாலையில் ஒரு வாட்ஸப். எந்தக் கதையைப் போட வேண்டும்?

போங்கடா சு… என்றபடி நானே இன்ஸ்டாவில் பகிர்வதற்கு இரண்டு மணி நேரம் முயன்றேன். முடியவில்லை. தூங்கி விட்டேன்.

இரவு முழுவதும் கனவில் என் அட்மின் என்னிடம் கேட்ட எந்தக் கதை எந்தக் கதை என்ற கேள்வியே மனதில் வந்து முட்டிக்கொண்டிருந்தது. எந்தக் கதையா? நேற்று ஒரு கதைதானே எழுதினேன்? சரி, ஆங்கிலத்தில் பொதுவாக எல்லாவற்றையுமே ஸ்டோரி என்றுதான் சொல்வார்கள் என்றாலும், ஒரு புத்திசாலியான பெண்ணுக்கு நான் எந்தக் கதையைச் சொல்கிறேன் என்று கூடவா யூகிக்க முடியாது என்று யோசித்துக்கொண்டே இருந்ததில் உறக்கமே கொள்ளவில்லை. ஏனென்றால், தயிர்வடை சென்ஸிபிலிட்டி என்ற தொடர் கட்டுரையில் ஒன்றைப் பிய்த்து எடுத்து இன்ஸ்டாவில் பகிர்வதில் அர்த்தமே இல்லை. கதை மட்டும்தான் தனித்து நிற்கிறது. நானும் கதையைத்தான் பகிர் என்று மெஸேஜ் கொடுத்தேன். எந்தக் கதை என்றால் என்ன அர்த்தம்? மாலையில் வேறு இன்னொரு மெஸேஜ். எந்தக் கதை என்று தெரிந்தால் பகிர்ந்து விடுகிறேன்.

இன்று காலை எழுந்ததும் முதல் வேலையாக என் இரண்டாவது அட்மினுக்கு ஒரு மெஸேஜ் போட்டேன். ”கதையை இன்ஸ்டாவில் பகிரவும்.” காலை ஏழு மணி. அட்மின் எட்டரைக்குத்தான் எழுந்து கொள்வார். எட்டு முப்பத்தைந்துக்கு ”கதையை இன்ஸ்டாவில் பகிர்ந்து விட்டேன்” என்று சொல்லி அதன் லிங்கையும் அனுப்பியிருந்தார். ஹனுமான் சாலீஸாவை மனதுக்குள் பாடி ஹனுமானுக்கு ஒரு நன்றியைப் போட்டேன். நல்லவேளை, இரண்டாவது அட்மின் என்னிடம் எந்தக் கதை என்று கேட்டு டார்ச்சர் செய்யவில்லையே என்று. ஆனால் இரண்டாவது அட்மின் ஆண் மகன். ஆண்கள் பொதுவாக இப்படிக் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வதில்லை என்பது என் அனுபவம்.

பெண்கள் கோவித்துக்கொள்ளலாகாது. எல்லா பெண்களுமே இப்படித்தான் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்வார்களா, அல்லது, எனக்குத் தெரிந்த பெண்கள் மட்டும்தானா என்று எனக்குத் தெரியாது. என் அனுபவத்தை மட்டும் வைத்து இப்படிப் பொதுமைப்படுத்துவதும் தவறுதான். இருந்தாலும் ஒரு கதையில் போய் political correctness எல்லாம் பார்க்கக் கூடாது இல்லையா?

இரண்டாவது அட்மின் சொன்னபடி அந்த லிங்கில் போய்ப் பார்த்தேன். லிங்கை அமுக்கினேன். அது என்னைக் கதைக்குக் கொண்டு போய் சேர்க்கவில்லை. அப்படியே நின்றது. அவரிடம் மெஸேஜ் பண்ணினேன். உங்கள் புகைப்படம் இருக்கும் வட்டத்தை அழுத்துங்கள் என்றார். அழுத்தினேன். ஒன்றும் நடக்கவில்லை.

இரண்டாவது அட்மினுக்கு நீங்கள் போட்டதை நீக்கி விடுங்கள் என்று மெஸேஜ் அனுப்பினேன். இரண்டாவது அட்மின் வேறு ஒரு துறையில் நிபுணர். ஆனால் கணினி விஷயங்கள் அவருக்கு அந்நியம்.

அவர் காலையில் காலில் வெந்நீர் கொட்டியது போல் பிஸியாக இருப்பார். அவருக்கு இன்று காலையில் இப்படி ஒரு வேலையைச் செய்யும்படி ஆகி விட்டது.

அதற்குள் முதல் அட்மினிடமிருந்து ஒரு மெஸேஜ். “சாரு, நீங்கள் இன்ஸ்டாவில் பகிர்ந்திருப்பதைப் பார்த்தேன். அது வேலை செய்யவில்லை. உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். எந்தக் கதையை பகிர வேண்டும் என்று தெளிவாகச் சொன்னால் நானே பகிர்ந்து விடுகிறேன்.”

பெங்களூர் சென்றால் எல்லோரும் சொல்வார்கள், காலையில் வாக்கிங் போய் விடாதீர்கள், தெருநாய்கள் குதறி விடும் என்று. பெங்களூரில் கும்பல் கும்பலாகத் திரியும் தெருநாய்கள். எல்லாமே வெறிநாய்கள். பசியும் மனிதர்களின் நாய் வெறுப்புமே காரணம். முதல் அட்மினின் இன்றைய மெஸேஜைப் பார்த்து அந்த பெங்களூர் வெறிநாய் மாதிரி ஆகி விட்டேன் நானும்.

வெறியை அடக்கிக் கொண்டு ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் குரலில் ஒரு ஐந்து நிமிட வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினேன்.

”வாய்ஸ் மெஸேஜைக் கேட்க முடியாத சூழல். நான் மருத்துவமனையில் பரிசோதனையில் இருக்கிறேன். பிறகு தொடர்பு கொள்கிறேன்.”

எனக்கு ஐரோப்பிய நாடுகளில் காஃபி குடித்த நாள்கள் நினைவுக்கு வந்தன. காஃபி வேண்டும் என்று கேட்டால், அமெரிக்கக் காஃபியா, துருக்கிக் காஃபியா, இத்தாலி காஃபியா, சீன காஃபியா, மங்கோலியா காஃபியா என்று இருபது வகை காஃபியின் பெயர் சொல்லிக் கேட்பார்கள். சரி, மங்கோலிய காஃபியைப் பார்ப்போம் என்று மங்கோலியா என்பேன்.

பால் ஊற்றியா, பால் ஊற்றாமலா?

பால் ஊற்றி.

பெரியதா, சின்னதா, மத்தியமா?

சின்னது.

எனக்கு ஞாபக சக்தி கம்மி. இதுபோல் ஒரு பதினைந்து கேள்வி கேட்பார்கள். எல்லாவற்றுக்கும் ஏதோ வாய்க்கு வந்ததை பதிலாகச் சொல்லி வைப்பேன்.

கடைசியாக அவன் கேட்ட கேள்வியை மட்டும் மறக்கவே இல்லை.

க்ரீம் போட்டா? போடாமலா?

ங்கொம்மால ஓக்க என்று மனதுக்குள் திட்டி விட்டு பக்கத்திலிருந்த பாருக்குள் போய் ஒரு பியரை வாங்கிக் குடித்தேன். பியருக்குக் கேள்வியே கேட்கவில்லை. கை காண்பித்தால் போதும். கைக்கு வந்து விடும்.

எனக்கு இப்போது இன்ஸ்டாவுக்கு ஒரு அட்மின் தேவை. ஒரே தகுதி. என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது. உங்களுக்கு இரண்டே இரண்டு சாய்ஸ்தான் இருக்கிறது. நீங்கள் நான் சொன்னதைப் பகிரலாம். அல்லது, பகிராமல் இருக்கலாம். இரண்டையுமே நான் வரவேற்கக் கூடியவன். ஒரு வேலையை நீங்கள் செய்யாமல் இருந்தால் எனக்குக் கோபமே வராது. ஏனென்றால், நீங்கள் ஒன்றும் என்னிடம் சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை. நீங்கள் செய்வது உதவி. எனவே அதைச் செய்யாமல் இருப்பதற்கு உங்களுக்குப் பூரண சுதந்திரம் உண்டு. ஆனால் மூன்றாவது சாய்ஸுக்குள் போக உங்களுக்கு அனுமதி கிடையாது. அதாவது, கேள்வி கேட்கும் சாய்ஸ்.