20. It is about transgressive sex…

பத்தொன்பதாம் அத்தியாயத்தின் இறுதியை நினைவு கூர்ந்து கொண்டு இப்போது மீதிக் கதையைப் படியுங்கள்.  Truth or Dame game என்று எழுத்துப் பிழையோடு வந்து விட்டது.  ஆட்டத்தின் பெயர் Truth or Dare என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இரண்டாவது ஆட்டத்தில் தியோ வெல்கிறான்.  இஸபெல் தோற்கிறாள்.  இப்போது நீ மேத்யூவுடன் எனக்கு முன்னே உடலுறவு கொள்ள வேண்டும் என்கிறான் தியோ. 

என்னதான் படத்தின் கதையை எழுதினாலும் நீங்கள் பார்த்தால்தான் படத்தின் இயல்புத்தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.  படத்தில் எதுவுமே ஆபாசமாக இல்லை என்பதும், வக்கிரமாகத் தோன்றவில்லை என்பதும் முக்கியம்.  காரணம், தியோவும் இஸபெல்லும் ஒரே சமயத்தில் பிறந்தவர்கள். இரட்டையர்.  நினைவு தெரிந்த காலத்திலிருந்தே இருவரும் ஆண் பெண் பாகுபாடு இல்லாமல், உடல் பற்றிய கூச்சம் இல்லாமல் வளர்ந்தவர்கள்.  நிர்வாணம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை.  இருவரும் நிர்வாணமாகவே ஒரே கட்டிலில் உறங்குபவர்கள்.  ஆனால் இருவரும் உடலுறவு கொள்வதில்லை.  (இது ஒரே ஒரு காட்சியிலேயே நமக்குப் புரிந்து விடுகிறது.)  மேத்யூவும் இஸபெல்லும் கலவியில் ஈடுபடும்போது இஸபெல்லுக்குக் கன்னித்திரை கிழிந்து குருதி வெளியாகிறது. (அந்தக் குருதியை எடுத்து இருவரும் தங்கள் முகத்தில் தேய்த்துக் கொள்கிறார்கள்).  மேத்யூவுக்கும் அது முதல் முறையாக இருக்கிறது.   

மேத்யூவும் இஸபெல்லும் உறவு கொள்ளும்போது (காட்சி தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கிறது) தியோ அதுவரையிலும் இல்லாத ஒரு புதுவிதமான அனுபவத்தை அடைகிறான். அவனால் இஸபெல் இன்னொருவனோடு உடலுறவு கொள்வதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.  உடமை உணர்வினால் பாதிக்கப்படுகிறான்.  பாதிக்கப்படுவதையும் அவனால் ஏற்க முடியாமல் ஆம்லெட் போட்டு சாப்பிடுகிறான். 

கதை 1968இல் பாரிஸ் நகரில் நடக்கிறது என்பதுதான் படத்தின் முக்கியமான அடிப்படை.  Cinematheque Francais என்ற திரைப்படக் கல்லூரியின் முதல்வரான Henri Langloisஐ அரசாங்கம் பதவி நீக்கம் செய்கிறது.  அதிலிருந்துதான் மாணவர் போராட்டம் தொடங்கியது.  போராட்டம் புரட்சியாக மாறி, அரசாங்கமே கவிழும் நிலைக்கு ஆளாகி விட்டது. 

தெ ட்ரீமர்ஸ் கதை மாணவர் புரட்சி உச்சத்தில் இருக்கும்போது நடக்கிறது. சார்த்தர் மாணவர் புரட்சியை ஆதரித்துப் பேசுகிறார்.  மாவோ சீனாவில் செய்த புரட்சியை ஐரோப்பாவுக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற கனவில் இருக்கிறார்கள் மாணவர்கள்.  தியோவின் அறையில் மாவோவின் புகைப்படம் தொங்குகிறது.  தியோவும் மேத்யூவும் அடிக்கடி அரசியல் மற்றும் தத்துவ விவாதங்களில் ஈடுபடுகிறார்கள்.  விவாதங்களில் அனல் பறக்கிறது.

ஆனால் தியோவும் இஸபெல்லும் ஒரு பூர்ஷ்வா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.  அவர்களுக்கு எதார்த்த வாழ்வின் குரூரங்கள் தெரியவில்லை.  அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் புத்தக அறிவுதான்.

இந்த பூர்ஷ்வா பின்னணி மிகவும் முக்கியமானது.  லாஸ்ட் டேங்கோ இன் பாரிஸிலும் ஜான் ஒரு பூர்ஷ்வா குடும்பத்தைச் சேர்ந்தவள்தான்.  அந்தக் குடும்பப் பின்னணி படத்தில் மிகவும் அழுத்தமாகக் காண்பிக்கப்படுவதன் காரணம், அப்படிப்பட்ட பூர்ஷ்வா பெண்கள்தான் வாழ்வில் சாகசம் காண வேண்டி மஸாக்கிஸ்டாக மாறுகிறார்கள்.  இதை நான் அனுபவ பூர்வமாகவும் புத்தகங்கள் வாயிலாகவும் பார்த்திருக்கிறேன்.    

தியோவின் தந்தை புகழ் பெற்ற ஃப்ரெஞ்ச் கவிஞர். தாய் பிரிட்டிஷ்.  ஒருநாள் தியோவும், மேத்யூவும், இஸபெல்லும் செக்ஸ் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது “என் பெற்றோர் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது கதவைத் தாளிடுவதில்லை” என்று மேத்யூவிடம் சொல்கிறான் தியோ.

இஸபெல்லுக்கு ஆண் நண்பர்கள் யாரும் இல்லை.  காதல் என்றால் என்னவென்றே அவளுக்குத் தெரியாது.  அவளுடைய உலகில் தியோ மட்டுமே இருந்தான்.  இப்போது மேத்யூ.  ஒருநாள் மேத்யூ அவளிடம் “உனக்கு டேட்டிங் என்றால் என்னவென்று தெரியுமா?” என்று கேட்கிறான்.  அவளுக்குத் தெரியாது.  அவள் அதுவரை யாரையுமே தியோ இல்லாமல் சந்தித்ததே இல்லை.  “இன்று என்னோடு நீ தனியாக வா” என்று சொல்லி அவளை அழைத்துச் செல்கிறான்.

அப்போதுதான் தியோவின் உடமை உணர்வு திமிறி எழுகிறது.  தன் தோழி ஒருத்தியை அழைத்துக்கொண்டு வந்து இஸபெல்லின் படுக்கையில் வைத்து உறவு கொள்கிறான். 

அந்தச் சம்பவத்தை இஸபெல்லினால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.  படுக்கையறையின் கதவை விடாமல் தட்டுகிறாள்.

கதை முழுவதும் அநேகமாக தியோவின் வீட்டுக்குள்ளேயே நடக்கிறது.  அதனால் பெரும்பாலும் மூவரும் நிர்வாணமாகவே இருக்கிறார்கள்.  தியோவின் பெற்றோர் ஒரு மாதம் வெளியூர் சென்றிருப்பதால் அந்த வீட்டில் கிடைத்த அந்தரங்கம் அவர்கள் மூவருக்கும் சாத்தியமானது.  ஒருநாள் எதிர்பாராமல் தியோவின் பெற்றோர் வீட்டுக்குத் திரும்பி வரும்போது தியோ, இஸபெல், மேத்யூ மூவரும் முழு நிர்வாணமாக ஒரு கட்டிலில் கட்டிப் பிடித்தபடி உறங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, ஒரு வங்கிக் காசோலையில் கையெழுத்திட்டு வைத்து விட்டு, சத்தம் போடாமல் வெளியேறுகிறார்கள். 

மாணவர் புரட்சி உக்கிரம் அடைகிறது.  தியோவும் இஸபெல்லும் போலீஸை வன்முறையால் எதிர்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.  மேத்யூ “we have to make love, not war” என்று சொல்லி இருவரையும் உதட்டில் முத்தமிடுகிறான்.  ஆனாலும் தியோ கேட்பதில்லை.  பெட்ரோல் வெடிகுண்டை போலீஸ் மீது எறிகிறான்.  அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்த போலீஸ் மாணவர்கள் மீது வெறியுடன் பாய்கிறது. 

ட்ரீமர்ஸ் பற்றி ரோஜர் எபர்ட் எழுதுகிறார்:

His film (The Dreamers), like “Last Tango,” takes place largely in a vast Parisian apartment. It is about transgressive sex. Outside the windows, there are riots in the streets, and indeed, in a moment of obvious symbolism, a stone thrown through a window saves the lives of the characters, the revolution interrupting their introverted triangle.

***

கடந்த சில தினங்களாக ஒருவர் அல்லது இருவர்தான் சந்தா அனுப்புகிறார்கள். மாதத்தின் கடைசி வாரத்தில் கூட சந்தா வரத்து நன்றாக இருந்தது. சந்தா அனுப்புவதற்கு முதல் வாரம், கடைசி வாரம் என்றெல்லாம் இல்லை போல் தெரிகிறது. முதல் தேதியிலிருந்தே ஒருவர் இருவர்தான்.

எனவே, இதுவரை சந்தா அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai