21. பின்னோக்கிப் பார்க்கிறேன்…

1978இலிருந்து நான் தில்லியில் பார்த்த திரைப்படங்கள்தான் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பெரும்பான்மையான படைப்பாளிகளை நான் மூர்க்கமாக நிராகரிப்பதற்குக் காரணமாக அமைந்தன. நான் நிராகரித்தவர்களுள் முக்கியமானவர் தி.ஜானகிராமன். அந்தத் திரைப்படங்கள் எனக்குப் பார்க்கக் கிடைத்ததனாலேயே ”நான் ஜெர்மன் சினிமாவினால் உருவாக்கப்பட்டேன்” என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். பொதுவாகச் சொன்னால், ஐரோப்பிய சினிமா. அதிலும் பெர்க்மன் போன்றவர்கள் அல்ல. பெர்க்மன் மானுட குலத்தின் ஆன்மீக வெறுமையைத் தன் கருப்பொருளாக எடுத்தவர். ஆனால் பசோலினி போன்றவர்களும், ஜெர்மானிய பெண் இயக்குனர்களும்தான் மனிதனின் குரூர அழகியலைப் பேசியவர்கள். குறிப்பாக பசோலினியின் Salò, or the 120 Days of Sodom (1975) என்ற திரைப்படம் என் கலை வாழ்வில் மிகவும் முக்கியமான பங்களிப்பைச் செய்தது.

கூடவே இலக்கியத்தில் என் சகாவாகப் பயணித்தது மார்க்கி தெ ஸாத் (1740 – 1814). அவர் தன்னுடைய நாவல் ஒன்றில் – Philosophy in the Bedroom என்று ஞாபகம் – ”எந்தப் பெண் தன் அன்னையின் யோனியை ஊசி நூலால் தைக்கிறாளோ அவளுக்கு இந்த நாவலை சமர்ப்பணம் செய்கிறேன்” என்று எழுதியிருப்பார். இப்படி ஒரு சமர்ப்பணத்தை உலக இலக்கியம் கண்டிருக்குமா என்று தெரியவில்லை. தங்கள் தாயாரின் யோனியை ஊசி நூலால் தைக்கும் பதின்பருவத்துப் பெண்கள் அந்த நாவலில் வருவார்கள். இதையெல்லாம் ஸாத் தன்னுடைய கோட்டையில் செய்து பார்த்த பிறகே எழுதினார்.

அக்கால கட்டத்தில் மார்க்கிகளைக் (பிரபுக்கள்) கொல்வது சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்ததால் (இந்தியாவில் பிராமணர்களைப் போல) மார்க்கி தெ ஸாதுக்கு மரண தண்டனை கொடுக்க முடியாமல் சிறையில் அடைத்தார்கள். இவ்வாறு இருபத்தேழு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்தார் மார்க்கி தெ ஸாத். இத்தனை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட வேறொரு எழுத்தாளனை உலகம் காணவில்லை.

பிறரை வதை செய்து அதில் இன்பம் காணும் போக்கு மனித குலம் தோன்றியதிலிருந்தே இருந்து வந்தாலும், அதற்கு Sadism என்ற பெயர் மார்க்கி தெ ஸாதின் நாவல்களுக்குப் பிறகுதான் புழக்கத்துக்கு வந்தது. ஆனால் உண்மையில் ஸாத் ஒரு மஸாக்கிஸ்ட்டாகத்தான் வாழ்ந்தார். அவர் எழுதாமல் இருந்திருந்தால் சிறைவாசம் இல்லை. ஆனாலும் அவர் தன்னை வதைத்துக்கொண்டுதான் எழுதினார். சுயவதையில் இன்பம் காண்பது மஸாக்கிஸம். (இந்தியப் பெண்களை நான் இந்த வகையில்தான் சேர்ப்பேன். இப்போதுதான் பெண்ணியத்தின் உபாயத்தினாலோ என்னவோ கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சேடிஸ்டுகளாக மாறி வருகிறார்கள்.)

உலக இலக்கியத்தில் மிக அதிகமாக எழுதியவர் என அலெக்ஸாந்தர் தூமாவைச் சொல்வார்கள். ஒரு லட்சம் பக்கங்கள். ஆனால் தூமாவை விடவும் அதிகமாக எழுதியவர் யுகியோ மிஷிமாதான். காரணம், மிஷிமாவின் குறைந்த ஆயுளைக் கணக்கிட்டால் அவர் எழுதியதே தூமாவை விட அதிகம். மிஷிமா பிறந்தது 1925. ஹராகிரி செய்து தற்கொலை செய்து கொண்ட ஆண்டு 1970. மிஷிமா எழுதிய ஆண்டுகள் 1938இலிருந்து 1970 வரை. ஐந்து முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். முப்பத்திரண்டு ஆண்டுகளில் அவர் எழுதியவை 34 நாவல்கள், 50 நாடகங்கள், 25 சிறுகதைத் தொகுப்புகள், 40 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு ஆபரா, ஒரு திரைப்படம்.

மிஷிமாவை விட அதிகமாக எழுதியவர் மார்க்கி தெ ஸாத். சிறைச்சாலையில் காகிதங்கள் கொடுக்கப்படாததால் கழிவறையில் இருக்கும் டிஷ்யூ பேப்பரில் எழுதினார். ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ஒரு ஆளை நட்பாக்கிக் கொண்டு அவர்களிடமிருந்து பென்சிலைப் பெற்று எழுதினார். அப்படி எழுதியதெல்லாம் அவர் சிறையிலிருந்து வெளியே வரும்போது சிறை அதிகாரிகளால் கொளுத்தப்படும். ஆனாலும் அவருக்குப் பல தீவிரமான வாசக நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் ஸாத் எழுதியவற்றை சிறையிலிருந்து கடத்தி ஸ்வீடனில் வைத்து வெளியிட்டார்கள். அவர் எழுதி எரிக்கப்படாமல் மீதமிருந்ததை அவர் இறந்த பிறகு அவர் மனைவியும் மனைவியின் தாயும் மற்ற குடும்பத்தாரும் – அவருடைய மகன் என்று நினைக்கிறேன் – தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

இத்தனைக்குப் பிறகும் அவருடைய புத்தகங்கள் தலையணை சைஸில் இப்போது கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று, The 120 Days of Sodom. இந்த நாவல் 1785இல் எழுதப்பட்டு, 1904இல்தான் வெளியிடப்பட்டது. இந்த நாவலை ஸாத் பஸ்த்தில் சிறையில் இருந்தபோது எழுதினார். 1789இல் பஸ்த்தில் கோட்டை புரட்சியாளர்களால் தாக்கப்பட்ட போதும் நாவல் தொலைந்து விடவில்லை. ஸாதின் நண்பர்கள் அந்த நாவலைக் காப்பாற்றி வைத்திருந்தார்கள். 1904இல் அது பிரசுரம் கண்ட போதும் ஃப்ரான்ஸும் மற்றும் பல நாடுகளும் அதைத் தடை செய்து விட்டன. பிறகு 1990இல்தான் அந்த நாவல் ஃப்ரான்ஸில் இலக்கிய அந்தஸ்துடன் பிரசுரமானது. பெங்குவினில் கிளாஸிக் எடிஷன் வந்தது 2016!

மார்க்கி தெ ஸாத் நெப்போலியனின் நண்பர். ஒருமுறை நெப்போலியன் ஸாதிடம் “ஏன் நீ இப்படி சமூகத்துக்கு ஒவ்வாத நூல்களை எழுதி சிறையில் காலத்தைக் கழிக்கிறாய்?” என்று கேட்டிருக்கிறார். ஸாத் தன் நூல்களில் எழுதியிருப்பது ஒன்றும் ஃப்ரெஞ்ச் சமூகத்தில் புதிதல்ல. பல பிரபுக்கள் செய்து வந்ததுதான். ஆனால் இலைமறைவு காய் மறைவாக இருப்பதை ஏன் ஸாத் புத்தகமாக எழுதினார் என்பதுதான் பிரச்சினை.

நாவலில் நான்கு பணக்கார libertine ஃப்ரெஞ்சுக்காரர்கள் ஒரு கோட்டையில் இருபது இளைஞர்களை அடைத்து வைத்து அவர்களைப் பலவிதமான பாலியல் சித்ரவதைகள் செய்கிறார்கள். இவர்களுக்கு உதவியாக பல பணியாளர்களும் வயதில் மூத்த நான்கு விபச்சாரிகளும் இருக்கிறார்கள்.

இரவில் அந்த விபச்சாரிகள் தங்கள் அனுபவங்களை கதை போல் சொல்ல வேண்டும். அதை உத்வேகமாகக் கொண்டு நான்கு பேரும் அந்த இளைஞர்களைப் பாலியல் வதைகளுக்கு உட்படுத்துவார்கள்.

அப்போது அந்த விபச்சாரிகள் தங்களிடம் வந்த வாடிக்கையாளர்கள் என்ன என்னவெல்லாம் செய்தார்கள், என்னவெல்லாம் செய்து தங்களின் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக்கொண்டார்கள் என்பதை கதை போல் சொல்கிறார்கள். அவர்கள் அப்போது அறுநூறு விதமான பாலியல் இச்சைகள் பற்றிச் சொல்கிறார்கள். எல்லாம் வாடிக்கையாளர்கள் அவர்களிடம் செய்து பார்த்தது. அதில் ஒன்று, coprophilia.

Chuck Berry என்று ஒரு அமெரிக்கப் பாடகர் இருந்தார். 1926இல் பிறந்த இவர் தொண்ணூறு வயது வரை வாழ்ந்து 2017இல்தான் காலமானார். அவருக்கு இந்த காப்ரஃபீலியா பழக்கம் இருந்திருக்கிறது. அவருக்குச் சொந்தமான ஒரு உணவு விடுதியில் பெண்களை அழைத்து வந்து அந்த உணவகத்தின் கழிவறையில் வைத்து அவர் மீது சிறுநீர் கழிக்கச் செய்தும், மலம் கழிக்கச் செய்தும் தன் பாலியல் இச்சையைத் தணித்துக்கொள்வது அவர் வழக்கம். ஆனால் அதை அவர் விடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்ட போது அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. தன் மீது மலம் கழிக்கச் செய்து அதில் காம சுகம் பெறுவதை coprophilia என்கிறார்கள்.

The 120 Days of Sodom நாவலைப் பற்றி ஜார்ஜ் பத்தாய் இப்படிச் சொல்கிறார்:
”It towers above all other books in that it represents man’s fundamental desire for freedom that he is obliged to contain and keep quiet.”

அடுத்தவரை வதை செய்வதுதான் மனித சுதந்திரமா என்று கேட்கலாம். மனித இனம் அப்படித்தான் கருதுகிறது என்கிறார் மார்க்கி தெ ஸாத்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். Memories of Murder (2003) என்று ஒரு கொரியத் திரைப்படம். Bong Joon-ho இயக்கியது. அதில் ஒரு சீரியல் கில்லர் வருகிறான். அவனை போலீஸ் பிடித்து விட்டாலும் அவன்தான் கொலைகாரன் என்று நிரூபிக்க எந்தச் சான்றுகளும் கிடைக்கவில்லை. இது ஒரு நிஜமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. நிஜத்திலுமே கூட சீரியல் கில்லர் பிடிபடவில்லை. படத்தின் இறுதிக் காட்சிதான் முக்கியம்.

கொலைகள் நடந்து பல ஆண்டுகள் கழித்து கொலைகள் நடந்த கிராமத்துக்கு வருகிறான் போலீஸ் அதிகாரி. பெண்கள் கொலை செய்யப்பட்டு பிரேதம் கிடந்த ஒரு கால்வாயின் உள்ளே எட்டிப் பார்க்கிறான். அப்போது அந்த வழியே வரும் ஒரு சிறுமி “அங்கே என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்கிறாள்.

“என்னவென்று சொல்வது, பழைய ஞாபகத்தினால் பார்க்கிறேன்” என்கிறான் போலீஸ்காரன்.

அப்போது சிறுமி சொல்கிறாள்: “இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு வேறு ஒரு மனிதர் இந்தக் கால்வாயை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார். என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டேன். ’பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் நான் செய்த காரியங்களை நினைத்துப் பார்க்கிறேன்’ என்று சொன்னார்.”

அடுத்த ஷாட்டில் போலீஸ்காரர் நம்மையே உற்று நோக்குகிறார்.

இதை கட் பண்ணி விட்டு வேறொரு சம்பவத்துக்கு வாருங்கள். தில்லியில் நடந்த நிர்பயா வன்கலவி. அந்தப் பெண்ணை பஸ்ஸில் வன்கலவி செய்ததோடு இல்லாமல் மேலும் பலவிதமாக சித்ரவதை செய்த ஐந்து பேரும் யார்? அவர்களுக்கும் குடும்பம் குழந்தை எல்லாம் இருக்க மாட்டார்களா? அவர்கள் தங்கள் குழந்தையை செல்லமே வெல்லமே என்று கொஞ்ச மாட்டார்களா? அந்த ஐவரில் ஒருவன் பதினாறு வயதுச் சிறுவன் என்பதால் அவனை சீர்திருத்தப் பள்ளியில் போட்டு இரண்டே ஆண்டுகளில் வெளியே விட்டு விட்டார்கள். நிர்பயா சாகும்போது என்ன சொன்னார்? அந்தச் சிறுவனுக்கு மட்டுமாவது மரண தண்டனை கொடுங்கள் என்றார். ஏனென்றால், அந்தச் சிறுவன்தான் நிர்பயாவின் யோனியில் இரும்புத் தடியைச் சொருகி அவரைக் கொடூரமாக சித்ரவதை செய்தவன். அவன் எங்கேயும் போய் விடவில்லை. இப்போதும் நம்மிடையேதான் இருக்கிறான்.

இவர்களின் கதையைத்தான் மார்க்கி தெ ஸாத் 140 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதினார்.

அவ்வளவு ஏன்? இருபது ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு பெண் எழுதிய நீண்ட கடிதம் ஒன்றை இந்தத் தளத்தில் வெளியிட்டேன். இப்போது இருப்பது போல் அப்போது அதிக இணைய தளங்கள் இல்லை. சாருஆன்லைன் மட்டுமே முன்னோடியாக இருந்தது. எழுத்தாளர்களில் நான் மட்டுமே இணைய தளம் வைத்து எழுதிக்கொண்டிருந்தேன். மற்றதெல்லாம் பத்திரிகைகளின் இணைய தளங்கள். அமெரிக்கத் தமிழர்களிடையே சாருஆன்லைன் மிகவும் பிரபலமாக இருந்தது.

அந்தக் கடிதம் இப்போது என்னுடைய கோணல் பக்கங்கள் தொகுப்பில் உள்ளது. கடிதத்தின் சாரம் இதுதான்.

இருபத்தைந்து வயதுப் பெண். தமிழ் பிராமணர். ஐஐடியில் படித்தவர். அமெரிக்க மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை ஐஐடியில் தங்க மெடல் வாங்கியவர். மாப்பிள்ளையின் தாயும் மாப்பிள்ளையோடு அமெரிக்காவில் வசிக்கிறார். திருமணம் ஆகி ஒரே ஆண்டில் ஒரு குழந்தை. குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிறது.

இந்த ஒன்றரை ஆண்டுகளும் அந்தப் பெண்ணுக்கு அனுதினமும் அடி உதைதான். ஒருநாள் கணவன் அவளை இரவு ஒன்பது மணிக்கு மேல் வீட்டை விட்டுத் துரத்தி விட்டான். பாஸ்போர்ட் கணவனிடம் இருக்கிறது. பர்ஸும் அவனிடமே இருக்கிறது. தோழிக்கு ஃபோன் செய்வதற்குக் கூட கையில் காசு இல்லை. கைபேசியையும் பிடுங்கிக் கொண்டு விட்டான்.

இரவு முழுவதும் வீட்டுக்கு வெளியிலேயே அமர்ந்திருந்து மறுநாள் திருட்டுத்தனமாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தாள் அந்தப் பெண்.

போலீஸுக்கு ஒரே ஒரு ஃபோன் போட்டிருந்தால் கணவனும் கிழவியும் ஜெயிலுக்குப் போயிருப்பார்கள். கடைசியில் விவாகரத்து ஆகி விட்டது.

இப்போது நாம் அந்தப் பெண் திக்குத் தெரியாத ஒரு ஊரில் கையில் குழந்தையுடன் வீட்டிலிருந்து விரட்டப்பட்ட அந்தச் சூழலை நினைத்துப் பார்ப்போம். அந்தப் பெண்ணின் நிலை என்ன? அந்தக் கணவனின் மனநிலை என்ன? அந்தக் கணவர்கள்தான் ஸொடோம் நாவலின் கனவான்கள்.

இதுவரை நான் என் வாழ்வில் இரண்டாயிரம் கட்டுரைகள் எழுதியிருப்பேன். அதில் ஆக முக்கியமானதாக இருக்கும் நாளைய கட்டுரை. ஏனென்றால், பஸோலினி பற்றி இதுவரை நான் அதிகம் எழுதியதில்லை. நாளை எழுதுவேன்.

சந்தா அல்லது நன்கொடை அனுப்ப மனம் கொள்ளுங்கள். இன்னும் நூறு பேரைக் கூடத் தாண்டவில்லை.

இதுவரை சந்தா அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai