என் நண்பர் ஒருவர் என் வாட்ஸப்பில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். எழுதிய நேரம் இரவு 11.43.
”உங்களை நிரூபிக்க என்ன தேவை இருக்கிறது சாரு… ஏன் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்? ஒரு ரெண்டு நாள் எழுதுங்கள், போஸ்ட் பண்ணாதீர்கள். வீட்டில் நீங்க பாட்டுக்கு இருங்கள். எழுதி எழுதி போஸ்ட் போடனும்னு எந்த அவசியமும் இல்லை. ஒரு பத்து நாள் அமைதியாக இருங்கள் .. எல்லாரும் தேடி வருவார்கள், இல்லயா ஒரு **## இல்லை.. சாரு தப்பாகச் சொல்லிருந்தால் மன்னிச்சிருங்க.. உங்களால் பத்து நாள் அமைதியாக இருக்க முடியாதா? பத்துநாள் கழிச்சி எழுதுங்கள்…”
இதை எழுதி அனுப்பிய போது நண்பர் அநேகமாக மது அருந்தியிருப்பார் என்று நினைக்கிறேன். மதுவில் நம்முடைய தயக்க உணர்ச்சி தளர்ந்து விடுகிறது. அதனால் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை நம்மால் சகஜ உணர்வுடன் தெரிவித்து விட முடிகிறது. ஆனால் பெரும்பாலான சமயங்களில் நாம் அப்படிச் செய்யக் கூடாது. காரணம், காலையில் எழுந்து “அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது” என்று தோன்றும். மது அருந்தும் சமயங்களில் கைபேசியைத் தொடவே கூடாது என்பதை ஒரு விதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சீனியாக இருந்தால், இதையெல்லாம் பொருட்படுத்தி ஏன் பதில் சொல்கிறீர்கள் சாரு என்று கேட்பார். ஆனால் என் வழக்கம் அப்படி அல்ல. கேள்வி கேட்டால் பதில் சொல்லி விட வேண்டும். அந்த பதிலிலிருந்தும் கொஞ்சம் எடுத்துக்கொள்ள ஏதாவது இருக்கும் என்று நினைப்பேன்.
என்னை யாருக்கும் நிரூபிப்பதற்காக எழுதவில்லை என்பதை நண்பர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். ஒரு பறவை பறப்பது போலே நான் எழுதுகிறேன். பறவையிடம் போய் ஏன் நீ பறக்கிறாய், கொஞ்ச நாள் சும்மா இரேன் என்று சொல்ல முடியுமா? சொல்பவன் பைத்தியக்காரன். பறப்பதுதான் பறவையின் இயல்பு. பறவை பறக்காவிட்டால் வனங்கள் இராது, மனித இனமே அழிந்து விடும்.
அதேபோல் காட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் ஒரு துறவியிடம் போய், ஏன் நீங்கள் வாயை மூடிக்கொண்டு மௌன தவம் செய்கிறீர்கள், பேசினால் எத்தனை நன்றாக இருக்கும் என்று கேட்பதும் பைத்தியக்காரத்தனம்தான். மௌன தவம் இருக்கும் துறவிகளாலேதான் இந்த உலகின் லயம் கெடாமல் இருக்கிறது என நான் நினைக்கிறேன். அவரவர் அவரவர் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் ஒன்று, யாருக்காகவும் அல்ல, எனக்கு நானே நிரூபித்துக்கொள்ள வேண்டித்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். இது ஒரு தவம். இந்த தவத்தைப் புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வாயை மூடிக்கொண்டிருங்கள். நீங்கள்தான் மௌனமாக இருந்து பழக வேண்டும். நான் அல்ல. ஏனென்றால், நான் நாள் முழுதும் மௌனமாக இருக்கிறேன். கிம் கி டுக்கின் படம் ஒன்றில் படம் பூராவும் வசனமே இருக்காது. அந்தப் படத்தில் பிரதானமாக வரும் பெண் வாய் பேசாதவள் என்று நாம் முடிவுக்கு வருவோம். அதே சமயம் அவள் சைகையாலும் பேச மாட்டாள். முழு மௌனம். படத்தில் யாருமே பேச மாட்டார்கள். கதையும் அப்படித்தான் இருக்கும். மௌனப் பட காலத்திய படம் போல் இருக்கும். ஆனால் கடைசிக் காட்சியில் அவள் பேசுவாள். அதுவும் அதிகம் அல்ல.
ரிச்சர்ட் ஃபேன்மேனின் Surely You’re Joking, Mr. Feynman! என்ற புகழ் பெற்ற புத்தகத்தில் ஒரு சம்பவம் வரும். ஃபேன்மேன் பால் வாங்குவதற்காக ஒரு கடைக்குப் போவார். நான்தான் எழுதியிருக்கிறேனே, மேலை நாடுகளில் கடையில் போய் ஒரு பொருளைக் கேட்டால் ஒன்பதாயிரம் கேள்வி கேட்டு வறுத்து எடுப்பார்கள் என்று, அதேபோல் கடைக்காரர் எந்தப் பால், எந்த நாட்டுப் பால், எது கலந்த பால், எது கலக்காத பால் என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார். எல்லாவற்றுக்கும் ஃபேன்மேன் வாய் பேச முடியாதவரைப் போல் சைகையிலேயே பதில் சொல்கிறார். கடைசியில் பணத்தைக் கொடுத்து பாக்கெட்டை வாங்கும்போது ஃபேன்மேன் கடைக்காரரிடம் “தேங்ஸ்” என்கிறார். “அடக் கழிச்சல்ல போறவனே” என்கிறாற்போல் கடைக்காரர் ஆங்கிலத்தில் திட்டி அனுப்புகிறார்.
என் வாழ்க்கை அப்படிப்பட்டது அல்ல. என் தொழிலில் பேச்சே இல்லை. பேச்சை நிறுத்தினால்தான் எழுத்து. எனக்கு நானேதான் பேசிக்கொள்ள வேண்டும். மற்றவர்களோடு பேச முனைந்தால் எழுத்து நின்று விடும். ஒரு நாளில் நான் மேலே சொன்ன கிம் கி டுக் படத்தில் வருவது மாதிரிதான் ஓரிரு வார்த்தைகளே பேசுகிறேன். மதியம் மூன்று மணியிலிருந்து இரவு பத்து வரை எழுதுகிறேன். படிக்கிறேன். சினிமா பார்க்கிறேன். எந்த எடுபிடி வேலையும் இல்லை. முழு மௌனம்.
ஆனால் எனக்கு நானே பேசிக்கொள்வதை நிறுத்தி விட்டு அமைதியாக இருக்க முடியாது. ஏனென்றால், எழுத்து என் சுவாசம். யோகிகள் சுவாசத்தையும் நிறுத்தி விட்டு தவம் செய்கிறார்கள். ஆனால் நான் அந்த மாதிரி யோகி அல்ல. எழுத்து எனக்குக் களச்செயல்.
என் வாழ்வில் இருபது ஆண்டுகளை நான் அரசு அலுவலகங்களில் வீணடித்து விட்டேன். அதை ஈடுகட்ட வேண்டும். ஏனென்றால், எழுதுவதற்கு எனக்கு ஓராயிரம் விஷயங்கள் இருக்கின்றன. இன்னும் நூறு புத்தகங்கள் எழுதுவதற்கு உண்டு. நேற்றுதான் நான் உணர்ந்தேன், என் வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கிய Salo, or The 120 Days of Sodom படம் பற்றியோ, பஸோலினி பற்றியோ இதுவரை எதுவுமே எழுதவில்லை என்பதை.
கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று எப்போது சொல்வார்கள் தெரியுமா, ஒருத்தரால் ஒரு நிறுவனத்தில் எக்கச்சக்கமான பிரச்சினைகள் ஏற்படும்போது சொல்வார்கள். அலெஹோ கார்ப்பெந்த்தியரால் கூபாவில் தன் ஆட்சிக்குப் பெரும் சிக்கல் வரும் என்பதை உணர்ந்த ஃபிடல் காஸ்ட்ரோ கார்ப்பெந்த்தியரை கூபாவின் தூதராக ஃப்ரான்ஸுக்கு அனுப்பி விட்டார். கடைசி வரை கார்ப்பெந்த்தியர் ஃப்ரான்ஸில்தான் தூதராக இருந்தார். சே குவேரா பொலிவியாவுக்குப் புரட்சி செய்யப் போகும்போதும் “அப்பாடா, நிம்மதி” என்ற நிலையில்தான் வழி அனுப்பி வைத்தார் காஸ்ட்ரோ. ஏனென்றால், நிதி மந்திரியாக இருந்த சே, “உலகப் பாட்டாளி வர்க்கம் என்று சொல்கிறீர்கள், அப்படியென்றால், நாங்களும் நீங்களும் ஒன்றுதானே, நீங்கள் செய்யும் உதவியைக் கடன் என்று சொல்லாதீர்கள்” என்று ரஷ்யாவிடம் சொல்லி காஸ்ட்ரோவுக்கு நெருக்கடி கொடுத்தார்.
அம்மாதிரி சமயங்களில்தான் ஓய்வெடுங்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்.
ஆனால் என் எழுத்து அப்படி என்ன சிக்கலை ஏற்படுத்தியது?
உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் படிக்காதீர்கள். என் எழுத்திலிருந்து விலகியிருங்கள். இதுநாள்வரை என் வாழ்வில் எனக்குப் பிடிக்காததைப் படித்ததில்லை. உங்களுக்குப் பிடிக்காத விஷயத்திலிருந்து நீங்கள்தான் ஒதுங்கியிருக்க வேண்டும். என்னை ஒதுங்கியிருக்கச் சொல்லக் கூடாது. ஏனென்றால், பல நூறு பேருக்கு நான் இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.
மேலும், சும்மா இரு என்று என்னிடம் சொல்வதற்கு நீங்கள் யார்? இந்த தேசத்தின் சர்வாதிகாரியா? அப்படியிருந்தால் உங்களை சுட்டுக் கொல்வதற்கு ஒரு கவிஞன் தயாராக இருப்பான். நிகாராகுவாவின் சர்வாதிகாரியாக இருந்த அனஸ்தாஸியோ சொமோஸாவை சுட்டுக் கொன்ற கவிஞன் Rigoberto Lopez Perez பற்றி நான் எழுதியிருந்ததைப் படியுங்கள். 1980இல் நான் எழுதிய லத்தீன் அமெரிக்க சினிமா என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். கவிஞனின் குரல்வளையை நெறிக்க நினைப்பவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களே ஆவர்.
ஏனென்றால், நண்பர் சொல்வதில் ஒரு அதிகாரம் இருக்கிறது. எழுத்துதான் என் சுவாசம் என்று ஆயிரம் முறை எழுதியிருக்கிறேன். என் எழுத்துக்காக நான் பிரேதங்களின் மீது நடக்கிறேன் என்றும் எழுதியிருக்கிறேன். என்னிடம் வந்து நீ பத்து நாட்களுக்கு எழுதாதே, யாரிடம் நிரூபிப்பதற்காக எழுதுகிறாய் என்று கேட்டால் என்ன அர்த்தம்? யாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்று என் மூத்தோன் பாடினான். எமனுக்கே அஞ்சாதவனாகிய எழுத்தாளனிடம் வந்து பத்து நாள் எழுதாதே என்று சொல்ல நீர் யார்? எமனை விடப் பெரியவரா?
சரி, அது என்ன பத்து நாள்? அதற்குப் பிறகு?
விபாசனா என்ற ஒரு அமைப்பு உள்ளது. அங்கே பதிவு செய்து விட்டுப் போனால் பத்து தினங்கள் தவ வாழ்க்கை வாழலாம். யெஸ் ஆர் நோ கூட சொல்லக் கூடாது. முழுமையான மௌனம். முழுமையான தவம். அதையெல்லாம் யார் செய்ய வேண்டும் தெரியுமா?
கோவிட் வந்தபோது அந்தக் கிருமிக்கு மருந்து கண்டு பிடிப்பதற்காக பரிசோதனைக் கூடங்களில் விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணி செய்தார்கள். அவர்களிடம் போய் “கொஞ்சம் ஓய்வு எடுங்கள்” என்று சொல்வீர்களா?
நான் மானுட குலத்தை அதன் நோய்மைகளிலிருந்து விடுவிப்பதற்காக எழுதிக்கொண்டிருக்கிறேன். அப்படிச் சொல்வது கூட தவறு. நீங்கள் சுவாசிக்கும் பிராண வாயுதான் என் எழுத்து. அதைப் பத்து நாள் அல்ல, பத்து நிமிடம் நிறுத்தினால்கூட மரணம்தான். ஏனென்றால், எழுத்தாளர்களும் கவிஞர்களும் இல்லையெனில் மானுட குலம் என்றைக்கோ அழிந்து போயிருக்கும். ஏனென்றால், இலக்கியம் அறியாதவன் எப்படி இருக்கிறான் என்று சுற்றுமுற்றும் பாருங்கள். விலங்குகளை விடக் கேவலமாகவும் ஆபாசமாகவும் வாழும் அந்த மனிதனிடமிருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதே நீங்கள் படிக்கும் இலக்கியம்தான். அதனால்தான் பர்த்ருஹரி இலக்கியம் வாசிக்காதவன் மிருகத்துக்குச் சமம் என்று பாடினார்.
மேலும், எனக்கு புத்திமதி அல்லது ஆலோசனை சொல்வதற்கு நீங்கள் யார்? நான் ஏன் உங்கள் பேச்சைக் கேட்க வேண்டும்? வாசிப்பு உங்களைப் பண்படுத்தவில்லை என்று தெரிகிறது. உங்கள் கரங்களில் இருக்கும் பிரம்பை ஒருபோதும் உபயோகிக்காதீர்கள். அந்தப் பிரம்புதான் இந்த உலகை அழிவை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறது. மற்றவருக்கு புத்திமதி சொல்வதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அது அத்துமீறல் என்பதையும் வன்முறை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் அனுப்பிய செய்தியில் ”தவறாக இருந்தால் மன்னித்துக்கொள்ளும்படி” எழுதியிருக்கிறீர்கள். ஒரு பெண்ணை வன்கலவி செய்துகொண்டே மன்னித்துக் கொள்ளடி என்றால் என்ன அர்த்தம்? மன்னிப்பு என்ற வார்த்தையின் பொருள், இனிமேல் இப்படி நடக்காது என்பது. ஆனால் நீங்களோ தகாத ஒரு காரியத்தைச் செய்தபடியே மன்னிப்பும் கேட்கிறீர்கள். அதாவது, நான் நினைப்பதைச் செய்வேன், நீ பொறுத்துக் கொள் என்றுதான் அதற்குப் பொருள்.
என் தொலைபேசி எண் உங்களிடம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக இப்படியெல்லாம் அத்துமீறலாகாது. இதற்கும் ஒரு ஸாரி போட்டு மெஸேஜ் அனுப்பாதீர்கள். அதை நீக்குவதற்காக நான் சில நொடிகளை செலவு செய்ய வேண்டும். இனிமேல் யாரிடமும் இப்படி அத்துமீறாமல் இருக்கப் பழகுங்கள். அதுவே உங்கள் வாழ்வை செம்மையாக்கும்.