23. போர்னோவும் கலையும்: காத்ரீன் ப்ரேயாவின் திரைப்படங்களை முன்வைத்து…

(ஒரு முன்குறிப்பு:  இந்தக் குறிப்பிட்ட கட்டுரை 2005இல் எழுதப்பட்டு, உயிர்மையில் வெளிவந்த்து.  பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி ஒரு கட்டுரை தமிழில் வந்திருக்கிறது என்பதன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

பின்னர் இந்தக் கட்டுரை ”சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்” என்ற என் கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.  இந்தக் கட்டுரையை நான் கேட்டவுடன் எடுத்துக்கொடுத்த ஸ்ரீராமுக்கு இப்போது இதை நான் சமர்ப்பணம் செய்ய வேண்டும். 

நாம் இப்போது விவாதித்து வரும் விஷயங்களுக்கு மிகவும் தேவையான கட்டுரை என்பதால் இதை உங்கள் வாசிப்புக்கு வைக்கிறேன்.  ஏற்கனவே படித்திருந்தாலும் மறுவாசிப்புக்கு உட்படுத்துங்கள்.  இதில் குறிப்பிடப்படும் திரைப்படங்களைப் பாருங்கள். தனியாகத்தான் பார்க்க முடியும்.  கவனம். 

என்னுடைய ஒரே வருத்தம் என்னவென்றால், இப்போது லா.ச.ரா.வையும் தி.ஜானகிராமனையும், க.நா.சு.வையும் போட்டு அடித்துத் துவைப்பதை விட காத்ரீன் ப்ரேயாவின் திரைப்படங்கள் பற்றிப் பேசினால் என்ன?

மேலும், பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த காத்ரீன் ப்ரேயாவின் ரொமான்ஸ் படத்தின் ஒவ்வொரு காட்சியும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.  ஆரம்பக் காட்சி என்ன, நாயகி பணி புரியும் பள்ளியின் பிரின்ஸிபால் நாயகியிடம் என்ன பேசுகிறார், என்ன செய்கிறார் என்பது எல்லாமே நேற்று பார்த்தது போல் ஞாபகம் இருக்கின்றன.  ஆனாலும்,    

ஏன் இது பற்றி யாரும் விவாதிக்கவில்லை. 

இந்தக் கட்டுரை எழுதப்பட்டு பத்தொன்பது ஆண்டுகள் ஆகின்றன.  அப்போது என்னிடம் மொபைல் ஃபோன் கூட இல்லை.  இப்போதைய வசதிகள் எதுவும் இல்லாத காலகட்டம்.  டாரண்ட் எல்லாம் கிடையாது.  குறுந்தகட்டை வாங்கித்தான் காத்ரீன் ப்ரேயாவின் திரைப்படங்களைப் பார்த்தேன். 

கடந்த பதினைந்து ஆண்டுகளாக அராத்துவும் நானும் மாதம் ஒருமுறையேனும் கூடி மூன்று இரவுகள் விவாதிக்கிறோம். அந்த விவாதங்களில் ஒருமுறை கூட காத்ரீன் ப்ரேயா பற்றி நாங்கள் விவாதித்தது இல்லை.  ஏனென்றால், அராத்து இந்தப் படங்களைப் பார்க்கவில்லை. 

எனக்குத் திரைப்படங்களில் ஈடுபாடு இல்லை என்று சொன்னால் அது தவறு.  ஏனென்றால், விஜய், அஜித், ரஜினி நடித்த குப்பைகளைப் பார்க்கிறோம்.  திட்டுகிறோம்.  அதோடு சேர்த்து காத்ரீன் ப்ரேயா, பஸோலினி என்றும் உலக சினிமாவைப் பார்க்கலாம் இல்லையா?  பொழுதுபோக்கு என்பதாக எனக்கு சினிமாவில் ஈடுபாடு உண்டு, ஆனால் உலக சினிமாவில் ஈடுபாடு இல்லை என்று சொல்ல முடியுமா? 

சொல்லக் கூடாது.  ட்ரான்ஸ்கிரஸிவ் கலையில் ஈடுபடுபவர்கள் அடிப்படையில் போராளிகள்.  ஆக, இலக்கியத்தில் போராளிகளாக இருக்கும் நாம் சினிமாவின் ட்ரான்ஸ்கிரஸிவ் படங்களை எடுக்கும் போராளிகளோடு தோள் கோர்த்துத்தான் ஆக வேண்டும். 

மேலும், தத்துவத்தை விட சினிமா சுலபம்.  ஒரு மிஷல் ஃபூக்கோவின் நூலைப் படிக்க ஒரு மாதம் ஆகும்.  ஆனால் காத்ரீன் ப்ரேயாவின் ஒரு படத்தைப் பார்க்க அதிக பட்சம் இரண்டு மணி நேரம்தான்.

இப்போது காத்ரீன் ப்ரேயாவின் திரைப்படங்கள் பற்றிய என் 2005 கட்டுரையைத் தருகிறேன்.

இன்னொரு சின்ன விஷயம்.  ஃப்ரெஞ்ச் பெயர்களை உச்சரிக்கும்போது ஆங்கிலத்தை முற்றாக மறந்து விட வேண்டும் என்ற விதியை நானே மறந்து போய்தான் கேதரீன் ப்ரேயா என்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.  தவறு.  காத்ரீன் ப்ரேயா என்பதே சரி.  ஃப்ரெஞ்ச் மொழியில் apple என்பதில் வரும் a உச்சரிப்பே இல்லை. அ மற்றும் ஆ மட்டும்தான்.  இரண்டுக்கும் இடைப்பட்ட ஒலி வடிவம் ஃப்ரெஞ்சில் இல்லை. 

***      

“தணிக்கை என்பது ஆண்களின் பிரச்சினை, அவர்கள் தரும் எக்ஸ் சான்றிதழ் எகஸ் க்ரோமஸோம்களுடன் தொடர்புடையது.”

                                                                                                        – காத்ரீன் ப்ரேயா

சில தினங்களுக்கு முன்னர் என் நண்பர் ஒருவர்  என்னை அவசரமாக அழைத்தார். “ரொமான்ஸ் என்று ஒரு ஃப்ரெஞ்ச் படம் பார்த்தேன். அது எனக்கு பெர்த்தொலூச்சியின் Last Tango in Parisஐ நினைவுபடுத்தியது, நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்” என்றார்.

“இயக்குநர் பெயர்?”

“ஏதோ ஒரு ஃப்ரெஞ்ச்  பெயர், எப்படி உச்சரிப்பதென்று தெரியவில்லை . உடனே வாருங்கள்.”

படத்தைப் பார்த்த பிறகு இந்த இயக்குனரை என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ”ரொமான்ஸ்” திரைப்படம் எனக்குப் புதியதொரு அனுபவமாக இருந்தது. ஒரு பெண்ணின் சரீர வேட்கையை ஒரு திரைப்படத்தில் இவ்வளவு வெளிப்படையாகக் காண்பது இதுவே எனக்கு முதல் தடவை. இதுவரை நான் பார்த்த எந்த இயக்குனரோடும் இவரை ஒப்பிட முடியாதிருந்தது. ஆனால் இலக்கியத்தில் இதற்குச் சமமான பெயர்கள் எனக்கு உடனடியாக ஞாபகம் வந்தன. (Marquis de Sade, William Burroughs, Georges Bataille,  Kathy Acker.)

இதன் பின்னர் அந்த இயக்குனரின் மற்ற படங்களைப் பார்த்தபடி அவரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.  அந்த இயக்குனரின் பெயர்: Catherine Breillat. 1948ஆம் ஆண்டு பிறந்த காத்ரீன் பதினேழாவது வயதில் தனது முதல் நாவலை வெளியிட்டார். ஆனால், பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களே அந்த நாவலைப் படிக்க முடியும் எனத் தடை விதித்தது ஃப்ரெஞ்சு அரசாங்கம். அதிலிருந்த வெளிப்படையான பாலியல் மீறலும், அந்த நாவலின் பாலியல் சார்ந்த மொழியுமே தடைக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. பின்னர் காத்ரீன் 1968இலிருந்து 1975 வரையிலான கால கட்டத்தில் மூன்று  நாவல்களை  எழுதி முடித்தார்.  இடையில் இத்தாலிய இயக்குநர்  ஃபெடரிகோ ஃபெலினியுடன் பணியாற்றினார்.  1972இல் வெளியான லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸில் Mouchette என்ற பாத்திரத்தில் நடித்தார் . இந்தப் பாத்திரத்தில் நடித்தது இவரது வாழ்வில் நிகழ்ந்த ஒரு முக்கியமான சம்பவம். காரணம், Bresson இயக்கிய Mouchette (1966) என்ற திரைப்படம்தான் பெர்த்தொலூச்சியின்  Mouchette கதாபாத்திரத்தின் மூலம். சிறுவயதிலேயே கன்னித்தன்மை இழந்து, தொடர்ந்து பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட, தற்கொலை மனோபாவம் கொண்ட ஒரு பெண்ணே ப்ரெஸ்ஸோனின் மூஷெத். பெர்த்தொலூச்சியின்  மூஷெத்தும் அப்படித்தான். இந்தப் பாத்திரம்தான் பின்னாளில் காத்ரீன் உருவாக்கிய பெரும்பாலான பெண் பாத்திரங்களின் அடிப்படை என்று சொல்லலாம். மட்டுமல்லாமல், லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ் திரைப்படம்தான் தனது சினிமா உலகப் பிரவேசத்துக்கு உந்துதலாக இருந்தது என்றும் காத்ரீன் பல பேட்டிகளில் குறிப்பிடுகிறார்.

1976ஆம் ஆண்டு தனது இரண்டு நாவல்களைத் திரைப்படமாக ஆக்கினார் காத்ரீன்.  இந்தப் படங்களும் பதினெட்டு வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் பார்ப்பதற்குத் தடை செய்யப்பட்டன. அதோடு, உலகம் முழுவதுமே இந்தப் படங்கள் தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, தணிக்கைக்குப் பின்னர் ‘எக்ஸ்’ முத்திரையும்   கொடுக்கப்பட்டன. இதன் காரணமாக, பத்து ஆண்டுகள் காத்ரீன் ப்ரேயாவினால் சினிமாவின் பக்கமே வர முடியாமல் போனது. பிறகு 1989ஆம் ஆண்டு 36 Fillette என்ற படத்தை இயக்கி வெளியிட்டார் காத்ரீன்.

காத்ரீனின்  நாவல்கள் மற்றும் சினிமாவின் காரணமாக அவர் மர்க்கி தெ ஸாதின் பெண் வடிவம் என்றும், புதிய பத்தாய் என்றும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“நீலப்படங்களின் ஒரே உபயோகம், மக்கள் கர மைதுனம் செய்ய உதவுவதுதான். அந்த வகையில் என் படங்கள் பயனற்றவை. என் படங்கள் உங்கள் உணர்வுகளை மரத்துப் போக வைப்பவை. உணர்வுகளைத் தூண்டும் எந்த அம்சமும்  என் படங்களில் இல்லை. மக்கள் கர மைதுனம் செய்வதற்காக நான் என் படங்களை உருவாக்குவதில்லை . They are made for them to reflect.”

                                 -காத்ரீன்  ப்ரேயா

காத்ரீனின் மூன்று படங்கள் எனக்குப் பார்க்கக் கிடைத்தன. 36 Fillette (1989), Romance (1999), மற்றும்  Fat Girl (2001). 36 Fillette என்பதன் பொருள் 36 இஞ்ச் அளவுள்ள மார்க்கச்சை. பதினான்கு வயது இளம் பெண் ஒருத்தி தனது கன்னித்தன்மையை இழக்க நினைப்பதும், அவளது பாலியல் வேட்கையுமே இதன் கரு. உலக அளவில் பலத்த சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பிய இந்தப்  படம் பின்னாளில் காத்ரீன் எடுக்க இருந்த ‘ரொமான்ஸ்’ என்ற அவரது மிகச் சிறந்த திரைப்படத்துக்கான ஒரு ஒத்திகை என்றே  சொல்ல வேண்டும்.

“ஒரு பெண்ணின் கன்னித்தன்மைக்கு மொத்த சமூகமே  உரிமை  கொண்டாடுகிறது. ஆனால் அதற்கு அந்தப் பெண் மட்டுமே உரிமையுடையவளாக இருக்க வேண்டும்” என்ற காத்ரீனின் கருத்தே இப்படத்தின் அடியோட்டம்.  இப்படத்தின் ஆண் பாத்திரம்  லாஸ்ட் டாங்கோவின் மார்லன் ப்ராண்டோவை ஞாபகப்படுத்துகிறார். அப்பாத்திரத்தின் வயது 45. இப்படத்தோடு மிகவும் நெருங்கி வரக்கூடிய திரைப்படம் Fat Girl.  இதன் கதை: குழந்தைகளின் மீது அக்கறை கொள்ளாத ஒரு ஜோடி.  அவர்களுக்கு எலீனா, அனாய்ஸ் என்ற இரண்டு பெண்கள். எலீனா மூத்தவள். பதினைந்து வயது. அழகும் வசீகரமும் கொண்டவள். அனாய்ஸ் இளையவள். பன்னிரண்டு வயது. சாப்பாட்டின் மீது பிரியம் கொண்ட குண்டுப் பெண் . இரண்டு சகோதரிகளும் செக்ஸ் பற்றியும், ஆண் நண்பர்கள் பற்றியும் பேசிக்கொள்கின்றனர். 

“என் முதல் கலவி என் காதலனோடு மட்டுமே இருக்கும்” என்கிறாள் எலீனா.  “யாரென்றே தெரியாத ஒருவனிடம்தான் என் கன்னித்தன்மையை இழப்பேன்” -இது அனாய்ஸ்.  ஃபெர்னாந்தோ என்ற மாணவன் எலீனாவைக் காதலிக்கிறான். அவனது படுக்கையறையில் இருவரும் உறவு கொள்வதை அதே அறையில் படுத்திருக்கும் அனாய்ஸ் பார்க்கிறாள். அவள் பார்ப்பதைப் பற்றி எலீனாவும், ஃபெர்னாந்தோவும் கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து இதைப் பார்க்க நேரும் அனாய்ஸ் ஒரு நாள் அழுகிறாள். இந்தப் படத்தை எடுக்கும் போது அனாய்ஸின் வயது பன்னிரண்டு மட்டுமே.  அவளது நிஜப் பெயரும் அனாய்ஸ்தான் (Anais Reboux). ஆண் பெண் சரீரங்களின் முன்புற நிர்வாணம், குழந்தைகள் ஈடுபடும் கலவிக் காட்சிகள் போன்ற காரணங்களால் இப்படம் கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

படத்தின் இறுதியில் எலீனா, அனாய்ஸ், அவர்களது தாய் மூவரும் காரில் சென்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது காரை இடைமறிக்கும் ஒருவன் அம்மாவையும், எலீனாவையும் கொன்றுவிட்டு, அனாய்ஸை பக்கத்திலிருக்கும் வனப்பகுதியில் வைத்து வன்புணர்ச்சி செய்கிறான். பின்னர் போலீஸ் வருகிறது. அப்போது “இது வன்புணர்ச்சி அல்ல” என்ற குரல் கேட்கிறது. அனாய்ஸ் அதை மறுக்காமல் மௌனம் சாதிக்கிறாள்.

“இது இரண்டு உடல்களைப் பற்றிய கதை” என்கிறார் காத்ரீன். ‘என் சகோதரி’ (A Ma Socur) என்ற முந்திய தலைப்பைப் பிறகு Fat Girl என மாற்றிவிட்டதையும் இந்த விளக்கதோடு நாம்  இணைத்து வாசிக்கலாம்.

காத்ரீன் மேலும் கூறுவதாவது:  “இந்தப் படத்தை உருவாக்கியதற்கு  அடிப்படையான ச\ம்பவங்கள் இரண்டு. ஒன்று,  நீச்சல் குளம் ஒன்றில் தன் உடல் அழகில் திளைத்தபடி பாடிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண். மற்றொன்று, இருபது ஆண்டுகளுக்கு முன்பு செய்தித்தாளில் தான் படித்த ஒரு செய்தி.  சிறு பெண் ஒருத்தி அவளுடைய குடும்பமே கொலை செயயப்பட்டபோது தன்னை மட்டும் வன்கலவி செய்ய ஒப்புக்கொடுத்தாள். அதன் மூலம் அவள் தன் உயிரைக் காப்பாற்றி கொண்டாள். அப்போதுதான் யோசித்தேன். வன்கலவிக்கு ஆளான  அந்த இளம்பெண்ணின் மனோநிலை பற்றி.  ’நான் வன்கலவிக்கு ஆட்பட்டதே இல்லை. என் மனதை யாரும் வன்கலவி செய்ய முடியாது. நீங்கள் யாரும் என்னைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டியதில்லை…’

ஒரு பெண் கன்னியா இல்லையா என்பதை சமூகம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. அதைத்தான் நான் வன்கலவி என்று நினைக்கிறேன்.  இந்த அர்த்தத்தில் எலீனாதான்  இந்தப் படத்தில் வன்கலவிக்குப் பலியானவள். ஏனென்றால், அவள்தான் ஃபெர்னாந்தோ தன் வாழ்நாள் முழுவதற்குமான காதலன் என்று நம்புகிறாள். அப்படி, அவள் நம்புகிறாள் போன்ற பொய்களை அவன் அவளுக்குச் சொல்ல வேண்டும். அவன் அவளுடன் கலவி கொள்ள விரும்பும் போது அவள் உடனடியாகச் சம்மதிக்கிறாள். காரணம்? அது காதல் என்று அவள் நம்புகிறாள். அதற்கேற்ற வகையான பொய்களை அவன் சொல்வதுதான் உளவியல் ரீதியான வன்கலவி. இது உடல் ரீதியான பலாத்காரத்தைவிட கொடுமையானது. ஏனென்றால், இது பெண்ணின்  சுய கெளரவத்தைப் பறித்து விடுகிறது. அது  மட்டுமல்ல, இது வெளிப்பார்வைக்கு வன்கலவியாகவும் தெரிவதில்லை. அதனால்தான் இது மோசமானது என்கிறேன். எல்லோரும் இப்படியான  ஒரு ரொமான்டிக் காதலில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பொய்யின் அடிப்படையில் வாழ்வது எவ்வளவு வேடிக்கையானது? இல்லை. வேடிக்கையில்லை. அது பயங்கரமானது.”

காத்ரீனின் கூற்றுப்படி பார்த்தால், குடும்ப அமைப்பில் கணவனால் புணரப்பட்டுக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களும் வன்கலவிக்கு ஆட்படுகிறார்கள் என்று ஆகிறது.  அப்படித்தான் சொல்கிறார் காத்ரீன். 

காத்ரீனின் திரைப்படங்களைப் பார்க்கும்போது நான் அந்த நடிகர்களைப் பற்றி (இளம் பெண்கள், சிறுமிகள்) யோசித்து மிகவும் பதற்றமடைகிறேன். 36 Filletteஇல் அந்தப் பெண்ணின் வயது பதினான்கு,  Fat Girlஇல் அனாய்ஸ் பாத்திரத்தின் வயது பன்னிரண்டு. எலீனாவாக நடித்த பெண்ணின் வயது பதினைந்து. படம் எடுக்கத் தொடங்குவதற்கு மூன்று தினங்களுக்கு முன்புதான் எலீனாவுக்குப் பதினாறு வயது தொடங்கியிருக்கிறது. இல்லாவிட்டால் இந்தப் படத்தைப் பல நாடுகளில் திரையிட்டிருக்க முடியாது. காரணம், அந்நாடுகளில் பதினாறு வயதுக்குட்பட்ட பெண்களை வெளிப்படையான பாலியல் காட்சிகளில் ஈடுபடுத்தினால் அது சட்டத்துக்கு விரோதமானது.

இதுபற்றி காத்ரீன் கூறுகிறார் : “அந்தப் பெண்ணின் வயதை நான் முன்கூட்டியே கேட்டிருக்கவில்லை. நிச்சயமாக பதினாறு வயதுக்கு மேற்பட்ட பெண்ணைத்தான் நடிக்க வைப்பேன் என்று தயாரிப்பாளரிடம் வாக்களித்திருந்தேன். ஆனால் என் பாத்திரத்தின் வயதோ பன்னிரண்டு. எனவே அதிக வயதுள்ள பெண்ணையும் நடிக்க வைக்க முடியாது. நல்லவேளையாக இரண்டு பெண்களுமே பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களாகக் கிடைத்தார்கள். எலீனாவாக நடித்த பெண்ணிடம் நான் Jean Eustache இயக்கிய The Mother and The Whore படத்தின் திரைக்கதையைப் படிக்கக் கொடுத்தேன். இதைப் படித்துவிட்டால் என் படத்தைப் பற்றி அதிகம் விளக்க வேண்டிய தேவையிருக்காது. அந்தப் பெண்ணின் வயது பதினேழு ஆகியிருந்தது. அவள் பாரிஸில் வளர்ந்தவள் அல்ல. மே’68 இயக்கத்தைச் சேர்ந்த ஹிப்பி தாய் ஒருவரால் கிராமப்பகுதியில் வளர்க்கப்பட்ட பெண் அவள். அதனால் அவள் வேறொரு காலத்தைச் சேர்ந்தவளைப் போல் இருந்தாள். அது எனக்கு உதவியாக இருந்தது.”

ஒருமுறை காத்ரீன் ப்ரேயாவிடம் “நீங்கள் எந்தப் பார்வையாளர்களுக்காகப் படம் எடுக்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது, அவர்

“வான்கோ தனது காதை பார்வையாளர்களுக்காக அறுத்துக்கொள்ளவில்லை.  ஒரு கலாபூர்வமான வெறியில்தான் நீங்கள் திரைப்படத்தை  உருவாக்க முடியும்” என்று பதில் கூறினார்.

ரொமான்ஸ் திரைப்படத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தனது படங்களுக்கு முன்னோடி என காதரீன் குறிப்பிடும் Last Tango in Parisஐப் பற்றிப் பார்ப்போம். இதில் நாற்பத்தைந்து வயதான பால் என்ற  பாத்திரத்தில் நடித்திருப்பவர் மார்லன் ப்ராண்டோ. மனைவி தற்கொலை செய்து கொண்டு விட்டதால் பாரிஸின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒருவித தனிமையுணர்வுடன்  வசிக்கிறான் பால். எதேச்சையாக அங்கே ஒரு இளம் பெண்னைச் சந்திக்கிறான். அவள் பெயர் ஜான். வயது இருபத்தைந்து. ஆனால்  அவளுடைய பெயர் அவனுக்கோ,  அவனுடைய பெயர் அவளுக்கோ தெரியாது. படம் முடியும் வரை அவர்களுக்கு அது தெரிவதில்லை. அதே போல் அவர்களைப் பற்றி எந்த விவரமும் ஒருவருக்கொருவர் தெரியாது, தெரிந்துகொள்ளவும் ஆர்வமில்லை. காதல் பற்றிய பரிமாற்றங்களும் ஏதுமில்லை.  அவர்களின் முதல் சந்திப்பிலேயே- எடுத்த எடுப்பிலேயே – அவன் அவளுடைய இரண்டு தொடைகளுக்கும் இடையே கையைக் கொடுத்து, அவளைத் தூக்கிச் சென்று, ஓரிடத்தில் நிறுத்தி, நின்ற நிலையிலேயே மூர்க்கமாகப் புணர்கிறான். இதே போல் மேலும் சில சந்திப்புகள் நிகழ்கின்றன. ஒரு சந்திப்பில் மிகுந்த வெறியுடன் அவளைக் குதப்புணர்ச்சி செய்கிறான் பால்.  இவ்வளவுக்கும் ஜான் சம்மதிப்பதன் காரணம், இருவரின் தனிமை, வெறுமையுணர்வு மற்றும் சரீர  வேட்கையிலுள்ள  நம்பகத்தன்மை. (பாலின் மனைவியின் தற்கொலையே அவனுள் மிருகத்தனமான பாலியல் வேட்கையாக மாறுகிறது.)

இங்கே படத்தில் ஜானைப் பற்றிய ஓரிரு தகவல்கள் காண்பிக்கப்படுகின்றன அவளுக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் திருமணம் நடக்கவுள்ளது. அவளுடைய காதலன் ஒரு திரைப்பட இயக்குனன். ஜானும் அவனும் காதலிப்பதையே அவன் ஒரு குறும்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறான். இதனால் அவனுடைய காதலில் ஒரு தீவிரமோ, நம்பகத்தன்மையோ இல்லையென உணர்கிறாள் ஜான்.

மார்லன் ப்ராண்டோவின் வாழ்நாளிலேயே அவர் இந்த அளவுக்குச் சிறப்பாக நடித்ததில்லை என்றும், திரைப்பட வரலாற்றில் இந்தப் படம் ஒரு முக்கியமான திருப்புமுனை என்றும்  விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இதைவிட மாபெரும் நடிகர்களை, மிகச் சிறந்த திரைப்படங்களை ஐரோப்பிய சினிமாவில் நாம் பார்க்க முடியும். ஒரே ஒரு உதாரணம், இயக்குனர்களில் பஸோலினி,  நடிகர்களில் Klaus Kinski. 

இருப்பினும் மைய நீரோட்ட சினிமாவைப் பொறுத்தவரை இது ஒரு திருப்புமுனை என்ற மதிப்பீடு சரியானதுதான்.  படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை  இரண்டும் பால் உணரும் தனிமையோடு மிகுந்த லயம் கொண்டுள்ளது. இது தவிர, பால், தனது வெறுமையை வெறித்தனமான காம இச்சையின் மூலமாகக் கடக்க முயல்வது, அது தொடர்பான வெளிப்படையான காட்சிகள், குதப்புணர்ச்சி போன்றவற்றின் காரணமாக கிறித்தவ குருமார்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

இந்த இணைப்பில் ரொமான்ஸ் படத்தின் புகைப்படங்கள் உள்ளன. இந்தத் தளத்தில் அவற்றை நேரடியாக வெளியிட இயலாது என்பதால் இணைப்பைத் தருகிறேன்.

Catherine breillat romance 1999 hi-res stock photography and images – Alamy

1973இல் லாஸ்ட் டேங்கோ அமெரிக்காவில் திரையிடப்பட்ட போது அட்லாண்டா, நியூயார்க், நியூ ஜெர்ஸி போன்ற பல நகரங்களில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இப்படத்தைத் திரையிடல் நிறுத்தப்பட்டது.  டைம், நியூஸ் வீக் பத்திரிகைகள் இப்படத்தைப் பற்றி அட்டைப்படக் கட்டுரைகள் வெளியிட்டன. 1976இல் ரோம் நீதிமன்றம் இப்படத்தின் எல்லாப் பிரதிகளும் கைப்பற்றப்பட்டு எரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. கடைசியில் 1987இல்தான் இப்படத்தின் மீதான தடை விலக்கப்பட்டது.

சந்தா மற்றும் நன்கொடை அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி. இதுவரை சந்தா/நன்கொடை அனுப்பாதவர்கள் இந்தக் கட்டுரைக்கான நன்கொடையைத் தாங்களே நிர்ணயித்துக்கொண்டு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

போர்னோவும் கலையும் கட்டுரையின் தொடர்ச்சி உண்டு. விரைவில் வரும்…