24. போர்னோவும் கலையும் (தொடர்ச்சி)

“எனது படங்களின் நோக்கம், பெண்களின் பாலியலைக் காண்பிப்பது அல்ல; அதை ஆய்வு செய்வதே.”

                                                                                    – காத்ரீன் ப்ரேயா

காத்ரீனின் இருபத்தைந்து ஆண்டுக்கால சினிமா வாழ்க்கையில் (2004இல் எழுதப்பட்ட கட்டுரை இது) அவரது ஆறாவது படம் ரொமான்ஸ்.  ரொமான்ஸை மிகச் சுருக்கமாக ‘ஒரு பெண் பாலியலை சுயவதையின் (masochistic) மூலமாக அணுகுவது’ என்று சொல்லலாம். இப்படத்தின் முன்னோடியாக Nagisa Oshimaவின்  In the Realm of Senses (1976) திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார் காத்ரீன். 

ரொமான்ஸ் திரைப்படத்தின் நாயகியான மேரி ஒரு பள்ளி ஆசிரியை. அவளது காதலன்  பால்  அவளோடு சரீர உறவுகொள்ள மறுக்கிறான்.  எனவே அவள் பல நபர்களோடு உறவு கொண்டு தன்னையும், தனது சரீர  வேட்கையையும் புரிந்துகொள்ள முயல்கிறாள்.

மேரி தன் காதலன் பாலோடு உறவுகொள்ள முயன்று, அவன் மறுக்கவே அவனது உறுப்பைச் சுவைக்கிறாள். ஆனால் அது துவண்டு விழுகிறது.  காரணம், அவனிடம் அதற்கான ஈடுபாடு இல்லை. எதுவுமே நடக்காததுபோல் தொலைக்காட்சியை ரசித்துக்கொண்டிருக்கிறான் பால்.  தொடர்ந்து இதேபோல் நடந்துகொண்டிருக்கவே ஒருநாள் இரவு வீட்டிலிருந்து கிளம்பி மதுக்கூடத்துக்கு  வருகிறாள் மேரி. அங்கே அவளைச் சந்திக்கும் பாவ்லோ என்பவன் அவளோடு  உறவு கொள்ள விரும்புகிறான்.

மறுநாள் சந்திக்கின்றனர். இரண்டு  நிர்வாண உடல்களின் சந்திப்பாக அமைகிறது அது.  அசாதாரணமாக நீண்டிருக்கும்  தனது விறைத்த ஆண்குறியில் ஆணுறையை மாட்டிக்கொண்டே “உன்னைக் குதப் புணர்ச்சி செய்ய விரும்புகிறேன்” என்கிறான் பாவ்லோ.  “முதலில் முன்புறம். பிறகு உன் இஷ்டம்” – இது மேரி. அப்போது அவள் கூறும் ஒரு வசனம் முக்கியமானது.

“நான்  விரும்பாத நபர்களுடன்தான் நான் படுக்கிறேன்.” அதோடு அக்காட்சி முடிந்து அடுத்த காட்சி துவங்குகிறது.  (இது முக்கியமான ஒரு  விஷயம், இது பற்றி பிறகு பார்க்கலாம்.)

பாவ்லோவின் விறைத்த ஆண்குறியின் உறை ஈரமாகத் தெரிகிறது. பிறகு மேரியைத் திருப்பிப் போட்டு அவள் குதத்தில் உறுப்பை நுழைத்துப் புணர்கிறான்.  இந்த மூர்க்கமான குதப்புணர்ச்சி ஆறு நிமிடங்கள் நீடிக்கிறது.  Gaspar Noe இயக்கிய Irreversible என்ற ஃப்ரெஞ்ச் படத்தைத் தவிர எனது இருபத்தைந்து ஆண்டு கால சினிமா அனுபவத்தில் நான் இப்படி ஒரு காட்சியைக் கண்டதில்லை.

இதையடுத்த ஒரு காட்சியில் மேரியின் குடியிருப்பின் வெளி வராந்தாவில் யாரோ ஒருவன் அவளை இருபது டாலருக்குக் குதப்புணர்ச்சிக்கு அழைக்கிறான். அவள் சம்மதிக்கிறாள். உடனே அவளைத் திருப்பிக் குனியச் செய்து, அவள் அழ அழ மூர்க்கமாக குதப்புணர்ச்சி செய்கிறான்.  மேரி சம்மதித்தாலும் கூட இது ஒரு வன்கலவியைப் போலவே காட்சியாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணை குதப்புணர்ச்சி செய்வதாக அமைந்துள்ள இந்த ஒரே காட்சிக்காக இந்தப் படம் அக்ரஹார ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

பிறகு மேரி தனது பள்ளி முதல்வரிடம் வந்து சேர்கிறாள். தன் பிரச்சினையைப் பற்றிக் கூறுகிறாள். “இது வெறும் பாலியல் பிரச்சினை அல்ல. உடல் வேட்கை அல்ல. நான் பாலைக் காதலிக்கிறேன். அவனும் என்னைக் காதலிக்கிறான். ஆனால் அவனுக்கு என்னைப் புரியவில்லை. என்னாலும் அவனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுள் ஒரு வெறுமையுணர்வு சூழ்ந்துவிட்டது. என் உடல் வேட்கையைக் கடப்பதன் மூலமாக இந்த வெறுமையுணர்விலிருந்து வெளியே வர முயற்சிக்கிறேன்.”

இந்த இடத்தில் காத்ரின் ப்ரேயா  கூறுவதைப் பார்ப்போம். “என்னைப் பொருத்தவரை, காதலைப் பற்றிய மாயையே ரொமான்ஸ். மேரியை கவனியுங்கள், அவளுக்கு அவளுடைய உலகம் மட்டுமே தெரிகிறது.  கேமராவும் அவளை மட்டுமே கவனிக்கிறது. எனவே அவள் மன்னிக்கப்படுகிறாள். பால் குற்றவாளியாகிறான். இதற்குப் பொருள், நான் மேரியோடு என்னை அடையாளப்படுத்திக்கொள்கிறேன் என்பதல்ல.  அவள் என்னால் படைக்கப்பட்டவள்.  அவ்வளவுதான்.  ஆனால் அவளிடம் ஒரு தீவிரமும் நேர்மையும் இருக்கிறது. ஒருவர் எந்த அளவுக்குத் தன்னில் தீவிரமாக இருக்கிறாரோ, அந்த அளவுககு அவரிடம் நேர்மை இருக்கிறது என்று பொருள். எனவேதான் மேரியிடம் நம்பகத்தன்மை உள்ளது என்கிறேன். அவள் தனது உணர்வுகளினூடே மிக ஆழமாகப் பயணிக்கிறாள். அவள் தனது  fantasyகளை எதார்த்தத்தில் வாழ முற்படும்போது பால் தனது எதார்த்தத்தின் மூலமாக அதை மறுதலிக்கிறான். அவளுடைய உடலின்ப விழைவைத் தடுக்கிறான். அவள் தேடுவது Sadomasochist (S & M) இன்பம் அல்ல. இயேசுவின் கோப்பையைத் (Grail) தேடிச் செல்லும்போது நரகம் குறுக்கிட்டாற்போல் தீமையைத் தீமையால் சொஸ்தப்படுத்தும் செயல் அது. (Grail – கடைசி விருந்தின்போது இயேசு கிறிஸ்து பயன்படுத்திய கோப்பை. இதில்தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அரிமாத்தியாவின்  யோசப் அவரது குருதியைப் பிடித்தார். வரலாற்றின் மத்தியக் காலகட்டத்தில், பல அரசர்கள் இக்கோப்பையைத் தேடி அலைந்தது உண்டு.)

காதல் என்பது நரகத்தின் பாதை. உண்மையில் நம்மால் சரிவர அறிந்துகொள்ளவே முடியாத விஷயங்களினூடாகவே நாம் பயணிக்க வேண்டியுள்ளது. அவை தோற்றத்தில் ஒன்றாகவும், நிஜத்தில் வேறானதாகவும் உள்ளன. உதாரணமாக, மேரி ராபர்ட்டுடன் (பள்ளி முதல்வர்) கொள்ளும் S&Mஉறவு பார்ப்பதற்கு வக்கிரமாக இருந்தாலும் அது அவளை வேறோர் இடத்துக்குக் கொண்டுசென்று விடுகிறது.”

காத்ரீனின் கருத்தோடு நான் முற்றிலும் வேறுபடுகிறேன். காரணம், இந்தப் படம் மட்டுமல்லாமல் அவரது மற்ற படங்களிலும் கூட, பெண் என்பவள் வெறும் வாயில்லாப் பூச்சியாக, ஆணின் மூர்க்கமான காம இச்சையைத் தீர்த்துக்கொள்ளப் பயன்படும் போகப் பொருளாகவே நம்முன் காண்பிக்கப்படுகிறாள். பாவ்லோவும், மேரியின் குடியிருப்புப் பகுதியில் அவளோடு குதப்புணர்ச்சி கொள்ளும் ஒருவனும் மேரியை ஒரு அடிமையாகவும், போகப் பொருளாகவுமே கையாளுகின்றனர். மற்றொரு உதாரணம், ராபர்ட்டோடு அவள் கொள்ளும் S& M உறவு. 

மேரியின் பிரச்சினையைக் கேட்டுவிட்டு ராபர்ட் என்ன சொல்கிறார் தெரியுமா? பொதுவாக உலகமெங்கிலும் ஸ்த்ரீலோலர்கள் சொல்லும் வார்த்தை… “இது வெறும் துவாரப் பிரச்சினை.” இதையே ராபர்ட் வேறு வார்த்தைகளில் சொல்கிறார். “எல்லாம் வன்கலவி செய்தால் தீர்ந்துவிடும், இதுபோல் நான் பல பெண்களைக் குணப்படுத்தியிருக்கிறேன்.”  இதற்கு அடுத்த காட்சியில் மேரியை S&M கருவியில் பொருத்துகிறார் ராபர்ட்.

அவளை முழு நிர்வாணமாக்கி (ராபர்ட்  மட்டும் காட்சி முழுவதும் கோட்டும் டையும் அணிந்து கொண்டு சர்வ வஸ்திராபரண புருஷனாகக்  காட்சியளிக்கிறார்!), வாயில் ஒரு பந்தை (டென்னிஸ் பந்து அளவு) அடைத்து, அதன் மேல் துணியால் இறுகக் கட்டுகிறார்.  இதனால் சித்ரவதையின் போது ஒரு துளி சப்தம்கூட  வெளியே வாரது.

இங்கே இடைச்செருகலாக ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஹாலிவுட் சினிமா அல்லது உலகம் தழுவிய மைய நீரோட்ட  சினிமாவில் காண்பிக்கப்படுவது போல காத்ரீனின்  சினிமாவில் make believe காட்சிகள்  ஏதும் கிடையாது.

எல்லாமே ஆவணப்படத் தன்மை கொண்ட நிஜமான காட்சிகள். எனவே இந்த S&M காட்சியில் நடிக்கும் இளம் நடிகையான கரோலின்  துய்ஸியின் (Caroline Ducey) கண்கள் பிதுங்கி, முக நரம்புகள் புடைக்கின்றன என்றால் அது நடிப்பு அல்ல. படத்தை எடுத்தபோது S&M கருவியால்  அவர் அனுபவித்த  நிஜமான  வாதையே அது. பிறகு மேரியின் முலைக்காம்புகளில் இரும்பு வளையங்களைப் பிணைக்கிறார் ராபர்ட். கைகள்  இரண்டையும் ஒருசேர பின்னால் கட்டுகிறார். அதேபோல் கால்களையும் கட்டுகிறார்.  உடலின் எல்லா பாகங்களையும் இப்படி ஒன்றுக்கொன்று கயிறு மற்றும் இரும்புக் கருவிகள் மூலம் பிணைக்கிறார். வாயில் கட்டப்பட்ட துணியின் ஒரு பகுதியைக் கீழே இழுத்து மேரியின் பெண்ணுறுப்பின் வழியே இறுக்கி அத்துணியை மேலே கொண்டுசென்று இணைக்கிறார். பல நிமிடங்கள் நீடிக்கிறது இக்காட்சி.

இங்கே நான் கவனித்த ஒரு விஷயம் – இவ்வளவையும் ராபர்ட் ஒரு குழந்தையைக் கொஞ்சுவது போன்ற முகபாவத்துடனும், வாத்ஸல்யமான சொற்களோடும் செய்கிறார். ஒரு நோயாளிக்கு ஒத்தடம் கொடுக்கும் மருத்துவரைப் போலவே செயலாற்றுகிறார்.

பிறகு ஒரு கத்தரிக்கோலை எடுத்து மேரியின் யோனிப் பகுதி கட்டப்பட்டிருக்கும் துணியைக் கீழிருந்து மேலாக வெட்டி, தன் வலக்கை நடுவிரலை யோனி துவாரத்துக்குள் விட்டுப் பார்க்கிறார். மதனநீர் கொட்டுகிறது. அதைப் பார்த்து மிகுந்த திருப்தியடையும் ராபர்ட் அவளை அந்த S & M உபகரணத்திலிருந்து விடுவிக்கிறார்.

(பாரிஸில் எனக்கு சில S & M க்ளப்புகள் பார்க்கக் கிடைத்தன. S & M நிகழ்வுகளுக்கான உபகரணங்களே ஒரு தொழிற்சாலையின் இரும்புத் தளவாடப் பட்டறையைப் போல் குவிந்து கிடந்தன.)

உபகரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டதும் மயங்கி விழுந்துவிடுகிறாள் மேரி. ஆச்சரியம் என்னவென்றால், சில தினங்கள் சென்று மேரி திரும்பவும் ராபர்ட்டிடம் வருகிறாள் என்பதுதான். மீண்டும் அவளை S & M கருவியில் பொருத்துகிறார் ராபர்ட்.  மேரியின் வயது முப்பதுக்கு மேல் என்பது உபரி தகவல். அது மட்டுமல்ல, அவளுக்கு ஒரு குழந்தை  பிறக்கிறது (பாலின் குழந்தை). அதன் பிறகு மேரி ராபர்ட்டுடனேயே தங்கிவிடுகிறாள்.

மேரி காப்பிணியாக இருக்கும்போது காண்பிக்கப்படும் மற்றொரு காட்சியும் குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் அவள் நிர்வாணமாகக் கிடத்தப்பட்டிருக்கிறாள். மருத்துவ மாணவர்கள் (ஆண்கள்) வரிசையில் நின்று ஒவ்வொருவராக அவளது பிறப்புறுப்பில் கை நுழைத்துப் பரிசோதித்து அறிந்துகொள்ளும் பாடம் நடக்கிறது.

இப்போது திரும்பவும் காத்ரினின் பேட்டிக்கு வருவோம்.

 “என் சினிமாவில் ஆண் வர்க்க உளவியலைப் பார்க்க முடியாது. பெண்ணின் வன்மமும், அவளது வேட்கையுமே உள்ளது. எனது ஆண்களுடன் எந்த ஆணும் தன்னை அடையாளம் காண முயற்சிக்கக் கூடாது. மாறாக, அவனுக்குப் பெண்ணைப் பற்றிய சரியான புரிதலே ஏற்பட வேண்டும். ஏனென்றால், Other பற்றிய அறிவே நாம் செல்ல வேண்டிய முக்கியமான இடம்.”

“பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் அடங்கி அடங்கியே இருந்து சுயவதையை (Masochism) சுவீகரித்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கே ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது. அதாவது, வெளியிலிருந்து கிடைக்கும் சுயவதைக்கும் அவர்களுக்குள் இயல்பாகவே இருக்கும் சுயவதைக்குமான வித்தியாசத்தையே நான் கொண்டுவர விரும்பினேன். எனது சினிமா, பெண்களின் சுயவதை மீதான விமர்சனம். பாலியலைப் பொறுத்தவரை பெண்கள் ஆண்களை விட வலிமையானவர்கள். ஆண்கள் இதற்கு எதிர்மாறாக நினைத்துக்கொண்டிருப்பது தவறு. கலவியின்போது ஆண் Predator ஆக ஆரம்பித்துக் கடைசியில் பெண்ணிடம் சரணடைந்துவிடுகிறான். பெளதீகரீதியாக இப்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுவே ரொமான்ஸ் திரைப்படத்தின்  அடிப்படை அம்சம்.”

மற்றொரு பேட்டியிலும் காத்ரின் இதே கருத்தை வலியுறுத்துகிறார். “புனுவேலின் Belle de Jourஇல் பெண்ணை மஸாக்கிஸ்ட்டாகக் காட்டுகிறார். நான் ரொமான்ஸில் அதைத் திருப்பிப் போட்டிருக்கிறேன்.”

ஆனால் துரதிஷ்டவசமாக  காத்ரீன்  ப்ரேயாவின் ரொமான்ஸிலும் சரி, அவரது மற்ற படங்களிலும் சரி, ஆண் என்பவன் முழுக்க முழுக்க  predator ஆகவே இருக்கிறான்.  பெண்ணோ மிகவும் பரிதாபகரமான ஆட்டுக்குட்டியாகவே காண்பிக்கப்படுகிறாள். முக்கியமாக, மேரி திரும்பவும் தனது பள்ளி முதல்வர் ராபாட்டிடம் வந்து S&M நிகழ்வுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொள்வதும், படத்தின்  இறுதியில் ராபர்ட்டிடமே சரணடைந்து விடுவதும் ஒரு உதாரணம்.

ரொமான்ஸ் திரைப்படத்தில் மற்றொரு முக்கிய அம்சம்,  பாவ்லோவாக நடித்திருக்கும் Rocco Siffredi என்ற   இத்தாலிய நடிகர். இவர் ஒரு  புகழ்பெற்ற நீலப்பட நடிகர்.  ஆயிரம் நீலப்படங்களுக்கு  மேல் நடித்திருப்பவர்.  ஐரோப்பாவில் இவரது பெயர் சொல்லி நீலப்  படங்களை வாங்கிச் செல்வது வழக்கம். (பாரிஸில் ஒரு நண்பரின் செக்ஸ் ஷாப்பில்  கல்லாவில் இருந்திருக்கிறேன். அப்போதுதான் ரோக்கோ  பற்றி தெரிந்துகொண்டேன்.)

இது குறித்து காதரீனின் பேட்டி முக்கியமானது.

கேள்வி : ரோக்கோவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

பதில்: ரோக்கோவின் பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். நான் அவரை வழிபட்டிருக்கிறேன். நீலப்பட உலகில் அவர் ஒரு  cult நடிகர். அவரை நான் தேர்ந்தெடுத்ததற்கு மற்றொரு காரணம், வெகுஜன சினிமா நடிகர்கள் என் படத்தில் நடிக்க முன்வருவதில்லை. அவர்களின் சமூக அந்தஸ்துக்கு பங்கம் வந்துவிடுமென்று பயப்படுகிறார்கள். அவர்கள் கோழைகள். இதற்கு மாறாக, ரோக்கோ என் படத்தில் நடிக்க ஆர்வத்துடன் முன் வந்தார்.

மற்றொரு காரணம், அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கான உடல் தகுதி அவருக்கு இருந்தது. ரோக்கோ வசீரகரமானவர். இப்போதெல்லாம் ஃபரெஞ்ச் நடிகர்கள் வசீகரமாக இல்லை. முன்பு இருந்தார்கள். இப்போது இல்லை.

கேள்வி : ரோக்கோவை நடிக்க வைத்ததால் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டதா? குறிப்பாக, மேரியாக நடித்த கரோலின் துய்ஸிக்கு ?

பதில் : கரோலினைப் பொறுத்தவரை  எனக்கு ஒரு தார்மீகக்  கடமை இருந்தது. அந்தக் காட்சியில் நடிப்பதால் அவருக்கு ஏற்படும் அவப்பெயரிலிருந்தும், சுய தணிக்கை மற்றும் பாலுணர்வையும் சரீர வேட்கையையும் நச்சுப்படுத்தக்கூடிய உணர்வு பூர்வமான கூண்டிலிருந்தும் அவர் வெளியே வர வேண்டியிருந்தது. அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தவுடன், அவர் என்ன செய்தாலும் அதில் ஆபாசம் எதுவுமில்லை என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. நான் சொல்ல நினைத்த பாலியலை அந்தப் பாத்திரத்தில் கொண்டு வருவதிலுள்ள அவசியத்தை அவர் புரிந்துகொண்டார்.

தான் இந்தத் திரைக்கதையை மிகவும் நேர்மையாகவே எழுதியிருக் கிறேன். மேரி என்ன செய்தாலும் சரி, அவள் சிதைந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். எழுதியபோது இந்தக் கதை எங்கே கொண்டு செல்லும் என்கிற பிரக்ஞை எனக்கு இல்லை.  உங்கள் கண்களுக்கு முன்பாகவே அந்த ஓவியம் தன்னை வரைந்துகொண்டு செல்கிறது. ஒரு சுத்தமான இளம் நடிகை அந்தப் பாத்திரத்தை ஏற்பதை நான் விரும்பவில்லை. ஆனால் என் விருப்பத்துக்கு மாறாகவே அது நடந்தது. அதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு நடிகையை என் சினிமாவுக்கு நான் பயன்படுத்தியே ஆக வேண்டியிருந்தது.

கேள்வி : நீலப்பட நடிகரான ரோக்கோவுடன் நடிக்க வேண்டும் என்று செட்டில் தெரிந்தபோது கரோலின் மிகவும் பற்றமடைந்ததாகச் சொல்லியிருக்கிறாரே?

பதில் : ரோக்கோதான் நடிக்கப் போகிறார் என்பதை நான் முன்கூட்டியே சொல்லியிருந்தால் பத்திரிகைகளில் அது பெரிய செய்தியாகியிருக்கும். அப்படி நடந்திருந்தால் ராபர்ட் பாத்திரத்துக்கு Fernpios Berleand கிடைத்திருக்கமாட்டார். அது எத்தனை பெரிய அவமானம்? ஒளிப்பதிவாளர் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் யாரும் ரோக்கோவுடன் சேர்ந்து பணியாற்ற மறுத்திருப்பார்கள். இந்தப் படமே சாத்தியமாகியிருக்காது. எனவேதான் அதை நான் ரகசியமாக வைத்திருந்தேன்.

ஆனால் ரோக்கோவும் கரோலின் துய்ஸியும் அற்புதமான ஜோடி. போர்னோ நடிகராக இருப்பது அசாதாரணமானது அல்ல. ஆனால் ரோக்கோ ஒரு charismatic நடிகர். எனது தேர்வைப் பற்றி எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. ஆனால் ரோக்கோ படப்பிடிப்புத்  தளத்துக்குள் நுழைந்ததும் எல்லோரும் கதிகலங்கிப் போனார்கள்.

அது மிகவும் சங்கடமான தருணம். அதிலும் ரோக்கோவுக்கு மிக மிக  சங்கடம்.  ஏனென்றால் படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அத்தனை பெரும் அவரைக் கீழ்த்தரமாகப் பார்த்தனர். அந்த அவமானத்தை அவர் தாங்கிக்கொண்டது பெரிய விஷயம். அடுத்தது, கரோலின், அவரால் இதை எப்படி எதிர்கொள்ள முடியும்?  அந்தக் கலவிக்  காட்சியை அவர் மணிக்கணக்கில் தாங்கிக்கொண்டார். அந்தக் காட்சியை இரவு பத்து மணியிலிருந்து காலை மூன்று மணி வரை படமாக்கினோம்.  மூன்று மணி ஆனபோது ‘இனி ஒரு நிமிடம் கூட தாங்க முடியாது’ என்ற நிலைக்கு ஆளானார் கரோலின்.

கேள்வி  : ஆனால் ரோக்கோ அசாதாரணமாக நடித்திருக்கிறாரே?

பதில் :  மோசமான நடிகர்கள்தான் கேமராவுக்கு முன்னால் இயல்பாக இருப்பார்கள். நடிப்பது அவ்வளவு சுலபம். ஆனால் தத்ரூபமாக நடிப்பது கடினம். ரோக்கோ ஒரு பூனையைப் போன்ற லாவகம் கொண்டவர். அவர் உடம்பும் அதே மாதிரிதான். எனக்குத் தெரிந்து மிக மோசமான போர்னோ நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நங்களது உடம்பை அசிங்கமான முறையில் முன்வைக்கின்றனர். காரணம், அவர்களது கூச்சம். ஆனால் ரோக்கோவிடம் ஒரு லயம்  உள்ளது.

மேரி மற்றும் பாவ்லோ பாத்திரங்களில் நான் கண்ட அழகு என்னவென்றால், அவர்களால் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்ளவே முடியவில்லை என்பதுதான். அதுதான் முக்கியம். இருவரது தனிமையுணர்வையும் அவர்களால் வார்த்தைகளின்றி புரிந்துகொள்ள முடிந்தது.

இந்த உலகிலேயே மிக வீர்யமான ஆணாகிய ரோக்கோவுக்குத் தன்னை ஒரு ஆண் என்று நிருபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கடைசியில் அவர் வலிமையற்றவராகிறார். அந்தப் பெண்ணிடம் அவள் தன்னை நேசிக்க வேண்டுமென்று எப்படிக் கெஞ்சுகிறார் பாருங்கள். எங்கே அவள் தன்னை விரும்பாமல் போய்விடுவாளோ என்று அஞ்சுகிறார். இதுதான் அந்தக் காட்சியில் சுவாரஸ்யமானது.

கேள்வி : ஆண்களைவிட பெண்கள்தான் இந்தப் படத்திற்கு அதிக ஆதரவு அளித்தார்களா?

பதில் : அப்படிச் சொல்வதைவிட பெண்கள்தான் அதிக தொந்தரவுக்கு ஆளானார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பொதுவாக அவர்களுக்குப் பிடிக்காத இந்த விஷயத்தில் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. சில பெண்கள் மிகவும் அவமானகரமாக உணர்ந்ததாகச் சொன்னார்கள். உதாரணமாக, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மேரியை வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராகத் தங்கள் ஆய்வின் பொருட்டு பரிசோதனை செய்யும் காட்சி. சுருக்கமாகச் சொன்னால், நீங்கள் இந்தப் படத்தை வெறுக்கலாம். ஆனால் இந்தப் படத்திலிருந்து உங்களை நீங்கள் பிரித்துக்கொள்ள முடியாது.

கேள்வி : படத்தில் மற்றொரு அதிர்ச்சியான தருணம் என்னவென்றால், மேரியை வதைக்கருவியில் பிணைக்கும் ராபர்ட் மிகவும் மென்மையான பாத்திரமாகக் காட்டப்படுவதுதான்.

பதில் : ஆமாம். அது ஒரு மேஜிக். Pure magic. படப்பிடிப்புத் தளத்திலேயே அப்படித்தான் நடந்தது. மரணத்தின் மாயத்திரை அங்கே படிந்திருந்தது. அப்படி ஒரு சித்திரவதைப் படலம் நடந்தபோது, உடல் தனது எடையை இழந்தது. அது நம்ப முடியாத ஒரு மேஜிக். நான் இந்தக் காட்சிக்கு ஒத்திகை எதுவும் எடுக்கவில்லை. அந்த S&M கருவியில் மேரியைப் பொருத்துவதே ஒரு கொடுமை. அதோடு, படப்பிடிப்பு விளக்குகள் வேறு. எனவே, ஒத்திகை எதுவும் இல்லாமல் என்ன நடக்கிறதோ அதை அப்படியே படமாக்கி விடுவது என்று முடிவு செய்தேன்.  அந்த உடல் தன்னைக் கடக்க வேண்டும்… ஒத்திகை வேண்டாம். என்னதான் நடக்கும் என்று காத்திருந்தேன். கடைசியில் அந்த மேஜிக் நடந்துவிட்டது. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி அது, because there is a passage of power.

இந்தத் திரைப்படத்தின் அடிப்படையான கரு, பெண்மையின் இரண்டு பிரிவுகளைப் பற்றியது. ஒரு பெண், இரண்டு கூறுகளாகப் பிளவு பட்டிருக்கிறான். இந்த படம் பாலைப் பற்றியதோ, மேரியைப் பற்றியதோ அல்ல; ஒரு பெண்ணுக்குள் இருக்கும் இரட்டைத்தன்மை பற்றியது .

பெண்ணின் சில உறுப்புகளை விலக்கி வைப்பதன் மூலமாக ஒவ்வொரு சமூகமும் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான சட்ட திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. ’பெண்களின் கெளரவத்தைப் பேணுவதற்காகவே இந்த விளக்கம்’ என்ற காரணமும் சொல்லப்படுகிறது.

இதன்மூலம், பெண்களுக்கு சுயமாக ஒரு கெளரவம் இல்லை என்பதுதான் சமூகத்தின் முடிவாக இருக்கிறது. ஃப்ரெஞ்ச் மொழியில் கடவுளை பெயரில்லாதவர் – Inomm’e  என்பார்கள்.  அதேபோல்,  Inommable என்றால் சொல்லப்படமுடியாதது என்று பொருள்.

போர்னோ படங்கள் ‘எக்ஸ்’ படங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. எக்ஸ் என்றால் என்ன பொருள் ? அல்ஜிப்ராவின் ‘எண்ணிக்கையில் அடங்காத’ என்பதைத்தான் எக்ஸ் என்று சொல்வார்கள். ஆக, எக்ஸ் என்பது ஒரு எழுத்து; ஒரு  க்ரோமோஸோம்; எண்ணிக்கையில் அடங்காதது; பெயரில்லாதது. ஆக, குறியீடுகள்தான் உலகை ஆள்கின்றன. இது ஏதோ சந்தர்ப்பவசமாக நிகழும் செயல் அல்ல. இது மிகத் துல்லியத்துடன் திட்டமிடப்பட்ட ஒன்று. கலவரங்களின் போது என்ன நடக்கிறது? ஆணாக இருந்தால் கழுத்தை வெட்டுகிறார்கள். பெண்ணாக இருந்தால், அவளை வன்புணர்ச்சி செய்து அவளது பிறப்புறுப்பைச் சிதைக்கிறார்கள். குறியீடுகளின்  பிரபஞ்சத்தில் பெண்களின் பிறப்புறுப்புபே ‘கருந்துளை’யாக இருக்கிறது. இது குறித்தே ஆண்கள் பீதியடைகிறார்கள்; ஏனென்றால், பெண் ‘தெய்வீகம்’ என்ற கோட்பாட்டுக்கு வெகு அருகில் இருக்கிறாள் .

கேள்வி :  மெல்பர்ன் திரைப்படவிழாவில் ரொமான்ஸ் திரையிடப்பட்டபோது அதில் வரும் பிரசவக் காட்சியின் போது பார்வையாளர்கள் பயத்தில் கத்தினார்கள். படத்தில் வரும் போர்னோ காட்சிகளின் போது கூட அவர்கள் எந்தவித சப்தமும் எழுப்பவில்லை . ஆனால், பிரசவக் காட்சியில் கத்தியது ஆச்சரியமாக இருந்தது.

பதில் : ஆமாம், அது ஒரு நிஜமான பிரசவக் காட்சி. அதை நான் க்ளோசப்பில் காண்பித்ததன் காரணம், அது ஒரு பிரபஞ்சத்தின் தோற்றம். பிரபஞ்ச இயக்கத்தோடு அது சம்பந்தப்பட்டிருக்கிறது. அதனாலேயே சமூகம் அதை விலக்கித் தடை செய்து வைத்திருக்கிறது.

இது அதிகாரத்தைப் பற்றிய ஒரு பிரச்சினை. மதம்தான் இதை வலுவாகச் செயல்படுத்தியிருக்கிறது. பெண்ணின் இயக்கத்தை வெறும் பெளதிக ரீதியாக மாற்றினால், விலங்குக்கும் அவளுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். எனவே, மதங்கள் பெண்ணை தெய்வீக நிலைக்கு உயர்த்தித் தனிமைச்சிறையில் அடைத்துவைத்துவிட்டன.

“In my films, sex is a subject, not an object.”

                                                                                – Catherine Breillat

காத்ரீன் ப்ரேயாவின் திரைப்படங்களில் அவர் கூறுவதற்கு மாறாக, ஆண் என்பவன் predator ஆக மட்டுமே காண்பிக்கப்படுகிறான் என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு.

கட்டுரைக்கு உதவிய பேட்டிகளை எடுத்தவர்கள் மற்றும் பேட்டி வெளியான பத்திரிகைகள் : 1. Indie WIRE 2. Salon.com  3. Flimmaker (Fall 2001)  4. Cynthia Joice 5. Ruby Rich 6. Rhiannon Brown.

ஜூன்  2004

இதுவரை சந்தா அனுப்பாதவர்கள் அனுப்பி வையுங்கள். குறைந்த பட்ச சந்தா 300 ரூ. அதற்கு மேலும் அனுப்பலாம். அது உங்கள் விருப்பத்தைப் பொருத்தது.

ஜீ.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே தயக்கமின்றி அனுப்பலாம்.)

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai