அழையா விருந்தாளி

அழையா விருந்தாளி என்று ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. A dirty story என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கிடைக்கும். அந்தக் கதையையெல்லாம் நான் இங்கே சொல்லப் போவதில்லை. கதையில் ஒரு நல்லவர் வருகிறார். அந்த நல்லவரால் ஒரு குடும்பமே சிதைந்த கதைதான் அழையா விருந்தாளி.

அந்த மாதிரி ஒரு நல்லவர் எனக்குப் பின்வருமாறு ஒரு அட்வைஸ் சொல்லியிருக்கிறார்.

I see that you are contemplating change of residence.I live in a senior citizen up scale pure veg. ,with medical facilities etc etc.I am in no position to advise you.But is our society is it ok to live in a general apartment for seniors. Please do not tell me I am always young at heart and acumen. That is different.

Regards
V Balasubramanian

இதயத்தால் இல்லை சார், இதயத்துக்குக் கீழேயும் இன்னும் நான் இருபது வயது இளைஞனாகத்தான் இருக்கிறேன்.

இப்படி ஒரு அறிவுரையை நீங்கள் கமல்ஹாசனிடம் சொல்வீர்களா? கமலும்தான் வருடத்துக்கு ஒரு முறை ஜாகை மாற்றுகிறார். அவரிடம் போய் முதியோர் இல்லம் சென்று வாழுங்கள் என்று சொல்வீர்களா? என்னைப் பற்றி எதுவுமே தெரியாமல், என் எழுத்து எதையுமே படிக்காமல் எனக்கு எப்படி யோசனை சொல்ல வருகிறீர

எத்தனையோ ஹாலிவுட் நடிகர்கள் எழுபது வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். எத்தனையோ எழுத்தாளர்களும் அப்படித்தான் வாழ்கிறார்கள். சல்மான் ருஷ்டியின் வயது 77. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் ஒரு புதிய காதலில் விழுந்தார். காதலியின் பெயர் Rachel Eliza Griffiths.w

அடுத்தவர் ஓர்ஹான் பாமுக். இவர் Aslı Akyavaş என்ற பெண்ணோடு 2011இலிருந்து உறவில் இருந்து சென்ற ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டார். பாமுக்கின் வயது 72. என்னை விட இரண்டு வயது மூத்தவர்.

சமீபத்தில் என் நண்பர்கள் இரண்டு பேர் ஒரு மூத்த எழுத்தாளரைச் சந்திக்க ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றார்கள். எழுத்தாளருக்குப் பண வசதிக்குக் குறைவே இல்லை. ஆனாலும் வயதாகி விட்டதால் முதியோர் இல்லத்தில் மனைவியோடு வசிக்கிறார். பார்த்து விட்டு வந்த இரண்டு நண்பர்களாலும் இரண்டு தினங்கள் உறங்க முடியவில்லை. அத்தனை தனிமையில் கழிக்கிறார் எழுத்தாளர்.

உங்களைப் போன்ற பொதுஜனமெல்லாம் எழுத்தாளர்களுக்கு இலவச ஆலோசனை வழங்க வரக் கூடாது. நகுலன் தள்ளாத வயதில் கூட தனியாகத்தான் வாழ்ந்தார். இத்தனைக்கும் அவர் திருமணமாகாதவர் வேறு.

நானெல்லாம் முதியோர் இல்லத்தில் சென்று வாழ்ந்தால் அங்கே இருப்பவர்கள் அத்தனை பேரும் தற்கொலை செய்து கொண்டு செத்து விடுவார்கள் ஐயா. என்னைப் பார்க்க தினம் தினம் இருபத்தைந்து வயதுப் பெண்களாக வருவார்கள். அதையெல்லாம் பார்த்தால் அங்கே உள்ள முதியோருக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடாதா?

இருபத்தைந்து வயதிலிருந்து முப்பது வயது வரையிலான தோழிகள் ஆறு பேர் இருக்கிறார்கள் எனக்கு. இதில் இரண்டு பேர் வெளிநாட்டில் வசிப்பவர்கள். எனக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர்கள். நான் தான் ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வாழ்வதால் அவர்களை ஆண் நண்பர்கள் போலவே பாவிக்கிறேன். என்ன, அவ்வப்போது பப்பில் போய் அவர்களோடு நடனம் ஆடுவேன். எல்லாம் பெட்டியோ நாவலில் எழுதியிருக்கிறேன். ஆனால் நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள்.

முதுமை என்பதை இந்தியர்கள் எதிர்கொள்வதுபோல் நான் எதிர்கொள்வதில்லை. நான் ஒரு கொண்டாட்டக்காரன். நேற்றுகூட பெங்களூர் பப்பில் ஒரு பெண்ணோடுதான் ஆடிக்கொண்டிருந்தேன். இந்தியர்கள் நாற்பது வயதிலேயே கிழடாகி விடுகிறார்கள். முதுமை வேறு. கிழட்டுத்தனம் வேறு. இன்னும் நிறைய சொல்லலாம். பெட்டியோ நாவலைப் படியுங்கள். புரியும். வாட்ஸப்பில் நீங்கள் இருந்தால் உங்களை ப்ளாக் பண்ணலாம். மின்னஞ்சலில் எப்படி உங்களை ப்ளாக் பண்ணுவது என்று தெரியவில்லை. உங்களுக்குப் பேரக் குழந்தைகள் இருந்தால் அவர்களை நினைத்துப் பரிதாபப்படுகிறேன்.

இனிமேல் எதன் பொருட்டும் எனக்குக் கடிதம் எழுதாதீர்கள்.