ஒரு பஞ்சாயத்து

இப்போதெல்லாம் அராத்துவோடு எடுத்ததற்கெல்லாம் பஞ்சாயத்தாகப் போய் விடுகிறது.

எல்லாம் வீடு என்ற நாவலில் எழுதலாம் என்று இருந்தால் இப்போதே பஞ்சாயத்தை ஆரம்பித்து வைக்கிறார் அராத்து. அவர் எழுதியிருப்பதை கீழே தருகிறேன்.

இலக்கிய வீடு – அராத்து

சாரு , மனுஷ் , போகன் என இலக்கிய உலகமே வீடு தேடிக்கொண்டு இருக்கிறது. இந்த அல்ப லௌகீக பிரச்சனையை வைத்து கதை , கவிதை , கட்டுரை என எழுதி இலக்கியமாக்க கள்ள முயற்சி நடப்பதாகச் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.வீடு என நாவல் எழுதப்போவதாக வேறு சாரு சொல்லி பயமுறுத்தி இருக்கிறார்.இந்த மூவரில் ஒருவருக்கு அநேகமாக இந்த ஆண்டு அரசு கனவு இல்லம் கிடைத்து விடும். யாருக்குக் கிடைத்தாலும் சந்தோஷப்படுவேன்.இதற்கு முன்பு இலக்கிய உலகில் வீடு தேடுவது , விரை வீக்கம் , பொண்ணு பார்ப்பது , மாப்பிள்ளை தேடுவது , வளைகாப்பு செய்வது போன்ற லௌகீக விஷயங்களை எல்லாம் கொண்டுவர மாட்டார்கள்.இதை செயல்படுத்த ஆரம்பித்தவர் சாரு தான். வேலைக்காரி பிரச்சனை , முடி திருத்தும் பிரச்சனை , இட்லி , கூழ் பிரச்சனை என ஆரம்பித்து மூலம் பௌத்திரம் வரை இலக்கிய உலகில் கலந்து கட்டி அடித்ததால் , எல்லோருக்கும் துளிர் விட்டு விட்டது. நான் ஊருக்கு ஒன்று என நான்கு வீடுகள் வாடகைக்குப் பிடித்து வைத்திருக்கிறேன். இதில் மூன்று வீட்டு ஓனர்களை நான் நேரில் சந்தித்தது இல்லை. அனைத்து வீடுகளும் சென்னை , பெங்களூர் , ஹைதராபாத் என மெட்ரோ சிட்டிகள் தான். அனைத்தும் ஹார்ட் ஆஃப் தி சிட்டி. வாடகையும் 10,000 , 15 ,000 வரைதான். அதற்காக ஒண்டுக்குடித்தனம் என நினைக்கலாகாது. உதாரணமாக பெங்களூர் கோரமங்களா 80 ஃபீட் சாலையில் இருக்கும் வீட்டில்தான் சாரு உட்பட நண்பர்கள் சந்திப்பு. 6 பேர் வரை தங்குவோம். வாடகை 15,000 /- ஓனரால் ஒரு சிக்கல் இல்லை. ஓனரை பார்த்ததில்லை. எல்லாமே ஃபோன் டீலிங்தான். எத்தனை பேர் வந்து தங்கினாலும் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். 24 மணி நேரமும் சுதந்திரமாக எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம் எப்போதும் தண்ணீர் வரும். செமி ஃபர்னிஷ்ட். ஓனர் ஏசி , ஹீடர் , கட்டில் போட்டு வைத்திருக்கிறார். அருமையான ஹால் , பெட் ரூம் , கிச்சன் , ரெஸ்ட் ரூம். இலக்கியவாதிகளுக்கு ஒரு மாதுளை வாங்கி வரத் தெரியாது என சாருவே எழுதியிருப்பார். அவந்திகா இந்த எழுத்தாளப் பு என திட்டியதாக எழுதியிருப்பார்.என்ன மேட்டர் என்றால் , எழுத்தாளர்கள் மிகச் சிக்கலான , யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனைக்கெல்லாம் தீர்வு கண்டுபிடித்துக்கொண்டும் , மானுட குலத்தை முன்னேற்றி எதிர்காலத்தை நோக்கி தள்ளி விட முயன்று கொண்டும் இருப்பார்கள். அதே நேரத்தில் சாதாரணமான விஷயத்தை மிகச் சிக்கலாக்கிக் கொள்வார்கள். இதில் தொத்து வியாதி போல எழுத்தாளர்களின் மனைவிகளும் சமயங்களில் மாட்டிக்கொள்கிறார்கள். உதாரணமாக ஒருவன் ஒரு எழுத்தாளரை கத்தியால் குத்தி விட்டு ஓடிவிட்டால் , அவன் ஏன் குத்தினான் ? இந்த மனநிலைக்கு அவனை எது கொண்டு சென்றிருக்கும் ? இந்த மனக்கொந்தளிப்பில் இருந்து அவனை விடுவிப்பது எப்படி ? இவனைப்போல மற்றவர்களும் கத்தியால் குத்தாமல் இருக்க என்ன வகையான கலையை நாம் உருவாக்க வேண்டும் ? என்றெல்லாம் யோசித்துக்கொண்டு ஆம்புலன்ஸுக்கு போன் செய்யாமல் செத்து விடுவார்கள்.அதுவே , ஒருவன் – என்னாங்க இவ்ளோ மொக்கையா எழுதி இருக்கீங்க என ஆன்லைனில் ஒரு கமெண்ட் போட்டு விட்டால் , டேய் ஒன்ன கொல்லாம விட மாட்டேண்டா தே பாடு என கொக்கரித்து விட்டு , மன நலம் பேதலித்து க்ரோசின் , கால்பால் எல்லாம் மனநல மாத்திரைகளாக பாவித்து ஏழெட்டு மாத்திரைகளை கலர் கலராக போட்டுக்கொண்டு , தங்கள் அக்கவுண்டை லாக் அவுட் செய்வார்கள் அல்லது டீ ஆக்டிவேட் செய்து விட்டு ….இப்ப என்னடா செய்வ , சாவுடா என வெற்றிப் புன்னகை பூப்பார்கள்.

***

அராத்து எழுதியிருப்பது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒருத்தன் லாட்டரி சீட்டு வாங்கினான். அவனுக்குப் பத்து கோடி பரிசு விழுந்து விட்டது. உடனே அவன் மற்றவர்களைப் பார்த்து கொக்கரிக்கிறான். அப்படித்தான் இருக்கிறது.

எனக்கு ஒருத்தரைத் தெரியும். ஆறு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ், மூன்று மனைவிகளோடு ஜாம் ஜாம் என்று வாழ்கிறார். எல்லோரும் ஒரே இடம் அல்ல. வேறு வேறு ஊர். ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பெண்ணையே சமாளிக்க முடியவில்லை.

அராத்துவுக்குக் கிடைக்கிறது என்பதால் எல்லோருக்கும் கிடைக்குமா? ஒருநாள் அராத்து கோவையில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது சிகரெட்டைக் குடித்து விட்டு வெளியே விட்டெறிந்தார். அது காரின் பக்கத்தில் வந்து கொண்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மூஞ்சியில் விழுந்தது. வேறு ஆளாக இருந்தால் அந்த இடத்திலேயே தூக்கிப் போட்டு மிதித்திருப்பார்கள். ஆனால் அந்த இன்ஸ்பெக்டர் “சார், பாத்துப் போடக் கூடாதா சார்” என்று இரண்டு சார் போட்டு அராத்துவிடம் கொஞ்சினார்.

நான் இதோடு இருநூறு வீடு பார்த்து விட்டேன். என் தலையெழுத்து பாருங்கள், வீடு பார்க்கும் கதையில் கூட செக்ஸ் கலந்து விட்டது. ஒரு வீடு பிராத்தல் என்பதால். இப்போது கூட ஒரு வீடு பார்த்தோம். அக்ரீமெண்ட்டில் பல ஷரத்துகள். எங்கள் காலை நக்க வேண்டும் என்று மட்டும்தான் இல்லை. ஒரு ஷரத்து, வீட்டைக் காலி பண்ணி சாவி கொடுத்த பிறகு இருபத்தோரு தினங்களுக்குப் பிறகுதான் அட்வான்ஸைத் திருப்பிக் கொடுப்பார்களாம். அட்வான்ஸ் ஐந்து லட்சம். வீட்டில் பொருள்கள் பழுது அடைந்திருந்தால் ஒன்றரை லட்சம் ரூபாயை அட்வான்ஸிலிருந்து எடுத்துக்கொள்வார்களாம். வீட்டின் உரிமையாளர் ஒரு பிராமணப் பெண்மணி. இன்னொரு வீட்டில் 90000 ரூ வாடகை. மெயிண்டனென்ஸ் ஐந்து லட்சம். ஆனால் சைவ உணவுக்காரராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. தொண்ணூற்றைந்து ஆயிரம் கொடுத்து விட்டு சைவ உணவு வேறு சாப்பிட வேண்டும். உச்சக்கட்ட அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் மைலாப்பூரில் நான் பதினைந்தாயிரம் வாடகையில் மூன்று மாடி வீட்டில் வசிக்கிறேன் என்றால் அதெல்லாம் அதிர்ஷ்டம் என்று விட்டு விட வேண்டியதுதான். மற்றவன் ஏன் தெருநாயைப் போல் அலைகிறான் என்று ஆச்சரியப்படக் கூடாது. அது கர்மா என்கின்றன எல்லா மதங்களும். கர்மாவோ பர்மாவோ. முயற்சித் திருவினையாக்கும்.