அழையா விருந்தாளி – 2

மீண்டும் அழையா விருந்தாளி நண்பர் எனக்கு இரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறார். எழுதாதீர்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் எழுதுகிறார். அப்படியென்றால், அதை நான் மிகக் கடுமையான அத்துமீறல் என்றே சொல்வேன். இவருடைய மனைவி, மகன், மகள், பேரக் குழந்தைகள் அத்தனை பேருக்காகவும் நான் இப்போது பரிதாபப்படுகிறேன். நான் யார் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. அதற்குப் பிறகும் நீங்கள் எனக்கு அட்வைஸ் மயிராகவே உதிர்த்துக்கொண்டிருப்பதற்கு என்ன பெயர்? திமிர் என்றுதானே அர்த்தம்? என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஒரு எழவுமே தெரியாமல் மீண்டும் மீண்டும் எனக்கு எழுதிக்கொண்டிருந்தால் என்னய்யா அர்த்தம்?

அவருடைய இரண்டு கடிதங்கள்:

Thanks

Thanks for your esteemed response. You can spam unwanted letters. It takes two minutes to take a decision. If the wife also has your energy then it is ok. Best wishes
V Balasubramanian

Shri Sesahan ex chief election commissioner who had a bungalow in St. Mary’s road lived in a brahmin dominated senior citizen home near Sriperumbudur, I did not insult you. Living in a senior citizen home is not an insult to the residents. It is a big relief to wives…

V Balasubramanian

இந்தப் பெரிய மனிதருக்கு அடுத்தவரைத் துன்புறுத்தாதீர்கள், அதற்கு உங்களுக்கு உரிமையில்லை என்று சொன்னாலும் புரியவில்லை. ஐயா, உங்கள் கடிதங்கள் எனக்கு மன உளைச்சலைத் தருகின்றன, எனக்கு எழுதாதீர்கள் என்று சொன்னால், ஏன், ஸ்பாமில் போட வேண்டியதுதானே, அதற்கு ஒரு நிமிடம் கூட ஆகாதே என்று கேட்கிறார். பெரியவராக இருக்கிறாரே என்றுதான் நான் மரியாதையான மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஏனய்யா, சேஷனும் நானும் ஒன்றா? எழுத்தாளன் என்றால் அவன் அவன் தனியாக ஒரு தீவு வாங்கிக் கொண்டு போய் தங்குகிறான். நான் போய் எப்படி ஐயா இந்தக் கிழடுகளோடு தங்க முடியும்? ஒரே ஒரு முதியவராகிய நீங்களே என்னைப் போட்டு இந்தப் பாடு படுத்துகிறீர்கள்? ஏகப்பட்ட கிழடுகளை நான் எப்படி சமாளிப்பது?

என் நைனாவும் அம்மாவும் என் வீட்டுக்கு அதிக பட்சம் ஐந்து முறைதான் வந்திருப்பார்கள். அதுவும் காலையில் வந்து விட்டு மாலையில் கிளம்பி விடுவார்கள். ஒரே காரணம், என் வீட்டில் டிவி இல்லை. அவர்களுக்கு நாள் பூராவும் டிவி பார்க்க வேண்டும். அப்படி ஓரிரு மணி நேரம் வருபவர்களே அவந்திகாவிடம் ”ஏன் நீ ரெண்டு கிலோ வெங்காயம் வாங்கி, காசை அனாவசியமாக செலவு செய்கிறாய்? அரை கிலோ வாங்கினால் போறாதா?” என்று கேட்டார்கள்.

நான் அதற்கு, “இங்கே பாருங்கம்மா, வந்தா நல்லபடியா பேசிட்டு இருந்துட்டு போய்ட்ணும். இந்த மாதிரி அடுத்தவங்க விஷயத்துல எல்லாம் தலையிடக் கூடாது” என்று சத்தமாகச் சொன்னேன்.

பொண்டாட்டி தாசனாப் போய்ட்டான் ரவி என்று பேசிக்கொள்வார்கள். கிழடுகள் எல்லாமே இப்படித்தான். இதற்கு மாற்றான ஒரு கிழடைக் கூட நான் கண்டதில்லை.

ஆம்படையானும் பொண்டாட்டியும் முதியோர் இல்லத்தில் தங்கினால் பொண்டாட்டிகளுக்கு நல்லதாம். நல்லதுதான். அதெல்லாம் மிடில்கிளாஸ் மூடர்களுக்கு. நான் என்ன மிடில் கிளாஸா? நான் தான் எழுதிக்கொண்டே இருக்கிறேனே, உங்கள் மனைவியும், அம்மாவும் சமையலறையில் எத்தனை மணி நேரம் உழைத்தார்களோ அதைப் போல பல மடங்கு நேரம் நான் சமையல் அறையில் செலவழிக்கிறேன். இதுவரை என் வீட்டில் நான் மற்றவர்கள் சமைத்து சாப்பிட்டதே இல்லை. 90 சதவிகித சமையில் நான் தான். இன்று நான் நூற்றுக்கு மேற்பட்ட பாத்திரங்களைத் தேய்த்தேன். செல்லம்மாளுக்கு உடம்பு சுகம் இல்லை. அவந்திகாவை இனிமேல் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் என்றே அழைக்கலாம் என்று நினைக்கிறேன். நான் ஊருக்குப் போனால் அவளுக்கு உடம்புக்கு வந்து விடும். கடந்த மூன்று ஆண்டுகளாக தினமும் நூறு பாத்திரங்களுக்குக் குறையாமல் தேய்க்கிறேன். பணிப்பெண் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் செல்லம்மாள் போடுகிற நிபந்தனைகளைக் கண்டு ரெண்டு நாளில் ஓடி விடுகிறார்கள். அப்படி என்ன நிபந்தனை என்கிறீர்களா? பாத்திரத்தில் கசண்டு இருக்கக் கூடாது என்பாள். அவ்வளவுதான்.

முதியோர் இல்லம் யோசனை பற்றி அவந்திகாவிடம் சொன்னேன். அவள் சொன்ன பதிலை இங்கே பிரசுரித்தால் எல்லோருக்கும் கஷ்டம். அவள் திருவல்லிக்கேணிக்காரி.