(முன்குறிப்பு: இந்தச் சிறுகதை வீடு நாவலில் இடம் பெறும். இந்தச் சிறுகதையில் இலக்கணப் பிழை நிலவ வாய்ப்பு இருக்கிறது. காரணம், இந்தக் கதை இன்று அதிகாலையில் எனக்கு ஒரு கொடுங்கனாவாக வந்தது. கனவில் தர்க்கம் இருக்காதுதானே?)
மாண்புமிகு முதல்வர் அவர்கள் செக்ரடேரியட்டில் தன் பணிகளை முடித்து விட்டு காரில் ஏறும் தருணத்தில் அதுவரை எங்கோ பதுங்கியிருந்த சாரு நிவேதிதா பெட்ரோலைத் தன் மீது ஊற்றி எரியூட்டிக் கொள்கிறான். யாராலும் தடுக்க முடியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது காரியம். அந்தக் கண நேரத்துக்குள்ளேயே எங்கிருந்தோ ஓடி வந்த மனுஷ்ய புத்திரன் சாரு நிவேதிதாவைக் காப்பாற்ற முயல்கிறான். ஆனால் அங்கிருந்த பாதுகாவலர்கள் மனுஷைத் தடுத்து விடுகிறார்கள். அதற்குள்ளேயே மனுஷின் முன்முடியில் கொஞ்சம் பொசுங்கி விடுகிறது.
போஸ்ட்மார்ட்டத்தில் அது சாரு நிவேதிதாவின் உடல் என்று சரியாக நிரூபணம் ஆகவில்லை. சாரு ஒரு திருடன் என்று நான் அப்போதே சொல்லவில்லையா? ”செத்தது சாருவே அல்ல, சாரு செட்டப் செய்து முடித்த காரியம்” என்று சிறுபத்திரிகை எழுத்தாளன் ஒருவன் தன் பத்திரிகையில் ஒரு நீண்ட கட்டுரை எழுதினான். ”இது அநியாயம், அக்கிரமம், பகவானுக்கே அடுக்காது, இடியட், சாருவை எப்படி திருடன் என்று சொல்லப் போயிற்று?” என்று அந்தச் சிறுபத்திரிகை எழுத்தாளனைத் திட்டி காயத்ரி ஃபேஸ்புக்கில் எழுதினாள்.
சாருவுக்கு டெத் ஆகவில்லை, அவர் ஒரு சீக்ரெட் ப்லேசில் லிவ் பண்ணுகிறார் என்று அராத்து ஒரு கட்டுரை எழுதியதால் சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் ”தான் செத்தால் தன் சாவை பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டும்” என்ற சாருவின் ஆசையையும் மீறி எந்தக் கொண்டாட்டமும் நடக்கவில்லை.
ஆனாலும் ஜெயமோகன் தன் இணைய தளத்தில் “சாருவின் துர்மரணத்தைத் தாங்க முடியாமல் மூன்று தினங்களாக உறக்கம் பிடிக்காமல் சாருவின் தளத்தில் போய் அவர் பதிவேற்றம் செய்யும் இசைக்கோர்வைகளையாவது கேட்கலாம் என்று பார்த்தேன். அவரே இல்லாததால் அங்கே இசையும் இல்லை” என்று எழுதி விட்ட காரணத்தால், கடலூர் சீனு, சுஷில் குமார், காளி பிரஸாத் போன்ற நண்பர்கள் சாருவுக்கு ஒரு இரங்கல் கூட்டம் கோவையில் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில் செல்வேந்திரன் பேசியதுதான் சிறப்பாக இருந்ததாக பலரும் அபிப்பிராயப்பட்டார்கள். அதிலும் போகன் சங்கர் அப்படிச் சொன்னவுடனே அந்தப் பேச்சு மேலும் பிரபலம் ஆனது. ஆனாலும் செல்வேந்திரன் ஏன் ழவை ல என்றும், ள என்றும் உச்சரிக்கிறார் என்று ஒருமுறை சாரு தன்னிடம் கேட்டதாக இங்கே பெயர் சொல்ல முடியாத ஒரு நண்பர் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டு வைத்தார்.
கார்ல் மார்க்ஸும் இந்தப் பிரச்சினை குறித்து ஒரு மிக நீண்ட கட்டுரை எழுதினார். தலைப்பு, தற்கொலையின் அரசியல்: சாருவின் மரணத்தை முன்வைத்து.
இதெல்லாம் நடந்து கொண்டிருந்த போது கோவாவில் ஒரு பப்பில் வைத்து சாரு தன் தோழியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்: நான் தற்கொலை செய்து கொண்டதற்குக் காரணம் என்ன தெரியுமா? இரண்டு காரணங்கள். ஒன்று, ஒரு இளம் பிராமணப் பெண் தன்னுடைய 2000 சதுர அடி வீட்டுக்கு ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் ரூபாய் வாடகை கேட்டது. இரண்டாவது, ஒரு முதிய பிராமண நண்பர், தன்னைப் போலவே சாருவும் முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடலாம் என்று கடிதம் எழுதியது.