இந்த அழையா விருந்தாளியே ஒரு புத்தகமாகப் போகும் போல் இருக்கிறது. எனக்கும் இக்கடிதங்களை குப்பையில் போடுவதற்கு விருப்பம் வர மாட்டேன் என்கிறது. ஏனென்றால், இதெல்லாம் இன்றைய சமூக எதார்த்தத்தின் ஆவணங்கள். ஒரு காலத்தில் பிராமணர்கள் என்றால் அங்கேதான் ஞானமும் அறிவும் கொட்டிக் கிடந்தது. அதைக் கண்டுதான் அரசன் முதல் ஆண்டி வரை அஞ்சினான். அரசர்களே காலில் விழுந்தார்கள். ஆனால் இன்று பிராமணர்கள் என்றால் அதற்கு உதாரண புருஷர்களாக விளங்குவது எஸ்.வி. சேகரும் மதுவந்தியும் அவர்களைப் போன்றவர்களும்தான். இலக்கியம் தெரியாது, தமிழ் தெரியாது, சம்ஸ்கிருதம் தெரியாது. ஏதோ கொஞ்சம் ஓட்டை உடைசல் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு பழைய பெருங்காய டப்பா மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறது காலம்.
இதற்கு உதாரணமாகத்தான் என் நண்பரும் கடிதங்களாக எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார். இதோ பாருங்கள்:
”நீங்கள் ப்ராமணராக இருந்தால் அதுவும் கலப்பு திருமணம் செய்யாதவராக இருந்தால். Vegetarians மட்டும் என்ற கோட்டாவில் நியாயமான வாடகையில் அதுவும் முதிய அந்தணர் என்ற வகையில் எளிதாக வீடு அடைந்திருப்பீர்கள். உண்மை கசக்கும்.
V Balasubramanian.”
இப்படி ஒரு கடிதம் எழுதுபவரை சமூக விரோதி என்றுதானே சொல்ல முடியும்?
1947க்கு முன்னால் தபால் இலாகாவில் அந்த ஊழியர்களுக்கு அரசாங்கக் குடியிருப்புகள் கொடுக்கும்போது பிராமணர்களுக்குத் தனியாகவும் அபிராமணர்களுக்குத் தனியாகவும்தான் பிரித்துக் கொடுத்தார்கள் என்பது இன்று எத்தனை பேருக்குத் தெரியும்? அப்படி ஒரு அமைப்பை மீண்டும் கொண்டு வருகிறாற்போல்தான் இந்த நண்பர் கடிதம் எழுதியிருக்கிறார். 90000 ரூ. மாத வாடகை கேட்கும் மைலாப்பூர் பிராமணர்கள் குடியிருக்க வருபவர்களை “நீங்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்” என்று நிபந்தனை விதிப்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் என்று எழுதினால் அதற்கு வரும் பதிலைப் பாருங்கள்.
அன்பர் இன்னொரு கடிதமும் எழுதியிருக்கிறார்.
”நீங்கள் அனாதை முதியோர் இல்லங்களையும் , Upmarket Senior citizen resort குழ்ப்பிக் கொள்கீறீர்கள். இங்கு சீட்டு விளையாட்டு, மாலை நேர்தில் கூடி மது அருந்துதல், கார், நினைத்த போது வெளியில் சுற்றுவது, உங்கள் மனைவி யோகா, Spiritual meditation class எடுத்து Celebrity among Ladies இத்யாதி.
V Balasubramanian.”
நான் பொது இடங்களுக்கோ விசேஷங்களுக்கோ செல்லாமல் என் அறையிலேயே பதுங்கிக் கிடப்பதற்கு இது போன்ற கிழவர்கள் மட்டுமே காரணம். என்னைப் பார்த்தவுடன் மேலே சொன்னது போல் அரை மணி நேரம் பேசி கழுத்தை அறுத்து விடுவார்கள். அந்தக் காலத்து வியாதி ராஜ பிளவைதான் ஞாபகம் வரும்.
ஏனய்யா பெரியவரே, 120 புத்தகங்களை எழுதியிருக்கும் எனக்கு நீங்கள் முதியோர் அனாதை விடுதிகளைச் சொல்லவில்லை, உயர்தரமான (elite) விடுதிகளைத்தான் சொல்கிறீர்கள் என்பது கூடவா தெரியாது?
எனக்கு மனிதர்களையே பிடிக்காது என்று ஆயிரம் முறை எழுதி விட்டேன். ஏனென்றால், ஞானி பர்த்ருஹரி சொன்னது போல் இலக்கியம் படிக்காதவர்கள் மிருகங்களைப் போல் வாழ்கிறார்கள். அதனால்தான் எனக்கு மனிதர்களைப் பிடிக்கவில்லை. இலக்கியம் படித்தவனோ தான் படித்ததை ஞானமாக செரித்துக் கொள்ளாமல் அறிவாக வைத்துக்கொண்டிருப்பதால் பெரும் அஹங்காரியாக உலவுகிறான். ஆக, அவனுமே என் பார்வையில் மனித ஜென்மமாகத் தெரியவில்லை. அதனால் நான் முழுமையாகவே மனிதர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதிலும் கிழவர்கள் என்றால் பிடிக்கவே பிடிக்காது. அலறியபடி ஓடி விடுவேன். ஆனால் எழுத்தாளர்கள் எந்த வயதிலும் கிழவர்கள் ஆவதில்லை.
நகுலன், க.நா.சு., அசோகமித்திரன், சார்வாகன், தி. ஜானகிராமன், ஆலன் ஸீலி போன்ற பிரம்மாண்டமான ஆளுமைகளோடு நான் பேசியிருக்கிறேன். சிலரோடு நெருக்கமான நட்பில் இருந்திருக்கிறேன். இவர்களில் முதல் ஐவரும் பிராமணர்கள்தான். ஆனால் அவர்களின் சாதி அடையாளமோ, வயதோ எனக்கு ஒரு க்ஷண நேரம் கூட தெரிந்ததே இல்லை. அவர்களிடம் அதற்கான ஒரு துளி சாயல் கூட இருந்ததில்லை. இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருப்பது போல்தான் இருக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயம். நான் என் மனைவியோடு குடும்ப அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் ஆணாதிக்கவாதி அல்ல. என் மனைவிக்குப் பிரியமான இடத்தில்தான் நான் வாழ முடியும். முதியோர் இல்லம் சென்றால் அவள் தற்கொலை செய்து கொண்டு விடுவாள். நான் சொல்வது ஐந்து நட்சத்திர விடுதி மாதிரியான இல்லம்தான். எனக்குப் பிடித்தபடி நான் மாதத்தில் ஐந்து நாள்கள் வெளியூர் சென்று வாழ்கிறேன். இதுவரை பெங்களூர். இனிமேல் கோவா. மீதி இருபத்தைந்து நாள்களும் வீட்டில் எடுபிடி வேலை செய்து கொண்டு, மதியம் மூன்று மணியிலிருந்து இரவு பத்து மணி வரை எழுதுகிறேன். என் மனைவி இது வரை என்னை உணவு விடுதிகளுக்கு அழைத்ததில்லை, சினிமாவுக்கு அழைத்ததில்லை, வெளியூருக்கு அழைத்ததில்லை, புடவைக்கடைக்கு அழைத்ததில்லை, கடல்கரைக்கு அழைத்ததில்லை, உறவுகளின் சாவு வாழ்வுக்கு அழைத்ததில்லை. அவளுக்கு வீடுதான் சொர்க்கம். அதனால் எனக்கு எழுதுவதற்கு அதிக நேரம் கிடைக்கிறது. இந்த எழவையும் நான் ஆயிரம் முறை எழுதித் தொலைத்து விட்டேன். திரும்பத் திரும்ப என்னை நோண்டிக்கொண்டிருந்தால் நானும் திரும்பத் திரும்பத்தான் எழுத வேண்டியிருக்கிறது.
இன்னொரு விஷயம். மாதத்தில் கிடைக்கும் ஐந்து நாள் சொர்க்கத்தில் என்னால் ஒரு வாக்கியம் கூட எழுத முடியவில்லை. குடி, கொண்டாட்டம், ஆட்டம், பப், நிறைந்த உறக்கம் என்று போய் விடுகிறது. இருபத்தைந்து நாள் நரகத்தில்தான் ஏராளமாக எழுதுகிறேன். படிக்கிறேன். படங்கள் பார்க்கிறேன். மார்க்கி தெ ஸாத்-இன் வாழ்வும் அப்படியே அமைந்தது என்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஆளை வெளியே விட்டால் கோட்டையில் இருந்து கொண்டு பெண்களோடு கொட்டமடித்தான். சிறையில் போட்டால் வண்டி வண்டியாக எழுதினான்.
ஆனால் இப்படி 25 – 5 என்று பிரிக்காமல் முப்பது நாளும் நான் சொர்க்கத்தில் இருந்தால் எப்படி இருப்பேன், எவ்வளவு எழுதுவேன் என்று இன்னும் சோதித்துப் பார்க்க முடியவில்லை. மனைவி மூன்று மாதம் ஊருக்குப் போயிருந்தபோது வீட்டில் பத்து, வெளியில் பதினைந்து என்று இருபத்தைந்து பூனைகளுக்கு உணவு போடுவதிலும் பராமரிப்பதில் என் தெம்பும் உற்சாகமும் குன்றி, அதிகம் எழுத முடியாமல் போய் விட்டது. அதனால் அதை சொர்க்கம் என்று சொல்ல இயலாது. முப்பது நாள்களும் கோவாவில் இருந்து சோதித்துப் பார்க்க வேண்டும். ஆனால் நம்பிக்கை இருக்கிறது. உலகத்திலேயே அதிக அடிக்ஷன் குணமுள்ள கஞ்சா இலைகளுக்கே நான் அடிக்ட் ஆனதில்லை என்பதால் முழு சொர்க்கத்திலும் நிறையவே எழுத முடியும் என்று நினைக்கிறேன்.
இனிமேல் அந்த முதியவரிடமிருந்து வரும் கடிதங்களுக்கு பதில் எழுதி நேரத்தை வீணடிக்க மாட்டேன். பீரியட்.