ஒருவழியாக வீடு கிடைத்து விட்டது. அடையார் காந்தி நகர். அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் அருகில். நான் இப்போது கோவிலுக்குச் செல்வதில்லை. அந்த நேரத்தில் கூட எழுதலாம் என்ற ஒரே காரணம்தான். கோவிலுக்கு எதற்காகச் செல்கிறோம்? இறை சக்தியிடம் வேண்டிக் கொள்வதற்காக. பிரார்த்தனை செய்து கொள்வதற்காக. எனக்குத்தான் வேண்டிக் கொள்ள எதுவுமே இல்லையே? ம்ஹும். எனக்கு புக்கர் பரிசு வேண்டும்தான். அதுகூட எதற்கு என்றால் என் எழுத்து ஆங்கில இலக்கிய உலகத்துக்குச் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால்தான். இந்தியாவின் மிகப் பிரபலமான பதிப்பகம் என் நாவல் ஔரங்ஸேபை ஆங்கிலத்தில் வெளியிட்டும் லண்டனிலும் அமெரிக்காவிலும் எனக்கு பதிப்பகங்கள் கிடைக்கவில்லை. ஆக, ஔரங்ஸேப் இந்தியாவை விட்டு வெளியே செல்லவில்லை. இதை வேண்டுமானால் நான் கடவுளிடம் கேட்கலாம். அப்படிக் கேட்டால் என்னைப் படைத்தவனை நான் அவமதிக்கிறேன் என்று பொருள். அவனுக்குத் தெரியாதா, எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்ன கொடுக்கக் கூடாது என்று. எனவேதான் எனக்கு இறைவனிடம் வேண்டிக் கொள்ள எதுவுமே இல்லை என்றேன்.
பணத் தேவை ஏற்பட்டால் மட்டும் வெங்கடாஜலபதியிடம் வேண்டிக் கொள்வேன். மறுநாளே பிரச்சினை தீர்க்கப்படும். இதை சீனியிடம் சொன்னால் உங்களுக்குத்தான் நடக்கிறது, எனக்கு நடக்கவில்லை என்கிறார். நானும் பலமுறை சோதித்துப் பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறையும் நடக்கிறது. ஆனால் இப்போது தற்சமயம் கேட்க முடியாது. ஏற்கனவே கேட்டு நடந்ததற்கு இன்னும் தட்சணை கொடுக்கவில்லை. முடிதான் தட்சணை. நேரில் போக வேண்டும். என்னடா இது, கடவுளுக்குப் போய் மயிரைக் கொடுக்கிறோம் என்று சங்கடப்பட்டேன். பின்னர் புரிந்து கொண்டேன், முடி என்பது தலையின் குறியீடு என்று. தலையைக் கொடுக்க முடியாது இல்லையா?
இத்தனை சொன்னாலும் கோவிலுக்குப் போவதை நிறுத்தியதன் காரணம், நீங்கள்தான். விவேகானந்தர் முப்பத்தொன்பது வயது வரைதான் வாழ்ந்தார். மூன்று மணி நேரம்தான் உறங்குவாராம். காரணம், அவருக்கு அவருடைய வாழ்நாள் பற்றி மிக முன்னதாகவே தெரியும். அதற்குள் தான் செய்து முடிக்க வேண்டிய பணிகளை முடிக்க வேண்டுமானால் ஆறு மணி நேரமெல்லாம் நித்திரை கொள்ள முடியாது. அந்த வசதி தனக்கு இல்லை என்பதை அவர் புரிந்து கொண்டார். அதேபோல் என் ஆயுளும் எனக்குத் தெரியும். ஆனால் நான் விவேகானந்தர் மாதிரி யோகி அல்ல; போகி. எனவே உறக்கத்தை விட முடியாது. அதனால்தான் கோவிலுக்குப் போவதை நிறுத்தி விட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன்.
கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில் சென்னையில் நான் சென்ற இரண்டே கோவில்கள், மைலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள் கோவில் மற்றும் அடையாறில் உள்ள அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில். இரண்டுமே அற்புதமான பேரழகின் உருவெளித் தோற்றங்கள்.
வீட்டின் உரிமையாளர் ஒரு பிராமணப் பெண்மணியாகவே இருந்தாலும் நீங்கள் சைவமா அசைவமா கேள்வி கேட்கவில்லை; பூனை நாய் இருக்கிறதா என்று கேட்கவில்லை (நாங்களாகச் சொன்ன போதும் அது பற்றிக் கவலையில்லை என்று சொல்லி விட்டார்); முன்பணத்துக்கான காசோலையைக் கொடுத்த போது அதில் போட்டிருக்கும் தொகையைக் கூட பார்க்கவில்லை. வேறு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அது மட்டும் அல்லாமல், எனக்கு ஒரு அற்புதமான காஃபியும் போட்டுக் கொடுத்தார். நீங்கள் குடிக்கவில்லையே என்று கேட்டேன். காஃபி குடிப்பதில்லை, காஃபி குடிக்கக் கூடாது என்று ’பெரியவா’ சொல்லியிருக்கா என்றார். பெரியவா என்றதும் எனக்கு சற்றுக் குழப்பம். எந்தப் பெரியவா என்று கேட்டேன். ஜெயேந்திர சரஸ்வதி என்றார்.
கடைசியில் ஒப்பந்தப் பத்திரத்தில் நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த போது அதைப் படித்துக் கூட பார்க்காமல் கையெழுத்துப் போட்டார். இத்தனைக்கும் ஒப்பந்தப் பத்திரம் அவந்திகா தயார் செய்தது.
என்ன்ங்க இது, படித்துக்கூட பார்க்கவில்லை நீங்கள் என்றேன்.
என் அம்மாவுக்கு எண்பது வயது. அவரே உங்கள் வாசகி. எனக்கோ என் பள்ளி நாட்களிலிருந்து உங்கள் எழுத்து பரிச்சயம். என் தந்தை கொஞ்ச நாள் பத்திரிகை விநியோகம் செய்து கொண்டிருந்தார். அப்போது இரவு நேரத்தில் பத்திரிகை பண்டல் வரும். அந்த பண்டலைப் பிரித்து ஒரு காப்பியை எடுத்துக் கொள்வேன். அந்த மாதிரிப் படித்தேன். உங்கள் தொடர் நின்றதும் அந்தப் பத்திரிகையைப் படிப்பதை நிறுத்தி விட்டேன். உங்களை நான் நன்றாக அறிவேன். என் மகனுக்கும் உங்களை நன்றாகத் தெரியும்.
இருந்தாலுமே எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. 150 வீடு பார்த்தும் ஒரு பிராமணர் கூட அசைவம் ஓகே என்று சொல்லவில்லை. சொன்ன ஓரிருவர் 50000 ரூ. பெறுமானமான வீட்டுக்கு ஒரு லட்சம் கேட்டார்கள்.
கடைசியில்தான் விஷயம் புரிந்தது. அம்மணி மும்பையில் பிறந்து வளர்ந்தவராம். திருமணம் ஆனபிறகுதான் சென்னை வாசமாம். ஆக, சென்னை அவர் மீது தன் கசத்தை ஏற்றவில்லை.
அடையாறில் சவேரா ப்ரூ ரூம் மாதிரி ஒரு சந்திக்கும் இடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஒருமுறை அனந்த பத்மநாபரையும் சந்திக்க வேண்டும். பக்கம்தானே, உங்களுக்கான என் பணி கெடாது.