என் மைத்துனர் – அவந்திகாவின் தமையன் – தன் இரண்டு தங்கைகளோடு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். அவர் மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டார். மைத்துனர் மறுமணம் செய்து கொள்ளாமல் தன் ஒரே மகளை வளர்த்தார். இப்போது அவர் வயது அறுபத்தைந்து. அறுபது வயதிலும் இருபது வயது இளைஞனைப் போல் ஓடியாடிக்கொண்டிருப்பார். மது, மாது, சூது, புகை என்று எந்தப் பழக்கமும் இல்லை. வீடு, வீட்டிலிருந்து அலுவலகம், அலுவலகத்திலிருந்து வீடு. இதுதான் அவர் வாழ்க்கை. நண்பர்களுடன் வெளியே போய் சுற்றுவது கூட இல்லை. குணத்தில் உத்தமன். ஆட்டோ டிரைவரைக் கூட சார் என்றும், வாங்க போங்க என்றும்தான் அழைப்பார். என்னையும் சார் தான்.
அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, கிட்டத்தட்ட மரணத்தைத் தொட்டு மீண்டார். பிறகு அவர் உடல்நிலை பழையபடி வரவே இல்லை. ஒரு வருட காலம் அவரால் ஒரு வார்த்தை கூடப் பேச வரவில்லை. இப்போது பார்க்க தொண்ணூறு வயது போல் தோற்றம்.
உங்களுக்குத்தான் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லையே, உங்களுக்கு எப்படி ப்ரெய்ன் ஹேமராஜ் வந்தது என்றேன்.
ஃபேமிலி என்றார்.
ஒரே வார்த்தைதான்.
கூட இருந்தவர்கள் எல்லோருமே (மகளைத் தவிர) பயங்கரவாதிகள்.
எப்படி என்று சொல்கிறேன். அந்த பயங்கரவாதிகளை விட அவந்திகா ஆயிரம் மடங்கு தேவலாம். ஆனாலும் பயங்கரம் பயங்கரம்தானே?
என் மகனின் குடும்பம் எங்களோடு வசித்தபோது ஒருநாள் – அப்போது அவன் வீட்டிலிருந்தபடியே வேலை செய்துகொண்டிருந்தான் – அர்பன் க்ளாப்ஸ் மூலமாக ஏதோ மின்சார வேலை செய்யச் செய்தான். அதில் அர்பன் க்ளாப்ஸ் நிறுவனம் ஐந்தாயிரம் ரூபாய் அதிகம் வாங்கி விட்டது என்று அவனைக் குற்றம் சாட்டினாள் அவந்திகா. ”ஐந்தாயிரம் ரூபாயை நீ ஏமாந்து விட்டாய். லோக்கல் எலெக்ட்ரீஷியனைக் கூப்பிட்டிருந்தால் இந்த அஞ்சாயிரம் மிச்சமாகியிருக்கும்.”
இதையே திருப்பித் திருப்பி சுமார் நூறு முறை சொல்லிக்கொண்டிருந்தாள். தாங்க முடியாமல் என் மகன் தன்னுடைய இரண்டு லட்சம் ரூபாய் பெறுமானமான கைபேசியை தரையில் அடித்து சுக்கு நூறாக உடைத்து விட்டான். மறுநாளே போய் இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து இன்னொரு ஃபோன் வாங்கி வந்தான்.
அப்போது அவன் பொதுவாகச் சொன்னது. நான் என் நிறுவனத்துக்காக கோடிக்கணக்கான டாலர் பெறுமானமான விஷயத்தைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஐந்தாயிரம் ரூபாய் பற்றிப் பேசி என் மண்டையில் ஆயிரம் தேளை புகுத்தி விட்டீர்கள்.
இதேபோல் நான் ஒருமுறை என் மடிக்கணினியை உடைத்திருக்கிறேன். நீங்கள் நினைப்பீர்கள், ஒரு ஞானி எப்படி இப்படிக் கோபப்படலாம் என்று. வாரம் மூன்று முறை இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்படும். ஆனால் நான் இந்த முப்பது ஆண்டுகளில் இரண்டு முறைதான் இப்படி உடைத்திருக்கிறேன். அப்படி உடைத்த இன்னொரு வஸ்து, ஆள் உயர பெடஸ்டல் ஃபேன். ஒரு ஆணி கூட மிஞ்சவில்லை. பத்து முறை தரையில் போட்டு உடைத்தேன். இல்லாவிட்டால் என் மூளையிலும் ரத்தம் கசிந்திருக்கும்.
முந்தாநாள் இரவு நீண்ட நேரம் படித்துக்கொண்டிருந்த்தால் நேற்று காலை மிகவும் தாமதமாகவே எழுந்தேன். தாமதம் என்றால் ஆறரைக்கு. எழுந்து குளிர்ப்பதனப் பெட்டியில் உறைந்த நிலையில் இருக்கும் கோழிக்கறியை எடுத்து ஊற வைத்தேன். எட்டு மணிக்கு நடைப் பயிற்சி முடிந்து வீட்டுக்கு வரும்போது கறி தளர்ந்திருக்கும். அதில் கொஞ்சம் எடுத்து பச்சையாக என் பூனைகளுக்குக் கொடுத்து விட்டு மீதியை தரைத்தளத்தில் உள்ள பூனைகளுக்காக அவிக்க வேண்டும். என் பூனைகள் அவித்த கறி உண்ணாது. அதிலும் பத்து பூனைகளில் நாலு பூனைகள்தான் கோழிக்கறி சாப்பிடும். மற்றவை தொடாது.
அடுத்த வேலை, எல்லா பூனைகளுக்கும் உணவு கலந்து கொடுப்பது.
அடுத்த வேலை, சில ஒழுங்கீனப் பூனைகள் மண்ணில் மலம் கழிக்காமல் மண் கூடைக்கு வெளியே போயிருக்கும். அதை சுத்தப்படுத்த வேண்டும். ஏழு மணி. அதற்குப் பிறகு பால் காய்ச்ச வேண்டும். பல் துலக்க வேண்டும். காஃபிக்கு டிகாக்ஷன் போட வேண்டும். காஃபி போட்டுக் குடிக்க வேண்டும். ஆறரைக்கு எழுந்தால் ஏழரைக்குத்தான் மொட்டை மாடிக்கு நடைப்பயிற்சிக்குப் போக முடியும். ஆறு என்றால் ஏழு. பொதுவாக ஐந்தரைக்கு எழுந்து ஆறரைக்கு மேலே போவதுதான் என் வழக்கம்.
நேற்று எட்டே காலுக்குக் கீழே இறங்கி, தளர்ந்திருந்த கோழிக்கறியை பூனைகளுக்குக் கொடுத்தேன். எட்டரை. மீதிக் கறியை அடுப்பில் ஏற்றினேன்.
மண்ணில் மலம் கழித்திருந்ததை எல்லாம் சுத்தம் செய்தேன். அது ஒரு பதினைந்து நிமிட வேலை. ஒன்பது. எனக்கு எட்டரையிலிருந்தே பசி கொல்ல ஆரம்பித்து விட்டது. சமையலறைக்கு வந்து முதல் நாள் வைத்த சாம்பார், ரசம் எல்லாம் மிகக் குறைவான சூட்டில் வைத்து சுட வைத்தேன். அதிக சூட்டில் வைத்தால் அடிப் பிடித்து விடும். சாப்பிடவே முடியாது. நாறும்.
அடுத்து, முதல் நாள் மிச்சமிருந்த சோற்றை எடுத்து மையப் பிசைந்து அதில் நீர் விட்டு அடுப்பில் ஏற்றினேன். மிகக் குறைவான சூடு அவசியம். இல்லாவிட்டால் பாத்திரத்தோடு அடிப்பிடித்து விடும். அதில் ஜீரகம் போட்டு, மிளகைத் தட்டிப் போட்டு – மிளகைத் தட்டும்போது சத்தமே எழக் கூடாது, அவந்திகா எழுந்து விடுவாள் – பூண்டு ஒரு பத்து பல் தோல் உரித்து, தட்டி – சத்தம் கேட்கக் கூடாது – எல்லாவற்றையும் கஞ்சியில் போட வேண்டும்.
இருபது நிமிடத்தில் கஞ்சி தயார். அப்புறம்தான் எனக்கு இட்லி போட வேண்டும். எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்ததுமே இட்லி மாவை குளிர்ப்பதனப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியே வைத்து விட வேண்டும். இல்லாவிட்டால் சில்லென்ற மாவில் இட்லி போட்டால் இட்லி கல் மாதிரி ஆகி விடும்.
மூன்று அடுப்பும் எரிந்து கொண்டிருந்தது. ஒன்றில் இட்லி. ஒன்றில் கஞ்சி. ஒன்றில் நேற்றைய சாம்பார். சமையலறையில் இருக்கும் மின்விசிறியைப் போட முடியாது. தீ அலையும். சமையலறையில் இருக்கும் ஜன்னலைத் திறக்க முடியாது. பூனைகள் குதித்து வெளியே ஓடி விடும். ஓடினால் அவைகளால் உயிர்வாழ முடியாது. அவைகளுக்கு வெளி வாழ்க்கை பழக்கம் இல்லை.
ரெண்டு மூன்று லிட்டர் வியர்வை வெளியாகியிருக்கும் எனக்கு. உடலே பற்றி எரிந்தது. வேஷ்டி தொப்பல் தொப்பலாகி விட்டது.
பத்து மணிக்கு கொலைப்பசியோடு நான் இட்லி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அவந்திகா எழுந்து வந்தாள். தூங்குவதற்கு மூன்று மணி ஆகி விட்டதப்பா, தூக்கமே வரவில்லை.
எப்போதும் ஒன்பதுக்கு எழுந்து விடுவாள். நேற்று பத்து.
வந்தவள் நேராக என் நூலக அறைக்குப் போனாள். வீடு மாற்ற வேண்டும் இல்லையா? அதற்கு என் புத்தகங்களை அடுக்கிக் கட்ட வேண்டும். அதற்கு என் புத்தகங்கள் தூசி இல்லாமல் இருக்க வேண்டும். பத்து பூனைகள் இருக்கும் வீட்டில் புத்தகங்களில் பூனை முடி படர்ந்திருக்கும்தானே?
”உனக்கு சொன்னால் கோபம் வருகிறது. நான் சுத்தம் பண்ணித் தருகிறேன் என்கிறேன். அதற்கு புத்தகங்கள் ஒரே வரிசையில்தானே இருக்க வேண்டும்? இப்படி இரண்டு மூன்று வரிசையில் தாறுமாறாக இருந்தால் எப்படி சுத்தப்படுத்துவது?”
இந்த வார்த்தைகளை வேறு வேறு த்வனிகளில் வேறு வேறு குரல் ஒலிகளில் பத்தரை மணியிலிருந்து பதினொன்றரை வரை சொல்லிக்கொண்டிருந்தாள்.
நான் என் வீட்டில் காது கேளாதவனாகவும், வாய் பேசாதவனாகவும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கோபமே வராது.
அந்த ஒரு மணி நேர ஓத்தாம் பாட்டையும் சிவனே என்றுதான் கேட்டுக்கொண்டிருந்தேன்.
எனக்கு பதில் இருக்கிறது. இந்த உலகத்திலேயே புத்தகங்களை ஒழுங்காக வைத்திருக்கும் ஒரே எழுத்தாளன் நான்தான். புத்தகங்கள் சேர்ந்து கொண்டே இருந்தால் அதை எங்கே வைப்பது? கோடிக்கணக்கில் பணமும் பணியாளர்களும் இருந்தால் என் புத்தகங்களும் பூ மாதிரி இருக்கும். எனக்கு வீட்டு வேலையிலேயே எட்டு மணி நேரம் போய் விடுகிறது என்கிற போது மீதி நேரத்தில் நான் எப்படி புத்தகங்களை அடுக்குவது? அடுக்கினால் எழுதுவதை அறவே நிறுத்த வேண்டியிருக்கும்.
எதையும் சொல்ல மாட்டேன். சொன்னால் வாக்குவாதம். ஃபோன், பேன் எல்லாம் உடையும். அதை விட வாக்குவாதம் செய்தால் மூச்சு விடுவது அதிகமாகும். சுவாசம் அதிகமானால் ஆயுள் குறையும். எனவே என் மந்திரம், சும்மா இரு, சொல் அற. இங்கே சும்மா இந்தக் கட்டுரைக்காக இப்படி நாகரீகமாகச் சொல்கிறேன். நாலு வார்த்தைகள் அல்ல; இரண்டே வார்த்தைகள்தான் என் மந்திரம். அதை மனசுக்குள் சொல்லிக் கொள்வேன். என்ன மந்திரம் என்பதை அன்பு நாவலில் எழுதியிருக்கிறேன்.
ஆக, ஆண்கள் ஐம்பதிலிருந்து அறுபதுக்குள் மாரடைப்பில் சாவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன.
ஒன்று, குடும்பத்தால் ஏற்படும் மன அழுத்தம். மனைவியால் பிரச்சினை இல்லாவிட்டால் பிள்ளைகள். இல்லாவிட்டால் தொழில்.
இதை நான் பொதுவாகச் சொல்கிறேன். அந்திமழை இளங்கோவனுக்குக் குடும்பத்தால் மன அழுத்தம் என்று சொல்லவில்லை.
இளங்கோவனுக்கு ஏற்பட்ட அகால மரணத்துக்கு அவரது தொழிலால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்பது என் யூகம். குடும்பம் நல்லபடியாக அமைந்தால், தொழில் வேலையைக் காட்டும். இத்தனைக்கும் அவர் மிகவும் வெற்றிகரமான தொழில் அதிபர்தான். ஆனால் மாரடைப்பு என்ற விஷயத்தில் வெற்றி தோல்வியெல்லாம் முக்கியமில்லை. மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறீர்களா என்பதே உயிர் வாழ்தலுக்கான அடிப்படை.
இன்னொன்று, உணவு. தமிழ்நாட்டில் சைவ உணவகங்களில் கொடுக்கப்படும் உணவு விஷம். அசைவம் ஓரளவு பரவாயில்லை. அதிலும் கோழிக்கறி சாப்பிடக் கூடாது. நான் பொதுவாக மீன் உணவு மட்டுமே சாப்பிடுகிறேன்.
மூன்றாவது காரணம்தான் மூன்றிலுமே மிகவும் முக்கியமானது. கலாச்சாரம். எனக்கு இளங்கோவனைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர் மது அருந்தும் பழக்கம் உள்ளவரா இல்லையா என்று நான் அறியேன். மது அருந்தும் பழக்கம் இல்லையென்றால், ஐம்பதிலிருந்து அறுபதுக்குள் மாரடைப்பு வர அதிக சாத்தியம் உண்டு. நான் டாஸ்மாக் மதுவைச் சொல்லவில்லை. டாஸ்மாக் சரக்கு சாப்பிட்டால் ஐம்பதிலேயே மாரடைப்பு நிச்சயம். இத்தனை பச்சையாக சொல்லாவிட்டாலும், எங்கள் மதுவைக் குடித்தால் பரலோகம் நிச்சயம் என்று அதை விற்கும் அரசாங்கமே தெரிவிக்கிறது.
ஜப்பானியர்தான் மனித குலத்தில் அதிக மன அழுத்தத்தில் வாழ்பவர்கள். ஆனால் அவர்களின் ஆயுள் தொண்ணூற்றைந்துக்கு மேல். ஆரோக்கியத்திலும் குறைச்சலே இல்லை. காரணம் என்ன? கலாச்சாரம். அங்கே குடிப்பது என்பது சமூகக் குற்றம் இல்லை. அது ஒரு உணவு. அவ்வளவுதான். அதிலும் இந்த உலகத்திலேயே ஆரோக்கியமான மது, ஜப்பானியரின் சாக்கே. (சாராயத்தைப் போல் distillation and fermentation முறையில் அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவது.)
வாரத்தில் ஐந்து நாள்கள் மாட்டைப் போல் உழைத்து விட்டு சனி ஞாயிறுகளில் பேய் போல் சாக்கேயைக் குடித்துத் தங்கள் மன அழுத்தத்திலிருந்து வெளியேறுகிறார்கள் ஜப்பானியர்.
இங்கே தமிழ்நாட்டில் அந்த வசதி இல்லை. இங்கே சாக்கே போன்ற நல்ல மதுவும் இல்லை. இருந்த கள்ளையும் தடை செய்து விட்ட்து அரசு. மற்றபடி கிடைப்பது டாஸ்மாக். அதே டாஸ்மாக்கில்தான் ஃப்ரெஞ்ச் வைனும் சீலே வைனும் கிடைக்கிறது. ஒருத்தர் கூட அதை வாங்குவதில்லை. போதை கிடையாது ஒரு காரணம். விலை அதிகம். மேலும், தமிழ்நாட்டில் மது அருந்துபவனின் பெயர் குடிகாரன். மிதமாக அருந்துபவனே இங்கே குற்ற உணர்ச்சியில் அழுந்துகிறான். மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்வதற்காகக் குடிப்பவன், குடிகாரன் என்று சமூகம் கொடுக்கும் பட்டப் பெயரால் இன்னும் அதிக மன அழுத்தத்தில் ஆழ்கிறான். கூடவே டாஸ்மாக் சரக்கு அவனைக் கடும் போதையில் வீழ்த்துகிறது. கீழ் வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்றால் வீட்டுக்குப் போய் மனைவியை அடிக்கிறான்.
ஆக, குடி மீதான சமூக விலக்கு என்ற கலாச்சாரம்தான் தமிழர்களை ஐம்பது வயதிலேயே கொன்று கொண்டிருக்கிறது. என்னைத் தவிர தமிழ்நாட்டில் யாராவது “நான் மது அருந்துகிறேன்” என்று தைரியமாகச் சொல்லியிருக்கிறார்களா? சொல்ல முடியாது. குடிகாரன் என்ற பட்டம் கிடைக்கும்.
ஒரு உதாரணம் தருகிறேன். நாங்கள் 150 வீடு பார்த்தோம். அதில் இரண்டு அருமையான வீடுகளை அவந்திகாவே நிராகரித்தாள். இரண்டுமே நகரின் மையமான மைலாப்பூரிலேயே இருந்தன. ஒரு வீட்டின் உரிமையாளர் கிறித்தவர். இந்த 150 உரிமையாளர்களில் மூன்று பேரை மட்டுமே நாங்கள் மனிதர்கள் என்ற பெயருக்கு தகுந்தவர்களாகப் பார்த்தோம். அந்த மூன்றில் ஒருவர்தான் இந்தக் கிறித்தவர். மிகவும் அன்பாகப் பேசினார். வீட்டில் ஒரு பூனையும் இருந்தது. எங்கள் பூனைகளுக்கும் தடை சொல்லவில்லை. கிறித்தவர் என்பதால் சைவ அசைவப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர் வீட்டில் ஒரு பார் வைத்திருந்தார். நீங்கள் குடிப்பீர்களா, என்ன குடிப்பீர்கள் என்று கேட்டார். நான் வைன் குடித்துக்கொண்டிருந்தேன், இப்போது நிறுத்தி விட்டேன் என்றேன். (பக்கத்தில் அவந்திகா).
நான் ஸ்காட்ச் பிரியன் என்றார் அவர். தன் பாரையும் எனக்குக் காண்பித்தார். உலகில் உள்ள பல மதுவகைகள் அங்கே இருந்தன.
வேண்டாம் என்று அவந்திகா மறுத்ததன் காரணம், அவர் குடிக்கிறார் என்பது.
இன்னொருவர், மேல்தட்டு மலையாளி. படு ஜாலியான பேர்வழி. அறுபது வயதிலும் இருபது போல் இருந்தார். இருபது போலவே பேசினார். வீட்டில் நான்கு பூனைகள் இருந்தன. தீவிர அசைவம். அவரும் குடி பற்றிப் பேசினார். குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விவரித்தார். எல்லாம் வெளிநாட்டு மது.
அந்த வீடும் காலி.
ஆக, இரண்டு நல்ல வீடுகள் கலாச்சாரத் தடையினால் கைவிட்டுப் போயிற்று.
குடிகார்ர்களின் வீட்டுக்குப் போக்க் கூடாது. அவந்திகா.
ஆக, குடும்பம் அல்லது அலுவலகம் தரும் மன அழுத்தம், சைவ உணவு விடுதிகள், மது அருந்துதல் பற்றிய சமூகத் தடை ஆகிய மூன்றுதான் தமிழர்களை ஐம்பது வயதிலேயே கொன்று கொண்டிருக்கிறது. குஷ்வந்த் சிங் நூறு வயது வரை குடித்துக்கொண்டிருந்தார் என்பதை நினைவு கூருங்கள். சாகும் அன்றைக்கு முதல் நாள் இரவு கூட இரண்டு பெக் விஸ்கி அருந்தி விட்டுத்தான் படுக்கைக்குப் போனார். நாற்பது வயதில் நான்கு பெக். ஐம்பதிலிருந்து தொண்ணூறு வரை மூன்று. அப்புறம் இரண்டு. ஆனால் அவர் உடல் தளரும் வரை தினமும் ஒன்றிரண்டு மணி நேரம் நீச்சல் அடிக்கும் பழக்கத்தையும் கொண்டிருந்தார்.
***
இதையெல்லாம் நான் இளங்கோவனின் நினைவேந்தல் கூட்டத்தில் பேச முடியுமா? பெரிய கலவரம் ஆகி விடும் என்று பயந்தேன். எத்தனையோ இலக்கியக் கூட்டங்களில் என் பேச்சினால் கலவரம் ஆகியிருக்கிறது. ஆனால் ஒரு நினைவேந்தல் கூட்டத்தில் அப்படி ஆகி விடக் கூடாது என்றுதான் நேற்று நான் இளங்கோவனின் நினைவேந்தல் கூட்டத்துக்குப் போயும், அங்கே பேசாமல் திரும்பி வந்து விட்டேன்.
அந்தக் கதையை நாளை தொடர்கிறேன். இப்போது இரவு பதினொன்று ஆகிறது. உறங்க வேண்டும்.