அந்திமழை இளங்கோவனின் அகால மரணம் சொல்லும் செய்தி என்ன? – 2

ஒரு வாரத்துக்கு முன்புதான் அவந்திகா என்னிடம் ஒரு முக்கிய சமாச்சாரத்துக்காக சூடம் வைத்து சத்தியம் வாங்கிக் கொண்டாள்.       வீடு மாற்றி, புது வீட்டுக்குப் போய் அங்கே எல்லா பொருட்களையும் அந்தந்த இடங்களில் வைத்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் வரை நீ ஒரு கூட்டத்துக்கும், ஒரு ஊருக்கும் போகக் கூடாது.  நானுமே அப்படித்தான் முடிவு எடுத்திருந்ததால் உடனடியாக சத்தியம் கொடுத்தேன்.  சத்தியம் கொடுத்த மறுநாள்தான் அந்திமழை இளங்கோவனின் அகால மரணச் செய்தி வந்தது.  அந்திமழை அசோகன்தான் செய்தி அனுப்பினார்.  அதிர்ச்சி அளிக்கிறது என்ற பதிலோடு நிறுத்திக்கொண்டேன்.  அதிர்ச்சியை விட கோபம்தான் வந்தது.  சமூகச் செயல்பாடுகளில் தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள் தம் உடம்பையும் ஆரோக்கியத்தையும் பேண வேண்டாமா?

குறிப்பாக இந்தியர்கள் யாருமே தங்களுக்காக வாழ்வதில்லை.  தம் மனைவிக்காகவும் பிள்ளை குட்டிகளுக்காகவும் அல்லது தாங்கள் சார்ந்த நிறுவனத்துக்காகவும்தான் வாழ்கிறார்கள்.  நானுமே எழுத்துக்காகத்தான் வாழ்கிறேன்.  ஆனால் எதை வைத்து சித்திரம் எழுதுவது?  என் உடம்பை வைத்துத்தானே? அதன் காரணமாக என் உடம்பை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கிறேன்.

உடம்பு என்றால் என்ன? 

உடம்பு ஒரு வாஷ்பேசின் மாதிரி.  அதை நீங்கள் சுத்தப்படுத்தாவிட்டால் எப்படி இருக்கும்?  அப்படித்தான் ஆகி விடுகிறது உடம்பும்.  முதல் மாரடைப்பிலேயே ஆள் காலி. 

நான் எத்தனையோ பக்கங்கள் இது பற்றி எழுதித் தொலைத்து விட்டேன்.  யாரும் படிப்பதில்லை.  படித்தாலும் பின்பற்றுவதில்லை.  ஐயா, என்னால் சென்ற ஆண்டு வரை மாலை நேரத்துக்குப் பிறகு நூறு மீட்டர் வரை நடக்க முடியாமல் இருந்தது.  நண்பர்கள் என் குடியிருப்பின் கேட் வரை வந்து என்னை விட்டுவிட்டுப் போவார்கள்.  பெரிய கார் என்பதால் உள்ளே நுழைவது சற்று கடினம்.  கேட்டிலிருந்து வீட்டு வாசல் வரை 150 மீட்டர் இருக்கும்.  அதைக் கடக்கும்போது நெஞ்சு வலிக்கும்.  காலையில் பத்து கிலோமீட்டர் நடந்தாலும் வலிக்காது.  குளிக்கும்போது நெஞ்சு வலிக்கும்.  பல அன்பர்கள் குளிக்கும்போது மாரடைப்பு வந்து சாவது இதனால்தான்.  அவர்கள் செத்து விட்டார்கள் என்பதே சில மணி நேரம் கழித்துத்தான் தெரியும்.

கடவுள் என்னிடம் சித்த மருத்துவர் பாஸ்கரனை அனுப்பினார்.  மருதம்பட்டைப் பொடி கொடுத்தார் பாஸ்கரன்.  தினமும் வெந்நீரில் கலந்து குடிக்கிறேன்.  அலோபதி மருந்துகளை நிறுத்தவில்லை.  அதையும் எடுத்துக் கொள்கிறேன்.  இப்போது மாலையில் பத்து கிலோமீட்டர் நடந்தாலும் நெஞ்சு வலிப்பதில்லை.  இந்த மருத்துவம் எனக்கே தெரியும்.  சித்த மருத்துவக் கடைகளிலும் மருதம்பட்டைப் பொடி கிடைக்கிறது.  ஆனால் பாஸ்கரன் அதில் கொஞ்சம் முத்து பஸ்பத்தையும் அதேபோல் வேறு சிலதையும் கலந்து கொடுக்கிறார்.  (பாஸ்கரனின் தொடர்பு எண்: 78260 57789)

நான் பாஸ்கரனின் முகவர் அல்ல.  உங்கள் ஊரில் ஏகப்பட்ட சித்த மருத்துவர்கள் இருக்கலாம்.  சித்த மருத்துவத்தை உங்களைத் தற்காத்துக் கொள்ளும் ஏற்பாடாகவே நீங்கள் பின்பற்றி வரலாம்.  இதுபோல் நூற்றுக்கணக்கான தற்காப்பு முறைகள் உள்ளன. 

இத்தனை ஏற்பாடுகள் இருக்கும்போது ஐம்பத்து நான்கு வயதில் மேலே கிளம்புவதெல்லாம் அராஜகம். 

முதலில் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி என்று யோசியுங்கள்.  எல்லோரும் போய் டாஸ்மாக் வாசலில் வரிசையில் நில்லுங்கள் என்று நான் சொல்லவில்லை.  டாஸ்மாக்கில் விஷமும் கிடைக்கிறது.  அமிர்தமும் கிடைக்கிறது.

இல்லை, மதுவே வேண்டாம் என்றால், யோகா இருக்கிறது.  யோகா செய்தால் தொண்ணூறு வயது குறைந்த பட்சம். 

சரி, யோகாவுக்கு உடம்பு வணங்கவில்லையா?  உட்கார்ந்த இடத்தில் செய்வதற்குப் பிராணாயாமம் இருக்கிறது.  வெறும் நாற்பது நிமிடம்தான்.  உட்கார்ந்த இடத்தில் ஒரு நாற்பது நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்வதற்கு உங்களைத் தடுப்பது யார்?

குறைந்த பட்சம் என்னை வாசிப்பவர்களாவது தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.  யோகா குரு சௌந்தரை இதற்கு நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.  99529 65505. 

நீங்கள் என்னை ஹிந்துத்துவா என்று ஏசினாலும் பரவாயில்லை, இந்திய யோகாவும் சித்த மருத்துவமும்தான் ஒரு மனிதன் நோயே இல்லாமல் ஆரோக்கியமாக நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு வழி சொல்லிக்கொடுக்கின்றன.  இதில் ஒன்றையாவது பற்றிக் கொண்டு அற்ப ஆயுளைத் தவிருங்கள். 

இந்தியர்கள் ஐம்பது வயதிலேயே மாரடைப்பில் மரணம் அடைவதற்குக் காரணமாக இருப்பது, வேலையினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் குடும்பம்.  வேலை என்பதாக இருந்தால், உங்கள் உயிருக்காக நாற்பது நிமிடங்களை நீங்கள் ஒதுக்கியே ஆக வேண்டும்.  குடும்பம் உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உங்களுக்கு நாற்பது நிமிடம் தரவில்லையானால் குடும்பத்தின் மீது மலத்தைக் கரைத்து ஊற்றுங்கள். 

பிரச்சினை என்னவென்றால், இந்தியர்களுக்கு – குறிப்பாகத் தமிழர்களுக்கு – சுய அபிமானம் இல்லை.  குடும்பத்துக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ உழைத்தே சாகிறார்கள்.  இந்த மனோபாவத்தை விட்டால் ஒழிய தமிழர்களுக்கு விமோசனமே கிடையாது.

அந்திமழை இளங்கோவனின் அகால மரணம் பற்றி நான் நிறையவே யோசித்தேன்.  இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமனும் முதல் மாரடைப்பிலேயே காலமானார்.  அப்போது அவர் வயது 56.  என்னை வெகுவாக பாதித்த மரணம் அது. எப்போதும் இருபத்தைந்து வாலிபனைப் போல் துள்ளிக்கொண்டே இருப்பார்.  எப்போதும் சிரிப்பும் பகடியும்தான்.  இப்படி ஆயிரக்கணக்கில் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.  ஆனால் உயிரோடு இருக்கும் யாரையும் இந்தச் செய்திகள் சிந்திக்க வைப்பதாகத் தெரியவில்லை.

நான் பொலிவியாவில் குஸ்கோ என்ற மலைநகரில் தங்கிய போது (உயரம் 11,150 அடி) இரவில் மூச்சே விட முடியவில்லை.  இரவு முழுவதும் உறங்க முடியாமல் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியால் மூச்சு விட்டுக்கொண்டு, அன்று இரவே சீலேவுக்கு டிக்கட் போட்டு காலையில் சீலே கிளம்பி விட்டேன்.  ஓட்டலிலிருந்து காலை ஒன்பது மணிக்கு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கிளம்பியபோது அந்தக் காலை நேர வெய்யிலை அனுபவித்துக்கொண்டு ஜெர்மன் கிழவர்கள் – எல்லோருக்கும் வயது எண்பதிலிருந்து தொண்ணூறு இருக்கும் – கையில் பியரும் வாயில் சுருட்டுமாக சட்டையில்லாமல் அமர்ந்திருந்ததைக் கண்டு மனம் நொந்தேன்.

***

இப்படி ஐம்பது வயதில் முதல் மாரடைப்பிலேயே மேலே கிளம்புபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பது ஏன் என்றும் யோசித்தேன்.  பெரும்பாலும் என்று சொல்வது கூடத் தவறு.  எல்லோரும் ஆண்களே.  பெண்கள் அப்படி மரணம் கண்டு இறந்ததை நான் கேள்விப்பட்டதே இல்லை. 

காரணம், பெண்கள் குடும்பத்தில் பொறுப்பை சுமப்பதில்லை.  பாசமாக இருப்பார்கள்.  குழந்தைகளுக்காக எந்த தியாகத்தையும் செய்வார்கள்.  ஆனால் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பது கணவனாக இருப்பான்.  வேலைக்குப் போவது, பணம் ஈட்டுவது போன்றவற்றைச் சொல்லவில்லை.  பொறுப்பை ஏற்பது என்பது வேறு.

இந்தப் பொறுப்பு என்ற விஷயம் ஆண்களை மட்டுமே சுமையாக அழுத்துவதால் அவனுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.   உதாரணமாக, சமூகப் போராட்டங்களில் கூட பெண்களின் பங்கேற்பு கம்மியாக இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம். 

இந்தக் கட்டுரை பெண்களுக்கு எதிரானது அல்ல.  ஆண்களின் அகால மரணத்துக்கான காரணங்களை அலசுகிறேன்.  அவ்வளவுதான்.  தவறாக இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.  விவாதியுங்கள்.

ஒரு உதாரணம் தருகிறேன்.  இந்தத் தளத்துக்கு சந்தா/நன்கொடை அனுப்புங்கள் என்று சொன்னதும் சுமார் நூறு பேர் முன்வந்து அனுப்பினார்கள்.  அதில் பத்து பேர்தான் பெண்கள்.  இதுதான் குடும்பத்திலும் நடக்கிறது.  ஓரிரு விதிவிலக்குகளை விட்டு விடுங்கள்.

என் உதாரணத்தையே தருகிறேன்.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவந்திகா ஒரு மழைநாளில் ஆதரவற்ற ஒரு நாய்க்குட்டியைக் கொண்டு வந்தாள்.  பத்து ஆண்டுகள் அதற்கு நான் உணவிட்டேன்.  பராமரித்தேன்.

பிறகு ஒரு லாப்ரடாரும், ஒரு க்ரேட் டேனும் வந்தன.  மாதம் இருபதாயிரம் ஆயிற்று.  என்னால் சமாளிக்கவே முடியவில்லை.  தெருத் தெருவாகப் பிச்சை எடுத்துத்தான் அவைகளுக்கு உணவிட்டேன். 

அந்த செலவையெல்லாம் சேர்த்திருந்தால் ஒன்றல்ல, பல வீடுகள் வாங்கியிருக்கலாம்.  இப்போது போல் லோல் பட்டிருக்க வேண்டாம். 

பத்தாண்டுகளுக்குப் பிறகு இரண்டும் இறந்தன.  அத்தோடு போயிருக்க வேண்டும் அல்லவா?

ஒருநாள் லக்கி என்ற பூனையைக் கொண்டு வந்தாள் என் மனைவி.  அதற்கு கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து விடலாம் என்றேன்.  இயற்கையை மாற்றக் கூடாது என்று சொல்லி மறுத்து விட்டாள்.  லக்கி நாலு குட்டிகள் போட்டது.  ஐந்துக்கும் Spaying and Neutering செய்து விடலாம் என்றேன்.  கேட்கவில்லை.  லக்கி அடுத்து ஐந்து குட்டிகள் போட்டது.  மொத்தம் பத்து.  அதற்கு மேல் வீட்டில் இடம் இல்லை.  பத்துக்கும் இனப் பெருக்கத் தடைக்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.  செலவு ஒரு லட்சம்.

பத்து பூனைகளோடு போயிற்றா?   தெருப் பூனைகளுக்கும் உணவு கொடுக்க ஆரம்பித்தாள் என் மனைவி.  வீட்டுப் பூனைகள் என்றால் இருபதாயிரத்தோடு போயிருக்கும்.  தெருப் பூனைகளும் சேர்ந்ததால் செலவு ஐம்பதாயிரத்தைத் தொட்டது.  அடுத்து எல்லா பூனைகளுக்கும் கோழிக்கறியும் கொடுக்க ஆரம்பித்தாள்.  செலவு அறுபதாயிரம் ஆயிற்று.

இதில் ஒரு பைசாவைக் கூட அவந்திகா கொடுப்பதில்லை.  ஏற்பதும் இல்லை.  இப்போது சொல்லுங்கள், யாருக்கு மாரடைப்பு வரும்?  கேட்டால் ”நீ தண்ணி அடிக்கிறாய், அதனால் மாரடைப்பு வந்தது” என்பாள்.  கணவனுக்கு வருமானமே இல்லை, மகனும் ஒரு மயிரையும் கொடுப்பதில்லை, உறவுகளோ இவனால் நமக்கு என்ன லாபம் என்று ரத்தம் உறிஞ்சும் அட்டைகளாகச் சுற்றி வருகின்றன –  இதில் இருபத்தைந்து பூனைகளுக்கு சாப்பாடு வாங்கிப் போடு, கோழிக் கறி வாங்கிப் போடு என்று எந்த மனைவியாவது சொல்வாளா?  சொல்வார்கள்.  சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  அதனால்தான் அவர்களுக்கு மாரடைப்பே வருவதில்லை. 

எல்லா விஷயங்களையும் இழுத்து விட்டுக் கொண்டு பொறுப்பு என்று வந்தால் கண்டும் காணாதது போல் போய் விடுவது இக்காலத்துப் பெண்டிரின் இயல்பாக உள்ளது.  அதனால்தான் அவர்கள் மாரடைப்பிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள்.  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இப்படி இல்லை.  பெண்களும் சரிசமமாகக் குடும்பத்தில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  அதனால்தான் ஆண்கள் அம்பதிலேயே மாரடைப்பு வந்து சாகவில்லை.

இக்காலத்தில் குடும்பத்தில் ஒரு பிரச்சினை என்று வந்தால் பெண்கள் அந்தப் பிரச்சினையை எதிர்கொள்வது இல்லை.  அப்படியே ஒதுங்கி விடுகிறார்கள்.

இன்னொரு உதாரணம்.  சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில் ஒரு பையன் தன் தங்கையை வன்கலவி செய்து கொன்று விட்டான்.  அந்தக் கொலையை போலீஸில் சொல்லாமல் மறைத்தது அந்தப் பையனின் அம்மாவும் மூத்த சகோதரியும்.  அவர்கள் போலீஸில் அல்லவா தெரிவித்திருக்க வேண்டும்?  நடக்காது.  பிரச்சினை வந்தால், எதிர்கொள்வதில்லை. 

என் நண்பர் ஒருவரை மாதம் ஒருமுறை சந்திப்பேன்.  அப்போது அவருக்கு வரும் ஃபோன் உரையாடல்களைக் கேட்டாலே எனக்கு மாரடைப்பு வரும்போல் இருக்கும்.  மனைவியும் அலுவலக மேலாளரும்தான் பேசுவார்கள்.  மேலாளரும் பெண்தான்.  நீ அந்தப் பக்கம் குத்து, நான் இந்தப் பக்கம் குத்துகிறேன் என்று சொல்லி மாற்றி மாற்றிக் குத்துகிறார்கள்.  அதனால் என் நண்பர் இன்னும் ஆறு மாதத்தில் குடும்பத்தையும் அலுவலகத்தையும் விட்டு விலகுவதாக முடிவெடுத்திருக்கிறார்.  இல்லாவிட்டால் அவரை அலுவலகமும் வீடும் கொன்று விடும். 

என் விஷயத்தில் நிலைமை இன்னும் கொடுமை.  இருபத்து நான்கு மணி நேரமும் எழுத்தில் செயல்பட வேண்டிய ஒரு ஆளை, வீட்டில் பணிப்பெண் வைத்துக் கொள்ளாமல் எட்டு மணி நேரம் எடுபிடி வேலை செய்ய வைப்பது சமூக விரோதமான காரியம் இல்லையா? 

சரி, இத்தனை சித்ரவதைக்கு இடையிலும் நான் எப்படி சமாளிக்கிறேன் என்கிறீர்களா?  இரண்டெழுத்து மந்திரம்.  அது அன்பு நாவலில் உள்ளது. 

மட்டுமல்லாமல் நான் எப்போதும் தாமரை இலைத் தண்ணீர் மாதிரிதான் இருந்து கொண்டிருக்கிறேன்.  என்னை எதுவுமே பாதிப்பதில்லை.  இதற்கு நான் ஏற்கனவே ஒரு கதை சொல்லியிருக்கிறேன்.  திரும்பவும் சொல்ல வேண்டாம்.  அதை நினைவு கூருங்கள்.  நான் எழுதிக்கொண்டிருக்கும் அசோகா நாவலில் அசோகனிடம் அவன் தம்பி கேட்ட கேள்வியும், அதற்குப் பதிலாக அசோகன் செய்த ஒரு சோதனையும் பற்றிய கதை. 

பெண்களுக்கு ஏன் மாரடைப்பு வருவதில்லை என்று டாக்டர் ஸ்ரீராமைக் கேட்டேன்.  பெண்களின் estrogen அவர்களை மாரடைப்பிலிருந்து காப்பாற்றுகிறது என்றார். 

இன்னொரு குறிப்பும் சொன்னார்.  பெண்கள்தாம் அதிகம் தற்கொலைக்கு முயல்கிறார்களாம்.  ஆனால் முயற்சித் திருவினையாவதில்லை.  ஆண்களிடமோ தற்கொலை முயற்சி கம்மி.  ஆனால் முயற்சித் திருவினை ஆவது ஆண்களில் அதிகம். 

சரி, தொடங்கின இடத்துக்கே வருகிறேன்.  அந்திமழை இளங்கோவனின் நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடப்பதாக அந்திமழை அசோகன் தெரிவித்தார்.  வந்து பேசுமாறு அழைத்தார். 

வீட்டில் அனுமதி கிடைக்கவில்லை.  ”நான்தான் சொன்னேனே, எங்கேயும் போகக் கூடாது என்று.  சத்தியம் வேறு செய்திருக்கிறாய், ஞாபகம் இல்லையா?”

அசோகன் ஒரு பூனை-நாய் டாக்டரும் கூட.  நான் கூப்பிட்ட போதெல்லாம் வீட்டுக்கு வந்து பூனைகளுக்கு ஊசி போட்டு விட்டுப் போவார்.  நீண்ட தூரம் பயணம் செய்து வருவார்.  அதையெல்லாம் அவந்திகாவிடம் சொன்னேன்.  நன்றி மறப்பது நன்றல்ல என்றேன்.  எது பற்றியும் அவந்திகா கவலைப்படவில்லை. 

என்ன செய்வது என்று தெரியவில்லை.  பிறகு ஒரு கலவரம் செய்துதான் கிளம்பினேன். 

ஆனால் அங்கே போன பிறகுதான் தெரிந்தது, மேற்படி விஷயத்தையெல்லாம் அங்கே திரண்டிருந்த கூட்டத்தில் பேசினால் அடி விழும் என்று. 

அதனால் எதுவும் பேசாமலேயே வந்து விட்டேன். 

முற்றும்.