(ஒரு அறிவிப்பு: இனிமேல் இந்த நாவலின் அத்தியாயங்கள் நான்கு நாட்கள் மட்டுமே தளத்தில் இருக்கும். என் பாதுகாப்பைக் கருதி இந்த முடிவு. இந்த நேரத்தில் எனக்கு நீதிமன்றத்துக்கெல்லாம் செல்ல நேரம் இல்லை. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இந்த நாவலுக்கான சன்மானத்தை அனுப்பி வையுங்கள். தளத்தில் படிக்கத் தவறிவிட்டால் எனக்கு எழுதிக் கேளுங்கள். அனுப்பி வைக்கிறேன். charu.nivedita.india@gmail.com )
டாய்லட், பூனை, செடி என்று எதிலும் வேலை ஆகாத்தால் நாராயணன் நான்காவதாக ஒரு அஸ்திரத்தை எடுத்தான். பால்கனி. ”உங்கள் வீட்டு பால்கனியில் மராமத்து வேலை செய்து விட்டால் என் வீட்டில் ஒழுகாது.”
வழக்கம் போல் தினம்தினம் வீட்டு உரிமையாளருக்கும், குடியிருப்போர் சங்கத்துக்கும் மெஸேஜ் அனுப்பினான். நேரம் கெட்ட நேரத்தில் வைதேகியை அழைத்தான். மேனேஜர் கணேசனையும் தூது அனுப்பி வலியுறுத்தினான். அவன் வீட்டு பால்கனி சுவரும் பெருமாள் வீட்டு பால்கனி சுவரும் ஒன்று என்பதால் அதில் மராமத்து செய்தால் தன் வீட்டில் ஒழுகுவது நின்று விடும் என்றான்.
விஷயம் என்னவென்றால், பெருமாள் வீட்டு பால்கனியிலும் மேலேயிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டேதான் இருந்தது. பால்கனியைப் பயன்படுத்தவே முடியவில்லை.
இதற்குக் காரணம், நாராயணன் சொல்வது போல் மணி ப்ளாண்ட் இல்லை, நாராயணனேதான். அவன்தான் சில ஆண்டுகளுக்கு முன்னால் – பெருமாளும் வைதேகியும் அந்தக் குடியிருப்புக்கு வந்த புதிதில் கீழ்த்தளத்தில் இரண்டு ஷோம் ரூம்களை வாடகைக்கு விடுவதற்காக ஆறு மாத காலம் கட்டிட்த்தின் அடித்தளத்தையே ட்ரில் போட்டு நாசப்படுத்தினான்.
அப்போது பெருமாள் எழுதிய நாட்குறிப்புகளை அவன் என்னிடம் கொடுத்தான். அதை அப்படியே கீழே தருகிறேன்.
ஆகஸ்ட் 19, 2019
சட்டம் பயின்றவர்களிடம்தான் இந்த விஷயத்தைக் கேட்க வேண்டும். நான் குடியிருப்பது வணிக வளாகம் அல்ல. குடியிருப்புப் பகுதி. இங்கே தரைத் தளத்தில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருந்தது. இப்போது அதை எடுத்து விட்டார்கள். அங்கே இன்னொரு ஷோ ரூம் வருவதற்காக தினமும் காலை ஏழு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை டங்க் டங்க் என்று இடித்துக் கொண்டும், சுவரில் ட்ரில்லிங் மெஷின் கொண்டு துளைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். பத்து பிஹாரி தொழிலாளிகள். அவர்களுக்குத் தமிழ் ஒரு வார்த்தை தெரியவில்லை. மேலும் அவர்களிடம் சொல்லி என்ன பயன்? அந்த இடத்தின் முதலாளி என் பக்கத்து வீட்டுக்காரர் சூரிய நாராயணன். அவரிடம் சொன்னால் முறைக்கிறார். எப்போதும் என்னைப் பார்த்து வணக்கம் சொல்பவர் இப்போது வணக்கத்தை நிறுத்தி விட்டார். இப்போது என் கேள்வி என்னவென்றால், குடியிருப்புப் பகுதியில் கமர்ஷியல் காம்ப்ளெக்ஸ் வைக்கலாமா? வைத்தால் அங்கே குடியிருப்பவருக்கு இப்படிப்பட்ட துன்பத்தைக் கொடுக்கலாமா? இருபத்து நாலு மணி நேரமும் என் பின் மண்டையில் சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது என்று புலம்புகிறாள் வைதேகி. என்ன செய்யலாம்? சட்டம் என்ன சொல்கிறது? இன்னும் ஒரு மாதம் இந்த வேலை நடக்குமாம்.
***
ஆகஸ்ட் 24, 2019.
சாந்தோம் நெடுஞ்சாலையில் நான் வசிக்கும் பகுதி நொச்சிக்குப்பம், டுமீங் குப்பம், பட்டினப்பாக்கம் ஆகிய குப்பங்களுக்கு நடுவே இருப்பதால் இங்கே எந்தக் கடை வைத்தாலும் நஷ்டமாகி ஒரே ஆண்டில் அதைத் தூக்கி விடுகிறார்கள். முன்பு எங்கள் குடியிருப்பில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருந்தது. அது நட்டத்தில் படுத்து விட்டது. அந்தக் கடையை எடுப்பதற்காக பதினைந்து நாள் கீழ்த்தளத்தில் லேத்துப் பட்டறை மாதிரி சத்தம் கேட்டது. ஒரு நாளில் இருபது மணி நேரம் வேலை நடந்தது. இப்போது இங்கே வேறொரு ஷோ ரூம் வரப் போகிறது. அதற்காகக் கடந்த ஒரு மாதமாக லேத்துப் பட்டறை மாதிரி ட்ரில்லிங் வேலை நடக்கிறது. நான் பெரும் சிபாரிசுகளை வைத்து பெருமளவு போராடியதால் இப்போது இரவில் வேலை நடப்பதில்லை. ஆனால் பகல் ஒன்பது மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை ஆறு ஏழு பிஹாரி தொழிலாளர்கள் லேத்துப் பட்டறை மாதிரி ட்ரில்லிங் வேலை செய்கிறார்கள்.
நாராயணனின் அம்மா இந்த சத்தத்தினாலேயே பைத்தியம் பிடித்து மூன்று வாரங்களுக்கு முன்னால் இறந்து போனார்கள். யாரோ என் வீட்டுக்குள் புகுந்து தாக்குகிறார்கள், நான் மாடியிலிருந்து கீழே குதிக்கப் போகிறேன் என்று நாள் பூராவும் கத்துவார்கள். பிறகு ஒருநாள் இறந்து விட்டார். ஹார்ட் அட்டாக் என்று நாராயணன் சொன்னார். இந்த ட்ரில்லிங் சத்தத்தினால்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போதும் நாராயணன் ட்ரில்லிங் போடுவதை நிறுத்தவில்லை. அம்மா போனால் என்ன, ஆயா போனால் என்ன, பணம் முக்கியம். வைதேகி ஒருநாள் மகனை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு சென்ற போது பின்னால் வந்த கார் இடித்து கபாலத்தில் அடிபட்டதால் பெரும் சத்தம் கேட்டால் அவளுக்கு வலிப்பு வரும்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. இடையில் என்னுடைய சிசுருக்ஷையினால், கவனிப்பினால் வலிப்பு வராமலேயே இருந்தது. இப்போது இந்த ட்ரில்லிங் சத்தத்தினால் மீண்டும் வந்து விட்டது. செத்து விடுவேன் என்கிறாள். அவள் நிலை மோசமாவதை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். அம்மா வீட்டுக்குப் போ என்றேன். அம்மா வீட்டில் யாரும் இல்லை. மும்பையில் இருக்கும் எங்கள் மகன் மோகன் வீட்டுக்குப் போ என்றேன். அவன் அமெரிக்கா போயிருக்கிறான். எங்கள் மருமகளும் வெளியூர் போயிருக்கிறாள். ஆக, மகன் வீட்டில் யாரும் இல்லை.
போலீஸிடம் புகார் கொடுத்தேன். வந்தார்கள். ட்ரில்லிங் நிறுத்தப்பட்டது. ஆனால் போலீஸ் போனதும் மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள்.
வைதேகியின் நிலை நாளுக்கு நாள் மோசமாவதை நான் வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டியிருக்கிறது. என்னால் எதுவுமே செய்ய இயலவில்லை. போலீஸிடம்தான் புகார் சொல்ல முடியும். வேறு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இப்படியே நீடித்தால் – இன்னும் பதினைந்து நாட்களுக்கு நீடிக்கும் என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார் நாராயணன் – வைதேகி இருக்க மாட்டாள். அப்போதும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது.
(நாட்குறிப்புகள் பிறகு தொடரும். இப்போது என்னுடைய குறுக்கீடு.)
ட்ரில்லிங் சத்தம் ஏன் அளவுக்கு அதிகமாக இருந்தது என்றால், வேலையை விரைவில் முடிக்க வேண்டும் என்று பெருஞ்சாலைகளில் பயன்படுத்தும் ட்ரில்லிங் எந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். அதனால் பெருமாளும் வைதேகியும் ஒரு வார காலம் சர்விஸ் அபார்ட்மெண்ட்டில் தங்க வேண்டியிருந்தது. அப்போது பல பெருமாளின் பல வாசகர்கள் தங்கள் வீட்டில் வந்து இருந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்கள். ஆனால் வைதேகியின் உடல்நிலைக்கு அது ஒத்து வராது. அவளுக்கு வெளியிடங்களில் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. அது வீட்டுச் சமையலாகவே இருந்தாலும் அப்படித்தான். ஒத்துக்கொள்ளாது என்றால் சாதாரணமாக இல்லை. வயிற்று வலியில் துடிக்க ஆரம்பித்து விடுவாள். உப்பு காரமெல்லாம் கால்வாசி போட்டு பத்தியச் சாப்பாடு மாதிரிதான் சாப்பிடுவாள். அதுதான் ஒத்துக்கொள்ளும். அதனால் வாசகர்கள் மற்றும் நண்பர்களின் வேண்டுகோளை ஏற்க இயலவில்லை. சர்விஸ் அபார்ட்மெண்ட்டில் தங்கியிருக்கும்போது பெருமாள் மட்டும் வீட்டுக்கு வந்து மூன்று வேளையும் அவளுக்கு உகந்தாற்போல் சமைத்து எடுத்துக்கொண்டு போய்க் கொடுப்பான்.
ஒரு விஷயம் சொல்ல விடுபட்டு விட்ட்து. வைதேகி பூனை வளர்க்கிறாள். இலக்கணப் பிழை. பூனைகள் வளர்க்கிறாள். அதனால் பூனைகளுக்காக பெருமாள் வீட்டிலேயே தங்கிக் கொண்டு வைதேகிக்கு உணவை எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்தான். அதனால் சர்விஸ் அபார்ட்மெண்ட்டை வீட்டுக்கு அருகிலேயே பார்க்க வேண்டியிருந்தது. அது ஒன்றும் சுலபமாக இல்லை. உள்ளூர்க்காரர்களுக்கு சர்விஸ் அபார்ட்மெண்ட் இல்லை என்றார்கள். பிறகு அதற்கு வேறு பெரிய சிபாரிசெல்லாம் பிடித்துத்தான் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடிந்தது.
இன்னொரு விஷயம். ட்ரில்லிங் போடுவதால் ஏற்படும் பீரங்கி சப்தமெல்லாம் பெருமாளுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. வெளியுலக சமாச்சாரங்கள் எதுவுமே அவனை ஒருபோதும் பாதித்தது இல்லை. இடியே விழுந்தாலும் அவன் பாட்டுக்கு எழுதிக்கொண்டிருப்பான். அவனுக்கு அப்படி ஒரு கொடுப்பினை.
இனி பெருமாளின் நாட்குறிப்பு:
செப்டம்பர் 1, 2019
வைதேகிக்கும் எனக்கும் தங்கள் வீட்டில் இடம் கொடுத்துப் பராமரிக்க முன்வந்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றி. நன்றி என்ற உணர்வை நெகிழ்வான முறையில் வேறு எந்த வார்த்தைகளால் சொல்வது என்று தெரியவில்லை. இனிமேலும் ட்ரில்லிங் போட்டால் நேராக கமிஷனரிடம் போய்த்தான் புகார் கொடுப்பேன் என்கிறாள் வைதேகி. வீட்டுக்கு வந்து விட்டோம்.
இன்னொரு விஷயம். சமீபத்தில் ஒரு கடையில் பூனைகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டிருக்கும் போது அங்கே வந்த ஒருவர் எத்தனை பூனை என்றார். அப்படிக் கேட்டால் அவருக்குப் பூனைகளின் உலகம் தெரிந்திருக்கிறது என்று அர்த்தம். ஏனென்றால் யாரும் ஒரு பூனைக்கு சாப்பாடு வாங்க மாட்டார்கள். பூனைகள் தனியாக வாழ்பவை அல்ல. வீட்டில் வளர்க்கும் பெர்ஷியன் பூனை மட்டும் விதிவிலக்கு. நான் பத்து பூனை என்றேன். அவர் நான் நூறு பூனை என்றார் சிரித்தபடி. கபாலி கோவிலில் இருபத்தைந்து பூனையாம். மீதி எழுபத்தைந்து கோவிலைச் சுற்றி வெளியே.
என்னிடம் சிஸ்ஸியும் கெய்ரோவும் மட்டும்தான் இருந்தன. இப்போது கெய்ரோ போனதும் ஒன்று, இரண்டு, மூன்று என பத்து ஆகி விட்டது. என்னுடைய நண்பர் ஒருவரும் என்னோடு சேர்ந்து பூனைக்கான உணவுச் செலவை ஏற்கிறார். ஆனால் அவரை மட்டுமே சிரமப்படுத்த தயக்கம்.
அதன் காரணமாகத்தான் நான் என் வாசகர்களாகிய உங்களிடம் பூனை உணவுக்காக யாசகம் கேட்கிறேன்.
”இங்கே சோத்துக்கே வழியைக் காணும்; பூனைக்கு வேற பணம் அனுப்பணுமா?” என்று கேட்பவர்கள் இதிலிருந்து ஒதுங்கி நிற்கலாம். நான் அப்படிப்பட்டவர்களிடம் உதவி கேட்கவில்லை. இப்படி நக்கல் செய்பவர்கள் அனைவருமே சொத்துக்கு வழி இல்லாதவர்கள் அல்ல. அவர்கள் கிரிக்கெட் மேட்சுக்கு பத்தாயிரம் செலவு செய்பவர்கள். ஆனால் மற்றவர்கள் எனக்கு உதவுவதைத் தடுக்கும் இவர்களுக்கு அணிந்து கொள்ள ஆடையும் உண்ண உணவும் கிடைக்காது என்று சபிக்கிறார் திருவள்ளுவர்.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூம்
உண்பதூம் இன்றிக் கெடும்.
ஏன் இத்தனைக் காட்டம் என்றால், பார்க்கில் ஒருவன் என்னிடம் நேரிலேயே சொன்னான். ”வாசகர்களிடம் காசு வாங்கி பூனைக்குப் போட்றியா?” அப்படிக் கேட்ட அவனை நான் அறைந்து விட்டேன். நானாவது அறைந்தேன். வள்ளுவர் சாபமே விட்டு விட்டார். உனக்கு சோறும் கிடைக்காது; உடுத்திக் கொள்ள ஆடையும் கிடைக்காது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? ஆடையில்லாமல் திரிவது யார்? பைத்தியமாகப் போவாய் என்று பொருள். எனவே என்னை நக்கல் செய்பவர்களுக்கு வள்ளுவர் வாக்குதான் நடக்கும். மற்றபடி நாம் அனைவரும் அறம் வழிச் சென்று பல்லுயிர் ஓம்புவோம். உலகம் தழைக்கும். அறம் பெருகும்.
***
செப்டம்பர் 2, 2019.
எந்த ஆணுமே தன் மனைவிக்கு ஹீரோ அல்ல என்று ஒரு நண்பர் பார்க்கில் வைத்து சொன்னார். அதை ஒரு நண்பர் ஆமோதித்தார். எனக்கு அது பொருந்தாது என்றேன். வைதேகி எனக்குப் பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும் (குடிக்காதே, கொக்கரக்கோவுடன் சேராதே, இன்ன பிற) அவளுக்கு நான் ஹீரோதான் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
நேற்று மாலை மீண்டும் கொடூரமாக ட்ரில்லிங் போட்டார்கள். ஐயோ, வைதேகியை பாதிக்குமே என்று நினைத்து நினைத்தே பதற்றத்தில் எனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. எனக்கு நண்பரான டெபுடி கமிஷனரை அழைத்துப் பேசினேன். நேராகக் காவல்நிலையம் போய் எழுத்து மூலம் புகார் கொடுக்கச் சொன்னார். ஆனால் எனக்கோ கொக்கரக்கோவுடன் ஒரு நிகழ்ச்சிக்குப் போயாக வேண்டும். ஒன்றும் புரியவில்லை. ”அதெல்லாம் நீ எந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்கும் போய் அலைய வேண்டாம்; நான் என் தோழியின் காரில் போய் உட்கார்ந்து கொள்கிறேன்; இனிமேல் ட்ரில்லிங் போட்டால் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு வெளியே போய் விடுகிறேன், கவலைப்படாதே” என்று சொல்லி வீட்டிலிருந்து கீழே இறங்கி விட்டாள் வைதேகி. நேற்று அவளுக்கு ஆன்மீக வகுப்பு இருந்தது. அதற்காக அந்தத் தோழி வந்திருந்தார். நேற்று மழை வேறு. கொட்டு கொட்டென்று வானத்தைப் பிய்த்துக் கொண்டு கொட்டியது மழை.
நெஞ்சு வலி வந்ததை அவளிடம் சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இருந்தாலும் இன்று காலையில் உளறி விட்டேன். உடனே அவள் மேனேஜர் கணேசனை அழைத்து – அவர்தான் இந்த ட்ரில்லிங் வேலைக்கு மேனேஜர், அவரோடுதான் பெருமாளுக்கு ஒருநாள் கைகலப்பு நடந்தது – ”யோவ், இனி ஒருமுறை ட்ரில்லிங் போட்டால் நான் என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது; என் கணவர் எனக்கு மட்டும் சொந்தம் அல்ல; இந்த உலகத்துக்கே சொந்தமானவர். ட்ரில்லிங் போட்டு அவருக்கு நெஞ்சு வலி வர வைத்தால் உங்கள் யாரையும் சும்மா விட மாட்டேன்” என்று கத்தினாள்.
(குறுக்கீடு: ஓ, கணேசனுக்கும் எனக்கும் நடந்த ஒரு கலவரத்தைச் சொல்லவில்லை அல்லவா? ட்ரில்லிங் பிரச்சினை ஆரம்பித்த நேரத்தில் ஒருநாள் காலை ஆறரை மணிக்கே ட்ரில்லிங் போடத் தொடங்கியதால் பெருமாள் கீழே இறங்கிப் போய் ஒன்பது மணிக்கு ஆரம்பியுங்கள் என்று அங்கே வேலை செய்துகொண்டிருந்த பிஹாரி தொழிலாளிகளிடம் சொன்னான். அவர்களுக்கு அவன் பேசியதே புரியவில்லை. ஹிந்தியில்தான் சொன்னான். அவர்களுக்கு ஹிந்தியும் தெரியாது போல. அல்லது, தெரியாத்து போல் நடித்தார்களோ என்னவோ. அப்போது அங்கே மேற்பார்வை செய்து கொண்டிருந்த கணேசன் ”வேலை சீக்கிரமாக முடிய வேண்டும், நான் அவர்களை காலை ஐந்து மணியிலிருந்தே வேலையை ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார். ”அப்படிச் செய்தால் உன்னை செருப்பால் அடிப்பேன்” என்றான் பெருமாள்.
கணேசன் அதற்கு வாடா போடா என்று சொல்ல, பெருமாள் அவரைத் தேவடியாள் மகனே என்று திட்ட பெரிய கைகலப்பாகப் போய் வைதேகி வந்துதான் விலக்கி விட்டாள்.)
***
செப்டம்பர் 5, 2019.
மீண்டும் கொடூரமான முறையில் ட்ரில்லிங் போட ஆரம்பித்து விட்டார்கள். வைதேகி இந்த முறை வலிப்பு வருவதற்கு முன்பே சட்டென்று கீழே இறங்கி அந்த வளாகத்துக்கு வெளியே போய் விட்டாள். பிறகு இன்று பகல் முழுவதும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி அங்கே போய் விட்டாள். போலீஸில் புகார் கொடுத்தேன். போலீஸும் வந்தது. எங்களைத் தவிர மீதி பேரிடம் கேட்டார்களாம். எங்களுக்குத் தெரியாது. மீதி பேர் யாரும் எங்களுக்கு சத்தம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஒன்று, அவர்கள் மாடியில் இருப்பவர்கள். சத்தம் கேட்காது. இரண்டு, நாராயணனின் தாதாகிரிக்குப் பயந்திருக்கலாம். போலீஸ் வந்ததே எங்களுக்குத் தெரியாது. புகார் கொடுத்தவரை போலீஸ் சந்திக்கவில்லை.
செப்டம்பர் 7, 2019.
கடந்த இருபத்தைந்து ஆண்டு தாம்பத்ய வாழ்வில் இன்றுதான் முதல்முறையாக வைதேகி தன் அம்மா வீட்டில் இரவு தங்குவதற்குப் போயிருக்கிறாள். அதாவது, இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவள் ஒருமுறை கூட அங்கே இரவு தங்கியதில்லை. போவாள். ரெண்டு மணி நேரத்தில் திரும்பி விடுவாள். இன்று சென்று தங்கியதற்குக் காரணம், நாளை ஞாயிற்றுக்கிழமையும் ட்ரில்லிங் போடுவார்களாம். நான் மாலை நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை ஃபோன் போட்டு எப்போது வருவாய் என்று கேட்டுக் கொண்டே இருப்பாள் வைதேகி. அதிலும் பத்து மணி ஆகி விட்டால் பத்து நிமிடத்துக்கு ஒருமுறை வரும் ஃபோன். அதனால் அதிகபட்சம் பத்தரைக்கே விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்து விடுவேன். இன்றுதான் அம்மா வீட்டுக்குப் போயிருக்கிறாளே, அதிலும் இருபத்தைந்து ஆண்டுகளில் முதல் முறையாக இந்த வரலாற்றுச் சம்பவம் நடந்துள்ளது; எந்தப் பதற்றமும் இல்லாமல் நண்பர் யாருடனாவது இரவு உணவு சாப்பிடலாம், அடித்துப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓட வேண்டாம் என்று நினைத்து கண்ணனுக்கு ஃபோன் போட்டேன். வீட்டில் இருப்பதாகச் சொன்னான். இன்று ஆறு மணிக்கே வீட்டுக்குப் போய் விட்டானாம். வீட்டில் இருப்பவர்களை எப்போதுமே வெளியே வரச் சொல்லி அழைக்க மாட்டேன். வீட்டில் என் மரியாதை போய் விடும்.
உலகளந்தானோடுதான் மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை திருவல்லிக்கேணியை சுற்றினேன். ஆறு மணிக்கு மேல் ஆகிவிட்டால் வீட்டில் பதற்றத்துடன் என்னைத் தேட ஆரம்பித்து விடுவார்கள் என்று பதற்றத்துடன் சொல்லிக்கொண்டே பதற்றத்துடன் ஸ்கூட்டரைக் கிளப்பினார் உலகளந்தான்.
கொக்கரக்கோ வியட்நாமில் இருக்கிறான்.
ஸ்ரீராமுக்கு ஃபோன் போட்டேன். வெளியூரில் இருக்கிறார்.
செல்வாவுக்கு ஃபோன் போட்டேன். வழக்கம் போல் எடுக்கவில்லை. எப்படியும் காலையில் அழைத்து விடுவார்.
சதீஷுக்கு ஃபோன் போட்டேன். ஸ்விட்ச் ஆஃப்.
இன்னொருவர் பிரபு. அரசு அதிகாரி. நிச்சயம் வருவார். இன்று சனிக்கிழமை. வீட்டில் அவருக்கு நல்ல சுதந்திரம் உண்டு. அவர் மனைவி அவரைத் தன் நண்பர் போல பாவிக்கிறார். தைரியத்துடன் ஃபோன் செய்தேன். நாளை காலை தில்லியிலிருந்து நிதி மந்திரி வருகிறார். அவரோடு மீட்டிங் இருக்கிறது. இப்போது அதற்கான மீட்டிங்கில் இருக்கிறேன். நாளை போகலாமா என்றார். ஐயோ ஐயோ என்று ஃபோனை வைத்து விட்டேன்.
ராஜேஷுக்கு ஃபோன் போட்டேன். சுவிட்ச் ஆஃப்.
முகேஷுக்கு ஃபோன் போட்டேன். பம்பாய் போயிருப்பதாகச் சொன்னார்.
உமேஷுக்கு ஃபோன் போட்டேன். கல்யாண விசேஷமாக பிஸியாக இருக்கிறேன், நாலாந்தேதிக்கு மேல் எப்போது அழைத்தாலும் வருகிறேன் என்றார்.
ஒரு வருடமாக வீட்டில் ஒரு வைன் பாட்டில் இருக்கிறது. இயற்கையான முறையில் நிலத்துக்குள் வைத்து தயாரிக்கப்பட்ட வைன். விலை உயர்ந்த சரக்கு. ஒரு நண்பர் கொடுத்தது. அதை எடுத்து ஒரு கிளாஸ் அருந்தலாம் என்று நினைத்தேன். பார்த்தால் கார்க் மூடி. ஐயோ, வைன் ஒப்பனர் வேணுமே? அதற்கு எங்கே போக? வெளிநாடாக இருந்தால் கீழே டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குப் போய் ஒரு வைன் பாட்டில் (கார்க் இல்லாதது) வாங்கிக் கொண்டு வரலாம். ஆனால் தமிழ்நாட்டில் வைன் ஷாப் இருக்கும். வைன் இருக்காது. அடையாறில் உள்ள எலீட் டாஸ்மாக்கில் கிடைக்கும். எவன் அடையாறு வரை போவது? போய்யா.
பிறகு வைதேகிக்கு ஃபோன் போட்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்தபோது அஞ்சலியிடமிருந்து ஃபோன். வைதேகியிடம் பேசி முடித்து விட்டு அஞ்சலியை அழைத்தேன். என்ன, எல்லா கேர்ல் ஃப்ரெண்ட்ஸ் கூடவும் பேசியாயிற்றா என்றாள்.
நீ அநேகமாக ஜெயமோகனின் ஸ்லீப்பர் செல்லாகத்தான் இருக்கணும் என்றேன்.
***
செப்டம்பர் 9, 2019.
பூனை புராணத்தை ஆரம்பித்தால் என் வாசகர் யாருக்குமே பிடிப்பதில்லை. ஆனாலும் எழுத எழுத வந்து கொண்டே இருக்கிறதே, என்ன செய்ய? ஆனால் ஒரு உத்தரவாதம் கொடுக்க முடியும். எழுதியதையே திரும்ப எழுத மாட்டேன். எனவே பூனை விஷயம் பிடிக்காதவர்கள் கொஞ்ச நேரம் ஒதுங்கிக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
முன்கதையை மட்டும் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். மைலாப்பூர் அப்பு தெருவில் தனீ வீட்டில் ராஜபோகமாக இருந்த நாங்கள் சாந்தோம் நெடுஞ்சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் குடிபெயர்ந்த காரணம், அப்பு தெரு வீட்டில் ஸோரோ இறந்து விட்டதுதான். ஸோரோ எங்கள் காவலன். தனி வீட்டில் வேட்டை நாய் இல்லாமல் வாழ முடியாது. ஸோரோ பழகியவர்களுக்குக் குழந்தை; புதியவர்களுக்கு பேய். அப்பேர்ப்பட்ட ஸோரோவே சிலரிடம் முதல் பழக்கத்திலேயே குழந்தை போல் கொஞ்சியிருக்கிறது. அவர்கள் விதிவிலக்கு. அவ்வளவு பெரிய தனீ வீட்டில் பப்புவோடு மட்டும் இருப்பது சாத்தியம் இல்லை. பப்பு திருடனோடு கூடவே ஓடி விடும். ஸோரோ க்ரேட் டேன்; பப்பு லேப்ரடார். அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வந்ததும் கொஞ்ச நாளில் பப்புவும் போய் விட்டது. முதுமை. அப்போது எங்களிடம் கெய்ரோ என்ற பூனை மட்டுமே எஞ்சியது. பப்புவும் கெய்ரோவும் நெருங்கிய நண்பர்கள். நாயும் பூனையும் விரோதிகள் என்பார்கள். ஆனால் எங்கள் வீட்டில் பப்புவும் கெய்ரோவும் செம தோஸ்த். பப்புவின் மீதுதான் கெய்ரோ தூங்குமே. பப்பு இறந்ததும் கெய்ரோ எங்களை விட்டுப் பிரிந்து விட்டது. அதுவே கிளம்பிப் போய் விட்டது. பட்டினப்பாக்கம் மீனவர் குடியிருப்பில் இருக்கிறது. ஆனால் வைதேகியை அந்தப் பக்கம் பார்த்தாலே ஓடி விடுகிறது. பப்பு இறந்ததற்கு வைதேகி என்ன செய்ய முடியும்? கெய்ரோ இப்படி வைதேகியைப் பார்த்ததுமே ஓடுவதைக் கண்டு பட்டினப்பாக்கத்துப் பெண்கள் பூனையை அடித்தீர்களா என்று வைதேகியைக் கேட்டார்கள். அதோடு அவள் பட்டினப்பாக்கம் பக்கம் செல்வதையே நிறுத்தி விட்டாள். கெய்ரோ எங்கள் வீட்டில் பேரரசன் வீட்டுப் பிராணியைப் போல் வளர்ந்தது தனிக்கதை.
அப்பு தெரு தனீ வீட்டில் எங்களோடு இருந்த ச்சிண்ட்டுவை வைதேகி எங்களோடு இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அழைத்து வந்தாள். ஆனால் ச்சிண்ட்டூ எந்நேரமும் வாகனங்கள் பறந்து கொண்டிருக்கும் இந்த நெடுஞ்சாலையைத் தாண்டி எப்படியோ உயிரோடு அப்பு தெருவுக்கே போய் விட்டது. அது இன்னமும் எனக்கு ஆச்சரியம்தான். பூனைகள் இட மாறுதல் செய்யாது என்று படித்திருக்கிறேன். மேலும் ச்சிண்ட்டூவுக்கு அங்கே பல காதலிகள் உண்டு. அப்பு தெருவில் உள்ள ஒரு வாட்ச்மேன் மூன்று தினங்களுக்கு ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வந்து ச்சிண்ட்டூவுக்கான உணவை வாங்கிக் கொண்டு போவார். (அதற்காக அவருக்குத் தனி ஊதியம்.)
சமீபத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் அந்த வாட்ச்மேன் விடுப்பில் போனார். அதனால் வைதேகியே அங்கே போய் ச்சிண்ட்டுவுக்கு உணவு கொடுத்து வந்தாள். ஒருநாள் இங்கே எங்கள் குடியிருப்பின் வாசலில் ஒரு பூனை செத்துக் கிடந்ததாகவும் அதை நகரசபைத் துப்புரவுத் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தி விட்டதாகவும் எங்கள் வாட்ச்மேன் சொன்னார். ச்சிண்ட்டுவை அப்பு தெருவில் எத்தனை தேடியும் இல்லை. இறந்தது ச்சிண்ட்டுதான் என்று உறுதியாயிற்று. பதினாறு ஆண்டுகள் வாழ வேண்டிய ஒரு உயிர் நாலே ஆண்டுகளில் போய் விட்டது. எங்களுடனேயே இருந்திருக்கலாம், கெய்ரோவைப் போல. கெய்ரோவும் முதலில் இங்கே இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்க மக்கர் பண்ணியது. எல்லோரையும் கடித்தது. வைதேகி அதை அப்பு தெருவில் கொண்டு போய் விட்டாள். பத்து நாட்களில் கதறிக் கொண்டு ஓடி வந்து விட்டது. அதுவாக நெடுஞ்சாலையைக் கடக்கவில்லை. கடக்காது. கெய்ரோ ச்சிண்ட்டு மாதிரி அசடு இல்லை. புத்திசாலி. வைதேகி அப்பு தெருவுக்குப் போகும் போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அவளோடு வந்து சேர்ந்தது. அப்புறம் இங்கே யாரையும் கடிக்காமல் சமர்த்தாக இருந்து பப்பு இறந்ததும் நீங்கள் வேண்டாம் என்று சொல்லி விட்டு ஓடிப் போயிற்று. அப்படி ஓடிப் போகும் முன்னால் ஒன்று நடந்தது.
நான் அப்போது எங்கோ வெளிநாடு போயிருந்தேன். மூன்று வாரம். அந்த மூன்று வார காலமும் வீட்டை விட்டு வெளியிலேயே போகாமல் வைதேகி எங்கே போனாலும் அவள் பின்னாலேயே இருந்திருக்கிறது கெய்ரோ. நிழலைப் போல. உறங்கும் போது கூட அவளுடனேயே அவள் பக்கத்திலேயே உறக்கம். நான் ஊரிலிருந்து திரும்பிய மறுநாள் ஓடி விட்டது. என் கண் முன்னாலேயே ஓடியதைப் பார்த்தேன் என்றாள் வைதேகி. மூன்று வார காலம் அவள் கூடவே இருந்ததையும் பிறகு அவள் கண் முன்னாலேயே ஓடியதையும் பிறகு பட்டினப்பாக்கத்தில் அவள் அதை அழைக்கப் போனபோது தலைதெறிக்க ஓடிப் பதுங்கியதையும் வைதேகியினால் மறக்கவே முடியாமல் மூன்று மாத காலம் மிகக் கடுமையான மன உளைச்சலில் விழுந்தாள். பிறகு அவளாகவே தேறி எழுந்தாள். அந்த மூன்று மாதங்களையும் என்னால் எந்தக் காலத்திலும் மறக்க இயலாது.
***
நாய்கள் போன பிறகாவது பிராணிகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு இல்லாமல் வேலையைப் பார்ப்போம் என்று நினைத்திருந்தேன். இருபத்தைந்து ஆண்டுகளாக அந்த நாளுக்காகக் காத்திருந்தேன். ஆனால் நான் லெபனான் போயிருந்த போது – ஆறு மாதங்களுக்கு முன்னே – சென்னையில் ஒரு மழை இரவின் போது என் தலையெழுத்து மாறிப் போனது. மழை பெய்த போது கீழே தரைத் தளத்தில் வசித்த புஸ்ஸி என்ற பூனையின் குழந்தைகள் மூன்றும் கதறி அழுதிருக்கின்றன. நான் என்றால் ஐயோ கடவுளே ஏன் தான் இந்த மழையில் வாயில்லா ஜீவன்களைப் படுத்துகிறாய் என்று நினைத்துக் கொண்டு தூங்கிப் போயிருப்பேன். வைதேகி அந்த அழுகையைக் கேட்டு எழுந்திருந்திருக்கிறாள். மழை நிற்கும், அழுகை அடங்கும் என்று பார்த்தாளாம். ம்ஹும். என் விதி மழை வலுத்து, அழுகுரலும் அதிகரித்திருக்கிறது. அவளுக்கு மனசு கேட்கவில்லை. புஸ்ஸியையும் அதன் மூன்று குட்டிகளையும் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள். எடுத்து வந்திருக்காவிட்டால் மூன்று குட்டிகளும் மழையில் செத்துத்தான் போயிருக்கும். சந்தேகமே இல்லை. ஏனென்றால், அதற்கு முந்தின வாரம்தான் எங்கள் இன்னொரு பூனையான சிஸ்ஸியின் இரண்டு அழகழகான பூனைக்குட்டிகள் இரண்டு மழையில் நனைந்து இறந்து மிதந்தன. ஒரு வாரம் கதறி அழுதது சிஸ்ஸி. இங்கே குடியிருந்த எல்லோரையுமே அதன் கதறலும் அழுகையும் கலங்க அடித்தது.
மூன்று வாரப் பயணத்துக்குப் பிறகு நான் வந்து பார்த்த போது மூன்று குட்டிகளும் பெயரோடு இருந்தன. பெல்லா, ஸ்மோக்கி, கிட்டி. கிட்டி மட்டும் பெண் குட்டி. புஸ்ஸி மேலே வந்து குழந்தைகளுக்குப் பால் கொடுத்து விட்டு கீழே இறங்கிப் போகும். எனக்கு எழுத்து வேலை. வைதேகிக்கு ஆன்மீகப் பணி. வாரம் இரண்டு வகுப்புகள். இருபது பேர் வருவார்கள். பூனை வளர்ப்பு சாத்தியம் இல்லை. புஸ்ஸியையும் மூன்று குட்டிகளையும் என்ன செய்வது? வாட்ச்மேன் செபாஸ்டியன் இந்த நான்கையும் பட்டினப்பாக்கத்தில் மீனவர் குடியிருப்பில் கொண்டு போய் விடுவதாகச் சொன்னார். கொடுத்து அனுப்பினாள் வைதேகி.
இரண்டு நாள் கழித்துப் போய்ப் பார்த்தால், புஸ்ஸியைக் காணோம். மூன்று குட்டிகளும் குற்றுயிரும் கொலை உயிருமாகக் குப்பைத்தொட்டியில் கிடந்தன. செபாஸ்டியனைக் கேட்டால் கெக்கபிக்க என்று உளறினார். தவறு எங்கள் மீதுதான் என்று நினைத்துக்கொண்டு மூன்று குட்டிகளையும் கொண்டு வந்து வளர்க்க ஆரம்பித்தோம். கீழே தரைத்தளத்தில் குட்டிகளை விட முடியாது. கார்கள் அதிகம். அடிபட்டு இறந்து விடும். நிச்சய மரணம். இந்த நிலையில்- சொன்னால் நம்ப மாட்டீர்கள் – தன் குட்டிகளை மழையில் இழந்த சிஸ்ஸி அந்த மூன்று குட்டிகளையும் தன் குட்டிகளாக சுவீகாரம் எடுத்துக் கொண்டு பால் கொடுத்து வளர்க்க ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளாக தெருவில் வளர்ந்த சிஸ்ஸி அந்த மூன்று குட்டிகளுக்காக எங்கள் வீட்டிலேயே வளர முடிவு செய்தது. ஆக, சிஸ்ஸி என்ற தாய்ப்பூனையும், பெல்லா, ஸ்மோக்கி, கிட்டி என்ற குட்டிகளுமாக வளர்க்க ஆரம்பித்தோம். கீழே தரைத்தளத்தில் பத்து பூனைகள். ஆனால் அந்தப் பூனைகள் யாவும் சாப்பிடும் நேரத்தில் வரும், சாப்பிடும், போய் விடும்.
இதற்கிடையில் சிஸ்ஸி அவ்வப்போது வெளியே போகிறது அல்லவா, அதுவும் ஒரு குட்டி போட்டது. அதன் பெயர் லக்கி. பேரழகுக் குட்டி. பெல்லா, ஸ்மோக்கி, கிட்டி மூன்றும் அந்தக் குப்பைத்தொட்டி அனுபவத்துக்குப் பிறகு வீட்டை விட்டு எந்தக் காரணத்தைக் கொண்டும் கீழே இறங்கவோ வீட்டை விட்டு அந்தண்டை இந்தண்டை போகவே மறுத்து விட்டன. யாராவது வீட்டுக்கு வந்தால் கூட வீட்டில் எங்காவது ஓடிப் பதுங்கி விடும். லக்கி மட்டும் ஜாலி குட்டி. வீட்டிலேயே வளர்வதால் அதற்கு பயம் என்ற உணர்ச்சியே கிடையாது. எல்லோரிடமும் போகும். எங்கள் மடியிலேயே தூங்கும். தோளில் அமர்ந்து கொண்டு கீழே இறங்காது. சிஸ்ஸி ஒரு தினுசான பூனை. பெல்லா, ஸ்மோக்கி, கிட்டி மூன்றுக்கும் பால் கொடுத்து விட்டு தன் சொந்தக் குட்டியான லக்கிக்குக் கொடுக்காது. லக்கியும் அது பற்றிக் கவலைப்படவில்லை. Wet cat foodஐ சாப்பிடப் பழகிக் கொண்டு விட்டது.
ஆக, வீட்டில் ஐந்து, தரையில் பத்து ஆகிய பதினைந்து பூனைகளுக்காகத்தான் நான் அடிக்கடி உங்களிடம் பூனை உணவு கேட்டு எழுதுவது. சென்ற மாதம் ஒருநாள் நாராயணன் இங்கே உள்ள பத்து குடும்பத்தாருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். ”1சி நம்பரில் குடியிருப்பவர்கள் மீது புகார்கள் வந்து குவிகின்றன; அதை விசாரிக்க ஒரு மீட்டிங் நடக்க இருக்கிறது. 1சி ஆட்களும் வந்து கலந்து கொள்ள வேண்டியது” என்று அந்த சுற்றறிக்கையில் கண்டிருந்தது. 1சி என்பது நாங்கள்தான். நாராயணனிடம் வைதேகி நேரிலேயே என்ன விஷயம் என்று விசாரித்தாள். பூனைத் தொந்தரவுதான்; போலீஸில் புகார் கொடுக்கலாம் என்று இருக்கிறோம் என்றார். வேறு வேறு ஆட்களாக இருந்தால் ஒரே அடிதடி ரகளை ஆகியிருக்கும்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். நூறு பூனைகளுக்கு உணவிட்டுப் பரிபாலிப்பவர் பற்றிச் சொன்னேன் இல்லையா? அவர் பெயர் பிரகாஷ். ஒருநாள் அவருடைய குடியிருப்பில் ஒரு பூனை குறுக்கே வந்து விட்டது என்று ஒரு ஆள் அதை உதைத்து விட்டான். அதுவோ நிறைமாத கர்ப்பிணிப் பூனை. பிரகாஷ் பிராமணர் என்றாலும் குத்துச்சண்டை வீரர் போல் இருப்பார். கர்ப்பிணிப் பூனையை உதைத்தவனை ஓங்கி ஒரு குத்து விட்டிருக்கிறார். மூர்ச்சை தெளிய பத்து நிமிடம் ஆனதாம். அவன் பிறகு அவன் உங்களை என்ன செய்தான் என்றேன். என்னைப் பார்த்தாலே பதுங்குகிறான் என்றார். நானோ சாத்வீகன். வைதேகி நாராயணனிடம் “நீங்கள் போலீஸில் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள், பூனைக்கு உணவு கொடுப்பதை நான் நிறுத்துவதாக இல்லை” என்று சொல்லி விட்டாள். இருந்தாலும் இந்த ஆட்களையெல்லாம் பகைத்துக் கொண்டு எப்படி வாழ்வது என்று எதிர்சாரியில் உள்ள ஒரு பாழடைந்த ஷெட்டில் கொண்டு போய் நான்கு குட்டிகளையும் சிஸ்ஸியையும் விட்டு விட்டு வந்தாள். காலையும் மாலையும் போய் உணவு வைத்து விடலாம். நீ போய்க் கொடு என்றாள். ஒருவேளை நீ கொடேன் என்றேன். அத்தனை பேரும் என் வயதைக் கூட பாராமல் visual rape செய்கிறான்கள்; ஒரு மாதிரியாக இருக்கிறது என்றாள். நானே போனேன். ம்ஹும். பயனில்லை. குட்டிகள் புது இடம் என்பதால் வெளியில் வரவே பயந்தன. வெளியில் வரவே பயந்தன என்று எழுதினால் உங்களுக்கு என்ன புரியும்? எனக்கு ஜானகிராமன் மாதிரியெல்லாம் எழுதத் தெரியவில்லை. உயிர்ப் பயம். நான்கு குட்டிகளும் வெளியிலேயே வரவில்லை. சிஸ்ஸி வழக்கம் போல் கதறியது; அழுதது. அதுவும் சாப்பிடவில்லை. வைதேகியும் போய்ப் பார்த்தாள். ம்ஹும். ஒன்றும் நடக்கவில்லை. மூன்று நாள் நான்கு குட்டிகளும் கொலைப்பட்டினி. குட்டிகள் பட்டினி என்பதால் தாயும் பட்டினி.
ஒருநாள் ரொம்பக் கஷ்டப்பட்டு கெஞ்சிக் கூத்தாடி தாஜா செய்து நைச்சியம் பேசி அன்பு பாராட்டி நான்கு குட்டிகளையும் வீட்டுக்கு அழைத்து வந்தாள் வைதேகி. இரவு பத்து மணியிலிருந்து பன்னிரண்டு வரை அவைகளை தாஜா செய்தாள். இரவு நேரம் என்பதால்தான் அவைகளும் வந்தன. அதிலிருந்து நாங்களே வளர்க்கிறோம். இடையில் சில நண்பர்களிடம் சொன்னேன். ஏதாவது பண்ணை வீடு மாதிரி இருந்தால் நான்கையும் கொடுத்து விடலாம். லக்கியை மட்டும் நாங்கள் வைத்துக் கொள்ளலாம் என்று நினத்தேன். ஒரு பூனை வளர்ப்பது பிரச்சினையே இல்லை. ஐந்து என்றால் கஷ்டம். மேலும், இதுவே ஒரு தனி வீடு என்றால் பிரச்சினை இல்லை. அதுகள் பாட்டுக்குப் போகும், வரும்.
இப்போது சிஸ்ஸிக்கு இன்னொரு பிரசவம் சம்பவித்தால் என்ன ஆகும்? இன்னும் மூன்று குட்டிகளா? தாங்க மாட்டோம் என்பதால் சிஸ்ஸிக்கு கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து விட்டேன். 9000 ரூபாய் ஆனது. ப்ளூ கிராஸிலும் வெப்பேரி பிராணிகள் மருத்துவமனையிலும் இலவசமாகச் செய்கிறார்களாம். ஆனால் அங்கெல்லாம் போய் வரிசையில் நிற்கவும் டோக்கன் வாங்கவும் எனக்கு நேரம் இல்லை. இங்கே தனியார் மருத்துவமனை போனதற்கே அரை நாள் செலவாகி விட்டது. அறுவை சிகிச்சையில் மயக்க மருந்து, ஆயுதப் பிரயோகம் எல்லாம் சிஸ்ஸியை ஒருமாதிரி ஆக்கி விட்டது. அதன் துயரத்தை, வலியைப் பார்த்து இனி ஒருமுறை எந்தப் பூனையையும் அப்படி ஒரு வேதனைக்கு ஆளாக்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன். அதன் வலி பார்த்துக் கண்ணீர் விட்டு அழுது விட்டேன்.
காலை பத்து மணிக்கு வரச் சொல்லியிருந்தார் பூனை மருத்துவர். அறுவைக்கு முன்னால் ஜூனியர் சவரம் செய்து விடலாம் என்று முயற்சி செய்தார். அதற்கு சிஸ்ஸி இடம் கொடுக்கவில்லை. கிளம்பும்போதே அது கூடையை விட்டு வெளியே வந்து தப்பியோட முயற்சி செய்தது. பொதுவாக தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளக் கிளம்பும்போதெல்லாம் அப்படிச் செய்ததில்லை. இன்று அறுவை சிகிச்சைக்குக் கிளம்பும்போது அப்படிப் பண்ணியது. இருந்தாலும் அமுக்கிக் கொண்டு வந்து விட்டேன். பின்னர் பெரிய டாக்டர் வந்து மயக்க மருந்து கொடுத்து வயிற்றுப் பகுதியில் சவரம் செய்து முடியை நீக்கினார். பிறகு என்னை வெளியே போகச் சொல்லி விட்டார். பன்னிரண்டு மணி வரை வெளியே வெய்யிலில் அமர்ந்திருந்தேன். சின்ன மருத்துவமனை. சிறிதாக இரண்டு அறைகள்; ஆனால் டாக்டர் மிகவும் திறமையானவர்; பணத்தாசை இல்லாதவர். இதே கர்ப்பப் பை நீக்க அறுவை சிகிச்சைக்கு பதினைந்தாயிரம் ரூபாய் கட்டணம் வாங்குபவர்களும் உண்டு. வெயிலாக இருந்தாலும் பரவாயில்லை, உட்காரவாவது நாற்காலி இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். அப்போது ஒரு ஆள் வந்து ஒரு காரை எடுக்க வேண்டும் என்றார். சொன்னவர் டிரைவர் போல் தெரிந்தது. எடுக்க வேண்டியது டாக்டரின் கார் என்று தெரிந்தது. என்னைப் போல் டாக்டரைப் பார்க்க ஒரு பூனையுடன் வந்திருந்த ஒரு மத்திம வயதுப் பெண் – நைட்டியில் இருந்தார் – அந்த ஆளிடம் டாக்டர் சர்ஜரியில் இருக்கிறார்; இப்போது முடியாது என்றார். அந்த ஆள் போய் விட்டார். பின்னர் ஒரு பத்து நிமிடம் கழித்து வந்து சாவியையாவது வாங்கிக் கொடுங்கள் என்றார். அந்தப் பெண்மணி டாக்டர் இருந்த அறையின் கதவைத் தட்டினார். ஜூனியர் எட்டிப் பார்த்து இப்போது எதுவும் சாத்தியம் இல்லை என்று அவசரமாகச் சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார். அதை அந்தப் பெண்மணி அந்த ஆளிடம் சொல்ல, அந்த ஆள், அப்படியானால் நான் காற்றைப் பிடுங்கி விட்டு விடுவேன் என்றார். உடனே அந்தப் பெண்மணி “டேய் என்னடா பேசறே? உள்ளே அவர் ஒரு உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். என்னடா திமிர்ப் பேச்சு பேசறே?” என்று சத்தம் போட்டுக் கத்தினார். உடனே அந்த ஆள் பம்மி விட்டான்.
பன்னிரண்டு மணிக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. கிழிந்து போன நார் மாதிரிக் கிடந்தது சிஸ்ஸி. எனக்கு ஈரக்குலை நடுங்கியது. அப்போதுதான் நினைத்தேன், நம்மால் வளர்க்க முடியாவிட்டால் கொண்டு போய் எங்கேயாவது விட்டு விடலாம்; இனிமேல் இப்படி கர்ப்பப் பை நீக்கம் வேண்டாம் என்று.
இனி கிட்டி கர்ப்பிணி ஆனால் அதைக் கொண்டு போய் நாகேஸ்வர ராவ் பூங்காவில் விட்டுவிட வேண்டியதுதான். ஏனென்றால், இந்த கர்ப்பத்தடை அறுவை சிகிச்சையை விட பூங்காவில் விடுவது பூனைக்கு வேதனை இல்லை. அங்கே பூனைகளுக்கு உணவு போட பத்து இருபது பேர் இருக்கிறார்கள். தினமும் சாப்பாடு போடுகிறார்கள். மேலும், பூனையின் கர்ப்பப்பையை நீக்க நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றும் நினைத்தேன். அதிகாரப்படியில் பூனை நமக்குக் கீழே இருக்கிறது என்பதால் நம்முடைய வசதிக்காக அதன் வயிற்றைக் கிழித்து கர்ப்பப்பையை நீக்குவதற்கு நாம் யார்? இனி இந்த வேலையைச் செய்யக் கூடாது. ”இப்போதே கிளம்ப வேண்டாம். பூனைக்கு மயக்கம் கொஞ்சமாவது தெளியட்டும்” என்றார் டாக்டர். அதுவரை சிஸ்ஸியைத் தனியே விட மனம் இல்லாமல் அதன் கூடவே நின்று கொண்டிருந்தேன். ஒன்றரை மணி நேரம். மயக்க மருந்தின் விளைவா என்ன என்று தெரியவில்லை; அதன் உடம்பு அதிகப்படியாக நடுங்கிக் கொண்டே இருந்தது. பக்கத்தில் நின்று நீவி விட்டபடியே இருந்தேன்.
இதற்கு இடையில் எத்தனையோ முறை வைதேகியிடம் சொன்னேன், லக்கி குட்டியைத் தவிர வேறு நான்கையும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் விட்டு விடலாம் என்று. ஆனால் குழந்தைகளைப் போல் வளர்த்து விட்டு எப்படிக் கொண்டுபோய் விட முடியும் என்றாள் வைதேகி. அவள் சொன்னது உண்மைதான். குழந்தைகள் போல்தான் வளர்ந்தன. ஒரு உதாரணம். இன்று மாலை ஐந்து மணி அளவில் சிஸ்ஸி மயக்கத்துடனேயே எழுந்து தள்ளாடியபடியே நடந்து வந்து அது சிறுநீர் கழிக்கும் மண் கூடைக்கு வந்து, கூடையில் ஏற முடியாமல் தடுமாறிக் கீழே விழுந்தது. அந்த அளவுக்கு ஒழுக்கம். பிரக்ஞையற்ற நிலையில் கூட அந்த அளவு ஒழுங்கு. பூனைகளாக இருந்தாலும் நாய்களைப் போலவே வளர்கின்றன. அத்தனை அன்பாக, சிநேகமாக, ஒழுக்கமாக. இவைகளைக் கொண்டு போய் எப்படி பார்க்கில் விட முடியும் என்கிறாள் வைதேகி.
கீழே தரைத்தளத்தில் பூனைகளுக்கு சாப்பாடு போடாதீர்கள் என்று நாராயணனிடமிருந்து கடும் உத்தரவு வரவே, மூன்று தினங்கள் தொடர்ந்து சாப்பாடு போடாமல் இருந்தேன். ஆனால் அந்தக் கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை. வெளியே போகும் போதெல்லாம் ஒவ்வொரு பூனையும் பசியால் கதறி அழுதன. ஒரு பூனை ஒரு வீட்டின் உள்ளே புகுந்து விட்டது. மூன்றாம் நாள் மாலையே ஆனது ஆகட்டும் என்று உணவு போட ஆரம்பித்து விட்டேன்.
வைதேகி பூனைகளின் மலஜல மண் கூடையிலிருந்து மண்ணை மாற்றும் போது என்னை என் அறையிலிருந்து வெளியே போய் விடச் சொல்வாள். என் அறையில்தான் அந்த மண் கூடை இருந்தது. ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ஒருநாள் நானும் உதவி செய்கிறேனே என்று போனேன். வேண்டாம் என்றாள். வற்புறுத்தினேன். இன்று ஒருநாள் மட்டும்தான்; அதுவும் நீ கேட்பதனால்தான் என்றாள். பார்த்தால் அந்த மண்ணை குப்பைப் பையில் கொட்டும் போது ஒரு வாயு வெளியே வந்தது பாருங்கள்… மூச்சு நின்று விடும் போலிருந்தது. பாதாள சாக்கடையில் சில துப்புரவுப் பணியாளர்கள் விஷ வாயு அடித்துச் சாகிறார்களே, கேள்விப்பட்டதுண்டா, அந்த மாதிரி நாற்றமும் விஷமும். எப்படி இதைச் செய்கிறாய் என்றேன். ”மாற்றும் போது மூச்சு விடக் கூடாது. மட்டுமல்லாமல் நீ ஏன் இந்தக் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்றுதான் நானே செய்து விடுகிறேன்” என்றாள் வைதேகி. அதற்குப் பிறகுதான் அந்த நாகேஸ்வர ராவ் பூங்கா யோசனையைச் சொன்னேன்.
சந்தா அல்லது நன்கொடை எதிர்பார்க்கிறேன்.
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா
***
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
வங்கி விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai