பங்கேற்பு

என்னுடைய புத்தக அலமாரிகளுக்குப் பணம் கேட்டதை வைத்து சிலர் என்னை ஃபேஸ்புக்கில் இழிவாக எழுதியிருந்ததாகக் கேள்விப்பட்டேன். வாழை பட விமர்சனத்துக்காகவும் என்னைப் பல பெண்கள் மிகவும் கேவலமாகத் திட்டினார்களாம். இதே பெண்கள் டீச்சரின் இடத்தில் வாத்தியாரைப் போட்டு பையனின் இடத்தில் சிறுமியைப் போட்டிருந்தால் இயக்குனரின் ட்ராயரைக் கிழித்திருப்பார்கள். ஆனானப்பட்ட புதுமைப்பித்தனே தனக்கு வந்த காசநோய்க்கு மருந்து வாங்கக் காசில்லாமல் தமிழ்ச் சமூகத்திடம் கையேந்தத்தான் வேண்டியிருந்தது. கையேந்திய மறுநாளே இறந்தது இன்னும் பெரிய துரதிர்ஷ்டம். கோபி கிருஷ்ணனும் அப்படித்தான் இறந்தார். பிரபலமான எழுத்தாளர் சுஜாதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப் பணம் இல்லாமல் கமலும் மணி ரத்னமும் கொடுத்தார்கள் என்பது செய்தி. அதேபோல் இன்னொரு பிரபலமான பிரபஞ்சனுக்கு மருத்துவ உதவிக்கு ஐந்து லட்சம் கொடுத்தது மிஷ்கின். இப்படி இன்னும் பல எழுத்தாளர்கள். எனக்கு மட்டுமே அப்படி ஆகாமல் என் வாசகர்கள் காப்பாற்றினார்கள்.

எழுத்தாளர்கள் இப்படி பிச்சைக்காரர்களாக வாழ்வதற்குக் காரணம் என்ன? மேற்கத்திய நாடுகளில் எழுத்தாளர்கள் தனித் தீவையே விலைக்கு வாங்கி அங்கே தனியாக அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். (தமிழ்நாட்டில் அது சாமியார்களுக்கு மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது!) இங்கே ஜப்பானிலும் அப்படித்தான். என் அந்தரங்கமே போய் விட்டது, என்னால் ஓட்டப் பயிற்சிக்குக் கூடப் போக முடியவில்லை. எங்கே போனாலும் கூட்டம் கூடி விடுகிறது, என் நிம்மதியே போச்சு என்று புலம்புகிறார் ஹாருகி முராகாமி. காரணம், அவர் புத்தகம் அங்கே கோடிகளில் போகிறது. ஹாருகி மட்டும் அல்ல. எல்லா ஜப்பானிய எழுத்தாளர்களின் நிலையும் அப்படித்தான். அதனாலேதான் ஜப்பானில் போய் ஏதாவது ஒரு பப்பில் உங்களை எழுத்தாளன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டால் ஏதோ கடவுளைப் பார்த்தது போல் திகைத்துப் போகிறார்கள். ஜப்பான் மட்டும் அல்ல, உலகம் பூராவும் அப்படித்தான். உலக உருண்டையில் இதற்கு விதிவிலக்காக இருக்கும் ஒரே இடம் தமிழ்நாடு.

தமிழில் எழுத்தாளர்களின் நூல்கள் அம்பது நூறுதான் விற்கின்றன. சுஜாதா போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கே பத்திரிகைகளிலிருந்து இருநூறும் முந்நூறும்தான் அனுப்பினார்கள். நான் பத்து லட்சம் ரூபாய் செலவு செய்து சீலே, பொலிவியா, பெரூ எல்லாம் போய் வந்தேன். பத்திரிகையில் பயணக் கட்டுரை கேட்டார்கள். ஒரு கட்டுரைக்கான சன்மானம் 900 ரூ. (மீதி நூறு வருமான வரிக்காகப் பிடித்துக்கொள்வார்கள்.) எழுத்தாளன் என்ன செய்வான்? பிச்சைதான் எடுப்பான். மூடப் பதர்கள் நான் பிச்சை எடுக்கிறேன் என்று எழுதுகின்றன. பிச்சை எடுத்து எடுத்துப் பழக்கம் ஆகி விடுமாம், அதனால் லஜ்ஜையின்றி பிச்சை எடுக்கிறேனாம். ஆனால் சினிமாக்காரன் ஏழு கோடியில் படம் எடுத்து பத்தே நாளில் எழுபது கோடி லாபம் எடுக்கிறான். யார் வீட்டுக் காசு? எழுத்தாளனைப் பிச்சைக்காரன் என்று சொல்லும் கபோதிகள்தான் இத்தனை கோடியையும் சினிமாக்காரனுக்குக் கொட்டிக் கொடுக்கின்றன. சினிமாக்காரன் குண்டியை நக்கித் திரிகின்றன.

போகட்டும். நான் எழுத வந்தது வேறு விஷயம். சில இயக்குனர்கள் தங்கள் படத்தை எனக்கு அனுப்பி பார்க்கச் சொல்கிறார்கள். என் மீது உள்ள மரியாதையின் காரணமாக என்னிடம் அவர்களின் படம் பற்றி கருத்தும் கேட்கிறார்கள். ஆனால் எல்லாம் இலவசம். என் நேரத்துக்கான எந்தக் கட்டணமும் இல்லை. எத்தனை காலத்துக்கு நான் ஓசியிலேயே வேலை செய்வது, நண்பர்களே? பல பத்திரிகைகளிலிருந்து கட்டுரை கேட்கிறார்கள். சன்மானம் ஆயிரம் ரூபாய். (நூறு போக தொள்ளாயிரம் கைக்கு வரும்.) நான் ஒரு கட்டுரைக்குப் பத்தாயிரம் கேட்டேன். ஓடி விட்டார்கள்.

சரி, இன்னும் எழுத வந்ததை எழுதவில்லை. நான் ஒரு ஒன்மேன் ஆர்மி என்று சொன்னேன். என் எழுத்து இயக்கத்துக்குப் பணம் வேண்டும். ”எழுதுகிறேன், கூலி கொடுங்கள் என்று கேட்கிறேன். அதிலும் எல்லோரும் கொடுக்க வேண்டியதில்லை, விருப்பப்பட்டோர் மட்டும் கொடுங்கள்” என்று கேட்கிறேன். சிலர் அனுப்புகிறீர்கள். அதில் பலர் அஞ்சாயிரம் பத்தாயிரம் என்று அனுப்புகிறார்கள். எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

இப்போது கூட ரொப்பங்கி இரவுகள் நாவலை செழுமைப்படுத்துவதற்காகத்தான் ஜப்பான் செல்கிறேன்.

இந்த நிலையில், என் எழுத்து இயக்கத்துக்கு யார் யார் உதவி செய்கிறார்களோ அவர்களோடுதான் நான் தனிப்பட்ட முறையில் நட்பு வைத்துக்கொள்ள முடியும். ஸ்ரீராம், சீனி போன்ற நண்பர்கள் எனக்குப் பணம் கொடுத்தது இல்லை. ஆனால் பணத்தை விட மிக முக்கியமான உதவியைச் செய்கிறார்கள். ஆகவே அது முடியாதவர்கள் பண உதவியாவது செய்தால்தான் நான் அவர்களுக்காக என் நேரத்தைச் செலவிட முடியும். ஒரு நண்பர் சொன்னார், உங்களுக்காக என்னிடம் பத்து வைன் பாட்டில்கள் உள்ளன. வெளிநாட்டு வைன். அனுப்பவா என்று கேட்டார். எப்படியும் இருபதாயிரம் ரூபாய் இருக்கும். வேண்டாம் என்று சொல்லி விட்டேன். என் பூனைகளுக்கான உணவுதான் வேண்டும். வைன் ஆடம்பரம். தேவையில்லை. இன்னொரு நண்பர் இன்று இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பூனை உணவை அனுப்பி வைத்தார். இந்த மாதத்துக்கான பூனை உணவுக் கவலை தீர்ந்தது.

இந்தப் பதிவை இன்று எழுத நேர்ந்ததன் காரணம், ஒரு நண்பர் என்னைப் பத்து ஆண்டுகள் கழித்துத் தொடர்பு கொண்டார். வாழை பட விமர்சனம் காரணம். (இப்படி சுமார் இருபத்தைந்து பேர் தொடர்பு கொண்டார்கள். எல்லோருடனுமே பேசி பல ஆண்டுகள் இருக்கும்.) சந்திக்கலாமா என்று கேட்டார். சந்திப்போம் என்றேன். வாழை படத்துக்கு அவர் எழுதிய விமர்சனத்தை அனுப்பி வைத்தார்.

படிக்கவில்லை. அதனால்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன். என்னோடு நட்புறவு கொள்ள வேண்டுமானால் என் இயக்கத்திற்கு உறுதுணையாய் இருங்கள். உங்களால் முடிந்த பண உதவியைச் செய்யுங்கள். அது சிரமம் என்றால் தூரத்திலேயே இருந்து படித்துக்கொண்டிருக்கலாம். உங்களுக்கும் பிரச்சினை இல்லை. எனக்கும் பிரச்சினை இல்லை.

சாமியார்களும் இயக்கமாகத்தான் செயல்படுகிறார்கள். அவர்களிடம் நீங்கள் குறைந்த பட்சம் ஐயாயிரம் ரூபாய் கொடுக்காவிட்டால் அவர்களின் முகத்தைக் கூட பார்க்க முடியாது. லட்சக்கணக்கான பேர் திரள்கிறார்கள். கேட்டால் அன்னதானம் செய்கிறோம், அதற்குத்தான் பணம் வேண்டும் என்கிறார்கள். அவர்களை ஏன் யாரும் பிச்சைக்காரன் என்று சொல்வதில்லை?

அனுராக் காஷ்யப் தனக்குப் படத்தை அனுப்பி வைத்தால் கூடவே ஒரு லட்சமும் அனுப்ப வேண்டும், அப்போதுதான் உங்கள் படத்தைப் பார்ப்பேன் என்று எழுதி விட்டார். சந்திப்பதாக இருந்தாலும் ஒரு லட்சம் கட்டணம். எனக்கு அவ்வளவெல்லாம் வேண்டாம். என்னோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஐந்தாயிரமோ பத்தாயிரமோ கட்டணம். உங்கள் விருப்பம். படத்தைப் பார்க்க வேண்டுமானால் 25000 ரூ. அது பற்றி விவாதிக்க வேண்டுமானால் 50000 ரூ.

***

சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரங்கள்:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai