The Existential Weight of Spoons – 2

(முன்குறிப்பு: இந்தக் கதையில் பலதரப்பட்ட சம்பவங்களும் கருக்களும் கலந்து கட்டி வரும் என்பதாலும் வீடு என்ற தலைப்பு தட்டையாக இருப்பதாலும் வீடு என்ற தலைப்பை மாற்றி விட்டேன்.)

உண்மையில் பூனைக்கு உணவிடுவதில் மட்டும் சூரிய நாராயணன் பிரச்சினை பண்ணவில்லை.  நீங்கள் யோசிக்க வேண்டும்.  மனைவி பைத்தியம் பிடித்துச் செத்தாள்.  அம்மா பைத்தியம் பிடித்துச் செத்தாள்.  அப்பாவும் பைத்தியம் பிடித்துச் செத்தார்.  மனைவியும் அப்பாவும் செத்தது பெருமாளும் வைதேகியும் அங்கே குடி போவதற்கு முன்னால்.  ஆனால் அவன் அம்மா பைத்தியம் பிடித்து, மனநோய் நாளுக்கு நாள் முற்றிச் செத்ததை அவர்கள் கண் கொண்டு பார்த்தார்கள்.

திடீரென்று அந்த அம்மாள் ”இந்த வீட்டுக்கு ஒரு திருடன் வருகிறான், அவனைப் பிடிக்க ஒரு போலீஸ் வர வேண்டும்” என்று புலம்ப ஆரம்பித்தார். நாளடைவில் புலம்பல் அதிகரித்தது.  சூரிய நாராயணன் பெருமாளிடம் வந்து அவன் செல்வாக்கைப் பயன்படுத்தி வீட்டுக்கு ஒரு போலீஸை வரவழைக்க அவன் உதவி செய்ய வேண்டும் என்று கெஞ்சினான். 

”வேறு ஒன்றுமே செய்ய வேண்டாம், ஜஸ்ட் இங்கே வந்து என் அம்மாவிடம் அஞ்சு நிமிடம் பேசினால் போதும்.  அம்மா சரியாகி விடுவார்” என்றான். 

பெருமாளும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி மைலாப்பூர் கச்சேரி ரோடு ஸ்டேஷனிலிருந்து இன்ஸ்பெக்டரை வரவழைத்தான்.  அது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை.  மிகப் பெரிய இடத்து சிபாரிசை நாட வேண்டியிருந்தது.

இன்ஸ்பெக்டரும் வந்தார்.  வந்த ஆள் சீருடையில் வரக் கூடாதா?  மஃப்டியில் வந்து தொலைத்தார்.  ஜீப்பும் இல்லை.  பைக்தான்.  நாராயணனின் அம்மா அவரைப் போலீஸ் என்று நம்பவில்லை. 

”என் மகனும் அந்தத் திருடனும் கூட்டு.  அதனால் என் மகனேதான் சதித் திட்டம் போட்டு திருடனின் கூட்டாளியான உங்களை (ஆம், உங்களை என்றுதான் குறிப்பிட்டார்) இன்ஸ்பெக்டர் என்று சொல்லச் சொல்லி அனுப்பியிருக்கிறான்.”

வேறு மாதிரி இருந்திருந்தால் போங்கடா என்று சொல்லிவிட்டுப் போயிருப்பார் இன்ஸ்பெக்டர்.  ஆனால் தாக்கீது வந்தது ரொம்பப் பெரிய இடம் இல்லையா? இன்ஸ்பெக்டரால் ஒன்றும் செய்ய முடியாது.  ”சரி, நான் யூனிஃபார்மோடு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். 

சொன்னபடி அன்று மாலையே சீருடையோடு வந்தார்.  ஆனால் அந்த அம்மாள் அப்போதும் நம்பவில்லை.  சினிமா ஷூட்டிங்குக்காக இந்த மாதிரி யூனிஃபார்ம்கள் வாடகைக்குக் கிடைக்கும்.  அதைத்தான் நீங்கள் போட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்றார்.

பிறகு இன்ஸ்பெக்டர் ”சிறந்த போலீஸ்” என்ற விருதை ஐ.ஜி.யிடம் பெற்றுக்கொண்டு விரைப்பாக சல்யூட் அடிக்கும் புகைப்படத்தைக் காண்பித்து தான் நிஜப் போலீஸ் என்று அந்த அம்மாளை நம்ப வைத்தார்.

பிறகு அந்த அம்மாள் நான் போலீஸிடம் தனியாகப் பேச வேண்டும் என்றார். 

பேசிய பிறகு பார்த்தால் படு பயங்கரமான கதைகள் வெளியே வந்தன.  இன்ஸ்பெக்டர் அதை பெருமாளிடம் தனியாகச் சொன்னார். 

நாராயணன் ஒரு இளம் பெண்ணை அடிக்கடி அங்கே கூட்டிக்கொண்டு வந்து கூத்தடிக்கிறானாம்.  அந்தப் பெண் அந்த வீட்டில் உள்ள நகைகளையும் மற்ற விலைமதிப்பு மிக்க பொருட்களையும் திருடிச் சென்று கொண்டிருக்கிறாள். 

அதற்கெல்லாம் பெருமாள் என்ன செய்ய முடியும்?  அந்த அம்மாள் கத்திக் கத்திப் பார்த்து விட்டு ஒருநாள் செத்து விட்டார்.  

கொலையா, தற்கொலையா, இயற்கை மரணமா, எதுவும் தெரியாது.

பூனை விஷயத்தை விட செடிகொடிகளுக்குத் தண்ணீர் விடும் விஷயத்தைக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தான் நாராயணன்.  தண்ணீர் ஒழுகி ஒழுகி எங்கள் வீடே இடிந்து விழுந்துவிடும் போலிருக்கிறது என்று அனுதினமும் குடியிருப்போர் சங்கத்துக்கும் வைதேகிக்கும் மெஸேஜ் அனுப்பினான்.  மீண்டும் ஒருமுறை பெருமாளை சந்திக்க மொட்டைமாடிக்குக் காலை ஏழு மணிக்கு வந்தான்.  ”என் வீடு மட்டும் அல்ல, இந்த அடுக்குமாடிக் கட்டிடமே உங்கள் மனைவி செய்யும் காரியத்தினால் இடிந்து விழப் போகிறது, உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை, இங்கே பிரச்சினை என்றால், உடனடியாக இன்னொரு வீட்டுக்குப் போய் விடுவீர்கள், ஆனால் நாங்களெல்லாம் சொந்த வீட்டுக்காரர்கள், வேறு எங்கேயும் போக முடியாது” என்று பலவாறாகப் புலம்பினான். 

’பூனை விஷயம் எனக்கு சம்பந்தம் இல்லை’ என்று வைதேகியைக் கை காண்பிக்க முடிந்த பெருமாளால் செடி விஷயத்தில் அப்படிச் செய்ய முடியவில்லை. 

”சரி, ஒன்று செய்கிறேன்.  மணி ப்ளாண்ட் எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்து விடுகிறேன்” என்றான் பெருமாள். 

சொல்லும்போதே அவனுக்குத் தெரியும், அப்படி ஒன்றும் அவன் செய்யப் போவதில்லை என்று. 

அதைக் கேட்ட பிறகும் நம்பிக்கை இல்லாமல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தான் நாராயணன்.  கிட்டத்தட்ட அவனுடைய ஜென்ம எதிரியே மணி ப்ளாண்ட்தான் என்பது போல் பேசினான். 

இந்தக் குடைச்சல்களின் காரணமாக வைதேகியின் மனப்பிறழ்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது. 

ஆனால் பெருமாளுக்கு நாராயணன் தரும் மண்டைக் குடைச்சல்  ஒரு வேடிக்கை நாடகம் போல்தான் இருந்தது. 

திடீரென்று ஒருநாள் இரண்டு தடியன்கள் வந்து வீட்டு வாசலில் நின்றார்கள்.  என்னவென்று கேட்ட போது “மணி ப்ளாண்டையெல்லாம் பிய்த்துப் போட நீங்கள் வரச் சொன்னீர்கள் என்று நாராயணன் சார் அனுப்பினார்” என்றார்கள்.

பெருமாள் அமைதியாக “அதெல்லாம் அப்போதே பிய்த்துப் போட்டாயிற்றே?” என்று சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தான்.

ஆனால் வைதேகி கொலை வெறி ஆகி விட்டாள்.  அன்று பூராவும் நாராயணனுக்கு ஓத்தாம் பாட்டு.  அவளுக்கு அன்று நாள் பூராவும் காலி.  அதுதானே நாராயணனுக்கு வேண்டும்?  வைதேகியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி சாகடிக்க வேண்டும் என்பதை வெகு நேர்த்தியாக ஒரு வரைபடம் போட்டுச் செய்வது போல் செய்து கொண்டிருந்தான் அவன்.  பெருமாள் அதை வைதேகியிடம் பொறுமையாக விளக்கினான்.  ”அந்தத் தேவடியாப் பயல் செய்வதை அப்படியெல்லாம் என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது” என்று நிர்த்தாட்சண்யமாக மறுத்து விட்டாள் வைதேகி. 

அப்படியானால் சாவு என்று விட்டு விட்டான் பெருமாள்.

ஆஹா, பெருமாள் சொன்ன ஒரு முக்கியமான கதையை விட்டு விட்டேனே?  உண்மையில் அதைத்தான் அவன் கதையின் ஆரம்பத்தில் எழுதச் சொன்னான்.  ஏனென்றால், அதுதான் கதையின் ஆரம்பத்தில் நடந்தது. 

பெருமாளும் வைதேகியும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குப் போன புதிதிலேயே ஆரம்பித்து விட்டான் நாராயணன். 

“உங்கள் வீட்டில் உள்ள ஒரு பாத்ரூமைப் பயன்படுத்தாதீர்கள்.  பயன்படுத்தினால் கீழே உள்ள கடையில் ஒழுகுகிறது.  இல்லாவிட்டால் ஒன்று பண்ணலாம்.  ஒரு பதினைந்து நாள் கொடுங்கள்.  ஆட்களை அனுப்பி உங்கள் வீட்டு பாத்ரூமை ரிப்பேர் பண்ணி விடுகிறேன்.  அந்தச் செலவை நீங்கள் வாடகையில் கழித்துக்கொண்டு என்னிடம் கொடுத்து விடுங்கள்.”

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறுவதற்கு முன்னால் அந்த இடம் முழுவதற்கும் சொந்தக்காரனாக இருந்தான் நாராயணன்.  பிறகு அந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டி விற்றான்.  விற்ற போது பாதி வீடுகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டான்.  தரைத்தளத்தில் இரண்டு பகுதிகளை ஒரு பகுதியை ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கும் இன்னொரு பகுதியை ஒரு துணிக்கடைக்கும் வாடகைக்கு விட்டான்.  அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரில்தான் ஒழுகுகிறதாம். 

பெருமாளுக்கு முதலில் நாராயணன் சொன்ன கணக்கு புரியவில்லை.  வைதேகி விளக்கினாள்.  ”மராமத்து செய்ய அம்பதாயிரம் ரூபாய் ஆகிறது என்று வைத்துக்கொள்.  நம் வீட்டு பாத்ரூமை மராமத்து செய்வதால் நம் வீட்டு உரிமையாளர்தானே பணம் தர வேண்டும்.  அதை நம்மிடமிருந்து வசூலித்துக் கொள்கிறேன், நீங்கள் உரிமையாளருக்கு வாடகை கொடுக்கி வேண்டாம் என்கிறான் அந்த அயோக்கியன்.” 

அப்படியெல்லாம் வீட்டில் கொத்தனார்களை விட்டுக்கொண்டு தேவுடு காக்க முடியாது என்று மறுத்து விட்டாள் வைதேகி.

ரெண்டு நாள்தான் ஆகும் மேடம் என்றான் நாராயணன். 

”அதெல்லாம் இல்லை.  நீங்கள்தான் பதினைந்து நாள் ஆகும் என்று முதலில் சொன்னீர்கள்.  ரெண்டு நாளே ஆனாலும் கொத்தனார்களை வீட்டுக்குள் விட முடியாது.  வேண்டுமானால் நாங்கள் அந்த பாத்ரூமைப் பயன்படுத்தாமல் இருந்து கொள்கிறோம்.”

பெருமாளைப் பிடித்தது சனியன்.  பெருஞ்சனியன்.  அந்த வீட்டில் மூன்று பாத்ரூம்கள்.  ஒன்று, வைதேகியின் படுக்கை அறையில்.  இரண்டு, பெருமாளின் படுக்கை அறை.  மூன்று, பெருமாளின் நூலக அறை. 

வைதேகி அவளுடைய படுக்கை அறைக் கழிப்பறையைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டாள்.  இரவில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் தன் அறையிலிருந்து கிளம்பி நூறு அடி தூரத்தில் உள்ள நூலக அறைக்குப் போய் விட்டு வந்தாள்.

நித்திரையிலிருந்து எழுந்தால் மீண்டும் அதே ஆழ்ந்த நித்திரைக்குள் அவளால் போய் விட முடியும்.  ஆனால் பெருமாளால் முடியாது.  அவன் சிறுநீர் கழிக்கப் போகும்போதே கண்களை மூடியபடி, சுவரைத் தடவியபடிதான் போவான்.  கண்களைத் திறந்தால் நித்திரை காலி. 

ஏழு ஆண்டுகளாக வைதேகி அவள் அறையிலிருந்த கழிப்பறையைப் பயன்படுத்தவில்லை. 

இதனால் பெருமாளை எப்படி சனியன் பிடித்தது என்றால், வைதேகி குளிப்பதற்கும் மற்ற காரியங்களுக்கும் நூலக அறையில் உள்ள குளியலறையைப் பயன்படுத்த ஆரம்பித்தாள்.  அப்படித்தான் பெருமாளைச் சனியன் பிடித்தது.

ஏன் இந்த சின்ன பக்கெட் க்ளாஸட்டின் பக்கத்தில் இருக்கிறது?  பக்கெட்டில் மூத்திரம் பட்டு விடாதா?

(எப்படிப் படும்?  ஆண்கள் மூத்திரம் போவதும் பெண்கள் மூத்திரம் போவதும் சம்பந்தமே இல்லாத வெவ்வேறு காரியங்கள் அல்லவா?)  பெருமாள் வாயே திறக்க மாட்டான்.  வீட்டைப் பொருத்தவரையில் அவன் ஒரு காது கேளாதவன்.  வாய் பேச முடியாதவன்.  அவ்வளவுதான். 

ஏன் உன் டாய்லட் இப்படி நாறுகிறது?  பயன்படுத்தி விட்டுத் தண்ணீர் ஊற்ற மாட்டாயா?  எத்தனை முறைதான் நான் சொல்வது?  நீ என்ன சின்ன பிள்ளையா?  ஏன் இத்தனை சோம்பேறியாக இருக்கிறாய்?  உன்னோடு ஒருத்தி கூடக் குடும்பம் நடத்த முடியாது. உன்னைப் பார்த்தால் சிரித்துக்கொண்டும் தளுக்கிக்கொண்டும் கொஞ்சுகிறாள்களே தேவடியாள்கள், அந்தத் தேவிடியாக்களில் ஒருத்தி கூட உன்னோடு ஒரு நாள் கூட வாழ முடியாது.  நானே தினந்தினம் உன் டாய்லட்டைக் கழுவி சுத்தம் செய்து சாகிறேனே, உனக்கு இரக்கமே இல்லையா?  உனக்கு வேலை செய்து வேலை செய்தே செத்து விடுவேன் போலிருக்கிறதே?  காலையில்தான் இடுப்பு ஒடிய ஒடியக் கழுவி விட்டேன்.  இப்போது பார், ரயில் கக்கூஸ் மாதிரி ஆகி விட்டது.  தரை பூராவும் ஒரே கால் காலாக இருக்கிறது.  டாய்லட் கழுவியே நான் சாகப் போகிறேன் பார்.

பெருமாள் பதில் பேச மாட்டான்.

பொதுவாக நான் பெருமாளிடம் கேள்வி கேட்க மாட்டேன்.  அப்படிப்பட்ட நானே இது பற்றி அவனிடம் கேட்டு விட்டேன். அதற்கு அவன் பதில்:

இதோ பார், அவள் சொல்லும் எல்லா குற்றத்துக்கும் என்னிடம் பதில் உண்டு.  நானும் மலம் கழித்து விட்டு பத்து பக்கெட் தண்ணீர்தான் ஊற்றுகிறேன்.  அப்போதும் நாறுகிறது என்றால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.  அது அவளுடைய மனப் பிராந்தி.  நான் என்ன இயற்கை உணவா சாப்பிடுகிறேன், என் மலம் மணப்பதற்கு?  அதற்காக கொடூர நாற்றம் அடிக்கிறாற்போலெல்லாம் இருக்காது என் மலம்.  அப்படியெல்லாம் சாப்பிடுபவன் அல்ல நான்.  மட்டுமல்லாமல் அவள் ஒரு சுத்தப் பைத்தியம்.  இன்னொரு முக்கியமான விஷயம்.  இவளை யார் வேலைக்காரி வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொன்னது?  வருபவர்களையெல்லாம் ஏதாவது சொல்லி விரட்டி விடுகிறாள், பிறகு எப்படி வருவார்கள்?  இவளுக்கு எல்லாமே பர்ஃபெக்டாக இருக்க வேண்டும்.  அப்படி யாரும் வேலை செய்ய மாட்டார்கள்.  மேலும், இவள் எனக்காக எதுவுமே செய்வதில்லை.  வாரம் இரண்டு முறைதான் சமையல்.  அதிலும் நான் முக்கால்வாசிப் பங்கெடுக்கிறேன்.   காலை உணவும் நான்தான் செய்கிறேன்.  தினமும் இரண்டு மாதுளம் பழம் உரித்துத் தருகிறேன்.  வண்டி வண்டியாகப் பாத்திரம் தேய்க்கிறேன். 

(இதற்குப் பிறகு அவன் விவரித்த்தையெல்லாம் நான் சொல்லப் போவதில்லை.  உங்களுக்கு அலுப்படித்து விடும்.  சுருக்கமாகச் சொன்னால், ஒரு நாளில் எட்டு மணி நேரம் பெருமாள் வைதேகிக்கு எடுபிடி வேலை செய்கிறான்.  ”டேய், அவளுக்கு நான் குண்டிதான் கழுவி விடுவதில்லை.  மற்ற அத்தனையும் செய்கிறேன்” என்று முடித்தான்.)

முப்பது ஆண்டுத் திருமண வாழ்வில் வைதேகிக்கு ஒரு பெட்ரூம்.  பெருமாளுக்கு ஒரு பெட்ரூம்.  வைதேகிக்கு ஒரு டாய்லட்.  பெருமாளுக்கு ஒரு டாய்லட்.  அதனால் பெட்ரூமை வைத்தோ, டாய்லட்டை வைத்தோ அவர்களுக்குள் அடிபிடி சண்டை வந்த்தில்லை.  அதற்கும் உலை வைத்தான் நாராயணன்.  பெருமாளின் டாய்லட்டை வைதேகி பயன்படுத்த ஆரம்பித்த நாளிலிருந்து தினமும் பெருமாளுக்கு டாய்லட்டை வைத்து ஓத்தாம் பாட்டு கிடைத்துக்கொண்டிருந்தது.  (தனித்தனி பெட்ரூம் என்பதற்கும் செக்ஸுக்கும் சம்பந்தம் இல்லை.  இருவரும் நித்திரை கொள்ளும் நேர வேறுபாட்டினால் ஏற்பட்ட சமரசத் திட்டம் அது.  வைதேகி நள்ளிரவு ஒரு மணிக்குப் படுப்பாள்.  பெருமாள் பத்து மணிக்குப் படுப்பான்.  அதனால்தான் தனித்தனி பெட்ரூம்…)   

சந்தா/நன்கொடை அனுப்பித் தாருங்கள்.

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா

***

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

வங்கி விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai