இயல்பும் பிறழ்வும்


என்னுடைய பத்து பிராமண நண்பர்கள் பற்றிச் சொன்னேன்.  அதில் ஒருவரை என் வாழ்விலிருந்து அப்புறப்படுத்தி விட்டேன்.  காரணம், அவர் வினித்திடம் போய் சாரு குடித்துக் குடித்து வீணாய்ப் போகிறார் என்று சொன்னார்.  முப்பது ஆண்டுகளுக்கும் மேல் நெருங்கிப் பழகிய நண்பர்.  வினித் அந்தத் தகவலை என்னிடம் சொல்ல மாட்டார் என்று எப்படி அவர் நினைத்தார் என்பதுதான் எனக்கு ஆச்சரியம்.  தகவல் பற்றி அவரிடம் விசாரணை செய்த போது அதற்கு சப்பைக்கட்டாக மேலும் அவமானகரமான விஷயங்களைச் சொன்னார்.  நீக்கி விட்டேன்.  நல்லவர்தான்.  என் மீதான அக்கறையினாலும் அன்பினாலும் அபிமானத்தினாலும்தான் சொல்லியிருக்கிறார்.  இந்த அக்கறையும் அன்பும் அபிமானமும்தானே ஒருவர் மீது செலுத்தப்படும் மிகப் பெரிய வன்முறை என்பதைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்?

வினித் இந்த விஷயத்தை என்னிடம் போட்டுக் கொடுத்தது பற்றி வினித்துக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்.  இப்படிப் போட்டுக் கொடுப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்.  பொய்யாக இட்டுக்கட்டிச் சொல்வதுதான் தவறு.  இப்படி உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல்வது எனக்குச் செய்யும் நன்மை என்றே எடுத்துக்கொள்கிறேன்.  இப்படிப் போட்டுக் கொடுப்பது மிகப் பெரிய தவறு என்று சராசரிகள் கருதுகிறார்கள்.  அது அப்படி இல்லை.  உதாரணமாக, சந்தானம் என்பவர் என்னை ஒரு குடிகாரன் என்று நினைக்கிறார்.  அதை என்னிடம் சொல்லாமல் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டு திரிகிறார், அதே சமயம் என்னுடைய உற்ற நண்பராகவும் இருக்கிறார் என்றால் அவரோடு பழகும் நான் கேணப்பயல் என்று அர்த்தம்.  இதை அறிந்த ஒருவர் என்னிடம் இது பற்றிச் சொல்லியே ஆக வேண்டும், அதுதான் நட்புக்கு அடையாளம் என்று நினைக்கிறேன். 

மீதி ஒன்பது பேர் பற்றிக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.  அதன் தலைவி அவந்திகா.  இந்த ஒன்பது பிராமணர்களுமே எனக்கு புக்கர் பரிசு, நோபல் பரிசு எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பாடுபடுகிறார்கள்.  அவந்திகா என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தோன்றலாம்.  கடவுளிடம் வேண்டிக் கொள்கிறாள்.  அதுவும் ஒரு செயல்பாடுதானே?  இவர்கள் எல்லோருமே இந்த வகையில் என் நலம்விரும்பிகள்.  அதனால்தான் “நீ ரொம்பக் குடிக்காதே, தீயவர்களுடன் (அராத்து) பழகாதே, கிழிந்த பேண்ட் போடாதே, கெட்ட வார்த்தை பேசாதே” என்றெல்லாம் சொல்கிறார்கள்.  இதனாலெல்லாம் என் இமேஜ் பாழாகி எனக்கு நல்லது எதுவும் நடக்காமல் போய் விடுமோ என்பது இவர்களின் கவலையாக இருக்கிறது. 

பன்னாட்டுப் புத்தக விழாவுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன்.  கையில் வினித் கோவாவிலிருந்து வாங்கிக்கொண்டு வந்து கொடுத்த மணிகள்.  அதைப் பார்த்த அவந்திகா அதை உடனடியாக என் கையிலிருந்து பறித்து எடுத்துக்கொண்டாள்.  ”ஐயோ, இதெல்லாம் பெண்கள் அணிவது, நீ அணிந்தால் உன் இமேஜ் என்ன ஆவது?” என்று கேட்டாள்.   அன்றைய தினம் வெறும் முண்டக்கையுடன்தான் புத்தக விழா போனேன்.  மறுநாள் என் புத்தக அடுக்கில் ஒளித்து வைத்திருந்த வேறு இரண்டு மணிகளை எடுத்து என் கைப்பையில் ஒளித்து வைத்துக்கொண்டு காரில் செல்லும் போது அணிந்து கொண்டேன்.  வீட்டுக்குத் திரும்பும்போது மணிகளைக் கழற்றி கைப்பையில் போட்டுக் கொள்வேன்.  இப்படியே பன்னாட்டுப் புத்தக விழா கழிந்தது. 

அவந்திகாவைப் பொறுத்துக் கொள்ளலாம்.  மனைவி.  வேறு வழியில்லை.  நண்பர்களையும் அப்படிப் பொறுத்துக் கொள்ள வேண்டுமா என்பதுதான் என் கேள்வி.

என் இயல்பை மாற்ற முனைந்தால் என்ன ஆகும் என்பதற்கு இரண்டு உதாரணங்களைத் தருகிறேன். 

பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள்.  எழுத்தாளர்களுக்கான பகுதியில் அமர்ந்திருந்தேன்.  என்னுடைய ஒரு பக்கத்தில் ஷ்ருதி. இன்னொரு பக்கம் ரகு.  ஷ்ருதியின் இன்னொரு பக்கத்தில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார்.  அறுபது இருக்கும்.  ஆனால் எண்பது போன்ற தோற்றம்.  நீங்கள் யார் என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.  நான் பெயரைச் சொன்னேன்.  உடனே அடுத்த நொடி என்னிடமும் ஷ்ருதியிடமும் (ரகு அவர் பேச்சு கேட்கும் தூரத்தில் இல்லை) மேற்கத்திய நாடுகளின் இழிநிலையையும் இந்தியா எப்படி ஒரு சொர்க்க பூமியாக விளங்குகிறது என்பதைக் குறித்தும் நரேந்திர மோதி பேசுவது போல் ஒரு அரை மணி நேரம் இடைவிடாமல் கோவாவில் பெய்யும் மழையாகப் பேசிக்கொண்டே இருந்தார்.  ஒரு நொடி கூட நிறுத்தவோ இடைவெளியோ விடவில்லை. 

பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து சுவரேறிக் குதித்து வந்தவர் போல் தெரிந்தார். 

பிராமணர்.  பெரிய உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.  மேட்டுக்குடி என்பது அவருடைய மத்திய வயது மகள் வந்து அங்கே நின்றபோது புரிந்தது. 

எனக்கு அறிவுரைகள் சொல்லி, என்னை என் இயல்பிலிருந்து மாற்ற முனைந்தால் நானும் அந்தப் பைத்தியக்கார மனிதரைப் போல்தான் ஆவேன். 

அந்த மனிதர் செய்தது ஒரு வன்கலவி.  மூன்று பேரை வைத்து செய்திருக்கிறார்.  மறுநாள் வந்தால் அவரிடம் கடும் தகறாரு பண்ண வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தேன்.  ஆசாமி வரவில்லை.  எனக்கு எதிர்வினை ஆற்ற ஒரு நாள் ஆகும் என்று உங்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

இன்னமும் அந்த ஆசாமியால் assfuck பண்ணப்பட்டதாகவே உணர்கிறேன்.  அதனால் அந்த ஆசாமி மீது கடும் சீற்றத்தில் இருக்கிறேன்.

மூன்றாம் நாள்.  நானும் வினித்தும் பன்னாட்டுப் புத்தக விழாவில் ஒரு இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.  எதிரே வந்தார் ஒரு மூத்த எழுத்தாளர்.  பெயர் எனக்கு ஞாபகம் இல்லை.  அவரே பெயரைச் சொன்னதும் ஞாபகம் வந்து விட்டது. 

அவர் ஒரு அரை மணி நேரம் கோவா மழை போல் பேசினார்.  அதன் சுருக்கம் இது:

என் வயது எழுபத்து மூன்று.  இந்த எழுபத்து மூன்று வயதில் இதுவரை நூற்றி அறுபது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன்.  அதில் அறுபது புத்தகங்களுக்கு விருது கிடைத்திருக்கிறது.  கலைஞர் கையால் பொற்கிழி விருது, அதற்கு அடுத்த ஆண்டே கலைமாமணி விருது, பன்னீர் செல்வம் (யாருங்க இந்தப் பன்னீர்செல்வம்?) கையால் நல்லெழுத்தாளர் விருது, எடப்பாடி கையால் முத்தமிழ் விருது, ஜனாதிபதி கையால் அப்துல் கலாம் விருது, கவர்னர் கையால் அறிவியல் விருது, ஸ்டாலின் கையால் எழுத்தாளர் செம்மல் விருது, சாகித்ய அகாதமி கொடுக்கும் மொழிபெயர்ப்பாளர் விருது… (எனக்கு மறதி ஜாஸ்தி, இப்படியே ஒரு முப்பது விருதுகளைப் பட்டியலிட்டார் எழுத்தாளர்) என்று எல்லா விருதுகளையும் பெற்று விட்டேன்.   நோபல்தான் கிடைக்காமல் கண்ணாமூச்சி காட்டுகிறது.  அதனால்தான் என்னுடைய சேமிப்புப் பணத்தை எடுத்துக்கொண்டு சென்ற ஆண்டு ஆஸ்லோ சென்றேன்.  ஆஸ்லோ நார்வேயில் இருக்கிறது.  எக்கச்சக்க செலவு.  நேராக நோபல் கமிட்டி இருக்கும் அலுவலகத்துக்கே சென்று என்னுடைய நூற்றி அறுபது புத்தகங்களையும் கொடுத்தேன்.  என்ன, அதையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவில்லை.  உங்களுக்கு யாராவது மொழிபெயர்ப்பாளர்களைத் தெரியுமா சாரு?  (ஜெயமோகனைக் கேளுங்கள்.  சொல்வார்.)  தெரிந்தால் எனக்கு அவர்களின் ஃபோன் நம்பர் கொடுங்கள்.  நோபல் கமிட்டிக்காரன் என் புத்தகங்களைப் பார்த்து விட்டு மிரண்டு விட்டான். ”ஏற்கனவே உங்கள் நாட்டிலிருந்து ஒருத்தர் வந்து புத்தகங்களைக் கொடுத்தார்.  பெரிதாக மீசை வைத்திருந்தார்.  பெயர் ஞாபகம் இல்லை” என்றான். ஜெயமோகனாக இருக்க வாய்ப்பு இல்லை.  அவருக்கு மீசை கிடையாது.  அதோடு அவர் எதற்கும் அவராகப் போக மாட்டார்.  யாராக இருக்கும் என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்.  யூகிக்க முடியவில்லை.  உங்களால் யூகிக்க முடிகிறதா?   (எனக்குத் தெரியும்.  பெருங்கவிக்கோ.  ஆனால் நூற்றி அறுபதுக்காரர் என்னைப் பேசவே விடாமல், என் பதிலையே எதிர்பார்க்காமல் பொழிந்துகொண்டிருந்தார்.)   நோபல் மட்டும் கிடைத்து விட்டால் இத்தனை ஆண்டுகள் உழைத்த உழைப்புக்குப் பயன் கிடைத்ததாக இருக்கும்.  என்ன சொல்கிறீர்கள் சாரு?  (சொல்ல விட்டால்தானே ஐயா?)  

இப்போது வேளச்சேரியில் என் மகள் வீட்டில் இருக்கிறேன்.  மகளுக்கு இரண்டு பிள்ளைகள்.  ஒரு ஆண்.  ஒரு பெண்.  பையனின் பெயர் பெருவழுதி.  பெண்ணின் பெயர் ஔவை. பையன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.  (பள்ளிக்கூடத்தின் பெயரைச் சொல்கிறார்.  ஞாபக மறதியுள்ள எனக்கு அந்தப் பள்ளிக்கூடத்தின் பெயர் மறந்து விட்டது.) பெண் முதல் வகுப்பு படிக்கிறாள்.  அதே பள்ளிதான். பள்ளிக்கூடத்தில் ஸ்விம்மிங் பூல் இருக்கிறது.  ஸ்விம்மிங் கற்றுக் கொடுக்கிறார்கள். (ஐயோ!) மலையேற்றத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள்.  நான்தான் தினமும் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அழைத்துக்கொண்டு போய் விடுகிறேன்.  (ரஜினி கூட செய்கிறார் சார்!) சாய்ங்காலம் நாலு மணிக்கு ஸ்கூல் விட்டு விடுகிறார்கள்.  நானேதான் போய் அழைத்துக்கொண்டு வருகிறேன்.  பேரக்குழந்தைகளுக்கு இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி?

ஆனால் முன்னைப் போல் சுறுசுறுப்பாக இயங்க முடிவதில்லை.  களைப்பாக இருக்கிறது.  அதை விட முக்கியமான பிரச்சினை, மறதி.  சட்டென்று உங்கள் பெயர் மறந்து விடுகிறது.  நீங்கள் ஜெயமோகனா, சாரு நிவேதிதாவா?  பிறகுதான் உங்கள் கிழிந்த பேண்ட்டைப் பார்த்து சாருதான் என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடிகிறது.  ஜெயமோகன் கட்டம் போட்ட சட்டை போடுவதை விட்டு விட்டாலும் இன்னும் கிழிந்த பேண்ட் போட ஆரம்பிக்கவில்லை இல்லையா?  நல்ல துடிப்பான இளைஞர்.  (என்னது?)  அவர் என்ன நூறு புத்தகங்கள் எழுதியிருப்பாரா?  நான் நூற்றி அறுபது.  இன்னும் பத்து புத்தகங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வரத் தயாராக இருக்கிறது.  ஆமாம் சாரு, லிட்ர்ரி ஏஜெண்ட் லிட்ர்ரி ஏஜெண்ட் என்கிறார்களே, அப்படியென்றால் என்ன?  எழுதினால் போதாதா?  ஏஜெண்ட் எல்லாமா வைத்துக் கொள்ள வேண்டும்?  கலைஞனுக்கு இதெல்லாம் தேவையா?  நம்முடைய இண்டெக்ரிட்டி என்ன ஆவது?  நாம் என்ன வீடு கட்டியா விற்கிறோம், ஏஜெண்ட் வைத்துக் கொள்வதற்கு? எனக்கும் அப்படித்தான் போன வருஷம் ஒரு ஏஜெண்ட்டைப் பிடித்துக் கொடுத்தார்கள்.  கலைவிழியோ என்னமோ பெயர்.  எஸ் ஐ ஐ டியில் படிக்கிறாள்.  அவளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.  அகப்படவே  இல்லை.  நீங்கள் கண்டால் சொல்லுங்கள்…

அன்னார் பேசிக்கொண்டிருக்கும்போதே பக்கத்தில் கவனித்தேன்.  வினித் எப்போதோ தப்பிப் போய் எதிரே இருந்த ரைட்டர்ஸ் லவுஞ்ஜில் நின்றுகொண்டு ’சாவுங்க, சாவுங்க’ என்பது போல் கைகளால் சைகை காட்டிக்கொண்டிருந்தார்.  நானும் அதையே சாக்காக வைத்து “நண்பர் அழைக்கிறார், வருகிறேன்” என்று சொல்லி விட்டுக் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் அங்கிருந்து தப்பி வினித்திடம் சென்றேன்.

அந்த மூத்த எழுத்தாளர் இப்படி சடாரென்று நான் தப்பி ஓடி விடுவேன் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.  ’இத்தனை அநாகரீகமாகவா நடந்து கொள்வார்கள்?’ என்பது போல் எங்கோ வெறித்துப் பார்த்து விட்டு கால்களை முன்னே எடுத்து வைத்தார்.

மூத்தவரின் கோவா மழை பொழிந்து கொண்டிருந்தபோது என் சிந்தனை முழுவதும் ‘இவர் இன்னும் எவ்வளவு நேரம் பேசுவார், இன்னும் என்னென்ன பேசுவார்’ என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே இருந்தது.  அரை மணி நேரத்துக்கு மேல் தாங்க முடியவில்லை.  ஓடி விட்டேன்.

நண்பர்களே, நாற்பதுக்கு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் – நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேர் – இப்படிப்பட்ட மனநோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.  இதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழிதான் உள்ளது.  அது சாரு நிவேதிதாவைப் படிப்பது.  இல்லாமல் சாருவுக்கே அறிவுரை கூற முனைந்தால் உங்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.