செல்வா ஒரு பன்னிரண்டு சிறுகதைகள் எழுதியிருப்பார். ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன் அனுப்பினார். எல்லா தஞ்சாவூர்க்காரர்களையும் போல அவை என்ன ஆயின என்று என்னிடம் அவர் கேட்கவில்லை. நானும் அப்படியே விட்டுவிட்டேன். கதைகளின் மொழி பிரமாதமாக இருந்ததாக நினைவு. அப்புறம் அவரைப் பார்க்கும்போதெல்லாம் திரும்பவும் அந்தக் கதைகளை அனுப்பி வைக்கும்படி சொல்வேன். அவரும் எல்லா தஞ்சாவூர்க்காரர்களையும் போல இதோ என்பார். கதை வராது. நானும் அப்படியே மறந்து விடுவேன். இன்று காலை ஒரு பதினைந்து இருபது பக்கத்துக்கு மேற்கண்ட தலைப்பில் மதுவும் சாருவும் என்ற பொருளில் தான் கண்டதையும் கேட்டதையும் பற்றி எழுதி அனுப்பியிருந்தார். படு உற்சாகமாக இருந்தது. பத்து நண்பர்களுக்கு அதை வாட்ஸப்பில் அனுப்பி வைத்தேன். ஒளிப்பதிவாளர் செழியன் அரை மணி நேரத்தில் அதைப் படித்துவிட்டு அருமையான ஒரு பதிலை அனுப்பியிருந்தார்.
”அருமையான பதிவு. எனக்கும் குடிப்பழக்கம் இல்லை; ஆனால் சென்னையின் அத்தனை பார்களுக்கும் குடிக்கும் நண்பர்களுடன் சென்றிருக்கிறேன். இந்தப்பதிவு படிக்கும்போதே உற்சாகம் தருகிறது.
பிக்காஸோவின் red period Blue period போல ரெமி மார்ட்டின் காலம், சீலே வைன் காலம் என்று நீங்கள் குறிப்புகள் எழுதலாம். நடனம்- டக்கீலா-கோவா என்றொரு memoir எழுதலாம். காலைப்பொழுதை இனிமையாக்குகிறது. இந்தப்பதிவு.நன்றி சார்
செழியன்
இதேபோல் பல நண்பர்கள் பதில் அனுப்பியிருந்தார்கள். சீனி இதைப் படித்து விட்டு உற்சாகமாகி இதை இன்னும் விரிவாக எழுதுங்கள் என்று சொல்லி விட்டார். அத்தனை விஷயம் இருக்கிறது. சிக்மகளூர் ஒரு உதாரணம். ஒரு தோழியுடனும் செல்வாவுடனும் சென்றிருந்தேன். மலைக்காடு. கடும்பனி. கேம்ப்ஃபையர். அற்புதமான லோக்கல் வைன். நான் குடிக்கவில்லை. அதையெல்லாம் செல்வா இன்னும் விவரித்து ஒரு பயணக் கதை போல் எழுதலாம். அவருக்கு மொழி பிரமாதமாகக் கைகொடுக்கிறது. சுவாரசியமாக எழுதுகிறார். எனவே அவர் இந்தத் தொடரை எழுதி முடிக்கும் வரை நாம் காத்திருக்கலாம். ஆனாலும் ஒரே ஒரு பகுதியை மட்டுமாவது உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியதால் அந்தப் பகுதியை மட்டும் இங்கே தருகிறேன். இனி செல்வா. (செல்வாவின் முழுப் பெயர் செல்வகுமார் கணேசன். நண்பர்களின் பெயர்களைச் சுருக்கி அழைப்பது என் வழக்கம். தோழிகளாக இருந்தால் பிரச்சினையே இல்லை. எல்லோருக்கும் ஒரே பெயர்தான். குட்டி.)
***
கோவாவிற்கு மழைக்காலத்தில் சென்றோம். எப்போதும் அடர்த்தியாக பெய்து கொண்டே இருக்கிறது மழை. அஞ்சுனா கடற்கரை மொத்தமும் குப்பை கழிவுகள். அலைகள் குப்பைகூளத்தை புரட்டிப் புரட்டி பொழுதுபோக்கிக் கொண்டிருந்தன. நீர் கலங்கி சேறு போல இருந்தது கடல். அப்படி ஒரு கோவாவைக் கண்டதே இல்லை. கடற்கரையோரம் ஒன்றிரண்டு நபர்கள். ஒரு கடையில்லை. மனிதர்களின் சப்தமில்லை. நடுக்கடலில் தென்படும் ஒரு ஆளில்லா தீவு போலிருக்கிறது கடற்கரை. காற்றில் குடை பிடிக்க முடியவில்லை. அங்கே நிற்க முடியாமல் அறைக்குத் திரும்பிவிட்டோம்.
சாருவும், கருந்தேளும் பேசிக்கொண்டு இருந்தார்கள். சாருவுக்கு இரண்டு சீலே வைன் பாட்டில்கள் இருந்தன. மற்றவர்கள் பியர், ரம் என்று வைத்திருந்தார்கள். மாலை நேரம் நெருங்கும் போது, சாருவின் இரண்டு வைன் பாட்டில்களும் காலியாகியிருந்தன. அறையில் யாரும் திறக்காத அரை லிட்டர் அளவுக்கு ஒரு டக்கீலா இருந்தது. அதைத் திறந்தார் சாரு. இருட்டத் தொடங்கியதும் டக்கீலாவும் தீர்ந்திருந்தது. இரவு தொடங்கும் நேரம் குடிப்பதற்கு எதுவும் இல்லை என்றதும் சாரு ”ஓ! இனி என்ன செய்வது? இன்னும் ஒரே ஒரு பெக் டக்கீலா இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்றார். வினீத்தும் நானும் ஒரு குடையை எடுத்துக் கொண்டு கிளம்பினோம், கொஞ்ச தூரத்திலேயே பெட்டிக் கடை அளவு இருக்கும் ஒரு வைன் ஷாப்பில் டக்கீலா இருந்தது. ஆனால், சிறிய பாட்டில். அதில் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு இன்னும் மூன்று பாட்டில்களை வாங்கி பையில் போட்டுக் கொண்டோம். இந்த மழையில் கடைக்காரர் சீக்கிரம் மூடிவிட்டுப் போய்விட்டால் சரக்கு இல்லாமல் முழு இரவும் என்ன செய்வது? எதற்கும் இருக்கட்டும் என்று கொண்டு வந்தோம்.
ஆனால், சாரு ஒரு பாட்டிலோடு நிறுத்துவார் என்று தோன்றவில்லை. மேலும், எங்களை அந்தோனின் ஆர்த்தோ குறித்த ஒரு சினிமாவை பார்க்கச் சொன்னார். அன்று முழுவதுமே அதுவே பேச்சாக இருந்தது. ருராமுரிகள் வாழ்வும் அதிலிருந்து சாரு ஒப்பிட்டுச் சொல்கின்ற கதைகளும் என்று தொடர்ச்சியாக பன்னிரெண்டு மணி நேர பேச்சில் அயர்ந்து தூங்கப் போய்விட்டோம். அப்போது மணி அதிகாலை மூன்று இருக்கலாம்.
மறுதினம், காலை ஏழு மணிக்கு எழுந்து வந்தால், வாசலில் இருந்த சின்ன திண்ணையில் அமர்ந்து கொண்டு, நல்ல சாரலில், பாடல்கள் ஒலிக்க சாருவும் கருந்தேளும் புகைத்துக் கொண்டிருந்தார்கள், இரண்டு இராட்சசர்கள் போல. நான் எப்போதும் சாருவை ஒரு சாதரண மனிதன் அல்ல என்றுதான் நம்புகிறேன். அவர் எத்தனை சாதரணமாக, இயல்பாக நம்முடன் இருந்தாலும் அவர் வேறு ஒருவர் என்றுதான் தோன்றும். இது வெறும் குடிக்கும் திறனால் எழுந்த எண்ணம் அல்ல. குடியை மீறி அவர் முன்னிறுத்துவது கொண்டாட்டம் என்னும் புதிய கலாச்சாரத்தை. கொண்டாட்டத்தை எப்படி ஒருவர் கொள்கையாக வைத்திருக்க முடியும்? அதற்கு எனக்கு சாருவை தவிர முன்னுதாரணங்கள் இல்லை.
(மொத்தம் எத்தனை போத்தல் என்று கணக்குப் போட்டீர்களா செல்வா? ரெண்டு வைன் போத்தல், அரை போத்தல் டக்கீலா, நீங்கள் கொண்டு வந்த நான்கு குவாட்டர் போத்தல் டக்கீலா. மொத்தம், ரெண்டு வைன் போத்தல், ஒன்றரை லிட்டர் டக்கீலா. அடப்பாவி, தென்னமெரிக்கர்களால்கூட இப்படிக் குடிக்க முடியாதே? இவன் அசுரனா, மனிதனா? – சாரு)
செல்வாவின் இந்தத் தொடருக்கான கட்டணத்தை எனக்கு அனுப்பி விடுங்கள். செல்வா முதலாளி, நான் தொழிலாளி.
செல்வா, உற்சாகமாக இந்தத் தொடரை எழுதுங்கள். எல்லோருக்குமே பிடித்திருக்கிறது. பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
சந்தா மற்றும் நன்கொடை அனுப்புவதற்கான விவரம் கீழே:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai