திறவாய்! திறவாய்! நின் தயவாலே… – செல்வா (செல்வகுமார் கணேசன்)

(செல்வா என்று அழைப்பதே சகஜமாக இருக்கிறது என்பதால் செல்வா என்றே குறிப்பிடுகிறேன். இந்தக் குறிப்பு ஒரு சிறுகதை போலவே இருக்கிறது. செல்வாவுக்கு உரைநடை வெகு லாவகமாகக் கைகூடுகிறது. அவர் எழுதப் போகும் தொடரின் முதல் அத்தியாயமாக இதைக் கொள்க. ஓரிரண்டு இடங்களில் க், ச் சேர்த்திருக்கிறேன் செல்வா. உதாரணமாக, பள்ளிகூடம் என்பதை பள்ளிக்கூடம் என்று ஆக்கினேன். ஆனால் ஒன்றிரண்டு இடங்கள்தான் என்பது ஆசுவாசமாக இருந்தது. எனவே இந்தப் பிரதியையே இறுதிப் பிரதியாக வைத்துக்கொள்ளுங்கள்.தொடர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள். இப்போது கூட என் இளம் நண்பர்களோடு ஒரு மலை வாசஸ்தலம் செல்கிறேன். நீங்களும் வந்தால் நன்றாக இருக்கும். சபையில் குடிக்காமல் இருப்பவர்களால்தான் எனக்கு நன்மை அதிகம். – சாரு)

சாரு ஒரு முறை என்னையும் அராத்துவையும் நாகூருக்கு அழைத்தார்.  சாரு படித்த பள்ளிக்கூடத்தில் அவர் ஒரு சிறப்புரை ஆற்ற வேண்டியிருந்தது. மேலும், முன்னாள் மாணவர்களின் சந்திப்பும் திட்டமிடப்பட்டு இருந்தது.  அதாவது, சாருவுடன் படித்த மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள்.  சாருவின் பள்ளித் தோழிகளும் வருவார்கள் என்று குஷியாக சொன்னார்.  நான் வேறு அப்போது 96 சினிமாவை நினைவுபடுத்திக் கொண்டேன்.  தலைவர் சின்ன வயதில் செய்த சம்பவம் எதுவும் சபைக்கு வரும் என்று ஆர்வமாக இருந்தது.

காரைக்காலுக்கு சென்று தங்கிக்கொண்டு அங்கிருந்து நாகூர் சென்று வரலாம் என்று திட்டம்.  கிளம்ப இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும்போதே சாரு என்னிடம் வைன் ஓப்பனர் இருக்கிறதா என்று கேட்டார்.  என்னிடம் சோடா ஓப்பனர் இருந்தது.  வைன் ஓப்பனர் என்று ஒரு கருவியை நான் அதுவரை கேள்விபட்டதில்லை.  ஆனால், சாருவிடம் அதெல்லாம் வழியில் வாங்கிக்கலாம் சாரு என்றேன். சரிதான் என்றார்.  எதற்கும் எச்சரிக்கையாக இருக்கலாம் என்று நினைத்து, அராத்துவிடம் வைன் ஓப்பனர் இருக்கிறதா என்று கேட்டேன்.  அவரும் அதெல்லாம் சரக்கு வாங்கும்போது வாங்கிக்கலாம் செல்வா என்றார்.

கிளம்பவேண்டிய தினத்துக்கு முன்தினமே நான் அவசர வேலையாக திருவண்ணாமலை போய்விட்டேன்.  சாருவுடன் திண்டிவனத்தில் இணைந்து கொள்ளலாம் என்று ஒரு சமாதானம், அதில் ஒன்றும் குழப்பமில்லை என்றாலும் வைன் ஓப்பனர் கவனத்தில் இல்லாமல் போய்விட்டது.  திண்டிவனம் தாண்டி ஓடிப்பிடித்து காரில் ஏறும் போது, செல்வா வைன் ஓப்பனர் என்று ஞாபகப்படுத்தினார் சாரு.  நான் அராத்துவை பார்த்தேன்.  ”அதொன்றும் பிரச்சனையில்லை.  இப்போதுதான் பதினோறு மணி ஆகிறது.  நாம் மாலை ஆறு மணிக்குத்தான் குடிக்கப் போகிறோம்.  பார்த்துக்கலாம்” என்றார் அராத்து.  ஆனால், எனக்குள் கவுளி சத்தமிட்டது.  இதோ வைன் ஓப்பனர் இருக்கிறது என்று சாருவிடம் காட்டிவிட்டால் நாம் தளர்வாக இருக்கலாம்.  ஏனென்றால் எதையும் சாரு இப்படி அடிக்கடி ஞாபகப்படுத்துபவர் அல்ல.

பாண்டிசேரி தாண்டும்போது சாரு காபி சாப்பிடலாம் என்றார்.  வண்டி நின்றது.  நான் காபியை தியாகம் செய்துவிட்டு அருகில் இருந்த ஃபேன்ஸி ஸ்டோருக்குள் நுழைந்து வைன் ஓப்பனர் கேட்டேன்.  சோடா பாட்டில் ஓப்பனரைக் காட்டினார்கள்.  அதிலிருந்து பத்து கடை தாண்டி ஒரு வைன் ஷாப் இருந்தது.  வைன் ஓப்பனர் என்றேன்.  ம்ஹூம்,  எப்போதாவது வைன் பாட்டில்களோடு இலவசமாக வருமாம்.  மற்றபடி வைன் ஓப்பனர் விற்பதில்லை என்றார்கள். சும்மா மூடி திருகினால் திறந்துக்கும் சார், எதுக்கு ஓப்பனர் என்றார் சேல்ஸ்மேன்.  அவரை கல்லாவில் இருந்தவர் முறைத்துவிட்டு என்னிடம் ஓப்பனர் வைன் ஷாப்பில் கிடைக்காது சார்.  நீங்கள் டிபார்மெண்ட் ஸ்டோரில் போய் கேளுங்கள் என்றார்.

பாண்டிசேரி ஊருக்குள் நுழைந்தால் காரைக்காலுக்கு போவது தாமதமாகிவிடும்.  காரைக்காலில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இல்லாமலா போய்விடும்?  பார்த்துக்கலாம் என்று கிளம்பிவிட்டேன்.

சீர்காழி தாண்டும்போது கடும் மழை பிடித்துக் கொண்டது. கார் வைப்பரில் எதுவோ பிரச்சனை.  கண்ணாடி முழுவதும் வெண்ணை தடவியது போல ஆகிவிட்டது.  எதையும் காணமுடியாத அளவுக்குப் போய் காரோட்டி வண்டியை ஓரம் கட்டிவிட்டார்.  செய்தித்தாள், சோப்பு கரைசல், ஷாம்பு என்று என்னென்னவோ போட்டு கழுவுகிறோம். ஆனால், கார் கண்ணாடி தெளியவே இல்லை.  மழையில் நனைந்தபடி அராத்து இறங்கிவந்து உதவினார்.  என்ன சிக்கல் என்றே புரியவில்லை.  வைப்பர் போட்டால் ரோடு மறைந்துவிடும்.  போடாவிட்டால் மழையில் எதிரில் இருப்பது ரோடா எருமைமாடா என்றே தெரியாது.

வண்டியை உருட்டிக் கொண்டே போய் காரைக்காலை அடைந்தபோது இரவு எட்டு மணி.  அவசர அவசரமாக செக்-இன் செய்து லக்கேஜை போட்டுவிட்டு வெளியில் கிளம்பினோம்.  சாரு தன் பையிலிருந்து ஒரு போத்தலை எடுத்து வெளியில் வைத்துகொண்டே, இப்போது வைன் ஓப்பனருக்கு என்ன செய்யலாம் என்றார்.  அராத்து இன்னும் அவருக்கு சரக்கு வாங்கிக் கொள்ளவில்லை.  உணவு, பழங்கள், சாலட் செய்ய காய்கள், சிறுதீனிக்கு எதேனும்… இருங்கள் சாரு.  பத்து நிமிடம், நாங்கள் வெளியில் போய் கொஞ்சம் பொருட்கள் வாங்க்கிக் கொண்டு வந்துவிடுகிறோம் என்றார் அராத்து. 

சாரு சென்னையிலிருந்து வரும்போதே வைன் பாட்டிலோடுதான் வந்திருக்கிறார் என்றே எனக்கு அப்போதுதான் புரிந்தது.  தேன் சுவையுடைய வெளிநாட்டு பானம்.  அதன் கார்க் மூடியை கவனித்துவிட்டுதான் சாரு அப்போதிருந்து  வைன் ஓப்பனரில் கவனமாக இருந்திருக்கிறார். 

தங்கும் விடுதியை விட்டு வெளியில் வந்தால்தான் தெரிகிறது, காரைக்கால் என்பது சற்று பெரிய கிராமம்.  பஸ் ஸ்டாண்ட் தொடங்கி ஒரு வளைவு, அவ்வளவுதான் மொத்த கடைத்தெருவே.  அதிலும் இரவு எட்டேகாலுக்கு எல்லோரும் கடையை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.  முதலில் ஒரு கடையில் நுழைந்து வைன் ஓப்பனர் கேட்டேன். இல்லை.  ஆனால், அங்கே அராத்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட் வாங்கினார்.  வினோதமாக இருந்தது.  எதுக்குங்க இது.  ஹோட்டல் பாத்ரூமில் நல்ல பக்கெட் இருந்தது. 

இல்லை செல்வா, நான் பியர் வாங்கப்போறேன்.  அறையில் ஃப்ரிஜ் இல்லை.  பியர் கூலிங்க் போய்ட்டால் குடிக்க நல்லா இருக்காது.  பக்கெட்டில் போட்டு வைத்துக்கொண்டால் கூலிங் குறைய நேரம் எடுக்கும் என்றார். 

அதுக்கு ஐஸ்கட்டி வேணும்ல என்றேன்.

அத்தனை சொகுசெல்லாம் கிடைக்காது.  வெறும் பக்கெட் இருந்தாலே கூலிங் நிக்கும்.  உங்களுக்கு குடிக்கும்போது காட்றேன் பாருங்க.

எனக்கு திகைப்பாக இருந்தது.  புதிய ஊர் என்பதால் தேடித்தேடி உணவும், பியரும், பழங்களும், பழம் நறுக்க கத்தியும், தட்டுகள், வைன் கிளாஸ், (ஆனால் வைன் ஓப்பனர் எங்கேயும் இன்னும் கிடைக்கவில்லை) இறுதியாக விடுதியை நெருங்கியபோது, நாங்கள் புறப்பட்டு ஒருமணி நேரம் ஆகியிருந்தது. சாரு பசியிலிருப்பார்.  பசியை விடுங்கள்.  தனியாக சரக்கு பாட்டிலின் முன் அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டிருப்பார். அது போன்ற ஒரு சித்திரம் தோன்றியது.  பலகீனமாக ஏங்க சாருவுக்கு வைன் ஓப்பனர் என்றேன்.  அப்போதுதான் அராத்துவுக்கும் அதே சித்திரம் மனதில் தோன்றியிருக்கும் போல. விடுங்கள் பியர் சாப்பிட சொல்லலாம் என்றார்.  புதுமனைவி, முதலிரவு, பேசிக்கொண்டிருக்கலாம் என்று சொன்னால்….

வாய்ப்பில்லைங்க என்றேன். 

சரி, அப்போ இருங்க என்று சொல்லிவிட்டு, மூடிக்கொண்டிருந்த ஒரு ஹார்ட்வேர் கடைக்குள் போனார். ஒரு சுத்தியல், ஸ்குரு டிரைவர், கட்டிங் பிளேயர், சில ஸ்குருக்கள்…எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு அறைக்குப் போனோம். கற்பனைச் சித்திரம் போலவே இருந்தது சூழல்.  வைன்பாட்டிலை எடுத்து ஆராய்ந்தார் அராத்து.  எங்களிடம் வைன் ஓப்பனர் இல்லை என்பது புரிந்தது சாருவுக்கு.  மூடியை திறந்ததும், ஒரு இரண்டங்குல ஸ்குருவை எடுத்து, கார்க்கில் வைத்து மெதுவாக சுத்தியலால் தட்டினார்.

நிச்சயம் பாட்டில் உடையப் போகிறது என்று எனக்கு தோன்றியது.

பிறகு ஸ்குரு டிரைவரால் மெல்ல அழுத்தி சுற்றினார் ஸ்குருவை.  கான்கிரிட் சுவரில் எதுக்களிப்பது போல ஸ்குரு உள்ளே செல்ல மறுத்தது.  சாருவை பார்த்தேன்.  தியானத்தில் அமர்ந்திருப்பதைப் போல அமைதியாக இருந்தார்.  பாட்டிலை பிடித்துக் கொள்ளுங்கள் செல்வா, நான் இது போல பலமுறை திறந்திருக்கிறேன் என்றார்.

எனக்கு நம்பிக்கை இல்லை. அது தேர்தல் சமயம் என்று நினைவு. ஒயின்ஷாப்பைக் கூட மூடிக் கொண்டிருந்தார்கள்.  கார்க் இல்லாத ஒயின் பாட்டில் ஒன்றை போய் வாங்கிவர வேண்டும் என்றது உள்ளுணர்வு.  ஆனால், அராத்து மும்முரமாக பிளம்பர் வேலையை செய்து கொண்டிருக்கிறார்.  ஒயின்பாட்டில் கார்க், பொரி பொரியாக உதிர்கிறது.

ஏங்க, அந்த கார்க்கை வெளியில் எடுப்பதற்கு பதில், உள்ளே கோலிசோடா மாதிரி தள்ளிவிட்டால் என்ன என்றேன்?

சாரு பதில் சொல்லவில்லை.  அதெல்லாம் போகாதுங்க என்றார் அராத்து.

ஆண்டாள் திருப்பாவையில் வருவது போல மனதுக்குள், திறவாய், திறவாய்  தயை புரிவாய் என்று வைன் பாட்டிலை பிடித்தபடி மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன்.

பிளம்பிங் வேலையை நிறுத்தாமல் மும்முரமாக இருந்தார் அராத்து.   சரியாக அரைமணி நேரம் கழித்து, ஸ்குரு கார்க்கை துளைத்து நின்றது, கட்டிங் பிளேயரை வைத்து மெதுவாக இழுத்து கார்க்கை வெளியில் எடுத்தபோதுதான் நிம்மதியாக இருந்தது.

முதல்கோப்பை வைனை அருந்தியதும் சாரு சகஜமாகிவிட்டார்.  அராத்து இல்லாமல், வைன் ஓப்பனர் இல்லாமல் அன்று இரவை நினைத்துப் பார்க்கிறேன்.  இல்லை, எனக்கு அப்படி நினைத்துப் பார்க்க விருப்பமில்லை.

அன்று இரவு ‘பழி’ நாவலைக் குறித்து பேச்சு வந்தது.  நள்ளிரவு இரண்டு மணி இருக்கும். அய்யனார் விஸ்வநாத்தை போன் செய்து சாரு எழுப்பியது நினைவில் இருக்கிறது.  வைன் ஓப்பனர் கொடுத்த டென்ஷனிலும், அதிலிருந்து விடுபட்ட மகிழ்வும் நினைவிருக்கிறது. அதனாலேயே அய்யனார் விஸ்வனாத்திடம் என்ன பேசினோம் என்பது நினைவில் இல்லை.

எனக்கு இன்றும் ஒரு சந்தேகம்.  பல வைன் பாட்டில்கள் கார்க் அடைத்துதான் வருகின்றன.  ஆனால், பலருக்கு வைன் ஓப்பனர் என்றால் என்னவென்று தெரியவில்லை.  எப்படி திறக்கிறார்கள்? எப்படி குடிக்கிறார்கள்?