புருஷன் நாவலை மீண்டும் ஒருமுறை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாவலை இத்தனை குறுகிய இடைவெளியில் இத்தனை முறை படித்தது இதுவே முதல் முறை. என்னால் ஒரு நாவலை இரண்டாவது முறை படிக்க இயலாது. மாரியோ பர்கஸ் யோசாவின் நாவல்களை மட்டுமே சில ஆண்டுகள் இடைவெளி கொடுத்து மீண்டும் படிப்பேன். வாசிப்பு இன்பத்துக்கு உதாரணம் மாரியோ பர்கஸ் யோசா. ஆனால் அராத்துவின் புருஷன் மாரியோ யோசாவையும் தூக்கி அடித்து விட்டது.
இந்த ஒரு பத்தியைப் படித்துப் பாருங்கள்:
என் எதிரே, கொஞ்சதூரத்தில் ஒரு ஜோடி எதிரும் புதிருமாக அமர்ந்திருக்கிறது. இரண்டு உயரமான ஸ்டூல்கள் மேல் அமர்ந்திருக்கின்றனர். அவன் எனக்கு முதுகும், அவள் எனக்கு முகமும் காட்டி அமர்ந்திருக்கிறார்கள். நான் பார்ப்பதை அவள் பார்த்து விட்டாள். அவள் உடல் மொழியை மாற்றிக் கொள்கிறாள். முக பாவனைகளில் அதீதம் வந்தமர்கிறது. கைகளை ஆட்டுவது, தலையை ஓவராக ஆட்டுவது எல்லாம் அதிகரிக்கிறது. சிரிப்பும் அடிக்கடி நளினமாக வெளிப்பட ஆரம்பிக்கிறது. தலைமுடியை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி மாற்றி ஒதுக்கியபடியே இருக்கிறாள். ‘எக்ஸ்ப்ரெஷன் குயின்’ ஆகிவிட்டாள்.
“ஏய், நேத்து ஈவ்னிங்தான் அவகூடப் பேசினேன்” என்று அவனிடம் சொல்வதை ….
ஏய் – ‘கண்களை விரித்து உதட்டைச் சுழித்து ஒரு சிரிப்பு’,
நேத்து – ‘இரண்டு கைகளாலும் ஒரு அபிநயம்’,
ஈவ்னிங்தான் – ‘தோள்களையும் முலைகளையும் ஒருசேர ஒரு குலுக்கு’,
அவகூட – ‘தலை சாய்ப்பு + முடி விலக்கல்’,
பேசினேன் – ‘மீண்டும் ஒரு பெரிய சிரிப்பு மற்றும் பார் முழுக்க அரை வட்ட வடிவில் மின்னல் கீற்றுபோல ஒரு துழாவல் பார்வை’.
அதாவது, பேசும் குரல் மட்டும் அவனுக்கு. காட்டும் ரியாக்ஷன் எல்லாம் எனக்கு. எனக்கு இது ஒரு ஹாபி. ஓணானுக்கு வாயில் புகையிலை வைத்து விடுவது போல பப்பில் எவளையாச்சும் இப்படி கிளப்பி விட்டு விடுவேன். அவளைக் கொஞ்சநேரம் இப்படி ஆட்டம் போட வைத்து ரசிப்பேன். பெண்கள் கும்பலிலும் ஒருத்தியை இப்படி கிளப்பிவிட முடியும். நீங்களும் இதை முயன்று பார்க்கலாம். ஆனால், பார்க்க ஓரளவு ஹேண்ட்ஸமாக இருக்க வேண்டும். இன்னொன்று, அநாகரீகமாக முறைத்துப் பார்க்கக் கூடாது. உங்கள் பார்வையில் அவளுக்கு நாசூக்காக ஏதேனும் செய்தி போகவேண்டும். நீங்கள் உதடுகளை அசைத்தீர்களா இல்லையா என்பது உங்களுக்கே தெரியாவண்ணம் ஏதோ அவளுடன் பேசுவதுபோல அசைக்க வேண்டும். இந்த மர்மப் பரிமாற்றத்திற்கு அவள் லாவகமாகக் கம்பனி கொடுப்பாள். இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா? ஒரு ஜாலிதான். துணியை அவுத்துப்போட்டு முண்டகட்டையாக ஆட்டிக்கொண்டு இருப்பது மட்டுமா ஜாலி?
நாவல் ஆட்டோநெரேட்டிவ் பப்ளிஷிங்கில் கிடைக்கும். அதன் முகவரி தெரியாவிட்டால் இந்த எண்ணுக்கு அழையுங்கள்: 94440 37663