சுயக்கட்டுப்பாடு

நேற்றோடு இந்தக் குடிப் பஞ்சாயத்து முடிவுகு வந்து விட்டது என்றே நினைத்தேன்.  ஆனால் செல்வாவின் கட்டுரை கிடைத்து மீண்டும் அது பற்றிய விவாதம் தொடர்வதற்குக் காரணமாகி விட்டது.  இப்போது நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைக்கு அடுத்து செல்வாவின் கட்டுரையை சில தினங்களில் பதிவேற்றம் செய்கிறேன்.  அரூ பத்திரிகையில் அராத்து எழுதிய கட்டுரைதான் என்னைப் பற்றிய கட்டுரைகளில் ஆகச் சிறந்ததாகச் சொல்கிறார்கள்.  என் கருத்தும் அதுவே.  அந்தக் கட்டுரை அளவுக்கு முக்கியமானதும் சுவாரசியமானதுமாகும் செல்வாவின் கட்டுரை.  எனக்கு என்னைப் பற்றிய விஷயங்கள் மறந்து போய் விடும்.  அதிலும் குடித்திருந்தால் மறுநாள் எதுவுமே நினைவில் இராது.  ஆனால் குடித்திருக்கும் நேரத்தில் படு நிதானமாகத்தான் இருப்பேன், பேசுவேன்.  இந்த நிலையில் பல்வேறு விஷயங்களை நினைவு கூர்ந்து மிகத் துல்லியமாக எழுதியிருக்கிறார் செல்வா.

நேற்றைய கட்டுரைகளில் நான் கூற மறந்த இரண்டு விஷயங்கள் இவை:

சென்ற மாதம் ஒரு ஃப்ரெஞ்ச் அதிகாரி ஒரு வைன் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.  ஃப்ரான்ஸின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பல்வேறு விதமான வைன் ரகங்கள்.  ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்த வைனும் ஒவ்வொரு ருசியில் இருக்கும்.  எனக்கு வைன் என்றால் உயிர்.  ஆனால் அவந்திகாவுக்கு எல்லா குடியும் ஒரே குடிதான்.  அவளைப் பொருத்த வரை டாஸ்மாக்கில் குடித்து விட்டு ரோட்டில் மட்டையாகிக் கிடப்பவனும் ஃப்ரெஞ்ச் வைன் அருந்தும் நானும் ஒன்றுதான். எக்காரணம் கொண்டு அவந்திகாவை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது எனக்குப் பிடித்தமில்லை என்பதால் அன்றைய தினம் ஒரு 300 மில்லி அளவுதான் வைன் அருந்தினேன்.  வீட்டுக்குப் போன போது அவந்திகாவினால் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.  அவ்வளவு குறைந்த அளவு.  ஆனால் நூறு மில்லி பியர் குடித்தாலும் தெரிந்து விடும்.  வைனுக்கு மட்டும் இந்த விசேஷம்.  ஜப்பானிய சாக்கே அரை லிட்டர் குடித்தாலும் வாசனை வராது.  அது ஒரு சொர்க்க மது. 

பொதுவாக மதுவுக்கு ஒரு குணம் உண்டு.  கொஞ்சம் அருந்தினால் மது நம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடும்.  மட்டையாகும் வரை குடி குடி என்று சொல்லிக்கொண்டே இருக்கும்.  மனிதர்கள் தங்கள் உறுதிப்பாட்டை இழந்து மதுவின் பேச்சுக்குத் தலை அசைக்க ஆரம்பித்து விடுவார்கள்.  நான் அப்படி இல்லை.  போதும் என்றால் போதும்தான். 

ஒருமுறை நானும் தோழியும் துருக்கி சென்றிருந்தோம்.  அங்கே Smyrna என்று ஒரு ஊர் உள்ளது.  அங்கே தயாரிக்கப்படும் ஸ்மிர்னா வைன்தான் உலகின் மிகச் சிறந்த வைனாக வைன் பிரியர்களால் கருதப்படுகிறது.  பெரும் குடிகாரர்கள் வாழ்ந்த மொகலாய காலத்திலேயே இந்த ஸ்மிர்னா வைனுக்குப் பெரும் கிராக்கி இருந்தது.  அத்தனை சுலபத்தில் ஸ்மிர்னா வைன் கிடைக்காது.  ஒரு போத்தல் ஸ்மிர்னா வைனைக் கொடுத்தால் தேசத்தையே காட்டிக்கொடுத்து விடுவார்கள் என்று ஔரங்ஸேப் காலத்தில் வசித்த ஃப்ரெஞ்ச் பயணிகள் எழுதியிருக்கிறார்கள்.  ஔரங்ஸேப் பெரும் குடிகாரனான தனது தம்பி முராதை இந்த ஸ்மிர்னா வைனைக் கொடுத்துத்தான் கவிழ்த்தார்.  சிறைப்பிடித்துக் கொன்றார். 

நானும் தோழியும் ஸ்மிர்னா என்ற ஊரில் ஒரு உணவு விடுதியில் அமர்ந்திருக்கிறோம்.  ஒரு ஸ்மிர்னா வைன் போத்தலை எங்களிடம் எடுத்து வந்த பணியாளர் மேஜையிலிருந்த இரண்டு வைன் கோப்பைகளில் வைனை நிரப்பினார்.  என் தோழி ஒரு கோப்பையைக் குடித்தாள்.  மற்றொரு கோப்பையில் இருந்த வைனை நான் ஒரு ஸ்பூன் அளவுக்கு ருசி பார்த்தேன்.  உண்மைதான்.  உலகின் மிகச் சிறந்த வைன் ஸ்மிர்னாதான் என்று தெரிந்தது.  பிறகு அந்தக் கோப்பையையும் தோழியிடமே கொடுத்து விட்டேன். 

யார்?  உலகின் மிகப் பெரிய வைன் பிரியனான நான். 

அப்படிப்பட்ட எனக்குத்தான் எப்படிக் குடிக்க வேண்டும் என்று பாடம் எடுக்கிறார்கள்.

செல்வா எழுதிய கட்டுரையை இன்னும் விரிவாக எழுதலாம் என்று இருக்கிறார்.  விரைவில் அது பகுதி பகுதியாக வெளிவரும்.

இந்தக் கட்டுரைகளை நீங்கள் மதுவுக்கு ஆதரவான எழுத்தாகக் கொள்ளாமல் குடி பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  நான் மதுவுக்கு ஆதரவாளன் இல்லை.  எதிர்ப்பாளனும் இல்லை.  மது ஒரு உணவு. அசைவம், சைவம், அதிலும் பூண்டு வெங்காயம் சேர்க்காத சைவம் என்றெல்லாம் இருக்கிறது.  நாம் அது பற்றி விமர்சிக்கிறோமா?  எது சரி, எது தப்பு என்று விவாதிக்கிறோமா?  இல்லையே?  அதைப் போலவேதான் மதுவும்.  மது அருந்துவதோ அருந்தாமல் இருப்பதோ அவரவர் விருப்பம்.  அவ்வளவுதான் என் நிலை. 

மேலும், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு மது பற்றிப் பேசுவதில் அர்த்தமே இல்லை.  யாருக்கும் தகுதியும் இல்லை.  எனக்கும் சேர்த்தே சொல்கிறேன்.  ஏனென்றால், இங்கே மனிதர்கள் குடிப்பதற்குத் தகுதியான மதுவே இல்லை.  ஓரிரண்டு எலீட் கடைகளில் மூன்று மடங்கு விலையில் நல்ல வைன் கிடைக்கிறது.  சாமான்யர்களுக்கு அதை வாங்குவது சாத்தியமில்லை.  ஆனால் இலங்கையில் குக்கிராமங்களில் கூட நல்ல வைன் கிடைக்கிறது.  ஜேக்கப் க்ரீக் இலங்கையில் 800 ரூ.  இங்கே 2750 ரூ.  கோவாவில் 1200 ரூ.  இங்கே எத்தனை மடங்கு அதிகம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.  ஒரே நிறுவனத்தின் வைன்.  ஒரு இடத்தில் 800 ரூ.  இன்னொரு ஊரில் 2750 ரூ.  எந்தத் தகுதியில் நான் இந்த நாட்டில் மது பற்றிப் பேச முடியும்?