1. பேசும் மைனா

1

அப்படியொரு மைனாவைப்
பலரும் பார்த்திருக்க முடியாது.
மைனா என்று உணர்ந்துகொள்வதற்கே
நீண்ட காலமாயிற்று.
“பேசும் மைனாக்கள் அரிதினும் அரியவை”
என்றுதான் அது பேசத் தொடங்கிற்று.

“அடுத்த முறை உன்னை எப்போது சந்திக்கலாம்?”
என்று கேட்டதற்கு
எதுவும் பேசாமல் பறந்து போய்விட்டது.

2

நீண்ட காலத்துக்கப்பால் மீண்டும்
அதே மைனா என் வீட்டுச் சாளரத்தில்
வந்தமர்ந்தது
எதுவும் பேசாமல் ஏன் சென்றாய்
எனக் கேட்டேன்.

பறவைகளுக்குத் தர வேண்டிய
குறைந்த பட்ச மரியாதையைக் கூடத் தரத் தெரியாமல் இருக்கின்றாயே
என்று கடிந்து கொண்டது.

அமைதியாக இருந்தவனிடம்
“அடுத்த முறை எப்போது உன்னை எதிர்பார்க்கலாம்? என்றல்லவா நீ வினவி இருக்க வேண்டும்..?”

“சந்திப்பு என்பது சமமானவர்களிடையே நடப்பது.
நானும் நீயும் சமமல்லவே”
என்றது.
“நீ சொல்வதுதான் நியாயம்” என்றதும்
மென்மையாகப் புன்னகைத்தது.

3

உன்னிடம் ஒரு கேள்வி என்ற மைனா
“இந்த உலகை ஆள்வது கடவுளா?
சாத்தானா?’ என்றது

பதில் தெரியாததால்
மௌனமாக இருந்தேன்

நானே சொல்கிறேன் பதிலை
என்றது மைனா

“என் அவதானப்படி
சாத்தான்தான் உலகை ஆள்கிறான்”

‘எப்படிச் சொல்கிறாய்?
மனிதர்களுக்கு பக்தி
பெருகிக்கொண்டே இருக்கிறதே?”
எனக் கேட்டேன்

சப்தமாகச் சிரித்த மைனா
வழிபடுவது ஓரிடம்
பின் தொடர்வது ஓரிடம்
என்பதுதானே
மனிதக் கபடம்?
என்றபடியே பறந்து சென்றது.