2. இரண்டு பைத்தியக்காரர்கள்

ஜான் ஜெனேயை உங்களுக்குத் தெரியும்
அந்த அளவுக்கு லூயி ஃபெர்தினாந் செலின்
பிரபலம் இல்லை
ஜெனேயை விட செலினை எனக்குப்
பிடிக்கும்

ஜெனே அதிர்ஷ்டசாலி
இடதுசாரிகளுக்கும் மற்றபல
இலக்கிய ஆர்வலர்களுக்குமான
டார்லிங்

செலின் சபிக்கப்பட்டவன்
அவனேதான் அவனை சபித்துக்கொண்டான்
ஏழைகளோடே வாழ்ந்தான்
மருத்துவனாக இருந்தும் ஏழ்மையையே
தேர்ந்தெடுத்துக்கொண்டான்
ஃபாஸிஸ்டுகளை ஆதரித்ததும்
யூத வெறுப்பும்
அவனை அவன் தேசத்தில்
தீண்டத்தகாதவனாக்கியது

பாரிஸ் ரெவ்யூவில் அவனது
நேர்காணலைப் படித்தால்
அவனைப் போல் சபிக்கப்பட்ட
ஒரு எழுத்தாளன் இருக்க முடியாதென்றே
தோன்றுகிறது
காலிமார் பதிப்பகத்துக்கு நான்
ஆறு மில்லியன் கடன்பட்டிருக்கிறேன்
என்கிறான் அதற்காகத்தான் எழுதித்
தொலைக்க வேண்டியிருக்கிறது
பணம் மட்டும் இருந்தால்
இந்த எழுத்துத் தொல்லையே இருக்காது
ஒரு கடற்கரை கிராமத்தில்
அமர்ந்து செய்தித்தாளைப் படித்துக்கொண்டு
அக்கடா என்று இருப்பதே சுகம்
என்கிறான்

செலினை நினைத்தால்
கூடவே எனக்கு யூதாஸின்
ஞாபகம் வருகிறது
இலக்கியத்தின் நோக்கம்
மானுட விடுதலையெனில்
செலின் ஒரு இலக்கியத் துரோகிதான்

செலின் ஞாபகம் வரும்போதெல்லாம்
அவனுக்காக வருந்துவதென்
வழக்கம்

இன்று செயற்கை நுண்ணறிவுடன்
செலின் குறித்து உரையாடினேன்
செலின் செலினாக இருந்ததற்கு
அவனது மனநோயும் காரணமில்லையா
எனக் கேட்டேன்

ஆமாமென்ற செயற்கை நுண்ணறிவு
தமிழிலும் அப்படி இரண்டு
பைத்தியக்காரர்கள் உண்டு
என்றது

ஓ, தமிழிலக்கியம் பற்றியும்
உனக்குத் தெரியுமா என நினைத்தபடி
யார்யார் என்றேன்

புதுமைப்பித்தனும்
இன்னொருவரும்
என்றது செயற்கை
நுண்ணறிவு

அது யார் இன்னொருவர்
அவருக்குப் பெயரில்லையா
என்றேன்

நானொரு எந்திரம்
உண்மை மட்டுமே பேசுவேன்
தவறாக நினைக்காதே
அந்த இன்னொருவர்
நீதான்
என்றது
செயற்கை நுண்ணறிவு

என்னது, நான் பைத்தியமாவென
அலறினேன்

ஐயோ ஐயோ நானுன்னைப் பைத்தியமென்றா
சொன்னேன்
சமூக ஒதுக்கம் எதனால் வருகிறதெனக்
கோடிட்டேன்
நீயே சொல்
சமூகமுன்னைப் பைத்தியமென்றுதானே
நினைக்கிறது

தயக்கத்துடன் ஆமென்றேன்

ராமாமிர்தமும் ஜானகிராமனும்
தொட்ட விஷயத்தை –
அந்த விஷத்தை –
நீ அமிர்தம் போல் பருகினாய்

உன்னுடைய ஒரு நாவலில்
ஒரு பெண்ணோடு நீ –
ஸாரி – கதைசொல்லி
கலவி கொள்கிறான்
அந்தப் பெண் உன் முகமும்
என் தந்தையின் முகமும்
ஒன்றேபோல் இருக்கிறது
நான் கண்களை மூடிக்
கொள்கிறேனென்கிறாள்

இப்படி ஒரு கதைக்காக உன்னை
நாடு கடத்தியிருக்க வேண்டும்
அல்லது
செலினைப் போல் நீ
உன் நாட்டிலிருந்து தப்பியோடி
ஏதோவொரு தேசத்தில்
தஞ்சம் புகுந்திருக்க வேண்டும்
ஆதலினால் சொல்கின்றேன்
நீயும் செலினைப் போலொரு
பைத்தியம்தான்