3. மஹாத்மாவின் மிமிக்ரி

1

நரகத்திலிருந்து ஓர்
அழைப்பு
சிறப்பு விருந்தினராக
அங்கே சில காலம் தங்கி
நரகம் பற்றி ஓர்
நாவல் எழுத வேண்டும்

சிறப்பு விருந்தினனாக
எங்கே அழைத்தாலும்
செல்வேனென்பதால்
அழைப்பை ஏற்றுக்கொண்டேன்

நரகத்திலெனக்குப் பிரச்சினை
இருள்
அதிலென்ன பிரச்சினை
இருண்மை பற்றி எழுதியவர்தானே
நீரென்றார் சாத்தான்

வெளிச்சத்திலிருந்துதான் இருள்
குறித்து எழுத முடியும்
இருளிலிருந்தே இருள் குறித்தெழுதிப்
பழக்கமில்லை தேவரீரென்றேன்

வேறெப்படி வேண்டுமானாலும்
அழையுங்கள் தேவரீர் மட்டும்
வேண்டாமென்றார் சாத்தான்

பெயரில் ன் வந்தது கடவுளின்
சதி
அதற்காக விருந்துக்கு
அழைத்தவரை அவமதிப்பு
செய்யலாமா?
லூசிஃபரில் ர் இருக்கிறதென்றுதானே
ன் போட்டுப் பேர் மாற்றம் செய்தார்
கடவுள்?

மது விருந்தில் எனக்கு
அளிக்கப்பட்டது சீலே வைன்தானெ
ன்பதையதன் ருசியிலிருந்து
அறிந்து கொண்டேன்

சாத்தான் தன் கதை சொன்னார்
தெரிந்த கதையேயென்றாலும்
சாத்தானிடமிருந்தே கேட்பதிலொரு
சுவாரசியமிருந்தது

கடவுளுக்குப் பிடித்தமானவனாகத்தானி
ருந்தேன்
மிஷல் ஃபூக்கோவுக்கு முன்னதாகவே
யெனக்கு அதிகாரம் குறித்த
புரிதலுண்டாகி
எனக்கும் கடவுளுக்கும் லடாய்
வந்து விட்டது
தன்
எல்லையற்ற அதிகாரத்தைப்
பயன்படுத்தி என்னையிங்கு
அனுப்பி விட்டார் கடவுளென்
றார் சாத்தான்
தாங்களும் அதிகாரத்துக்கெதிரான
வரென்பதால்தான் இங்கே அழைத்தே
னென்று மேலும் பகர்ந்தார்

சாத்தான் அருந்துவது எந்த மதுவென்று
இருட்டில் தெரியவில்லை
மணம் மட்டும் புதிதாயிருந்தது
லோக்கல் சரக்கென்றார்

2

இளம் வயதில் ஜான் ஜெனே
படித்து
கள்வர் குறித்தும்
விபச்சாரிகள் குறித்தும்
சிறுமிகளையும் பெண்களையும்
வன்கலவி செய்து
கொலை செய்பவர் குறித்தும்
குழந்தைகள் மருந்தில் கலப்படம் செய்து
குழந்தைகளின் வாழ்வை
ஆரம்பத்திலேயே முடித்து வைப்பவர் குறித்தும்
கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனையும்
குழந்தைகளையும் விஷம் வைத்துக்
கொல்லும் பத்தினிகள் குறித்தும்
நம்பியவனை முதுகில் குத்திக்
கொல்பவர் குறித்தும்
மதத்தைக் காப்பாற்றுவதற்காக
மானுடரைத் தீர்த்துக்கட்டுபவர் குறித்தும்
குழந்தைகளின் முதுகில் இஸ்திரிப் பெட்டியால்
சூடு வைக்கும் பெண்மணிகள் குறித்தும்
காதலிகளின் முலைகளில் சிகரெட்டால்
சுட்டு விறைப்பு பெறும் ஆடவர் குறித்தும்
இன்னும் இது போன்ற பல
அசாதாரணர் குறித்தும்
கதையெழுத ஆர்வமுற்றேன்

சிறைச்சாலைதான் அதற்குத்
தகுந்த இடமென்று கண்டேன்

ஆனால் ஜெனேயின் தாயொரு
விபச்சாரி
சிசுவைப் பெற்றுப் போட்டுவிட்டு
இறந்தும் போய் விட்டாள்
தகப்பன் பேர் தெரியாது
சிறுவயதிலேயே திருட்டுத் தொழில்
அந்த அதிர்ஷ்டமெல்லாம்
நமக்கில்லையென்பதனால்
அரசுத் துறையில் கிளார்க்
வேலை கிடைத்தபோது
சிறைத்துறையைத் தேர்ந்தெடுத்தேன்

சிறைத்துறைத் தலைவரின்
பர்சனல் பிரிவில் போஸ்டிங்
கிடைத்து
அதிகாரிகளுக்கு எடுபிடியாகிப் போனேன்
சிறையும் சிறைவாசிகளும்
வெறுங்கனவாய்ப் போயிற்று

இப்போது இந்த நரகத்தில்
சிறப்பு விருந்தினனாக
வந்ததுவோர் நல்லதிர்ஷ்டம்
ஆயிரம் பக்கத்தில்
நாவல் நிச்சயம்

3

தங்கும் காலம் முடிந்து
பூமிக்குக் கிளம்பும்போது
ஒரு சம்பவம்
திடீரென ராம்ராம் என்ற
குரல் கேட்டுத் திடுக்கிட்டு
பாபுஜீ என்றேன்

ஆ, மாறுவேடத்திலிருந்தும் நீரென்னைக்
கண்டுபிடித்து விட்டீரேயென்றார்
மஹாத்மா

ராமரையும் உங்களையும்
மறக்க முடியுமா பாபுஜி
இப்போது பாரதமெங்கும்
உங்களை விட்டுவிட்டு
ராமரைப் பிடித்துக்கொண்டார்களெ
ன்றேன்

தெரியும் தெரியுமென முனகினார்
மஹாத்மா

ஆமாம், தாங்களெங்கே
இங்கே என்றேன்
அறம் போதிக்க வந்தே
னென்றார்

ஆ,
நரகத்துக்கும் வந்து விட்டதா
அறம்
என் நண்பனின் வாசகர்கள்
விடுதலைப் போராட்ட வீரர்போல்
செயல்படுகிறார்கள்
என்ன சொல்கிறீர் நண்பரே
என்று கேட்டார் மஹாத்மா
அது ஒன்றுமில்லை பாபுஜி
தமிழ்நாட்டு இலக்கியப் பிரச்சினை
யென்றேன்
அப்புறம் வேறென்ன பாபுஜி
வாழ்க்கை எப்படி ஓடுகிறது
சாகும் வரை உண்ணாவிரதமெல்லாம்
இருக்கிறீர்களா என்று கேட்டேன்
அதெல்லாம் பிரிட்டிஷ்காரர்களிடம்
செல்லுபடியாயிற்று
இங்கே சாத்தான் எப்படியென்று
ஸ்டடி பண்ணிக்கொண்டிருக்கிறேனென்றார்

மஹாத்மாவின் பேச்சைப் பலமுறை
கேட்டிருக்கிறேன்
ஆனால் இங்கே அவர் குரலில்
ஏதோவொரு மாற்றம்
ஜலதோஷமா பாபுஜி
ரெகுலராக ஆட்டுப் பாலெல்லாம்
குடிக்கிறீர்களா என்றேன்.

பதில் சொல்வதற்கு முன்பே
ஆ என்று கத்தினார்
பதற்றத்துடன் என்ன பாபுஜி
என்றேன்
கோட்ஸேவுக்காகக் காலணி
செய்து கொண்டிருக்கிறேன்
இருட்டில் கண் தெரியாமல்
கையில் குத்தி விட்டது
ஊசியென்றார்
பார்த்து செய்யுங்கள் பாபுஜி
என்று சொல்லிவிட்டுக்
கிளம்பினேன்

ஒரே ஒரு குறைதான்
இங்கே மாறுவேடத்திலிருக்கிறேன்
என்றார் மஹாத்மா
என்ன வேடமென்று
இருட்டில் தெரியாமல்
போயிற்று

நரகத்திலிருந்து வரும்போது
காந்தியின் குரல் யார் குரலெனத்
தெரிந்து போயிற்று