யோசித்தபடியே நடந்து
கொண்டிருந்தான் அந்த
இளம் பாதிரி
தான் பிறந்த மண்ணிலிருந்து
இத்தனை தூரம் வந்து
ஊழியம் செய்வோமென்று
அவன் கனவுகூட கண்டதில்லை
பூமிப்பந்தின் இன்னொரு மூலையிலி
ருக்கிறது இந்த தேசம்
இங்கே வர வேண்டுமென
அவனுக்குத் திட்டமேதுமில்லை
ஆனால்
இப்போது தன் தேசம்
திரும்புவதில் விருப்பமில்லை
அப்போது அவனெதிரே வந்தவொருவர்
’ஃபாதர், நீங்கள் இன்னார்தானே?’
என்றார்
ஆமென்றான் அந்த இளம் பாதிரி
‘உங்களை என் வீட்டிலெல்லோருக்கும்
பிடிக்கும் உங்களைப் பற்றித்தான்
பேசிக்கொண்டிருப்போம்’ என்றவர்
கேட்டார்
‘உங்களுக்கு காஃல்ப் ஆட்டம் தெரியுமா?’
’அட்சரம்கூடத் தெரியாது’
என்றான்
’உங்கள் தேசத்தில் கிரிக்கெட்
ஆட்டத்தில் அதிகப் பிரபலம்
யார்?’
பெயர் சொன்னான் இளம் பாதிரி
’இந்த தேசத்தில் கால்ஃபில்
அப்படிப் பிரபலமானவரென் தந்தை;
நானும் ஓரளவு பிரபலமே’ என்றவர்
தன் பேர் சொன்னார்.
சில தினங்களில் இருவரும்
சிநேகிதமானார்கள்
ஒருநாள் இளம் பாதிரியை
கால்ஃப் மைதானம் இட்டுச் சென்று
அவனுக்குக் கால்ஃப் பயிற்றுவித்தார்
அவர்
’எல்லோரும் முதல் அடியில் புல் கொத்துவார்கள்
நீங்கள் சரியாக ஆடினீர்கள்’ என்றவர்
சொன்னார்
‘கால்ஃபின் முதல் பாடம்
காலுக்கருகே பந்து
கையில் மட்டை
சிந்தையில் வேறேதும் கூடாது
ஆட வேண்டியது மட்டுமே
உங்கள் பணி’
ஒருநாள் இருவரும்
இரவு உணவுக்குச் சென்றார்கள்
அப்போது அவர் இளம் பாதிரியிடம்
கேட்டார்
‘ஃபாதர், நான் இறந்த பிறகு
சொர்க்கம் செல்வேனா, நரகமா?
அதையெப்படி அறிவது?’
பாதிரிகளிடம் கேட்கப்படும்
வழக்கமான கேள்வி
இளம் பாதிரி சொன்னான்
’உங்கள் கால்களுக்கு அருகில்
பந்து
கையில் மட்டை
சிந்தையில் வேறேதும் கூடாது
ஆட வேண்டியது மட்டுமே
உங்கள் பணி’