என் நண்பனின் தோழி
தென்னாட்டுத் திரையுலகின் காமதேவதை
இளம்வயதில் இறந்து போனாள்
தற்கொலையென்றார்கள்
கொலையென்றார்கள்
தற்கொலையென்றே உறுதியாய்
நம்பினேன்
ஒரு நட்சத்திரத்தின் தற்கொலையைப் போல
ஒரு நாய் அல்லது ஓநாயின் தற்கொலையைப் போல
ஒரு விருட்சத்தின் தற்கொலையைப் போல
ஒரு நதியின் தற்கொலையைப் போல
ஒரு நாகரீகத்தின் தற்கொலையைப் போல
ஒரு வனத்தின் தற்கொலையைப் போல
ஒரு இனத்தின் தற்கொலையைப் போல
ஒரு மொழியின் தற்கொலையைப் போல
ஒரு துறவியின் தற்கொலையைப் போல
நிகழ்ந்தது அந்த தேவதையின் தற்கொலை
அது தற்கொலையென்று நான்
அறிந்தது எப்படியென்றால்
நானும் தற்கொலை செய்து கொண்டபோது
ஒரு நாளில் இரண்டு மூன்று கவிதைகள் எழுதுகிறேன்
ஒரு நாளில் இரண்டு மூன்று தற்கொலைகளை நிகழ்த்துகிறேன்
மேலும்
இரண்டு மூன்று தற்கொலைகளைத் தள்ளிப் போடுகிறேன்