ஓர் அடிமையின் பாடல்

நான் யார்?

நான் நல்லவனா கெட்டவனா
ரெண்டும் கலந்தவனா
தெரியாது
ஆனாலொன்று
நான் அடிமை
எப்படியென்று சொல்கிறேன்

காதலிக்காக எதையும் செய்பவன்

நீ என் காதலி
என்னை விட்டு
அல்லது விடாமல்
என் நண்பனையும் காதலித்தால்
நானே உங்களுக்கு அறை ஏற்பாடு செய்வேன்
பொஸஸிவ்னெஸ்?
துளியுமில்லை

பேரழகி

நீ பார்க்க மயிலாக இருந்தாலும்
மந்தியாக இருந்தாலும்
பேரழகி என்பேன்
‘பொய் சொல்கிறாய்’
என்று நீ சொன்னால்
என் காதை வெட்டி
உன் கையில் கொடுப்பேன்

பிச்சை எடுத்து கொடுத்த கதை

என் மகனார் தன் மனையாளைப் படிக்க வைக்க
நாலு லகரம் கேட்டார்
நான் பிச்சையெடுத்த காசு
கொடுத்தேன்
கல்லில் நார் உரிப்பதுபோல்
ரெண்டு லகரம் உரித்தேன்
பிறகு அலுத்துப் போய் விட்டு விட்டேன்
மகனார் என்றில்லை
யார் கேட்டாலும்
என்னுயிரை அறுத்துக் கொடுப்பேன்

ஒரு பெண்
சந்தித்த அடுத்த தினம்
ஒரு லகரம் கேட்டாள்
கொடுத்தேன்
ஒரு ஆண்டில் திருப்பிக் கொடுத்தாள்
ஆனால் சொன்னாள்,
நான் யாரென்றே தெரியாமல்
இவ்வளவு கொடுத்ததை நம்ப முடியவில்லை.

பெண்ணென்றல்ல, ஆணுக்கும் அப்படியே
ஒரு நண்பன் வீடு கட்ட ஒரு லகரம் கேட்டான்
நான் பிச்சையெடுத்த காசு
கொடுத்தேன்

வெட்கமில்லா பிச்சைக்காரன்

எனக்கு சூடு சொரணை
வெட்கம் மானம் ரோஷம் எதுவும் கிடையாது
இப்படி ஒரு அடிமைஜீவியை நீவிர் காண்பதரிது
எத்தனையோ பேர் என்னை
பிச்சைக்காரன் என்று வையும்போதும்
என் ஐயன் தியாகராஜன் செய்ததையே
செய்கிறேன் என்று சொல்லிப் பம்முவேன்

மன்னிப்பும் மீட்டூவும்

நீவிர் என்ன சொன்னாலும் சரியென்பேன்
உம் தவறுக்கு நான் மன்னிப்புக் கேட்பேன்
நூறு முறை கேட்பேன்
நீவிர் பெண்ணாக இருந்தால்
அதை வைத்து என்னை மீட்டூவில் மாட்டி விடலாம்
ரேப் கேஸ்கூடப் போடலாம்

நண்பன் ஒருவன்
ரேப் கேஸில் சிக்கினான்
நீதிமன்றம் விடுதலை செய்தது
அவன் நிரபராதி என ஒரு நண்பனிடம் வாதித்தேன்
அப்படியானால் அவனேன்
அவளிடம் மன்னிப்புக் கேட்டானென்றான் நண்பன்

நான் கொஞ்சம் அதீதன்
மன்னிப்புக்கூட அல்ல,
காலில் விழுகிறேனென்று
மெஸேஜ் அனுப்புவேன்
இத்தனைக்கும் நீர் செய்த தவறாயிருக்கும்

ஆண்டாளும் காந்தியும்

எல்லாம் என் அம்மை ஆண்டாளைச் சொல்ல வேண்டும்
அவள்தானே ‘வல்லீர்கள் நீங்களே
நானேதான் ஆயிடுக’ என்றாள்?
அதேதான் என் கணக்கும்
நீவிர் வெற்றியாளர்
நான் அடிமை, எப்போதும்.

காந்தியுமொரு காரணம்
அவர்தானே தன்னை அடித்து
சிறையில் தள்ளியவனுக்கு
செருப்புத் தைத்துக் கொடுத்தார்?
அதற்காக ஒரு கன்னத்தில் அடித்தால்
இன்னொரு கன்னத்தைக் காண்பிக்க மாட்டேன்
ஆனால் திருப்பி அடிக்க மாட்டேன்
கன்னத்தில் வாங்கியதென் கர்மாவென
திருப்தியுறுவேன்
கடந்த ஜென்மத்துக் கணக்கு
இந்த ஜென்மத்தில் தீர்கிறது
அவ்வளவுதான்

ஆக,
உமக்குப் பெருவாய்ப்பு காத்திருக்கிறது
என்னை மீட்டூவில் தள்ளலாம்
ரேப் கேஸில் மாட்டி விட்டு
சர்வநாசம் செய்யலாம்

என்னுடைய இன்னொரு தகுதி

உண்மை பேசத் தெரியாது
எல்லோரும் அப்படித்தானென்கிறீர்களா?
உண்மைதான்
ஆனால் நான் கொஞ்சம் ஸ்பெஷல்
இதுகாறும் நான் உண்மையே பேசினதில்லை
உண்மையின் நிறமென்ன மணமென்ன
எதுவும் தெரியாது

உண்மை கடவுள் மாதிரி
சிலர் இருக்கிறது என்கிறார்கள்
சிலர் இல்லை என்கிறார்கள்
சிலர் செருப்பால் அடிக்கிறார்கள்
சிலர் ஆராதிக்கிறார்கள்

யேசு சத்தியத்தின் மறுவுரு
காந்தி சத்தியமே வெல்லுமென்றார்
இருவர் கதையும் எப்படி முடிந்ததென்று
தெரியும்
எவ்வளவுதான் விளக்கினாலும்
உண்மையென்றால் என்னவென்று புரிந்ததில்லை

உண்மையொரு பெருங்குழப்பம்
‘உண்மையைச் சொல்’
எந்த உண்மை?
உண்மையென்றால் என்ன?
மனதிலிருப்பது உண்மையா?
எப்படி?
மனதில் நேற்றிருந்தது
இன்று வேறாக மாறுகிறது
பகலில் தெரியும் உண்மை
இரவில் வேறொன்று
அதிலும் சொப்பனங்களின் கதை அதிபயங்கரம்
உண்மை பொய்யெல்லாம்
அவிழ்த்துப் போட்டு ஆடும் வெளி

மோகினிக்குட்டி என்னுடனில்லாதபோது
அவளை வெறுக்கிறேன்
இருந்தால் அவளுக்காக
உயிரையும் தருகிறேன்
எது உண்மை?

முந்தாநாள் நான் எழுதிக்கொண்டிருந்தபோது
என் முன் தோன்றிய மனையாள்
‘உன்னை சவுக்கால் அடிக்க வேண்டும்’
என்றாள்
நான்தான் அடிமையாயிற்றே,
ஏனென்றுகூட கேட்கவில்லை
நேற்று ’நீ இல்லாவிட்டால்
என் வாழ்வை முடித்துக்கொள்வேன்’
என்கிறாள்
எது உண்மை?
அதனால் நான் இந்த வம்புக்கே வருவதில்லை
பொய்யே நமக்கு ஆகி வந்த கலை

என் தனிமை

இந்தக் கதையெல்லாம் இப்போதெதற்கு என்கிறீர்களா?
தனிமையெனைக் கொல்கிறது
நண்பர்கள் என்னிடமிருந்து விலகிவிட்டார்கள்
அல்லது வாழ்விலிருந்தே விலகி விட்டார்கள்
இருபத்தைந்தோடு பழகலாமென்றால்
ஏதேதோ உரசி தீப்பிடித்துக் கொள்கிறது

பெண்களின் கதை ஒரு தினுசு
ஆரம்பத்திலொரு பெண்
ஏழு வருடத்தில் பிரிந்தாள்
காரணமும் சொன்னாள்
அவளுக்கொரு சலூட்

அப்புறமொரு பெண்
அவளும் ஏழு வருடம்
பிரிந்தபோது காரணமேதும் சொல்லவில்லை

அப்புறமொரு பெண்
ஏழு வருடம்
பிரிந்தபோது காரணமேதும் சொல்லவில்லை
அடிமையிடம் சொல்ல வேண்டுமா என்ன?

கடைசியில் வந்தாளொரு பெண்
என் வயதில் மூன்றிலொரு மடங்கு
மூன்று வருடம் காத்திருந்து சேர்ந்தவள்
ஏழே மாதத்தில் புனிதையாகி விட்டாள்

பழைய நண்பன் ஒருவனிடம் கேட்டேன்
‘ஏன் இப்படி விலகுகிறார்கள்?’
உனக்கே தெரியுமென்று கூறி
அவசரமாய் விடைபெற்றான்

கொலைக்கதை

ஒருமாதிரி குன்ஸாகத் தெரிகிறது
நான் கொலை பல செய்தவன்
திட்டமிட்டுச் செய்ததில்லை
அதனால் கொலைக்கணக்கில் சேராது

ஐயன்மீரே, அம்மைமீரே?
அடிமையாயிருந்திருந்து அலுத்துப்போய்
புரிந்த கொலைகள் அவை
வெறுப்பில்லை விரோதமில்லை
அலுப்பினால் செய்த கொலை

கொலையென்றதும் பதறாதீர்
என்னால் கொலையுண்ட
அன்பர்களின் ஆவியிடம் கேட்டுப்பாரும்
ஆனந்தக் கண்ணீர் விடுவர்

முடிவுரை

பிறகென்ன, மானிடக் கூட்டமே
ஒருவரையொருவர் அடிமை கொள்ள
அடித்துப் பிடித்து முந்தும்
இந்தப் பின்நவீனத்துவ காலத்தில்
என்னைப் போல் அடிமை எவருண்டு?

சில காலம் வாழ்ந்தாலும்
இன்பமுற வாழ வேண்டுமென
நினைப்பாரெல்லாம் என்னையே தேர்வதுண்டு

இப்போதென்னவோ
சனி திசையோ ராகு திசையோ
தனித்திருக்கிறேன்
மரணபயமற்றோரும்
அடிமைச்சேவை தேவைப்படுவோரும்
அவசரமாய்த் தொடர்பு கொள்வீர்!