மெய்யுணர்தல்

காலையின் இளம் வெயிலில்
பாதைகள் என்னைத் தடுக்கி வீழ்த்துகின்றன
குண்டும் குழியுமாக
உன் இதயத்தின் காயங்கள்
என் ஆன்மாவை உரசி
நான் உன்னில் கரைகிறேன்
மேட்டுக்குடி வீதிகளில்
உன் மௌனமொரு மறைபொருள்
என் கண்கள் இதுவரை காணாதவை

பூக்கடையின் மல்லிகை
பழக்கடையில் அடுக்கப்பட்ட பழங்கள்
இளநீர் விற்பனை –
’விலை எழுபது ரூபாய்’ என எழுதப்பட்ட அட்டை –
பரந்து விரிந்ததொரு கிரிக்கெட் மைதானம்
எல்லாமே இன்றுதான் மெய்வழிப்படுகின்றன
ஆனால்
என் நடை உன் குரல் தேடி அலைகிறது
ஒவ்வொரு அடியும் உன்னில் முடிகிறது

ஓ, இங்கே பள்ளிக்கூடங்கள் வேறு
ஆடவரும் பெண்டிரும் தத்தம் குழந்தைகளை
மோட்டார் வண்டிகளில் வைத்துப் பறந்து கொண்டிருக்கிறார்கள்
பெண்களின் வேகம் ஆளை அடித்துவிடும்
அதிகவனம் பழகாவிட்டால் ஆள் காலி
ஏழு மாதங்களாக நடந்த பாதைகள்
உன்னைத் தவிர வேறேதும் கண்டதில்லை

இன்று
முக்கால் மணி நேரத்தில்
என்னுடல் தளர்கிறது
தினமும் இரண்டு மணி நேரம் நடந்தவன்
உன் குரலின்றித் தோல்வியடைகிறேன்

‘வேலை இருக்கிறது, இன்று பேச இயலாது’ என்றாய்
என்ன வேலை எனக் கேட்டுப் பழக்கமில்லை
பீத்தோவனின் இசையும் கைவிடுகிறது
வெறுமை என்னை ஆட்கொள்கிறது
ஆனால்
அந்த வெறுமையிலும் நீயே நிறைகிறாய்
என் நடை தடுமாறுகிறது
எல்லா பாதைகளும் உன்னை நோக்கியே செல்கின்றன

நீயே
என்னுலகின் மையம்
நீயே
என் நடையின் ஆரம்பமும் முடிவும்
நீயே
என் ஆன்மாவின் கனல்
நீயே
என் இதயத்தின் தீச்சுவாலை
என் இரவும் பகலும் உன்னில் கரைகின்றன
நீயே
என் தாகத்தின் தொடக்கமும் முடிவும்
என் கவிதையின் சுவாசமும்
என் இருப்பின் ஒளியும்.