வலி உணரா மனிதர்கள்


ஒரு கல்லைப் போல
ஒரு பனிக்கட்டியைப் போல
எப்படி அவளால் முடிகிறது,
எது நடந்தாலும் எதுவுமே
நடக்காதது போல் இருக்க?

பழைய கதவுகூட
திறந்து மூடப்பட்டால்
கொஞ்சம் புலம்புமே?

நான் அவளைப் பார்க்கிறேன்
கையில் ஒரு தேநீர்க் கோப்பை
எப்போதும் நிறைந்து தளும்பும்
புன்னகை
ஆனால் கண்கள் மட்டும்
வெறுமையாக
வீட்டு ஜன்னலில் மறந்து வைத்துவிட்ட
பழைய கண்ணாடி போல.

ஒரு காலத்தில்,
நானும் தெருவில்
திருட்டுத் தொழில் புரிந்தவன்
அடி வாங்கினால் வலி தெரியாதிருக்க
மாட்டு வால் சூப் குடித்தவன்.

ஆனால் அவள்
எந்தப் பள்ளியில் பயின்றாள்,
வலி மரத்துப் போக?

ஒருவேளை,
ஒரு பழைய பெட்டியின்
துருப்பிடித்த பூட்டு
எதையும் உணர மறந்து போகுமே,
அப்படியா?

அல்லது,
அவள் உண்மையில் மனிதையா?
எந்திரமா?
அவ்வப்போது கேட்பதுண்டு
பதில் வந்ததில்லை
அதற்குமொரு புன்சிரிப்பு

ஆனால்
பின்கழுத்தில் நான்
மென்மையாய் முத்தமிடும்போது மட்டும்
சிலிர்ப்பாள் –
காற்றில் மிதக்கும் மெல்லிய இறகு
கன்னத்தைத் தீண்டிச் செல்வது போல
கடலில் மின்னி மறையும் நிலவொளி போல
குளிர்ந்த காற்று மர இலைகளை அசைப்பது போல
மெல்லிய மழைத்துளி இதழில் தொட்டு விழுவது போல
நீரோடையில் மிதக்கும் மலர்ந்த இலை
கற்களைத் தீண்டுவது போல
குளிர்ந்த இரவில் நட்சத்திர ஒளி காற்றில் மிதப்பது போல…