ஆதியிலே வார்த்தை இருந்தது

நான்
வார்த்தைகளின் கடலில் வாழ்கிறேன்
நட்சத்திரங்களின் தூசியைப் போல்
அவை என்னைச் சூழ்கின்றன
என் முன்னோரின் எலும்புகளிலிருந்து
காவியங்கள் செய்கிறேன்

சில வார்த்தைகள் செத்து மண்ணோடு
மறைய
சில தேய்ந்து கற்களாய் உருள்கின்றன
சிலவோ உயிர்த்துப் பொங்கும் வார்த்தைகளாய்
என் உயிர் எரிக்கின்றன

வார்த்தைகளால் மனிதர்கள் மகிழ்கிறார்கள்
வார்த்தைகளால் மனிதர்கள் காதலிக்கிறார்கள்
வார்த்தைகளால் மனிதர்கள் புணர்கிறார்கள்
தீர்க்கதரிசிகள் வார்த்தைகளை விதைத்து
நம்பிக்கை விருட்சங்களை வளர்க்கின்றனர்
ஆனால் அவை மோதி
ஆயிரமாயிரம் ஆண்டுகள்
பூமியிலே குருதிப்புனல் ஓடுகிறது

என் காதலி
ஒரு ரயில் நிலையத்தின் மஞ்சள் வெளிச்சத்தில்
பதினெட்டு மாதங்கள் பிரிவின் கல் மேல் காத்திரு
என்றாள்
அந்த ஆறு வார்த்தைகள்
என்னை மரணத்தின் கரையில் தள்ளியது
அவளுடைய அடுத்த நான்கு வார்த்தைகள் –
உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் –
என்னை மீண்டும் உயிர்த்தெழச் செய்தது

என் இல்லம்
வார்த்தைகளின் குவியலால் நிறைகிறது
நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போல்
அவை பெருகுகின்றன
அந்த வார்த்தைகளைச் சுமந்து
என் தோள்கள் வலுவிழந்தன
என் முதுகும் வளைந்து விட்டது

வார்த்தைகளற்ற பிராணிகளோடு
மட்டுமே நேசம் பகிர முடியும்
என்கிறாள் என் காதலி

பிறந்தநாள் வாழ்த்து என்று என் தோழி
என் தோழனுக்கு வாழ்த்து அனுப்பினாள்
பெயரில்லாத அந்த இரு வார்த்தைகளால்
என் மனம் ரணமாகி
ஒரு உறவு முறிந்தது

இளைஞர்களின் வாழ்க்கை
இருபதே வார்த்தைகளில்
முடிந்து போகிறது
பிராணிகளுக்கும் இவர்களுக்கும்
வித்தியாசம் இருபது வார்த்தைகள்
பிராணிகள்
வார்த்தைகளற்று இன்புறுகின்றன
ஆனால் வார்த்தைகளைத் துறந்தவர்கள்
துன்பத்தின் கயிற்றில் தொங்குகின்றார்

நான்
வார்த்தைகளிலேயே வாழ்ந்தாலும்
மௌனமே எனது மொழியென
நம்புகின்றேன்
என் வார்த்தைகள் காற்றில் மிதந்து
மௌனத்தின் மாளிகைகளை
எழுப்ப விரும்புகின்றன

ஆனால்
என் மௌனம் வார்த்தைகளின் சப்தமாய்
காற்றில் மிதந்து நட்சத்திரங்களை உலுக்குகிறது