எங்களால் செல்வா என்று அழைக்கப்படும் செல்வகுமார் கணேசன் சுமார் இருநூறு கவிதைகளை எழுதியிருப்பார். ஆட்டோநேரடிவ் பதிப்பகத்தின் நிர்வாகி. வாசகர் வட்டத்தின் முக்கியமான நண்பர். அன்பின் மறு உருவம். அவருக்குக் கோபம் வந்து யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். குரல் உயர்த்திக் கூட பேசியதில்லை. இவர் இந்த உலகில் எப்படி ஜீவிக்கிறார் என்றே இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இத்தனைக்கும் ஒரு நிறுவனத்தின் தலைவர் வேறு. அவர் எழுதிய கவிதை ஒன்றை இன்று கண்டேன். இதைப் படித்ததிலிருந்து இது யாரைப் பற்றியதாக இருக்கும் என்று ஒரே மர்மமாக இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் சிந்திக்கும் திறன் கம்மி என்பதால் யூகிக்க முடியவில்லை. ஆனால் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
வாழ்வின் அபத்தத்தை
நன்கறிந்த ஒரு கவி
மீண்டும் மீண்டும்
காதல் கதைகளை எழுதுகிறான்
தனிமைத் தீவில்
அவனை
கரை ஒதுக்கிவிட்டு
காதலிகள்
கரைந்து போனாலும்
மீண்டும் மீண்டும்
கண்டடைகிறான்
நீர் மேல் நடக்கும் தேவதைகளில் ஒன்றை
புதிய ஒருத்தியை
சந்திக்கும் போதும்
அலுப்பின்றி
இத்தனை பெரும் அன்பை
எங்கிருந்து உருவாக்குகிறாய்
என்றான் இறைவன் கவியிடம்
கண்ணீர் தீவுகளின்
உப்பு கரிக்கும் காற்றில்
நான் எங்கிருந்து பெறுவேன் தீராக் காதலை?
அது என் குருதியில்
ஜனித்து
சுவாசத்தில் வெளிப்படுகிறது
பதில் சொன்னான்
இன்னொரு கவிதையில்