அடிக்கடி கேட்கப்படுகிறது
ஏன் கவிதை எழுதுகிறீர்கள்
நெரூதாவிடமும் கேட்கப்பட்டது
நானா கவிதையைத் தேடிப் போனேன்
கவிதை என்னைத் தேடி வந்தது
என்றார் அவர்
ஒரு பத்திரிகைக்குக்
கவிதை அனுப்பினேன்
எடிட்டர் கேட்டார்
ஏன் கவிதை எழுதுகிறீர்கள்
எனக்குத் தெரியவில்லை
என்றேன் வெகுளியாய்
மாரத்தன் ஓட்டத்தைப் போல்
இன்று ஒரு ஆறு கவிதை எழுதினேன்
படித்து விட்டு
ஏனிந்த வெறி
ஏனிந்தப் பித்தநிலை
என்ன செய்தால் அடங்கும்
எனக் கேட்டாள்
கவிதைக்கு உரியவள்
சிசு வெளியேற ஒன்பது மாதம்
வெளியே வந்தால் உயிரின் மலர்ச்சி
உள்ளே இருந்தால் மரணத்தின்
காரிருள்
கவிதைக்கு எத்தனைக் காலம்
என்பதை யாரறிவார்
வெளியே வந்தால் உயிர்
உள்ளே இருந்தால் மரணம்
என்றேன்
இன்னொரு பதிலும் உண்டு
சொர்க்கம் கண்டால் கவிதை இல்லை
நரகமோ கவிதைக் காடு
நீதான் அந்த சொர்க்கம்