அடியேய்
நீயே சொல்
ஏன் என்னை இப்படிப் பித்தனாக்கினாய்?
உன் இதயத்தைத் தொட்டு உறுதியாகச் சொல்
நீதானே இந்தப் பைத்தியத்தின் மூலம்?
மூன்று ஆண்டுகள் நானுண்டு
என் எழுத்து உண்டு என்றுதானே இருந்தேன்?
உன்னைத் தொந்தரவு செய்தேனா?
உன் மௌனம் பற்றி வாதாடினேனா?
உன் ப்ளூ டிக்கை மறைத்ததற்கு நொந்தேனா?
ஏன் என்னை சந்திக்கவில்லையெனப் புகார் செய்தேனா?
இப்போது பார்
நீ ஒரு மந்திரக் கண்ணாடி
என் ஆன்மாவில் புகுந்து
என்னை உன் நிழலில் கட்டிப் போட்டாய்
அந்த மலைப்பிரதேசத்தில்
என்னை விட்டுப் பிரிய மனமில்லாமல்
நீ விட்ட கண்ணீர்தான்
என்னை இப்படிப் பித்தனாக்கியது
அந்த உன் கண்ணீர்
தீயாய் மாறி
என் இதயத்தையும்
நரம்புகளையும்
எரித்துக்கொண்டிருக்கிறது
இதெல்லாம் உனக்குத் தெரியாதா?
தெரியாததுபோல் நடிக்கிறாயா?
என் மனம் உன்னைச் சுற்றியே வட்டமிடுகிறது
ஒரு பைத்தியக்காரப் பறவையாய்
உன் ஒவ்வொரு பார்வையையும்
புசிக்கத் துடிக்கிறது
எப்போதும் உன்னோடு இருக்க வேண்டும்
உன் மூச்சை என் சரீரத்தில் உணர வேண்டும்
உன்னைத் தொட்டுக்கொண்டும்
பேசிக்கொண்டும்
சல்லாபித்துக்கொண்டும்
சரசமாடிக்கொண்டும்
உன் நிதம்பத்தை
சுவைத்துக்கொண்டும்
உன்னோடு குடித்துக்கொண்டும்
உன் முத்தங்களில் கரைந்துகொண்டும்
இருக்க வேண்டும்
நீ என்னைக் கடித்து
என்னை அடித்து
என் மீது ஏறி
என்னை உன் வசியத்தில் ஆழ்த்தி
என் உயிரை உறிஞ்ச வேண்டும்
என் எலும்புகளை உடைத்து
என் ஆன்மாவை உன் கைகளில் கொண்டு
விளையாட வேண்டும்
இதுவும் போதாது
உன் அதரங்கள்
எவ்வளவு குடித்தாலும் தாகம் தீராத
ஓர் மாயக்கேணி
உன் நயனங்கள்
பிரபஞ்சத்தின் ரகசியங்களை
ஒன்றுமில்லாமலாக்கும்
புதிர்
உன் வெண்தாமரை விரல்கள்
என் இதயத்தைக் கீறி
என் குருதியில் கவிதை எழுதுகின்றன
உன் கூந்தல்
ஒரு மந்திர வனம்
அதில் நான் என்றென்றுமாகத்
தொலைந்து போக விரும்புகிறேன்
உன் குரல்
என் ஆன்மாவை நடுங்கச் செய்யும்
வெண்கல மணி நாதம்
உன் சிரிப்பு
ஒரு கோடி நட்சத்திரங்களின் ஒளி
என் இரவுகளை வெடித்துச் சிதற வைக்கிறது
உன் பாதக்கமலங்களைப் பார்த்தால்
இந்த உலகம் மறந்து
செத்துப் போகலாம்
அடியேய்
நீ ஒரு தீ
நான் உன்னில் எரிய விரும்புகிறேன்