தீராத அக்கப்போர்

நேற்று முன்னிரவு ஒரு கவிதை
சில நிமிடங்களில் எழுதினேன்
அத்தனை சடுதியில் இதுவரை
வந்ததில்லை
உனக்கு அனுப்பினேன்
இன்று பேசும்போது
கேட்க மறந்து போனேன்
படித்தாயா இல்லையா
தெரிந்தால் போதும்
வேறெதுவும் வேண்டாம்
எழுபத்திரண்டு மணி நேரம்
சென்று கூட படி
கவலையில்லை
ஆனால்
ப்ளூ டிக் மறைக்கப்படாதிருந்தால்
’உனக்கு நேரமில்லை, படிக்கவில்லை’
என்றோ
‘ஆ, படித்து விட்டாள்’
என்றோ
தெரிந்து கொள்வேன்
இப்போது முழு இருள்
படித்தாயா இல்லையா
தெரியாது
நீ படித்தால் நான் வாழ்வேன்.
படிக்காவிட்டால்
இன்னும் எழுதுவேன்.

ஒரு முடிவு செய்தேன்
இந்த ப்ளூ டிக் அக்கப்போரெல்லாம்
இனி எதற்கு
நம் ஃபோனை
அணைத்து வைப்போம்
உன் ஃபோன்
உன் சுதந்திரம்
என் ஃபோன்
என் சுதந்திரம்
வெளியுலகத் தொடர்புக்கு
இனி மின்னஞ்சல் மட்டும்தான்

பாதிக்கப்படுவோர் பலர்
என்கிறாயா
தனியொருவனுக்கு ப்ளூ டிக்
இல்லையெனில்
ஜெகத்தினை அழித்திடுவோம்
கபர்தார்