நீ என்னில் மூழ்க வேண்டுமென்றும்
நான் உன்னுள் கரைய வேண்டுமென்றும்
இன்னும் உன்னைக் காதலிக்கவே தொடங்காத
நான் இனியும் தாமதிக்கக் கூடாதென்றும்
நீ என் உயிர்த்தாதுவை உன் குருதிக்குள்
ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும்
நான் உன்னை உறிஞ்சி விடாய் தணிய வேண்டுமென்றும்
உனக்காகக் கொலை செய்ய வேண்டுமென்றும்
உனக்காகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்றும்
உனக்காக நான் வெட்கம் மானம் துறக்க வேண்டுமென்றும்
உனக்காக நான் மலையுச்சியிலிருந்து குதிக்க வேண்டுமென்றும்
உனக்காக நான் சிறை செல்ல வேண்டுமென்றும்
உனக்காக நான் கவிதை எழுத வேண்டுமென்றும்
உனக்காக நான் கவிதையெழுதுவதை நிறுத்த வேண்டுமென்றும்
உன் சுதந்திரத்தில் ஒருபோதும் குறுக்கிடக் கூடாதென்றும்
ஏன் என்ற கேள்வியை உன்னிடம் ஒருபோதும் கேட்காதிருக்க வேண்டுமென்றும்
நாம் இருவரும் போதை மிகக்கொண்டு ஒரு பப்பில் நடனமாட வேண்டுமென்றும்
உன்னை முத்தமிட்டுக்கொண்டே இருக்க வேண்டுமென்றும்
முடிவற்ற கலவியில் என் மாணிக்கச் சோதியை மூழ்கடிக்க வேண்டுமென்றும்
உன் நிதம்பச் சுவையினிலே என்னை நான் மறந்து விட வேண்டுமென்றும்
உன் மனமே என் மனமாய் ஆகி விட வேண்டுமென்றும்
மலையடிவாரத்தில் ஓர் இரவில் நாமிருவரும் தனித்திருக்க வேண்டுமென்றும்
நீ பேசுவதை நான் குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமென்றும்
உன் ஒரு சொட்டுக் கண்ணீருக்கும் நான் காரணமாயிருக்கக் கூடாதென்றும்
அடியேன் சிறிய ஞானத்தன் மீது நீ கொஞ்சமேனும் கருணையுற வேண்டுமென்றும்
நித்திரையிலிருந்து எழும்போது நீ என்னருகே இருக்க வேண்டுமென்றும்
நின் மேனியெங்கும் என் நகக்குறியும் பற்குறியும் பதிந்து கிடக்க வேண்டுமென்றும்
என் உடல் முழுதும் உன் சுகந்தம் நிரந்தரமாகி விட வேண்டுமென்றும்
ஒரு நதியிலே நாமிருவரும் நீந்தி விளையாட வேண்டுமென்றும்
நிலவொளியிலே புல்வெளியிலே காமம் துய்க்க வேண்டுமென்றும்
ஒரு நாளேனும் நீ போதையிலே பிதற்றுவதை நான் கேட்க வேண்டுமென்றும்
நின்றேன் இருந்தேன் கிடந்தேன் திரிந்தேனென
எந்நேரமும் நின் சுடரடி தொழுது நிற்க வேண்டுமென்றும்
என்னுள்ளம் உரை செயல் மூன்றும் நீயேயாகி விட வேண்டுமென்றும்
நீ என் சேயாகி என் பிறவிச் சுடருக்கு நான் சேவை செய்ய வேண்டுமென்றும்…
Salena Godden எழுதிய I Want Love என்ற கவிதையால் உந்துதல் பெற்று எழுதிய கவிதை