வேட்டை

கவிதையைப் படித்தாள்
கவிதைக்குரியவள்
ஆனால்
ஒரு சிறிய கூச்சம்
சங்கடத்தின் மெல்லிய நிழல்
அவள் இதயத்தில் தங்கி விட்டது
ஏன் அடிமைத்தனம்
சமமாக இருந்தாலென்ன
என்ற கேள்விகள் ஓடியது

ஒன் நைட் ஸ்டாண்ட் என்றும்
பத்துப் பன்னிரண்டு காதலிகளோடும்
அலைந்து திரிந்து
ஆடிப் பாடிய
அவனை
அடிமையாக்கியது யார்
கேட்க நினைத்துக்
கேட்கவில்லை
கேள்விகள் துக்கத்தின் விதைகள்

2

நண்பன் ஒரு கதை சொன்னான்
அவன் மனையாளின் ப்ளூ டிக்
திடீரென்று மறைந்தது
இவன் சிரித்துக்கொண்டே
என்னவென்று கேட்டான்
அவளும் சிரித்துக்கொண்டே
ம் என்றாள்
இவனும் சிரித்துக்கொண்டே
போய் விட்டான்

உனக்கு அரச லச்சினை
பதித்த பத்திரமொன்று இருக்கிறது
மரணம் வரை
உனக்கு அவள்
அவளுக்கு நீ
வெளியே போனால்
காட்டு விலங்குகள் குதறித் தள்ளும்

அவனோ வழிப்போக்கன்
எந்தப் பத்திரமுமில்லை
காரணம் சொல்லாமலே
காணாமல் போனவர்களைப் பற்றிய
கேள்விகளும் இல்லை
எதுவும் நிரந்தரமில்லை
அதுவே அவனை உலுக்குகிறது

3

நண்பன் சொன்னான்:
Tangoவில்
ஆண்தான்
பெண்ணின் காலை முத்தமிடுகிறான்
அவள் காதலை அடைய
என்னென்னவோ செய்கிறான்
வென்று முடித்ததும்
அவளை அடிமையாக்குகிறான்
காதல் வேட்டை
கவிதை பொறி

4

உனக்காக எதுவும் செய்வேன்
என்றாள்
சத்தியம்
காதலைத் தவிர
வேறு எதுவும் இல்லாத
என் கவிதை
அவளை சங்கடப்படுத்துகிறது
அதுவும் சத்தியம்

காதல் எப்போதும்
நா�ம் எதிர்பார்க்காத
ஒரு சொல்லை
மெல்ல விடுவிக்கிறது

5

நிறுத்தி விடலாம்
என முடிவு செய்து
க்ஷண நேரம் ஆகவில்லை
நெய் பொழிந்து
எரியூட்டுகிறாள்
பற்றியெரிகிறது
காடு