ஆன்மா மரணமில்லாதது
ஆன்மா குடியிருக்கும் கூடுதான்
உடல்
உடல் அழிந்தாலும் ஆன்மாவுக்கு
அழிவில்லை
இதை நம்பும் ஞானிகளே
எம் தேசத்தவர் எல்லாரும்
உலகையே நடுங்கச் செய்த
உயிர்க்கொல்லிக் கிருமி
இங்கே நுழைந்தபோது
விஞ்ஞானிகள் பதறினார்கள்
கிருமி தாக்கிய ஒருவரை
நெருங்கினாலே அடுத்தவரையும்
தொற்றி அழித்து விடும்
ஆனால் நாங்களோ
பத்துக்குப் பத்து அறையில்
பத்து பேர் படுத்துறங்கினோம்
கோவில் திருவிழாவில்
புளிமூட்டை போல்
பல்லாயிரக்கணக்காய் கூடி
ஒருவர் மீதொருவர் கட்டிப் புரண்டு
ஆடினோம்
மதுக்கடைகளிலும்
ஒருவர் மீது ஒருவர் விழுந்து புரண்டு
போத்தல்களை அள்ளினோம்
எங்கள் தொகை நூற்று நாற்பது கோடி
இதில் நாற்பது ஐம்பது கோடி
கிருமியால் காலியாகும்
என்றது விஞ்ஞானிகள் குழு
யாருக்கும் அச்சமில்லை
மரணம் கொஞ்சமாய் நிகழ்ந்தாலும்
எவரும் அசரவில்லை
அதே கூட்டம்
கோவிலிலும்
மதுபானக் கடைகளிலும்
உயிர்க்கொல்லிக் கிருமியே
அலுத்துப் போய் திரும்பி விட்டது
நாங்கள் பழையபடி
பணத்தைத் தேடி அலையத் தொடங்கினோம்
எங்கள் பெண்கள்
காதலனுக்காக கணவனையும்
குழந்தைகளையும்
விஷம் கொடுத்துக் கொன்றார்கள்
மேல்சாதிப் பெண்ணை
கீழ்சாதிக்காரன் காதலித்தால்
கீழ்சாதிக்காரனைக் கொன்றார்கள்
நூற்றுக்கணக்கில்
ரயிலின் மேலேறிப் பயணித்துச் செத்தார்கள்
தூக்கக் கலக்கத்தில்
ரயில் தண்டவாளத்தைத்
தலையணையாய்ப் பயன்படுத்தி
ஓடும் ரயிலில் உடல் சிதைந்து
செத்தார்கள்
உடல்தானே அழிகிறது?
’தேசமெல்லாம் திரியும் திருவருளால்
நாசமில்லை நம்முடைய ஆன்மாவுக்கு’
எனக் காண்பீர்!