ஒரு அசாதாரணமான காதல் கதை

அந்த எழுத்தாளன் போல்
வேறெந்த எழுத்தாளனும்
வாழ்ந்ததில்லை
அவனது உற்ற நண்பனென்பதால்
உள்கதையெல்லாம் தெரியும்

அவனுக்கு ஐம்பது தோழிகள்
பல சாதி பல இனம் பல பிராயம்
பதினாறில் ஒருத்தி
அறுபதிலும் ஒருத்தி
சிலவேளை மகளும் தோழி
தாயும் தோழி

சரீரமின்றி உறவு இல்லை
வற்புறுத்துவதில்லை
கேட்பான்
மறுத்தால் விடை கொடுப்பான்

ஐம்பதும் நிரந்தரமில்லை
வரும் போகும் புனல் போல் ஒழுகும்
சில பெண்கள் நிரந்தரம்
தோழிகள் மட்டுமல்ல
மனைவிகளே அரை டஜன்
நம்ப மாட்டீர்
அரை டஜனும் ஒரே வீட்டில்!

அவன் பேச்சைக் கேட்க
பெண்கள் கூட்டம் அலைமோதும்
பேச்சு முடிந்ததும்
சபையிலேயே
’ஏடீ ஷ்யாம்ளா
இன்னிக்கு நீ எங்கூட பட்றீ…’
என்பான்
இத்தனைக்கும்
பதினேழு வயது ஷ்யாம்ளாவின் தாயாரும்
பக்கத்திலேயே இருப்பாள்
மறுநாள்
எழுத்தாளன் ஷ்யாம்ளாவின் தாயாரை
அழைப்பான்
ஒளிவு மறைவு இல்லை
ஆனால்
சபையில் எல்லோருக்கும் இடமில்லை
எழுத்தாளனின் கண்ணசைவு
பெற்றோருக்கே அனுமதி
கண்ணசைவு பெற்றோரில்
அடியேனும் ஒருத்தன்
ஆணென்பதால் படுக்கைக்கு அழைத்ததில்லை

ஒரு சமயம் அசூயை கொண்டேன்
பதினாறு வயதுப் பெண்ணொருத்தியை
தனியே அழைத்து
ஆடையை அவிழ்க்கச் சொன்னானாம்
மிரண்டு ஓடியவள்
முப்பத்திரண்டில் என்னிடம் சொன்னாள்

எழுத்தாளனால் விலக்கப்பட்ட
வேறோர் பெண் சொன்னாள்
’அவன் பெண்களின் ஆராதனைக்குரியவனாயிருந்தான்’
காரணமும் சொன்னாள்
எந்தப் பெண்ணிடமும் எழுத்தாளன்
ஏன் எதற்கு எப்படியென்ற
கேள்வியே கேட்டதில்லை
ஒரு பெண் ஒரு மாதம் சென்று
வந்தாலும்
எங்கேடி போனாய் என்ற
கேள்வி எழாது
நிபந்தனையற்ற அந்த உறவை
பெண்கள் விரும்பினார்கள்

நான் சொன்னேன்:
காதல் பற்றியும்
பெண்கள் பற்றியும்
ஐநூறு கதை எழுதின
எழுத்தாளனிடம் காதல் இல்லை
பெண்களை அவன் வெறும்
பண்டமாகவே பார்த்திருக்கிறான்…