என்னை ஒரு பெண் நேசித்தாள்
காதல் என்று சொல்லத்தான் ஆசை
ஆனாலும்
காதல் என்றால் கொஞ்சம் கம்மியெனத்
தோன்றுகிறது
பேய் நேசம்
பெரிய பாரதக் கதை
ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன்
விடுமுறை தினங்களில்
கைபேசியையே கையில் தொடாதவள்
ஒரு கட்டத்தில் கைபேசி
அவள் உடலுறுப்புகளில் ஒன்றாக மாறியது
நான் அழைத்தால் எடுக்க வேண்டுமே?
காலமெல்லாம் காசுப் பஞ்சத்தில்
இருப்பவன் நான்
பார்த்தாள்
’ஏய் குட்டி
நானொரு வேலையை ஒப்புக் கொள்கிறேன்
இப்போது எட்டு மணி நேர வேலை
அதில் பதினாறு மணி நேரம்
இரட்டிப்புச் சம்பளம்
உனக்காகத்தான்
மாதம் இன்ன தொகை
உன்னைத் தேடி வரும்
இனிமேல் நீ காசு பற்றிப் பேசினால்
கழுத்தை நெறித்து விடுவேன்’
என்றாள்
சொன்னது போல்
காசும் கொட்டியது
மூன்றே மாதத்தில்
குட் பை என்றாள்
கண் கலங்க
’என்னடீ?’
உனக்கே தெரியும்
எனக்கும் என் புருஷனுக்கும்
எந்த ரகசியமும் இல்லை
எனக்குப் பிடித்தவனோடு
படுக்கவும் உரிமையுண்டு
அப்படிப்பட்டவனிடம்
இந்தக் காசு விஷயம்
மறைத்து விட்டேன்
காசு விஷயமல்ல
மறைத்ததே விஷயம்
உறவை ரத்து செய்வோம்
என்கிறான்
அது என்னாலாகாது
காசு அனுப்புவதை ரத்து செய்கிறேன்
உன்னையும்தான்
என்றாள்
ஆண்டுகள் சில கடந்து
மீண்டும் வந்தாள்
ஆனால்
காசு நின்றது நின்றதுதான்
ரகசியம்தான்
ஆகாமல் போயிற்று
இப்போது ஏன் அந்தக் கதை?
எல்லாம் இந்த ப்ளூ டிக் பஞ்சாயத்துதான்
மோகினிக்குட்டியின் ப்ளூ டிக்
மூடியது மூடியதுதான்
மூடியது விஷயமல்ல
காரணத்தையும் மூடியதே விஷயம்
சொன்னால் அது
உப்புப் பெறாத விஷயமாயிருக்கும்
தெரியும்
ஆனாலும்
நமக்குள் ஒரு ரகசியமா?
முச்சந்தியில் முண்டமாக நிற்பவன் நான்
அப்படியே அவளையும் எதிர்பார்த்தால்
நான் மூடன்
அவள் வாழ்க்கை
அவளுடையது
குறுக்கிட நான் யார்?
ஆனாலும்
இந்த ப்ளூ டிக் மறைவை
என்னால் கடந்து செல்ல முடியவில்லை
வாட்ஸப்பிலிருந்தே விலகி விடலாமா?
அவ்வளவு ஏன்?
தற்கொலை செய்து கொண்டால்
எந்தப் பிரச்சினையும் இல்லை
ஆனால்
ஒரு உப்புப் பெறாத விஷயத்துக்குத்
தற்கொலை செய்து கொள்ளலாமா?
தற்கொலை முடிவு தவறென்று
பின்னால் தெரிந்தால்
உயிரைக் கொண்டு வர முடியாதே?
ஆனால்
ப்ளூ டிக்குக்காக ஒரு கவிஞன்
தற்கொலை செய்து கொண்டான்
என்று என் பெயர்
வரலாற்றில் பொறிக்கப்படும்
(கவிஞன் என்று போடுவார்க்ளா?)
போடா மெண்ட்டல்
லூசுக்கூதி
என்பாள்
அதுதான் தயக்கம்
வேறு என்ன செய்து
இதைக் கடக்கலாமென்றும்
தெரியவில்லை
ஐம்பது நூறு தோழிகளோடு
அஜால் குஜால் வாழ்க்கை வாழ்ந்த
அந்த எழுத்தாள நண்பனைக் கேட்கலாமென்றால்
அவனும் இப்போது உயிருடனில்லை
இருந்தாலும் என்ன சொல்லியிருப்பான்?
காதல் பற்றி அவனுக்கென்ன மயிரைத் தெரியும்?
பெண்களை வெறும் துளையாகப் பார்த்தவன்
ஆனால்
அவனைத்தானே பெண்களுக்குப் பிடித்தது?
ஏன்?
ஏனென்று கேட்க மாட்டான்
என்னவென்று கேட்க மாட்டான்
பெண்களின் ரகசியத் தாள்களின் பக்கம்
திரும்பவே மாட்டான் தாயோளி
பிறகு
நானே ஒருவழியாய் சமாதானமாகி
எப்படியோ போய்த் தொலையென்று
ப்ளூ டிக்கை மறந்தேன்
அதோடு போகலாமில்லையா?
விதி யாரை விட்டது?
எனக்கு இதுவரை யாரும் வாட்ஸப்பில்
இதயக்குறி அனுப்பியதில்லை
நண்பர்களுக்கும்
தோழிகளுக்கும்
பச்சை பச்சையாய்
இதயக்குறிகள் பறக்கின்றன
என் நண்பன் ஹமீது
இதயக்குறிகளிலேயே வாழ்கிறான்
இதயக்குறிகளிலேயே உறங்குகிறான்
இதயக்குறிகளையே எழுதுகிறான்
அன்றொரு நாள் பார்த்தேன்
இதயக்குறிகளோடு சதுரங்கமாடிக்கொண்டிருக்கிறான்
ராஸ்கல்
நானோ இதுநாள் வரை
ஒரே ஒரு இதயக்குறி
கண்டதில்லை
ம்
ஒரே ஒரு இதயக்குறி…
அப்புறம் என்ன மயிருக்கு
வாழ வேண்டும்,
சொல்லுங்கள்?