வாட்ச்

ஏன் நீ வாட்ச் அணிவதில்லை
என்றாள்
குரலில்
காலையில் நான் கேட்கும்
மைனாவின் பாடல்

முப்பது ஆண்டுகளுக்கு முன்
ஒரு செல்வந்தர் வீட்டு சீமாட்டி
என்னுடன் பழகிக்கொண்டிருந்தாள்
அவள் வாட்ச் அணிவதில்லை
கையிலொரு கயிறு
கயிற்றிலொரு பல்
புலிப்பல் என்றாள்
புலிப்பல்லுக்குத் தடையுண்டு
ஆனால்
சீமாட்டிகளை சட்டம் எட்டுவதில்லை
அப்போது விட்டதுதான்
பிறகு
யோசித்ததேயில்லை
என்றேன்.

நான் அணிகிறேனே
என்றாள்
இளமையின் துள்ளலுடன்
மணிக்கட்டைத் திருப்பி காட்டி

நானும் அணிகிறேன்
என்றேன்
ஆனால்
என் வாழ்வில்
காலம்
ஒரு செல்லாக்காசு