அராத்துவின் தற்கொலைக் கவிதைகளில் ஒன்றை அறிமுகம் செய்யும் தருணத்தில் ஃபேஸ்புக்கில் அராத்து இப்படி எழுதியிருக்கிறார்:
”சாரு நிவேதிதா காதல் கவிதைகளில் தஞ்சம் அடைந்திருப்பதால்…”
இது சுஜாதா பல ஆண்டுகளுக்கு முன்னால் என் நாவல்களை கங்கையில் மிதக்கும் பழுப்பு நிற திடப்பொருள் என்று சொல்வதை ஒத்திருக்கிறது. அதாவது என் எழுத்தை சுஜாதா பீ என்றார்.
அநேகமாக அராத்துவின் குறிப்பும் அப்படியே எடுத்துக்கொள்ளப்படத்தக்கதுதான்.
எந்த விமர்சனமாக இருந்தாலும் அது நமக்குள் இருக்க வேண்டும். நாம் விவாதிக்கலாம். விமர்சிக்கலாம். சண்டையிடலாம். கடைசியில் ஒப்புக்கொள்ளவே முடியாமலும் போகலாம். பொதுவெளியில் விமர்சனம் வைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதுமே என் நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறேன். ஜெயமோகனின் நண்பர்கள் யாரும் இப்படி வெளிப்படையாக விமர்சனம் வைக்க மாட்டார்கள். அதற்காக நான் விமர்சனமே செய்யக்கூடாது என்று சொல்லவில்லை. நமக்குள் நடக்க வேண்டிய விவாதத்தை ஏன் பொதுவெளியில் வைக்க வேண்டும் என்பதுதான்.
ஏனென்றால், இதை நான் ஒரு வசையாகவே எடுத்துக்கொள்கிறேன். நான் எங்கே காதல் கவிதைகளில் தஞ்சம் அடைந்தேன்? காதலின் அபத்தத்தை அல்லவா எழுதிக்கொண்டிருக்கிறேன்? இன்று கூட பாக்கெட் வஜைனா என்ற கவிதையை அப்படித்தானே எழுதியிருக்கிறேன்? நேற்று எழுதிய பிக்ஸல் கவிதை காதல் கவிதையா?
அராத்து செக்ஸ் ரைட்டர் என்று சொல்வது எப்படி அபத்தமோ அப்படி அபத்தமானதுதான் சாரு காதல் கவிதைகளில் தஞ்சமடைந்து விட்டார் என்பதும்.
இப்படித்தான் நான் சில காலம் தினமலரில் சிறுகதைகள் எழுதினேன். உடனே என்னை சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் அனைவரும் – ஆம், அனைவரும் – என்னை தினமலர் எழுத்தாளன் என்று முத்திரை குத்தினார்கள்.
மேலும், அது என்ன தஞ்சம்? எனக்கு என்ன வேறு வேலைப்புண்டையே இல்லையா? மாதத்துக்கு ஒரு நாவல் எழுதிக் குவிக்க வேண்டுமா? நான் இப்போது அனாடமி ஆஃப் டிஸனன்ஸ் என்ற நாவலை ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறேன். தியாகராஜாவை பாதி எழுதி வைத்திருக்கிறேன். அசோகாவும் அப்படியே. இடையில் இந்தக் கவிதைகளை எழுதுகிறேன். தினமும் ஆறிலிருந்து எட்டு கவிதைகள் எழுதுகிறேன். உலகிலேயே இத்தனை அதிகமாக எழுதுவது மனுஷ்ய புத்திரனும் நானும்தான்.
நான் என் கவிதைகளில் பாப்லோ நெரூதா, நிகானோர் பார்ரா, விஸ்லோவா ஸிம்போர்ஸ்கா, ரேமண்ட் கார்வர் போன்றவர்களைத் தாண்டி விட்டதாகவே உணர்கிறேன். இது குறித்து அவர்களின் கவிதைகளை ஒப்பிட்டு என் கவிதைகளை முன் வைத்து என்னால் பத்து மணி நேரம் இடைவெளியின்றி உரையாற்ற முடியும். என்னால் இன்னமும் தாண்ட முடியாதவராக இருப்பவர் ஒரே ஒருவர்தான். அவர் ஒக்தாவியோ பாஸ். ரேமண்ட் கார்வரின் கவிதைகளை ஆட்டோ பொயட்ரி என்கிறார்கள். நான் எழுதுவதும் ஆட்டோ பொயட்ரிதான். என் கவிதைகளின் மூலமாக நான் ஒரு புதிய இலக்கிய வகைமையை (genre) தமிழுக்கு அறிமுகம் செய்து வருகிறேன். இதை நான் ஒன்றும் ஆட்டோ பொயட்ரி எழுத வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்யவில்லை. எழுதினேன். பிறகுதான் இதுபோல் யாரும் எழுதியிருக்கிறார்களா எனத் தேடினேன். எப்படி நான் – லீனியர் எழுத்து முறையைத் தமிழுக்கு நான் அறிமுகம் செய்தேனோ அப்படியே இதுவும் நடந்தது. முதலில் நான் – லீனியராக எழுதினேன். எழுதும்போது நான் – லீனியர் என்ற வார்த்தையே எனக்குத் தெரியாது. எழுதியதெல்லாம் மீட்சியில் வெளிவந்தபோது பிரம்மராஜன் தான் அந்தப் பெயரைச் சூட்டினார். பிறகுதான் அதேபோல் வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர் போன்றவர்கள் அப்படி எழுதுகிறார்கள் என்றே எனக்குத் தெரிந்தது.
நாடகத்திலும் அப்படியே நடந்தது. ரெண்டாம் ஆட்டம் குப்பை என்று சொன்ன போது நான் சர்வதேச நாடக அரங்கில் தேடினேன். அகஸ்தோ போவால் அகப்பட்டார். அவர்தான் நான் நடத்திய ரெண்டாம் ஆட்டம் போன்ற நாடகங்கள் ஃபோரம் தியேட்டர் என்ற வகையில் வருவது என்று கருத்தியல் ரீதியாக விளக்கினார். அவர் புத்தகத்தை நான் மொழிபெயர்த்தேன். நூறு பக்கங்கள். எந்த ஸ்க்ரிப்டும் இல்லாமல் ஒரு இடத்தில் அப்போதே உருவாகும் நாடகம் ஃபோரம் தியேட்டர் எனப்படும். அப்படி உருவானதே ரெண்டாம் ஆட்டம்.
மேலும், காதல் என்ன இலக்கியத்திலிருந்து விலக்கப்பட்டதா? ஒருவர் செக்ஸை எழுதலாம். காதலை எழுதக் கூடாதா? நான் என்ன வானம்பாடி கவிதைகளா எழுதிக்கொண்டிருக்கிறேன்? எனக்கும் தபூ சங்கருக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா?
இந்தப் பிரச்சினை பற்றி ஏற்கனவே நான் ஒரு நெடுங்கவிதை எழுதி பதில் சொல்லியிருக்கிறேன். பரமார்த்த குரு என்ற கவிதையில்.
அராத்துவின் பார்வையில் ஒரு தாலிபான் தனம் தெரிகிறது. அதாவது, காதலின் மீது மூத்திரம் அடித்தால் ஒப்புக்கொள்வேன். காதலை சிலாகித்தால் அது காதல் கவிதைகளில் தஞ்சமடைவதா? இப்படி ஒருமுகமாகப் பார்ப்பது தாலிபான் தனம் இல்லையா? இதில் ஒரு சர்வாதிகாரத்தன்மை இருக்கிறது. இது பின்நவீனத்துவப் பன்முகப்பார்வைக்கு எதிரானது.
சாரு காதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால் தப்பில்லை. ஆம், நான் காதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது என்ன தஞ்சம்? தஞ்சமடைவது என்றால் வேறு போக்கிடம் இல்லாமல் ஒன்றிடம் தஞ்சம் அடைவது. எனக்கு என்ன போக்கிடமா இல்லை? என்னுடைய எழுபத்து மூன்றாவது வயதில் ஒரு நான்கு மாதமாக தினம் ஒரு ஆறு கவிதைகள் எழுதுகிறேன். அதிலும் எல்லாமே காதல் கவிதை என்று சொல்ல முடியாது. என்னுடைய கவிதைகள் பெரும்பாலும் தத்துவம் சார்ந்து இருக்கிறது. காதலும் தத்துவமும் என்று சொல்லலாம்.
இன்னும் ஒரு முக்கிய விஷயம். என் கவிதைகளின் மூலமாக நான் தமிழை மேலும் செழுமைப்படுத்திக்கொண்டிருக்கிறேன். இது பாரதி செய்தது. என் ஒவ்வொரு கவிதையிலும் வரும் வார்த்தைகள் பெரும் intertextuality தன்மை கொண்டது. திருமந்திரம், சித்தர் பாடல்கள், திவ்யப் பிரபந்தம் – குறிப்பாக பெரியாழ்வார் – அக்கம்மா தேவி போன்றவர்களின் வார்த்தைகளையே நான் என் கவிதைகளில் பயன்படுத்துகிறேன். பழைய வார்த்தைகளுக்கு நான் திரும்பவும் உயிர் கொடுக்கிறேன். இது இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு நிற்கக் கூடியது. இன்றைய தமிழ் மிகவும் நலிந்து போய் கிடக்கிறது. அதற்குப் புதிய ரத்தம் பாய்ச்சிக்கொண்டிருக்கிறேன், என் கவிதைகள் மூலம்.
தஞ்சம் அடைவது என்பது போக்கிடம் இல்லாமல் ஏதோ ஒன்றில் சரணடைவதாகும். நான் அப்படி கவிதைகள் எழுதவில்லை. பாப்லோ நெரூதா சொன்னது போல் நான் கவிதையைத் தேடிப் போகவில்லை. கவிதை என்னைத் தேடி வருகிறது. ஒரு கவிதையை எழுத எனக்கு நான்கு மணி நேரம் ஆகிறது. வைரத்தைச் செதுக்குவது போல் நான் வார்த்தைகளை செதுக்கிக்கொண்டிருக்கிறேன். நான் இப்போது ஒரு வார்த்தைச் சிற்பி. ஒவ்வொரு கவிதைக்குப் பின்னாலும் ஆறு வெவ்வேறு பிரதிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. இறுதிப் படிவத்தையே உங்களுக்குத் தருகிறேன். ஒருவேளை உங்களுக்கு முதல் படிவமே பிடித்தும் போகலாம்.
எனவே நான் காதல் கவிதையில் தஞ்சமடையவில்லை. கவிதையே என்னிடம் தஞ்சமடைந்திருக்கிறது. விரைவில் புதினங்கள் பக்கம் வருவேன். அதற்குள் எனக்கு சமாதி கட்டி விடாதீர்கள்.