குட்பை


இதுவரை
யாருக்கும் எதற்கும்
குட்பை சொன்னதில்லை
ஆனால்
மற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்

இப்போது
முதல் முதலாகச்
சொல்கிறேன்
கவிதையே
நீ ஒரு நதி
என் ஆன்மாவின் கரையில்
நானும் நீயும் ஒன்றானோம்
உன் சொற்கள்
நிலவொளியில் நடனமிடும் நிழல்களாக
என் மௌனத்தை உடைத்தன

ஆனால் இன்று
உன் உற்சாகம்
உன் கொண்டாட்டம்
உன் மகிழ்ச்சி
ஏன், உனது கண்ணீர்கூட
ஒரு கணத்தில் மறைகிறது

அவள் சொன்னாள்
’எனக்காக ஒரு கவிதை’
இதோ ஆயிரம் எழுதி விட்டேன்
ஆனால்
உன் எடை
அவளை அழுத்துகிறது
குற்ற உணர்ச்சியில் ஆழ்த்துகிறது

உனக்காக உயிரையும் தருவேனென
உன் காதலியிடம் கதறுகிறாய்
ஆனால்
எனக்கோ ஹாய் சொல்ல ஒரு பெண்ணில்லை
தற்கொலை உணர்வை
மதுவினால் தள்ளிப் போடுகிறேன்
என்கிறான் நண்பன்

இன்னொருவனோ
இவன் காதல் கவிதைகளில்
தஞ்சமடைந்து விட்டானென
இரங்கற்பா எழுதுகிறான்

ஆகவே
கவிதையே
உன்னை நான் விடுவிக்கிறேன்
என் மௌனத்தின் கரையில்
நீ மீண்டும் ஒரு நதியாகிறாய்

வழக்கம் போல்
நான்
தனிமையில் கரைந்து
பூஜ்யமாகிறேன்