புரிதல் குறித்த சமன்பாடுகள்


உன்னை ஏன் என்னால்
புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை
நீ புரிந்து கொள்ள வேண்டுமானால்
அரை நூற்றாண்டு நீ பின்னே செல்ல வேண்டும்.
என்னை நீ ஏன்
புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை
நான் புரிந்து கொள்ள வேண்டுமானால்
அரை நூற்றாண்டு நான் முன்னே செல்ல வேண்டும்.
அதற்கான கால எந்திரம் நம்மிடம் இல்லை.
புரிதல் சாத்தியமில்லை
என்பதை மட்டும் புரிந்து கொண்டதால்
புரிந்து கொள்ள முடியாததை
புரிந்து கொள்ள முடியாத
இடத்திலேயே விட்டு விட்டு
வந்து விட்டேன்.
வா, புரிந்ததைப் பேசுவோம்
புரிந்ததை ஆற்றுவோம்

2

நீ மேசையில் காபி கோப்பையை வைத்தாய்.
நான் ஜன்னல் பக்கம் பார்த்தேன்.
வெளியே மரங்கள் அசையவில்லை.
காற்று இல்லை என்றாய்
இரண்டு சொற்களின் ஒலி கேட்டது
ஆனால் அதன் அர்த்தம்
என் அறிவை அடையாமல்
மேசையில் தங்கியது

நான் சொன்னேன்
வெளியே மழை பெய்கிறது
நீ பதில் சொல்லவில்லை.
ஜன்னல் கண்ணாடியில் உன் பிரதிபிம்பம்
என்னைப் பார்த்தது

நான் பேசிய வார்த்தைகள்
மேசையில் விழுந்து
புழுதியாகி
அறையின் மூலையில் ஒதுங்கின

இனியொரு விதி செய்வோம்
புரிந்தவற்றையே பேசுவோம்
என்றேன்

உன் பிம்பம்
கன்னம் குழிவிழச் சிரித்தது
புரிந்தது